வணக்கம். படைப்பு ‘தகவு’ இருபத்தியேழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் விரிந்துபரந்திருக்கிறது.
வாழ்வின் குரலை வசீகரமாக எதிரொலிக்கின்ற இதயத்திற்குச் சொந்தக்காரர். தனது மரபுக் கவிதையால் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராகப் பரிணமிப்பவர். தனது புதுக்கவிதையால் கவிக்கோவின் பரம்பரையைத் தொடங்கிவைப்பவர். “எனது மகிழ்வென்பது உலகத்தின் மகிழ்ச்சி”யென்றும், “எனது துயரென்பது பிறர்படும் துயரம்” என்றும் சமூகத்திற்கான கவிதையின் சாட்சியாக இருப்பவர். திருவாரூர் வீதிகளில் தமிழ் வளர்த்து, திராவிட இயக்கச் சிந்தனையின் நறுமணமாய், புதுக்கவிதையின் சொற்கோவாக, காலநதியாய்ப் பயணமாகும் திருமிகு ஆரூர் தமிழ்நாடன் அவர்களுடனான ஓர் இனிய நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.
கலாப்ரியாவின் கவிதைகள் குறித்த கவிஞர் விக்ரமாதித்யனின் கட்டுரை இவ்இதழில் வெளியாகியுள்ளது. கவிஞர் சிற்பியின் கவிச்சிறப்பு, கி.ரா.வின் கட்டுரைகள், ரோஜாமுத்தையா ஆராய்ச்சி நூலகம் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தி டுரின் ஹார்ஸ், காதம்பரி போன்ற திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளும்; அகரமுதல்வனின் ‘நன்றேது? தீதேது?’, வேல.ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ போன்றவற்றிற்கான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. ஆதிரனின் மனநிலைக் குறிப்புகள் கட்டுரை தொடங்கியுள்ளது.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.