துரை. நந்தகுமார்
இந்த மாதம் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருது பெறுபவர் பெருமைக்குரிய கவிஞர் திரு துரை.நந்தகுமார் அவர்கள்.
முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துள்ள கவிஞர் தற்போது Sharon plywood நிறுவனத்தில் ... சீனியர் மானேஜராக பணி புரிகிறார். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சென்னை மாத்தூரில் வசிக்கும் கவிஞர் கவிதைகளை எழுதத்தொடங்கிய காலம் பள்ளிப் பருவத்தில் என்றாலும்.. பச்சையப்பன் கல்லூரியின் மாணவ பருவத்தில் இருந்தே கவிஞனாக தன் இருப்பை உறுதியாக தக்க வைத்துக் கொண்டவர்...
தொடர்ந்து சிறந்த கவிதைகளை பல்வேறு இதழ்கள் மற்றும் இணையங்களின் வழியாகவும் எழுதி வரும் கவிஞரின் படைப்புகள், ' படைப்பு குழுமம், ஆனந்தவிகடன்,
கல்கி, இனிய உதயம், தி இந்து காமதேனு, புதுப்புனல், காக்கைச்சிறகினிலே, பாவையர் மலர், பேசும் புதிய சக்தி, கல்வெட்டு பேசுகிறது' மற்றும் இணைய இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளிவருவதை நாம் காண இயலும்.
சுரதாவிருது, திரு.வி.க. விருது, பு.மு.கங்காதரனார் விருது, பண்ணைத் தமிழ்ச் சங்க விருது... மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளும் அவர் இல்லத்தையும் உள்ளத்தையும் தொடர்ந்து அலங்கரிக்கின்றன..
1."உள்ளிருந்து"
2. "நிலவொளியில் சில பனித்துளிகள்".
3. "நீ"
4. "குழந்தையும் பொம்மையும்".
5. "இதைவிட வேறில்லை"
6. "பின்னகர்ந்த முந்தைய நாட்கள்".
7. "எனை நீ மறவாதே" (நாவல்)
8. "தடையின் தடத்தில்"
இவை கவிஞரின் எழுத்து வண்ணத்தில் இதுவரை வந்த வெளியீடுகளாகும். தற்போது இரண்டு கவிதை தொகுப்புகள் மற்றும் "ஒட்டுப்பலகை"... என்ற நாவலையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கவிஞர் நம்மிடம் சொல்கிறார்.
"சமூகத்தில் என் இருத்தலின் அடையாளமே என் கவிதைகள்" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிஞரின் சில கவிதைகளை இனிக் காண்போம்.
------------ --------
சதுரங்கம் விளையாட்டே சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறி செல்வதுதான்... ஆனால் இங்கு ஆட்டமோ வேறு மாதிரியாக இருக்கிறது! எதிரியின் இலாவகத்தை வியந்து தன்னையே இழக்கும் கவிஞரின் ஆட்டத்தில் எதிரில் இருப்பது அவரின் அழகிய காதலியென்றால் ஆட்டம் அப்படித்தானே இருக்கும்! நீங்களே படித்துப் பாருங்கள்!
கட்டங்களில் வாழ்ந்துவிட்டேன்.
*
சதுரங்கமாட அமர்ந்திருக்கிறோம்
இப்பக்கமும் அப்பக்கமுமாக.
முன்னமர்ந்திருக்கும் உன்னை நானும்
எதிரே அமர்ந்திருக்கும்
என்னை நீயும் பார்த்தபடியிருப்பது
எவ்வளவு இதமாயிருக்கிறது.
உன்னிறத்து காய்களை நானும்
என்னிறத்து காய்களை நீயும்
நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன்பு விரிந்து கிடக்கும்
அறுபத்தி நான்கு கட்டங்கள்.
உன்னோடு நான் தங்கி சுகிக்கும்
காதல் நிலங்களாய் தங்குகிறது.
சதுரங்க விளையாட்டின் விதிப்படி
'பான்' ஒரே ஒரு நகர்த்தல்தான்
உன் விரல்பட்ட பேரானந்தத்தில்
அவ்வொரு நகர்தலும் கூட
நகரமாட்டேனென அடம்பிடிக்கிறதது.
'எல்' நகர்வில் நகரவேண்டிய குதிரை
பறக்கிறது உன் தொடலில்.
குறுக்கே பயணிக்கவேண்டிய 'பிஷப்'
உன் நேர்பார்வையில்
தன்னிலை மறந்து தவிக்குது.
நேராகவும் பக்கவாட்டிலும்
போகக்கூடிய யானை
பட்டத்து ராணியா உன்னைக்கருதி
கம்பீர நடை நடக்கிறது.
எப்படி செல்லவேண்டுமோ
அப்படி செல்லும் ராணியோ
சக்களத்தியாகவே உன்னை கருதுகிறது.
