படைப்பு ‘தகவு’ பதினேழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பாளர் சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் யூமா வாசுகியின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. படைப்புக் குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா குறித்த தொகுப்பு, நிகழ்வினை நேரில் காண்பது போல் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் அறிய வேண்டிய ஆளுமையான எழுத்தாளர் நா.விச்வநாதனுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தங்கள் நூல் பிறந்த கதைகளைச் சில எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு தகவு பதினைந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சமூக அக்கறையைக் கவிதைகளாக மாற்றித் தரும் வித்தகர், கவிஞர் மு.மேத்தா அவர்கள். பல ஆண்டுகளாகக் கவிதைத்துறையில் உயிர்ப்புடன் இயங்கிவரும் இவர் பலவித இலக்கிய வகைமைகளிலும் முத்திரை பதித்தவர். கவிஞர் மு.மேத்தாவின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிஞர் பிரதீபன் அவர்களின் கவிதைகளை ஆராய்ந்து கவிஞர் விக்கிரமாதித்யன் எழுதிய கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தனின் கயிற்றரவு சிறுகதையைத் தத்துவ நோக்கோடு ஆராயும் அபராஜிதாவின் கட்டுரை, அகழ்வும் நிகழ்வும் பகுதியில் புதுமைப்பெண் பூரணி கட்டுரை, நோபல் பரிசாளர் மரியோ வர்காஸ் லோசா குறித்த கட்டுரை என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ பதினான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. தமிழின் அழகியல் எழுத்தாளர் ‘நாஞ்சில் நாடன்’. ‘எழுத்து என்பது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!’ என்ற தீர்க்கத்துடன் எழுதிவரும் நாஞ்சில் நாடனது நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவாக ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. இவ்இதழில் புவியை மையங்கொண்டுள்ள ஆதாரப் பிரச்சனையான தண்ணீர்ப் பிரச்சனை குறித்த கவிதைகளும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. சிற்றிதழாளர் சுகனின் மகள் எழுதிய நினைவுகள், கவி கா.மு.ஷெரீஃப் குறித்த அகழ்வும் நிகழ்வும் தொடர் என மிகச் சிறந்த பகுதிகள் இதழில் நிறைந்துள்ளன. இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ பன்னிரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. சிறந்த எழுத்தாளராய், அற்புதமான கதைசொல்லியாய் விளங்கும் பவா செல்லதுரையின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. பல தளங்களிலுமான தனது அனுபவங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார் பவா செல்லதுரை. சமகால நிகழ்வை வரலாற்றுப் புனைவாய்த் தீட்டியிருக்கும் ‘எண்வலிச்சாலை’ என்னும் குறிப்பிடத்தகுந்த சிறுகதை வெளியாகியுள்ளது. ‘கற்றது தமிழ்’ பகுதியில் தமிழின் தலைசிறந்த திறனாய்வாளரான க.பூர்ணச்சந்திரனின் அனுபவங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழில் ஆழமிக்க கவிதைகள், சிறந்த கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் நிறைந்துள்ளன. அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. பகிருங்கள்..
படைப்பு ‘தகவு’ பத்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது. மக்களின் எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரனின் நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சாதாரண மனிதர்களைத் தம் படைப்புகளின் வாயிலாக வரலாற்றில் இடம்பெறவைக்கும் எழுத்து இவருடையது. கலை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனைகள் எனப் பல தளங்களிலும் விரிவாக உரையாடியிருக்கிறார். குவளைக்கண்ணனின் கவிதைப்பெண்கள் குறித்து விக்ரமாதித்யன் எழுதியுள்ள கட்டுரை இடம்பெற்றுள்ளது. பிருந்தாசாரதியின் இருளும் ஒளியும் கவிதைத் தொகுப்பிற்கான திறனாய்வுரை, சுஜாதாவைப் பற்றிய நினைவுகள், மாணவர் பக்கங்கள், இலக்கிய அமைப்பு அறிமுகம், பயணக் கட்டுரை என இதழில் சிறந்த கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் நிறைந்துள்ளன. அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. பகிருங்கள்..
