logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 481 - 500 of 761

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • திருவேடகம் ஜெய்கணேஷ்

0   1252   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • பொ. திராவிடமணி

0   848   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • அன்பு மணிவேல்

0   1052   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

0   1215   0  
  • July 2020

மாதாந்திர பரிசு

  • ராஜராஜேஸ்வரன் ரத்னசபாபதி

0   1003   0  
  • July 2020

கவிச்சுடர் விருது

  • கவிஞர் சௌவி

0   1611   1  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • ரா.கர்ணன்

0   1021   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • நீ சு பெருமாள்

0   1231   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • மு.ச. சதீஷ்குமார்

0   838   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • வே.மு. ஜெயந்தன்

0   1120   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • கோ. சிவராஜன்

0   1270   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • தக்ஷன்

0   1327   1  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • வசந்தன்

0   1378   0  
  • June 2020

மாதாந்திர பரிசு

  • விஜய் ஆனந்த்

0   840   0  
  • June 2020

கவிச்சுடர் விருது

  • கவிஞர் ஜே. பிரோஸ்கான்

0   2016   1  
  • May 2020

மாதாந்திர பரிசு

  • பூங்கோதை கனகராஜ்

0   1435   0  
  • May 2020

மாதாந்திர பரிசு

  • மின்மினி விமலா

0   1340   0  
  • May 2020

மாதாந்திர பரிசு

  • ஜே.கே. பாலாஜி

0   1282   0  
  • May 2020

மாதாந்திர பரிசு

  • ரவி குமாரசாமி

0   919   0  
  • May 2020

மாதாந்திர பரிசு

  • க. தங்கபாபு

1   925   2  
  • May 2020

மாதாந்திர பரிசு

திருவேடகம் ஜெய்கணேஷ்

View

மாதாந்திர பரிசு

பொ. திராவிடமணி

View

மாதாந்திர பரிசு

அன்பு மணிவேல்

View

மாதாந்திர பரிசு

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

View

மாதாந்திர பரிசு

ராஜராஜேஸ்வரன் ரத்னசபாபதி

View

கவிச்சுடர் விருது

கவிஞர் சௌவி

சௌந்தர் இரங்கநாதன் என்ற இயற்பெயருடைய கவிஞர் சௌவி அவர்களே இந்த மாதத்திற்கான, நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறார் என்பதை மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

இவரது கவிதைகள் காலத்தின் நிகழ்வுகளையும் காதலையும் படம்பிடிப்பதாக இருக்கின்றன! வார்த்தைகளின் சிக்கலில்லாத கோர்வை, இவரது கவிதைகளை அழகு செய்துவிடுகிறது!

தன்னைப்பற்றி அவரே நமக்கு எழுதியயளித்த தன்னிலை குறிப்பொன்றை இங்கு பார்ப்போம்:

"என்னுடைய பெயர் சௌவி. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாரலில் குயில்கள்
பாடிக்கொண்டேயிருக்கும் தென்னந்தோப்புகள் நிறைந்த சின்னபாப்பனூத்து என்ற கிராமம் நான்
பிறந்த ஊர். இந்த கிராமம் உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டத்திலுள்ளது.
அங்கிருக்கும் இயற்கையின் பேரழகுகளைக் காதலிக்கத் தொடங்கிய பிறகுதான் நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன். இயற்கைதான் என் முதல் காதலி. கிராமத்து வீட்டிலிருந்து
அம்மாவுடன் மாடு மேய்க்க காட்டுக்குப் போகத்தொடங்கியபோதுதான் இயற்கை எனை இழுத்து
தன் அழகையெல்லாம் எனக்குப் பந்தி வைக்க ஆரம்பித்தது. மேகங்கள் எப்போதும்
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் மலைகள் பார்க்கும்போதெல்லாம் ஒரு கவிதையைக்
கொடுத்துவிடும். அந்தியில் வந்து இரவு தூக்கம் வரும் வரை பேசிக்கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள் கவிதைகளைக் கொடுக்கும். கருவேல மரத்திலமர்ந்தபடி அந்திப் பாடலிசைக்கும்
கற்றாழைக்குருவிகள் கவிதைகளைக் கொடுக்கும். முற்றத்து வேப்ப மரத்தினுள்ளே தன்னுடல்
மறைத்தபடி காற்றில் இசை கோர்க்கும் குயில் கவிதைகளைக் கொடுக்கும். இவ்வாறாக
எழுதப்பழகி எழுதிக்கொண்டிருப்பவைதான் என் கவிதைகள். பள்ளிப்பருவத்திலிருந்து
எழுதத்தொடங்கிய கவிதைகள் இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் கவிதைகளால்
நிறைத்துவிடுகின்றன.
ஆனந்த விகடன், குமுதம் தீராநதி, குங்குமம், காமதேனு, புன்னகை, படைப்பு-கல்வெட்டு,
படைப்பு-தகவு மற்றும் பல இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதை என்பது
வாசித்தவுடன் எழுதப்பட்ட மன நிலையை, சூழலை, உணர்வுகளை அப்படியே வாசிப்பவரின்
மனதுக்குள் நிகழ்த்த வேண்டும். என் கவிதைகள் அவ்வாறானவை என்றே நம்புகிறேன்."