தன்னை காப்பாற்ற
நீயிருப்பதால் ராஜா
ராணி உள்பட அந்தப்புரத்தையும் துறந்து
உன் தொடுதலில் சொக்கிடக்கிறார்.
ஆடவேண்டிய அஃறிணை காய்களே இந்நிலையென்றால்
உயர்திணையாகிய நானென்னாவேன்.
உன்னோடு அமர்ந்திருந்தே
என் மகத்தான வெற்றி.
மண்டியிட்டு சரணடைகிறேன்
என் முழுப்படையுடன் உன்முன்.
---------------------------
அம்மா ஒரு மழை! அவளின் ஈரம் எப்போதும் காய்வதே கிடையாது! அந்த மழை உலர்ந்த நிலமாக மாறிவிட்ட பிறகு அவளுக்கு மழையாக இருக்க வேண்டிய பிள்ளைகள் அப்படித்தான் இருக்கிறார்களா? மனைவியோடு அவன் நன்றாக வாழவேண்டும் என்று பிரிந்த அம்மாவை கந்தல் துணியாக பார்க்கும் மகனின் நிலை என்னவாகவிருக்கும்! இதோ கவிதை:
அம்மா..
இது கூட
அவளுக்குத் தெரியாமல்
எழுதுகிறேன் அம்மா.
நேற்று-
அவள் வளர்க்கும்
நாய்க்கு சுகமில்லை
காரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில்
அரசு பொது மருத்துவமனை
வரிசையில்...
நீ நிற்பதைப் பார்த்தேனம்மா.
உன்னைப்போலவே
உன் கையிலிருந்த சீட்டும்
கசங்கிப் போயிருந்ததம்மா.
மனசு வலிக்கிறதம்மா
என் கல்விக்காக
கடைசி தங்கம் வரை
கரைத்தாயம்மா
நீயன்று சும்மாயிருந்தால்
நானும் உன்னோடுவே இருந்திருப்பேன்.
பாத்திரத்தின் கடைசி
பருக்கையை கூடவழித்து
ஊட்டிவிட்ட உன்னை
பொது வரிசையில்-
பார்த்தபோதே பிணமானேன்.
பால்யப் பருவத்தில்
நிலாவை அன்னாந்து பார்த்தால்
கழுத்து வலிக்குதென்று
உன் முகம் பார்த்தவன்.
நீண்ட நாட்கள் பிறகு
நேற்றுதான் உன்னைப் பார்த்தேன்
நான் மகனாம்மா
வெட்ககேடம்மா.
நீயிருக்கும் நிலைப்பார்த்தால்
பயமாய் இருக்கிறதம்மா
இன்னும்...
எத்தனை நாளோ நீயென்று
அதற்குள்
அதற்குள்
உன்னை அழைத்து
ஒருவேளையாவது சோறிட வேண்டும்
உன்னோடு அமர்ந்து சோறுண்ணவேண்டும்
அன்று நீ சொன்ன...
ஒத்து வரவில்லையப்பா
நீ நல்லாயிருந்தாபோதும்
ஒதுங்கி வாழ்ந்தாயம்மா.
நன்றாய் வாழ்ந்தவ
நீ
நான் நன்றாய் இருக்கிறேன்
நீ நல்லாயில்லம்மா
....
இது நல்லாயில்லம்மா.
--------------------------------
பொழுது போக்கு நிமித்தங்களின் ஒரு முக்கிய அடையாளமாகவே அமைந்து விடுகிறது வனச்சுற்றுலா ! அதுவும் சொந்த மகிழுந்தில் நமக்கான நேரங்களை நிலைப்படுத்தி ... ரசிக்கும் ஒரு ரசனைக்காரரின் மகிழுந்து சுற்றுலா முடிந்து வழமையாக அவர் அலுவலகம் செல்லும் போதும் அது வனத்திற்கே திரும்பி அழைத்து செல்வதாக அமையும் கற்பனை அபாரம்!
சுற்றுலா
இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க
காட்டில் தங்கியப்பின்
தன் நீண்ட பயணத்தை முடித்து
சற்றுமுன் வீடடைந்தது மகிழுந்து.
இடது, வலது கண்ணாடியில்
அப்படியே அப்பிக்கிடக்கிறது காடு.
அதனருகில் சன்னமாய் கேட்கிறது
இதுவரை கேட்க வாய்ப்பற்ற
பலவிதமான பறவைகளின் சத்தம்.
வெட்சியும் செங்காந்தளையும்
சூடியிருக்கிறது தன் மேற்பரப்பில்.
மகிழுந்தின் நான்கு சக்கரத்திலும்
குறிஞ்சியின் தடங்கள்.
திறந்த கதவிலிருந்து வெளியேறுகிறது
காட்டு கனிகளின் நறுமணம்.
இனிவரும் பாணனின் பாடலில்
நிச்சயம் இடம் பெறும்
முல்லைக்கு தேர்
காட்டுக்கு மகிழுந்து.