படைப்பு ‘தகவு’ ஒன்பதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. நவீனத் தமிழ்க் கவிதை அடையாளம் கவிஞர் விக்ரமாதித்யன். எளிய மனிதர்.. வலிமையான கவிஞர். வாழ்வின் பல பாதைகளிலும் பயணப்பட்டுக் கவிஞராக நிலைத்திருப்பவர். நல்ல கவிதைகளையும், கவிஞர்களையும் இனங்கண்டு சொல்லும் இனிய இலக்கியர். ஆழ்ந்த வாசிப்பும் அகன்ற கவித்திறனும் கொண்ட கவிஞரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நிலைத்துக் கவி புனைய வேண்டியுள்ளமை, இசங்களைக் கருத வேண்டாக் கவிஞர்கள், சமகாலக் கவிதை நிலை எனக் கவிப்பரப்பு குறித்த பல சிந்தனைகளை முன்வைத்துள்ளார். மேலும், இவ்இதழில் கடந்த 2018ஆம் ஆண்டின் இலக்கியப் போக்கு குறித்த விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது. தமக்குள் அதிர்வுகளை நிகழ்த்திய நூல்கள் குறித்த வாசிப்பனுபவங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
படைப்பு ‘தகவு’ எட்டாம் திங்களிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் சமகாலத் தலைசிறந்த தமிழ் எழுத்தாளுமையாகத் திகழ்ந்தவர். உணர்வின் ஆழங்களைத் தன் படைப்புகளுக்குள் செதுக்கியவர். பெண்ணுலகின் பூடக இயக்கங்களைக்கூடத் துல்லியப்படுத்தியவர். எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு நேர்காணல், கட்டுரைகள் இவ்இதழில் வெளியாகியுள்ளன. ‘எழுத்து’ இதழின் வாயிலாகத் தமிழ் எழுத்துலகில் நீங்கா இடம்பிடித்த சி.சு.செல்லப்பா குறித்த கட்டுரை இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. தக்கைபாபு சிற்றிதழ், இலக்கிய இயக்கம், கவிதைகள், விவாதங்கள் மூலம் இலக்கிய வெளியிலும், இலக்கியவாதிகளின் மனவெளியிலும் இடம்கொண்டிருக்கிறார். தக்கை பாபுவின் நினைவு சுமந்த கட்டுரை ஒன்று இவ்இதழில் வெளியாகியுள்ளது. மாணவப் பருவ வெற்றியாளர்களின் அனுபவங்கள் இவ்இதழ் முதல் ‘சென்றேன் வென்றேன்’ என்ற பகுதியில் பதியப்படவுள்ளன. இவ்இதழின் அனைத்துக் கவிதைகளும் கஜா புயலைப் பேசுவன. கவிச்சித்திரம், படைப்புலகம் பகுதிக் கவிதைகள் கஜா துயரின் கண்ணீர்த்துளிகள். இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்..
படைப்பு ‘தகவு’ ஏழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் முதன்மையானவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். அன்றுதொட்டு இன்றுவரை கவிதைச்சூழலில், கல்விச்சூழலில் அவ்வக்காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிவருபவர். இன்னமும் எழுதத் துடித்துக்கொண்டிருக்கிற அந்த வானம்பாடிக் கவிஞரின் நேர்காணல் இவ்இதழில் சிறப்புற இடம்பெற்றுள்ளது. ந.முத்துசாமி தமிழ்க் கலையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது வாழ்வினைக் கலைவரலாறு பேசிநிற்கும்.. இங்கு அவரது மறைவினைப் பிருந்தாசாரதி பேசியிருக்கிறார். நோபல் விருது மற்றும் அவ்விருதுபெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்து ஆராயும் தொடர் ‘இலக்கியத்தின் தோரணவாயில்’ இவ்இதழில் தொடங்குகிறது. இவ்இதழின் மாத்தனிச்சிறப்பு.. ‘ஆதி’க்கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதை. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
படைப்பு ‘தகவு’ ஆறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கோவைஞானி தமிழுலகம் கொண்டாடப்படவேண்டிய முதுபெரும் திறனாய்வாளர். மார்க்சியத்தைத் தமிழுடன் இணைத்து மனதுக்கு நெருக்கமாக்கும் அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிறுபருவ இனிய உள்ளங்களைப் பேச்சு வழக்கில் அறிமுகப்படுத்தும் ‘சிலேட்டுக்குச்சி’ என்னும் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி குறித்த அனுபவங்கள் மற்றும் அறிமுகங்களை மையப்படுத்தி இருகட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளுக்காக இதுவரை வெளிவந்த கவிச்சித்திரம் பகுதியுடன் ‘படைப்புலகம்’ என்ற புதிய பகுதியும் ‘கஸல்’ கவிதைத் தொடரும் இணைந்துள்ளன. மேலும், கதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
படைப்பு ‘தகவு’ ஐந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காலந்தோறும் முளைத்தெழுந்த பல அமைப்புக்கள் செவ்வனே வளர்த்துவந்துள்ளன. நேரடியாய்ப் புலவர்கள் கூடிய அன்றைய சங்கம் முதல் முகநூலில் கவிஞர்கள் கூடும் இன்றைய குழுக்கள் வரை அமைப்புகளின் இயக்கங்கள் நிலைத்த இலக்கியங்களாகப் பதியப்பட்டுவருகின்றன. அவ்வழி, இம்மாதத்திற்குரிய தகவு, முகநூலில் இயங்கும் படைப்புக் குழுமம் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிறுத்திச் சில கட்டுரைகளைத் தாங்கிவந்துள்ளது. பெரியார் பிறந்த மாதம் இது. சமூகத்தைச் சிதைக்கும் எதற்கெதிராகவும் தன் பேச்சால், எழுத்தால் குரல் கொடுத்தவர் பெரியார். பெரியாரைப் போற்றும் கடப்பாடு இச்சமூகத்தின் எவ்இதழுக்கும் உண்டு. தலைநிமிர வைத்த பெரியாரைத் தலைகுனிந்து வணங்குகிறது தகவு. மேலும், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சிறப்புமிக்க பகுதிகள் தரம்மிக்கு அமைந்துள்ளன.
