logo

படைப்பின் பயணம் - About Us

13756  

படைப்பு என்கிற ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று படைப்பாளி ஜின்னா அஸ்மி அவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தாலும் அவரும் அவருடன் நட்பால் இணைந்த தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்ட அவரது இரு நண்பர்களின் சிறு உரையாடலிலும் கருவெடுத்து, இரண்டு பன்னிரண்டாகப் பெருகிய நண்பர் குழாமில் உருவெடுத்து மெல்ல இருபது உறுப்பினர்கள் கொண்ட ஒரு படைப்புக் குழுமமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முகநூலில் விதைக்கப்பட்டது. இப்போது மூன்றாம் வருடத்தில் வெற்றிகரமாகத் தொடரும் நமது படைப்புக் குழுமம் ஐம்பதாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெரும் ஆலமரமாக வளர்ந்து உங்கள்முன் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்தக் குழுமம் மற்ற குழுமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தன்மையோடு நிற்கின்ற நிலையை நாம் வியந்து பார்க்கிறோம். குழுமத்தில் பதியப்படும் கவிதைகளின் தரம், குழுமத்தில் படைப்பாளிகளின் ஈடுபாடு, படைப்பாளிகளின் தனியாற்றல் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குக் கவிச்சுடர் என்ற விருதினை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழுமத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விழாவில் தமிழ் இலக்கிய உலகில் பெயர்பெற்ற மாபெரும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் முதுபெரும் இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுப் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். அவ்வாறு மாதந்தோறும் இவ்விருதுக்குத் தேர்வான படைப்பாளிகளைக் கவிச்சுடர் என்ற பட்டம் கொடுத்து இதுவரை 30 படைப்பாளிகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளது நம் படைப்புக் குழுமம்.

குழுமத்தில் பதியப்படும் பதிவுகளிலிருந்து சிறப்பான படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மாதம்தோறும் அருமையான வடிவமைப்போடு கூடிய ஒரு மின்னிதழாக வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு வெளியிடப்படும் மின்னிதழ்களை எப்பொழுதும் குழுமத்தின் எழுத்துக் கருவூலத்திலிருந்து எடுத்து வாசிக்க வசதியாக வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் சிறந்த படைப்புக்களிலிருந்து மாதம் ஒருமுறை சிறந்த படைப்பாளிகளுக்குச் சான்றிதழ் அளித்துப் பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் குழுமத்தின் இலக்கிய விழாக்களின்போது மேடையேற்றி அறிமுகப்படுத்தும் பொறுப்பையும் இக்குழுமம் ஏற்றிருக்கிறது. அவ்வாறு மாதந்தோறும் தேர்வான படைப்பாளிகளைச் சிறந்த படைப்பாளிகள் என்ற அங்கீகாரமளித்து இதுவரையில் 150 படைப்பாளிகளை எழுத்துலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளது நம் குழுமம்.
அவ்வப்போது வெவ்வேறு கவிதைப் போட்டிகளையும் அறிவித்துத் தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற வல்லுநர்களால் சிறந்த படைப்புக்களைத் தேர்வு செய்து அந்தப் படைப்பாளிகளுக்குஅந்தந்த சிறப்பு நடுவர்களின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களும் பரிசு தொகைகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் போட்டியில் பங்கு பெற்ற படைப்பாளிகளின் படைப்புக்களிலிருந்து சிறந்த படைப்புக்களையும் தேர்ந்தெடுத்துச் சிறப்பு மின்னிதழ்களும் அதை தொடர்ந்து அக்கவிதைகளை ஆவணப்படுத்தும் வகையில் நூலாகவும் வெளியிடப்படுகின்றன.

தமிழ் கூறும் நல்லுலகில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் பல்வேறு படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்புகள் மட்டுமல்லாமல் சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைகள், வாழ்வியல் மற்றும் புதினங்கள் போன்ற புத்தகங்களை ஆய்வுசெய்து சிறந்த புத்தகவடிவிலான படைப்புக்களுக்கும் விருது மற்றும் பரிசுகளும் வழங்கும் மாபெரும் திட்டத்தையும் முதலாம் ஆண்டு முதலே சிறப்பாகத் துவங்கியுள்ளது , அஃது இனியும் ஒவ்வொரு வருடமும் '' படைப்பின் இலக்கிய விருது'' எனும் பெயரில் அந்தந்த ஆண்டு வெளியிடப்படும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து வழங்கப்படும்.