திணை மயக்கத்திலிருந்து விழித்ததும்
விழித்துக்கொண்டது நிலுவையில் கிடக்கும் அன்றாடப் பணிகள்.
பணிநிமித்தமாய் பயணிக்கிறேன்
வழக்கமான பாதையை தவிர்த்து
மகிழுந்து மகிழ்ந்தபடி நுழைகிறது
இரண்டு இரவும் ஒருபகலும் தங்கிய
அதே காட்டுக்குள்.
------------------------------
நட்பின் பெருமை என்பது ஓர் அழகியப் புன்னகையைப் போன்றது. அதை நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் இதழ்கள் புன்னகை பூப்பதும், பட்டாம் பூச்சிகள் பறப்பதும் தவிர்க்க முடியாதது! அதே நேரம் ஓர் அவசர நிமித்தம் அந்த நட்பை கண்டும் காணாமல் போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் வலியென்பது நம்மையே தின்னும் வல்லூறாக வந்து அமர்ந்துவிடும்....இதோ கவிதை:
ஆறு நாற்பதும் பால்ய நண்பனும்.
ஆரம்பப் பள்ளியில்
ஐந்தாம் வகுப்பு தேறி
மாதவரம் அரசுமேல்நிலைப்பள்ளி
ஆறாம் வகுப்பில் நுழைகிறேன்.
முதல் நாள் முதல் வகுப்பாக
ஆங்கிலப்பாடத்தை
வில்லியம்ஸ் சார்
மாணவர்களின் அறிமுகத்தையடுத்து ஆரம்பிக்கிறார்.
வில்லியம் வோர்ஸ்வொத்தில்
மூழ்கி கிடக்கிறது வகுப்பு.
அப்போது நுழைந்தாய் நீ
வணக்கம் சாரென'
அன்றிலிருந்து மேல்நிலை வரை
அருகருகே அமர்ந்தபடி.
நம் நட்பு சுரந்தது
அன்னையின் பாலின் அடர்த்தியாய்.
அப்பாவின் பணி மாறுதலில்
நான் வேறு மாநிலம்
நீ அதே மாநிலம்.
முதுகலை முடித்த ஆண்டில்
ஒருமுறை ஒரே ஒருமுறை
நண்பர்கள் குழுமமாய் கூடினோம்.
மருத்துவ கல்லூரிப் பேருந்தை தவறவிட்ட
மகளோடு பறக்கிறேன்.
இடைப்பட்ட
இருபதாண்டுக்குப்பின்
சிவசாமி நகர் வளைவில்
மிதமான வேகத்தில்
எதிரே வருகிறாய் எதேச்சையாய்
"வினோபா' என்றழைக்க
இதழ் பிரியும் தருணத்தில்...
பதறிபடி கண்கள் அறிவிக்கிறது
நேரம் ஆறு நாற்பதென.
-----------------------------
நீண்ட பயணங்களில் காலத்தை கழிக்கும் ஓட்டுனர்களின் வாழ்க்கை லாரிகளில் ஏற்றப்படும் சுமைகளைப் போன்றே மிகுத்த கனமுடையது! அதுவும் பண்டிகை நாட்களில் அவர்கள் வழியில் சிக்கிக் கொண்டால் அதன் புழுக்கத்தில் குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் தடுமாறும் அந்த நாட்களை நகர்த்துவது... ஸ்டெப்னி இல்லாமல் டயர் மாற்ற முடியாமல் வழியிலேயே நிற்கும் வண்டியைப் போன்றது...கவிதைக்குள் போவோம்...
பொங்கலும் பட்டி ரொட்டியும்.
பனிவிழும் இரவு
தேசிய நெடுஞ்சாலையின்
இடதோர தாபாவுக்காக
இண்டிகேட்டர் இயக்கி நிறுத்திய
டாரஸ் லாரியிலிருந்து இறங்குகிறார்
கவலை போர்வையில் சிக்கியபடி.
ஆங்காங்கே கிடத்தியிருக்கும்
கயிற்று கட்டிலில் கண்கள் படர
கையசைத்த தோழர்களோடு
சம்மணமிட்டு அமர்கிறார்
பட்டிரொட்டியும்
தாலும் சொல்லிவிட்டு.
ஏற்றி வந்த பொருளை இறக்கி
ஊர் திரும்ப ஏற்றிய லோடுடன்
சக ஓட்டுநர் நண்பர்கள்
விசாரித்த விசாரிப்பில்
சோகப் போர்வை களைகிறது
வாகனப் பழுதாலான காலதாமதம்.
ஊரில் காத்திருக்குமே குடும்பம்.
இந்தாண்டின் பொங்கல்
விடுமுறைக்கு மூடப்பட்டிருக்கும்
தொழிற்சாலை நுழைவாயிலின் முன்.
----------------------------
சதுரக் கண்ணாடியில் முக்கோணப் பார்வை தலை நிமிர்த்தித் தொடரும் இடைஞ்சலிலும் இடை நிறுத்தி சற்று இளைப்பாறி..... தலைக்கணம் குறைய முடிகிறது கவிதை... இதுவும் கூட ஒரு திருத்தகம்தான்!