***

கவிஞரின் உணர்வுகள், கவிஞரே சொன்னதுபோல்  நம்மிடம் எளிதில் கடந்துவிடுவது திண்ணம். அப்படிப்பட்ட அவரது சில கவிதைகளை இங்கு நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

***

சாதி மதங்களால் பிரிக்கப்பட்ட ஒரு சமூகமாக நம் மனிதயினம் மாறியபிறகுதான் வன்முறைகளும், சீர் கேடுகளும் எளிதாக நுழைந்து, பண்பாட்டு கூறுகளை சிதைத்துவிட்டன. மனிதம் மீண்டும் தலைதூக்க நம்முள் ஊறியிருக்கும், நம்முள் பாவும் ஊடையுமாக இழைந்து வலைப்பின்னலாகியிருக்கும் சமூகக்கூறுகளை கண்டெடுத்து முன்வைப்பது மிகவும் அவசியமானவொன்று. இதனை இந்தக் கவிதை மூலமாக கவிஞர் நமக்கு எடுத்து வைக்கும் வரிகள் மிகவும் நேர்த்தியானவை!


1
புணர்ந்து முடித்தபின் பிரிந்துசெல்கின்றன
அக்ரஹாரத்து மாணிக்கம் ஐயர் வீட்டு
ரோஸி என்ற பெண் நாயும்
வளவிலிருக்கும் குப்பன் வீட்டின்
பெயரில்லா ஆண் நாயும்
அந்தோணி
தன் தொழுவத்தில் கறந்த பால்
வாகனங்களேறி
ஆச்சாரத்துக்குப் பேர் போன
சடகோபன் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில்
தயிரென உறைந்துகொண்டிருக்கிறது
இப்ராஹிம் வெட்டிய ஆட்டுக்கறி
முருகனின் வீட்டில்
பிரியாணியாகிக்கொண்டிருக்கிறது
கீழென ஒதுக்கப்படுபவர்கள் கட்டிய
சுவர்களுக்குள்தான்
தங்களை மேலென நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
குடித்தனம் நடத்துகிறார்கள் கூச்சமின்றி
அனுமதி மறுக்கப்பட்டவர்கள்
வெளுத்த ஆடைகளைத்தான்
கோவிலின் கருவறைக்கருகில் நின்று
முதல்மரியாதையை ஏற்கும்
ஊர்ப்பெரியவர் அணிந்திருக்கிறார்
இத்தனை தெளிவுரைகளிருக்க
இன்னும் அப்படியென்னதான் தேடலோ
சாதிக்குள்....மதத்துக்குள்?

***
நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றில்,'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
... குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்' என்றொரு வரியை ஞாபகப்படுத்துகிறது கவிஞரின் இந்தக்கவிதை! சூரியனைக் கண்டு சோம்பேறிகள் பதுங்கிக்கொள்ள, அதன் வெப்பத்தை உழைப்பவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது சிறப்பான பார்வை!