வெளியிடப்பட்ட மின்னிதழ்கள், சிறப்பு மின்னிதழ்கள் மூலமாகப் பதிக்கப்பெற்ற படைப்பாளிகளின் சிறந்த படைப்புக்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் படைப்புக் குழுமத்தின் சார்பில் புத்தகங்களாக வெளியிடவும், படைப்பாளிகளின் அவர்கள் சொந்த படைப்புகளில் சிறந்தவற்றை நூலாக்கவும் படைப்புப் பதிப்பகம் என்கிற அமைப்பையும் குழுமம் ஏற்படுத்திச் சென்ற ஆண்டு 2017ல் 8 நூல்களும் இந்த ஆண்டு 2018ல் 10 நூல்களும் வெளியிட்டு சாதனையைச் செய்துள்ளது.

படைப்பு மின்னிதழ்களில் வந்த சிறந்த கவிதைகளைப் படைப்புப் பதிப்பகம் தொகுப்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே. அதற்காகப் படைப்பாளிகளிடம் எந்தவிதமான பணத்தையும் குழுமம் பெற்றுக் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் புதிய சாதனையாகப் படைப்பு குழுமத்தின் சார்பில் தகவு என்ற இலக்கிய மாத மின்னிதழ் தொடங்கப்பட்டு குறித்த நேரத்தில் சிறந்த படைப்புகளோடு மட்டுமல்லாமல் படைப்பு குழும உறுப்பினர்களின் படைப்புகளையும் வெளியிட்டு அவர்களையும் கௌரவிக்கிறது. தகவு - கலை இலக்கிய மின்னிதழிற்கு வரும் பாராட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, வாசகர்களின் வேண்டுகோளிற்கிணங்க விரைவில் தகவு மின்னிதழ் அச்சிதழாகக் கொண்டுவரும் முயற்சியிலும் குழுமம் செயல்பட்டுவருகிறது.

இதுமட்டுமில்லாமல் படைப்பின் சார்பில் படைப்பு யூடியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதில் சிறந்த படைப்பாளிகளின் கவிதைகளோடு பிரபல கவிஞர்களின் படைப்புகளையும் ஒளியும் ஒலியும் - கவிதைத் துளியும் என்கின்ற பெயரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பிவருகிறது. இதில் மேலும் சில மாற்றங்களைச் செய்து வரும் காலங்களில் இலக்கியத் தடத்தில் சில புதுமைகளையும் செய்ய நாடியுள்ளது.

மேலும் படைப்புக் குழுமம் முறைப்படி அரசின் அங்கீகாரம் பெற்றே செயல்படுகிறது என்பது மட்டுமில்லாமல் தனக்கான இலச்சினையையும் முறைப்படி வைத்திருக்கிறது.

இத்தகைய இலக்குகளை நோக்கி ஒவ்வொரு படியாக நாம் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் படைப்புக்குழுமம் ஆரம்பித்துச் சில மாதங்களிலேயே யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் விருது எம் குழுமத்துக்குக் கிடைத்தது... 12.11.2016 அன்று நடந்த "மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழாவில் சிறந்த சமூகப்பணி & தமிழ் சேவைக்காகத் தமிழன்பன் விருது எனும் உயரிய விருதை எமக்கு அளித்துக் கவுரவித்தது. இஃது எங்களின் செயல்பாடுகளுக்கு மேலும் ஓர் உந்துதலைத் தந்தது என்றால் மிகையாகாது.

படைப்பாளிகள் தங்களையும் தங்கள் எழுத்துப் பணியையும் வளர்த்துக் கொள்ளும் களமாகவே படைப்புக்குழுமம் வளர்ந்து வருகின்றது என்பதற்கு நாள்தோறும் குழுமத்தில் இணைந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையே சான்று. உறுப்பினர்கள் சேரும்போது எவ்விதத்தகுதியும் நிர்ணயிக்கப்படாத இந்தக் குழுமத்தின் தரத்தை எந்த விதத்திலும் குறைத்து விடாமல் ஒவ்வொரு பதிவுகளையும் கண்காணித்து வருகிறது.

உறுப்பினர்களின் கூடிவரும் எண்ணிக்கையை மனதில் வைத்து இந்தக் குழுமம் சமீபத்தில் ஒரு வலைத்தளமாக உருவெடுத்தது. படைப்பு..சமுகத்தின் இணைப்பு என்கிற குழுமத்தின் இலக்கை நோக்கிய அதன் பயணம் ஒரு இலக்கியம் தாண்டி சமூக சேவையிலும் கால் பதிக்கும் வண்ணம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டுள்ளது நம் வளர்ச்சியின் சான்று. அறக்கட்டளை மூலமாக இனி என்னென்ன நாம் செய்ய இருக்கிறோம் என கூடிய விரைவில் அறிவிக்கப்படும். படைப்புக் குழுமத்தின் வளர்ச்சிக்கு தோள்கொடுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

வாழ்க படைப்பாளிகள்..வளர்க அவர்களின் தமிழ் இலக்கியப் பணிகள் !!

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்புக் குழுமம்.