சதுரக்கண்ணாடியில் முக்கோணப் பார்வை.
வழக்கத்தைவிட மாறிய முந்தானை
அவ்விதமே துளையிட்ட மூக்குத்தி
இரு சக்கர வாகனத்தில்
வலப்பக்கமாய்ப் பயணிக்கும் பயணி.
குழந்தைக்கு சோறுட்டும் அன்னை
தோன்றுவதும் மறைவதுமாய்.
கடந்து சென்ற வாகனம்
சட்டென மறைந்ததெப்படி?
எழுதவேண்டிய நிர்பந்தமென்ன
தலைகீழாய் எண்னையும் எழுத்தையும்.
கண்ணுற சாத்தியமானது
எல்லை முடிவையும்...
எல்லை ஆரம்பத்தையும்.
பணிசெய்து கொண்டிருந்தவரை
பணிக்கிறேன் சற்றே நிறுத்தச்சொல்லி.
கிட்டிய இடைவெளியில்
தேநீர் அருந்தினோம்.
சுழலும் நாற்காலியில்
நான் அமர்ந்தபடி
எனையொட்டி அவர் நின்றபடி.
சாரென்று இழுத்தவர் தொடர்ந்தார்
மெல்ல இறங்குகிறது தலைபாரம்.
நிமிடங்கள் கடக்க பிடிபடவில்லை
என்னுள்ளான மாற்றங்கள்.
ஆய்ந்து அறிந்துக்கொள்ள
பயணிக்கவிட்டேன் கடைக்கண்ணை
அமர்ந்திருந்த இணை காகம்
தனித்திருந்தது மின் கம்பியில்.
குழப்பத்திலிருப்பவனை நோக்கி
பணிதொடர்கிறார் நிசப்தமாய்.
நிகழ்ந்து கொண்டிருப்பதென்ன?
யோசிப்பின் உச்சியிலிருந்தவனை
இடது கையில் சீப்போடும்
வலக்கையில் கத்தரியோடும்
கீழே இறக்கினார்
சார் முடிஞ்சிடுச்சியென.
கட்டிணத்தை செலுத்திவிட்டு
ஆடையை உதறியபடி வெளியேற
அதிர்வற்ற நீரின் பிம்பமாய்
தெளிவாய்த் தெரிகிறது
இயல்பான காட்சி
--------------------------------------
வலியின் குறியீட்டை சிறகில் திணித்து பறக்க முடியாமல் திணறுகிறது இக்கவிதையும்:
நெடுஞ்சாலையின்
மத்தியில்
நசுங்கிகிடக்கும்
பறவையின் சிறகை
பறக்கவைக்க எத்தனிக்கிறது
காற்று.
--------------------
கவிஞரின் மர்றும் சில கவிதைகள்:
மகிழூந்தும் மகளையொத்த மகளும்.
பின்தொடர நேர்கிறது
என்னைச் சற்றே கடந்த
வெள்ளைநிற மகிழூந்தை.
வாகன இலக்கணப்படி அவ்வப்போது
பார்த்தபடியே இயக்குகிறேன்
இடது, வலது கண்ணாடியை.
என்னைக் கடந்த மகிழூந்தின்
வலது கண்ணாடியில்
அனிச்சையாய் பதிகிறதென் பார்வை.
மிகமெல்லியதொரு அசைவில் அசைகிறது
மேலுதடும் கீழுதடும்.
மத்தியிலிருந்து உயிர்த்தெழுகிறது
மனசுக்குப்பிடித்த ஏதோவொரு பாடல்.
மெல்லிய காற்றிலாடும்
பூச்செடியாய் அசைகிறது தலை.
கணிணியில் ஷிப்ட் ஒன்பதையும்
பூஜ்ஜியத்தையும் அழுத்தினால் வரும்
அடைப்புக்குறி மாதிரி
அசைக்கிறாள் ஸ்டெரிங்கை.
இருக்கையில்
இரு கையளவே அமர்ந்திருக்குமவள்
கலாரசிகையிவளெனச் சொல்லும்
ஆடையின் தேர்வு.
இதற்கிடையான இடைவெளியில்
நெருங்குகிறேன் என் அலுவலகத்தை.
சற்றே மகளோடு பயணித்த
நிறைவான நிறைவில்
இண்டிகேட்டரை இயக்கி திரும்புகிறேன்
கஸ்தூரிரங்கன் சாலைநோக்கி.
இராதாகிருஷ்ணன் சாலையில்
அன்னமாய் பயணிக்கிறாள்
மகளையொத்த மகள்.
------------------------------------
தேசிய நெடுஞ்சாலையின்
கூட்டு ரோட்டில்
கரும்பு ஜூஸ் பிழியும்
வட மாநிலத்தை சேர்ந்த அவன்.