படைப்பு ‘தகவு’ நான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. நல்ல வாசிப்புத்திறன் உள்ள பலராலும் கவனிக்கப்படக்கூடிய இதழாக நம் தகவு வளர்ந்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிறைகளோடு திருத்திச் செய்யவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டும் அன்பு உள்ளங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர தினம் குறித்த நினைவுகளுடன், கலைஞரின் மறைவு குறித்த வருத்தத்தையும் இதழ் பதிவுசெய்துள்ளது. சமகாலத் தலைசிறந்த கவிஞரான ஈரோடு தமிழன்பனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சுவைக்குரிய பகுதிகள் உங்களுக்காய்..
படைப்பு ‘தகவு’ மூன்றாம் இதழ் உங்கள் கண்முன் ஒளிவீசி விரிந்திருக்கிறது. எத்தனையோ உள்ளங்களில் நீங்காத இலக்கிய நினைவாக உள்ள சுகன் குறித்த எண்ண அலைகள் இவ்விதழிலும் நனைத்துச் செல்கின்றன. கவிஞர் புவியரசுவின் நேர்காணல் இவ்விதழில் வெளிவந்துள்ளது. ‘கற்றது தமிழ்’ என்னும் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. தன் அகம், சுற்றியிருக்கும் உள்ளங்களின் ஊசலாட்டங்கள், புனைவுலகக் கற்பனைகள் என இலக்கியவாதிகள் களம்கண்ட பல படைப்புகளும் உங்களுக்காய்...
படைப்பு ‘தகவு’ இரண்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கவிஞர் சல்மா தமிழின் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளி. கவிதைதான் அவரது களம் என்றாலும் மிகச் சிறந்த நாவலாசிரியராகவும் அறியப்படுகிறார். அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உலகம். எல்லோருக்கும் ஒரே முகவரி அமைவதில்லை. மனித முகங்களை.. அவர்தம் முகவரிகளைத் தெளிவாய் முன்னிறுத்தும் மனித முகவரிகள் தொடர் ‘கொப்பையா’ என்னும் மனிதனை இவ்இதழில் அறிமுகப்படுத்துகிறது. மலையாளக் கவிஞர் சுகதகுமாரி ஒரு சமூகப் போராளியும்கூட. அவரது கவிதைகள் குறித்த அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நான் வாசிக்கிறேன் பகுதியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தான் வாசித்த கவிதைத் தொகுதி குறித்து அழகாய் எடுத்துரைக்கிறார். இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
ஊற்றெடுத்து உங்கள்முன் பிரவாகமாய்ப் பொங்கிஓட விழைகிறது படைப்பு தகவு இதழ். வாழ்க்கைக்கு ருசி கூட்டி உணர்வு ஊட்டி அறிவடையச் செய்வதில் இலக்கியத்திற்கு எப்போதும் பெரும்பங்குண்டு. மனத்தில் மலர்ச்சியோ, தளர்ச்சியோ உற்ற தோழமையாய்த் தோள் கொடுத்திடும் இலக்கியம். என் இலக்கியம்…என் மொழி.. என் இனம் என விரியும் வானத்தில்தான் நம்மைக் கண்டடைகிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கும் மின்னிதழ் வடிவத்தில் உங்கள் கருத்துக்கு விருந்தளிக்கத் தொடங்குகிறது ‘படைப்பு தகவு’. தமிழ் எழுத்துலகின் ஆகச்சிறந்த அடையாளங்களுள் ஒருவர் எழுத்தாளர் பொன்னீலன். மார்க்சியச் சிந்தனைகளில் தோய்ந்தவர். எளிய மனிதர்களையும் தனது வலிமையான படைப்புகளால் அறிமுகப்படுத்துபவர். அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிற்றிதழாளர் சுகன் தமிழுலகம் அறியப்பட வேண்டிய ஓர் ஆளுமை. வாழ்நாள் சாதனையாகச் சுகன் இதழை நடத்திக் குறுகிய காலத்திலேயே தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர். வெளிச்சத்தின் முகவரி என்ற பகுதியில் சுகன் குறித்த நினைவுகள் தொடர்ந்து இடம்பெறப்போகின்றன. முதலில் சுகனின் மனைவி தன் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார். ஹைக்கூ குறித்த தொடர், பெண்மொழி, கலகல கருத்து, நூல் விமர்சனம், 2017 இலக்கியத்துளிகள், பயணக்கட்டுரை, கவிஞர்கள் கலந்துரையாடல்.. இன்னும்.. சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.
Showing 61 - 77 of 77 ( for page 4 )