வியாபார பரபரப்பினூடே
அவனை கடந்துச் சென்றந்த
டாரஸ் லாரியை கண்ணுற்றதும்
தன்நிலை மறந்து நிற்கிறான்.
அவன் கண்ணிலின்னும்
பயணிக்கிறது அந்த
வாகனத்தின் பதிவெண்.
புழுதியாய் மேலெழுகிறது
அவனது ஊரின் நினைவும்
தலைக்கோதி கண்ணீரோடு வழியனுப்பிய அம்மாவும்
தன் மார்பில் முகம் புதைத்து
கதறிய தங்கையும்.
இரயில் நிலையம் வரை
சுமைகளை சுமக்க விடாது
வழி நெடுங்கிலும் பலது சொல்லி
சுமைகளை சுமந்த அப்பாவும்
கணுக்களின் கண்ணில் தெரிய.
சக்கையாய் பிழியுமந்த வலிகளை
உதறிப் போட்டுவிட்டு
ஆயத்தமாகிறான் கரும்போடு
--------------------------------
ஒன்பது இலக்கம்...
நனைத்து நனையாது
பெய்துக்கொண்டிருந்த மழையில்
சீருடையணிந்த என்
இருபூக்களையும் பாதுகாப்பாய்
பள்ளியில் சேர்த்துவிட்டு
பிரதானச்சாலையில் இணைகிறேன்.
ஸ்கூட்டியில் மழலைகளை
இரு தூறல்களுக்கு
நடுவே நுழைத்தபடி
அழைத்துச்செல்லும் அன்னைகள்
அன்னையின் இடுப்பைபற்றியபடி
ஏதேதோ பேசியபடியே
பயணிக்கும் பிள்ளைகள்.
கவனம் முழுக்க சாலையில்
தலைக்கவசத்துக்குள் நுழையும்
நீண்டு நீளும் சொற்றொடரில்
' ம்' என்ற ஒற்றெழுத்தில்
நிரம்பித் ததும்புகிறது பாசம்.
பெற்றோர்களின் வருங்காலம்
பிள்ளைகளால் சிறக்குமென
ஆத்ம திருப்தியோடு
வேகம் கூட்டுகையில் கண்ணுற்றேன்
புத்தகச்சுமையோடு நடக்கும் சிறுவனை.
இடதோரம் மெல்ல நிறுத்தி ஏற்றி
அவனோடு அவன் பள்ளிக்கு
பயணிக்கிறேன்.
ஏழாம் வகுப்பில் பயிலுமவன்
வண்டியில் ஏறியபோதே
அமரவைத்தான் நன்றியை.
இடைப்பட்ட இடைவெளியில்
அவனது பெயரும்
அவனது இல்லமும் நிரம்பியது.
மற்றவரைவிட சற்றே
மாறுபட்ட கோணத்தில் பயணத்தினூடே விளக்கினேன்
கல்வியின் மகத்துவத்தை.
பள்ளியின் வாயிலில் கேட்டான்
'அங்கிள் உங்க போன் நம்பர்'
அலைபேசி எண் தந்துவிட்டு
நகர்ந்தவனை நிறுத்தினான்
என்னவென விழித்த என்னிடம்
நீங்க தந்த அலைபேசி எண்ணில்
ஒன்பதே இலக்குத்தான்.
இலக்கை சரிசெய்தவனின்
தலைகோதியபடி நகர்கிறேன்
இவன் சரியான இலக்கடைவானென்ற
------------------------------
இசைஞானியும் அந்த ஆட்டோ தோழரும்.
சேத்துபட்டு சமிக்கையை கடந்து
டாக்டர். குருசாமி பாலம் மீது
நகர வாய்ப்பற்ற மாலை நேரத்து
கடும் போக்குவரத்து நெரிசல்.
தலைகவச்தை கழற்றி
ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில்
எங்கிருந்தோ கேட்கிறது
உயிர் கசியும் உன்னம்.
ம்... ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
ராகதேவனின் இசையில்
பாடு நிலா பாலு குரலில்
கவியரசு வைரமுத்துவின் வரிகள்
இடது வலதில்
முன்னும் பின்னும்
அப்படியே நின்றபடி தேடுகிறேன்
அதற்குள் கடக்கிறது
" வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் மகிழ்ந்துனக்கு வேராவேன்"
அதோ அந்த இன்னோவாவுக்கு பக்கத்தில்
ஆட்டோவிலிருந்து உயிர் கீதம்.
அப்படி இப்படி எப்படியோ நுழைந்து
ஆட்டோ பக்கத்தில் நிற்றேன்
பாடல் முடிவுக்கு வந்திருந்தது.
ஆட்டோவிலுள்ள ஷீரடி சாய்பாபா
அருள்பாளித்த அடுத்த நொடி
" சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது"
லயித்தலினூடே மெல்ல நகர்கிறது வாகனங்கள்.
முழு பாடலை கேட்க ஆட்டோவை பின்தொடர்கிறேன்
உதவி செய்தது ஈ. கா சிக்னல்.
அப்பாடலும் நிறைவு பெற்றிட
தானியத்துக்கு காத்திருக்கும் பறவையாய் மாறிப்போனேன் நான்.
ஆட்டோ தோழர் கலாரசிகன்
சிரித்தபடி சமிக்கையில்
வரும் பாடலை கேள் நண்பா
" போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே"
நேராக பயணிக்க வேண்டிய நான்
வலப்பக்கம் பயணிக்கிறேன்
ஆட்டோவை பின் தொடர்ந்தபடி.
அதற்கு பதில் பலனாய்
" பாதை மாறிப் போகும் போது
ஊரு வந்து சேராது"
ஏன் சேராது இசைஞானியே உன்னை பின்தொடர்ந்தால்
ஊரு என்ன ஊரு
தேசத்தையே சுகமாய் கடப்பேன்.
-------------------------------
பொம்மைத் துப்பாக்கியை
வைத்து சுடுகிறது
குழந்தை.
தத்ரூபமாக இருக்க
துடிதுடித்தப்படி
மண்ணில் சாய்கிறான்
தந்தை.
கதறியழும் குழந்தையை
சமாதானப்படுத்தப்படுத்த
கரடி பொம்மையை
அதனிடம் தந்து
கடிபடாமலிருக்க தப்பித்து ஓடுகிறான்.
அவனோடும் நிலையைக்கண்டு
சிரித்தப்படி விரட்டுகிறது
அப்பாவை கரடியோடு.
-------------------------------
இருந்த காசில்
வாங்கி வந்த கமரக்கட்டை
ஆளாளுக்கு சமமாய்ப் பிரிக்க
அரைமணி நேரம் செலவழித்து
யாருக்கும் பங்கமில்லாது
சட்டை நுனியோரமதைப் புதைத்து
காக்கா கடிகடித்து
சரிபாதியாய் பங்கிட்ட
அண்ணன்..
மாறியேப்போனான்
அப்பாவின் நிலத்தை
பங்கிடும்போது.
--------------------------------
எளிய அன்னை.
வழக்கமான நேரம்தான்
ிரைகிறது
வீட்டை நோக்கி கால்கள்.
ஈசான மூலையில்
கருமேகத்தைக் கண்ணுற்றதும்
நிறுத்துகிறாள் ஓட்டம் கலந்த நடையை.
படி நிலக்கடலையும்
நாலைந்து துண்டு கிழங்கையும்
வாங்கி திணிக்கிறாள் பைக்குள்
வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்காக
அந்த எளிய அன்னை.
பெரியவனிடம் வைக்க வேண்டும் சிறியதொரு வேண்டுதல்
சின்னவளுக்கு செய்துதாப்பா
கத்திக் கப்பலென.
கப்பல் தயாராவதற்குள்
இவ்விரண்டையும் வேகவைத்து
அவர்கள்முன் வைத்துவிட்டால்
பொழியப்போகும் மழையிலும்
ஆனந்தத்திலும்
அப்பட்டமாய் நனைந்துவிடும் வீடு.
------------------------------
தேசிய நெடுஞ்சாலையில் மாநில நினைவுகள்.
இடது வளைவில்
திருவள்ளூர்
நேரே திருப்பதி
பிரியுமிடத்து புளியமரத்தின் கீழ்
சாத்துகுடி பிழிபவனிடம்
" காவ் கிதர்" என்றேன்.
கண்ணில் தோழமைத் ததும்ப
டம்ளரை நீட்டுகிறான்
கணப்பொழுதில் கண்முன்
தன்மாநிலத்தை வரவழைத்ததால்.
நன்றி சொல்லியடி தயாராகுகிறான்
இன்னொரு பழத்துடன்
தொலைவில் தென்படும் வண்டியிலிருந்து
இறங்கப்போகும்
இன்னொருவரின்
தாகத்தை தணிப்பதற்காக.
--------------------------------
நிபந்தனைக்குட்பட்டது.
தவமிருந்து பெற்ற மகள்
மணமுடித்து செல்கிறாள்
கணவனின் கரம்பிடித்தபடி.
வழிந்துவிடாது அழுத்தியிருக்கிறேன் கண்ணீரை
ஆழ் மனது அடித்துச் சொல்கிறது
அவள் திரும்பாது அப்படியே
பயணித்துவிட்டால் அதீத நலம்.
முன்பே சொல்லிவிட்டேன்
மகிழுந்து ஓட்டுநரிடம்
அவரும் புன்னகைத்ததும்ப
தானும் மகளை ஈன்றவனென்று.
மதில்சுவர் நுழைவாயில் மத்தியில்
அனிச்சையாய் நிற்கிறாள்
எதற்கதென்று எங்களிருவருக்கு மட்டுமே தெரியும்.
அவளது புருவத்தையொத்த
வளைந்த நித்தியமல்லியில்
சொரிகிறது நாலைந்துப் பூக்கள்.
வரும்போது மட்டுமல்ல
செல்லும்போதும் வரவேற்பானது.
குனிந்து மகிழுந்தில் அமரும்முன்
வலிய அழைக்கிறாள்
என் பால்ய நண்பனை
அவனது உள்ளங்கையில் முகம் புதைத்து
மெளனமாய் ஏதோ சொல்கிறாள்
புள்ளியாய் மறைகிறது மகிழுந்து.
மூடிய கைகளுடன் என்னருகே வந்தவன்
திறந்து காண்பிக்கிறான்
அவனது உள்ளங்கையில்
மத்தியில் அமர்ந்திருந்தது
நாலைந்து கண்ணீர்த் துளிகள்.
----------------------------
நடுப்பக்கத்தின் தன்னிலை விளக்கங்கள்.
நடுப்பக்கத்திலிருப்பதில்
உடன்பாடில்லை எப்போதுமெனக்கு.
ஏதோவொன்றுக்கான அவசரத்துக்கு
அப்படியே நீக்கிவிட வாய்ப்பதிகம். என் நீக்கத்தின் விளைவு
தளர்ந்திடும் அடுத்தடுத்த தாள்கள்.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்
வாசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில்
தூக்கமோ
சட்டென்ற அழைப்போ
மணிக்கணக்கில் மடிப்பிலே கிடந்திருக்க வாய்ப்பதிகம்.
அனைத்தும் ஆய்ந்திருந்தும்
இதுதான் அது
அதுதான் இதுவென
நடுப்பக்கத்தின் நடுநாயகத்தால் மெளனித்திருக்க வேண்டும்.
ஆறு பக்கமோ
ஆயிரம் பக்கமோ
இடது வலதின் மொத்த சுமையின்
சுமைதாங்கியாய்இருக்ககடவுவது
தொடர்ந்து தொடர்ந்தாலும்
பேரானந்தம் ஒன்றுண்டு மயிலிறகோ
காதலியின் கடிதமோ
கதகதப்பில் சுகிக்கலாம்.
எடைக்கு எடையில்
புத்தகங்கள் கைமாற
அவர்களின் பயன்பாட்டிற்கு
பெரும்பாலும் முதல் பலி நானே.
பக்கங்களாக பக்கங்களிருந்தும்
நடுப்பக்கதிற்கெப்போதும்
அற்ப ஆயுளே!
------------------------------
கசியும் நுனியில் நெளியும் அழகு.
வார நாட்கள் ஏழில்
இன்றுனக்கு அதிமுக்கியம்
வழக்கத்தைவிட சற்றுமுன்பே
விழித்தெழுகிறாய்
கூடுதல் நேரத்துக்கு.
என்னென்ன வாசிக்கயிருந்ததோ
அதையத்தனையும் இரவிலே
மனனம் செய்திருந்தாலும்
மறுவாசிப்பு செய்துக்கொள்கிறாய்
வரப்போகும் தேர்வை எதிர்கொள்ள.
இடையிடையே அம்மாவுக்கும் உதவுகிறாய்
வேண்டாமடா என்று சொல்லியும்
அப்பாவின் காலணியை மெருகேற்றுகிறாய்
தம்பியின் சீருடையை மிதமான சூட்டில்
தேய்த்து தயாராய் வைக்கிறாய்.
இதெல்லாம் அன்றாடச்
செய்கைதானுனக்கு
இப்போது ஆரம்பமாகிறது
சற்றே நீ
முன்விழித்தெழுந்ததின் நோக்கம்.
தலைகுளித்து பால்கனி பக்கமாய்
கூந்தலுலர்த்தம்போது
அத்தனையும் உன்னையே நோக்குகிறது
மல்லி உட்பட .
உன்னைப் பார்த்து சொன்னதோ
வாரநாளில் வெள்ளியே சிறப்பென்று
-------------------------------
இலைகளின் நாவுகள்.
தகிக்கும் கோடையில்
இடமளித்தது இளைபாற.
அவ்வேளையில்
எவ்வளவுக்கு கேட்டேனோ
அவ்வளவும் அது பேசியதே.
அதுசொல்லச் சொல்ல
நான் கேட்க கேட்க
விளிம்பு நிலை மக்களின்
விடிவின் முன்னகர்வது.
உள் வாங்கியதில்
உள்ளிருந்து வெளியேற்றுகிறேன்
ஒவ்வொரு இலைகளும்
மானுடத்துக்கான நாவுகளே.
இலையின் நரம்பில்
மடைமாற்றியது மானுடத்தின்
நரம்பற்ற நாக்கில்
ஆயிரமாயிரம் சொற்கள்.
வற்றாத ஜீவநதியின்
விளைச்சலில் விளைந்த
பெருமரத்தில் கிளைவிரித்த
கிளையிலிருக்கும் இலைகள்.
பலச் சொற்களை அதுகளே
அவதானித்து அவதானிக்க
படபடவென கைத்தட்டுகின்றன
சிறப்பென்று காற்று.
கனியான கவிதைகளை
வாசித்து புசித்த
பறவைகள்
ருசியின் மிச்சத்தை
எச்சங்களாய் வெளியிடுகின்றன
இன்னொரு படைப்புக்கு.
ஆங்காங்கே முளைக்கும்
பெருமரத்தில் இன்னொரு
ஆயிரமாயிர நாவுகள்.
மொழியின் மயக்கத்தில்
சூல்கொண்ட காற்றில்
பிறப்பெடுக்கிறது மழை.
தாள்கள் தரும் மரம்
இலைக்கு தராதா தாளை.
ஆகச் சிறந்த கவிதைக்கு
ஆழ்நிலையில் மெளனித்தபடி
ஆழ்ந்திருக்கிறது மண்ணுக்குள் வேராய்.
மண்ணில் மண்ணிருக்கும் வரை
எம்மொழியும்...
மொழியின் சொற்களும்
சொற்களின் அடர்த்தியில்
விரிந்திருக்கும்
ஆயிரமாயிரம் கிளைகள்.
அக்கிளையெங்கும் முளைத்த
இலைகளின் நாவுகள்.
-----------------------------
பூங்காவில் பெற்றோரில்லாது ஆடிக்கொண்டிருந்த சிறுமிகளில்
மூத்த சிறுமியொன்று
சட்டென அடிவயிற்றைப் பிடித்தபடி அமர்கிறாள்
மெல்ல அவளருகே சென்று ஆசுவாசப்படுத்தி
உன் அம்மாவின் அலைப்பேசி எண்
என்னவென கேட்டு காத்திருக்கிறேன்
அந்த தாயின் வருகைக்காக .
---------------------------------
எப்போதெல்லாம் உன் வீட்டிற்குள் நுழைகிறேனோ
அப்போதெல்லாம் என்னை வரவேற்பது
உன் அப்பாதான்.
வாடா கார்த்திக் வா உள்ளேத்தான் இருக்கான்.
நலம்தானே இது உன்னம்மா.
அமர்ந்த அமர்வின் அதிர்வு
அடங்குவதற்குள் அண்ணா காபி
இது உன்னென் ஆருயிர் தங்கை.
பாட்டியிடம் தாத்தாவை விசாரிப்பதற்குள்
நீ தந்த உடையாரை முடிச்சிட்டு
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு காத்திருக்கிறார்டா.
நாலு நாள் முன்புதான் நானும்
அதற்கு முந்தைய நாள் நீயும்
வந்து போயிருந்தாலும் விசாரிப்புக்களின் எல்லை இறுதிவரை தொட்டு விட்டுத்தான் திரும்பும்.
கொல்லையிலிருக்கும் வாழையும்
செம்பருத்தியின் அடுக்கிலும் நானே.
எனதான அத்தனை நலனும்
உன் வீட்டிலே சூல்கொள்கிறது.
இத்தகைய இதமான தருணத்தில்
எதேச்சையாய் காண நேரிட்டது
இருசக்கர வாகனத்தை
இயக்கியபடி செல்லுமுன்னை
அபாயகரமான வளைவிது
அறிவிப்பு பதாகையருகே.
நானுன்னை அழைக்கவுமில்லை
கையசைப்பும் செய்யவுமில்லை
வளைவு பகுதியை கடக்கு
முன்னை
பார்த்தவாறே கடக்கிறேன்
உன்னைப் பார்த்துவிட்ட
பேரானந்த திருப்தியோடு.
------------------------------
ஐந்துக்கும் ஏழுக்கும் மத்தியில்.
வகுப்பில் ஆறு வரையச் சொன்னேன்.
முட்டையிலிருந்து கோழியா
கோழியிலிருந்து முட்டையாவென
முழித்தார்கள்.
என்னவென்று வினவியதும்
தயங்கியபடி தயங்காது சொன்னான்
ஆறை ஏன் வரையவேண்டும் போட்டால் போதுமே என்றான்.
அதே முழி இப்போது என்னிடம்.
தெளிவாய் விளக்கமளித்தேன்
ஆழத்தின் ஆழமும்
இக்கரையின் அகலமும் அக்கரையின் அகலமும்
போதுமாய் இருத்தல் போதுமானதே.
தத்ரூபமாயிருக்க நாலைந்து மீன்கள் நீந்துவது அவசியம்.
மீனென்றதும் பிடித்தார்கள்.
ஆறுக்கு இத்தனை நீண்ட விளக்கமாவென
மெல்லிய கோபம் கொண்டதும் துணிந்தொருவன் தன்னிலை விளக்கமளித்தான்
ஆறு பார்ப்பதறியதாகிவிட்டதால்
நினைவிலிருந்து வற்றிவிட்டது
ஐந்துக்கும் ஏழுக்கும்நடுவிலுல்ல
ஆறுவே நினைவில் வந்ததென்று.