2
வெயில் ஆரம்பிக்கிறது
தன் மிகச்சூடான கரங்களால்
பூமியின் கழுத்தை இறுக்கியபடி
வெயிலுக்கு பயந்து பதுங்குபவர்கள்
பாதுகாப்பான இடம் தேடிப் பதுங்குகிறார்கள்
கையில் நீண்ட தடியோடு
அறுபது ஆடுகளை ஓட்டிக்கொண்டு புறப்படுபவன்
தன் கையிலிருக்கும் தடியால்
வெயிலை விரட்டியபடி தன நாளைத் துவக்குகிறான்
தலையில் மோர் சுமந்து செல்பவள்
சூடேறிய சூரியனின் மீது
ஒரு டம்ளர் மோரை ஊற்றி
சூரியனைக் குளிர்வித்தபடி
தன் நாளைத் துவக்குகிறாள்
மரம் வெட்டத் துவங்குபவன்
தன் பதமான அரிவாளால்
சூரியனை வெட்டி வீசிவிட்டு
தன் நாளைத் துவக்குகிறான்
கட்டிடம் கட்டத் துவங்குபவன்
சிமெண்ட்டையும் மண்ணையும் குழைத்தெடுத்து
சூரியனின் மேல் பூசிவிட்டு
தைரியமாக
தன் நாளைத் துவக்குகிறான்
கல்லுடைக்கத் துடங்கும்
இளந்தாயொருத்தி
பக்கத்து மரத்தூளியில் மகனைத்
தூங்க வைத்துவிட்டு
கையிலிருக்கும் சுத்தியலால்
சூரியனை நொறுக்கிவிட்டு
தன் நாளைத் துவங்குகிறாள்
பயப்படுவர்கள்
பதுங்கிக்கொண்டார்கள்
பயப்படாது நாளைத் துவக்குபவர்கள்
சூரியனை வெற்றி கொண்டு
உலகத்தை இயக்குகிறார்கள்

***
சக்கரவோட்டம் ஓடிக்கொண்டிருக்கும் அவசர யுகத்தில் நாமும் வேகமாக ஓட கற்றுக்கொண்டோம். அதே சமயம் நம்மை நாடி நிற்கும் சின்ன சின்ன வேண்டல்களையும் நம் அவசரத்தின் காரணமாக மறுதலித்துவிடுகிறோம்! காரணம் சுயம் என்பதைவிட நம் தேவைக்கான ஓட்டம் மிக முக்கியம் என்றே வாழ்வதுதான்! நமக்கே ஒரு தேவை  தேவைப்படும் போது மற்றவர்களும் நம்மைப் போலவே ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செவுள்களில் அறைந்ததுபோல் சொல்கிறது இந்தக்கவிதை!


3
அப்போதுதான் நிகழ்ந்திருக்கவேண்டும் விபத்து
நான்கு சக்கர வாகனமொன்று
இருசக்கர வாகனத்தை
இடித்துத் தள்ளிவிட்டு சென்றுவிட்டது
விழுந்து முகமெல்லாம் ரத்தம் ஒழுக
கூட்டத்துக்கு நடுவே எழுந்து நிற்பவர்
யாரென்று விசாரிக்க நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
பாதயாத்திரை செல்லுமொருவர்
செருப்பணியாப் பாதங்களோடு
பாதையோரத்தில் நின்றபடி
கட்டை விரலை உயர்த்தி லிஃப்ட் கேட்கிறார்
நின்று ஏற்றிக்கொள்ள நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
சீருடையோடு மரத்தடியில்
தனியாகநிற்கும் சிறுவன்
பள்ளி வாகனத்தைத் தவறவிட்டுவிட்டான்போல.
ஓடி வந்து கை நீட்டுகிறான்
நின்று ஏற்றிக்கொண்டு சென்று
பள்ளியில் இறக்கிவிட்டுச்செல்ல நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
வாடி வதங்கிய தேகத்தோடு
தலைநரைத்த முதியவர்
தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறார்
கடக்கும் என்னை நோக்கும்
அவரின் கண்கள் இறைஞ்சுகின்றன
நின்று ஏற்றிக்கொள்ள நேரமில்லை
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது
வேகமாகச் சென்றுகொண்டிருந்த
என் இருசக்கரவாகனம்
திடீரென வளைந்து ஆட
பக்குவமாய்க் கீழே விழாமல் நிறுத்தினேன்
பின் சக்கரத்திலிருந்து காற்று
சுத்தமாய் வெளியேறியிருந்தது
பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை எதையும்
காணவில்லை
வண்டியை ஓரமாய்ப் பூட்டி நிறுத்திவிட்டு
சாலையில் விரையும் வாகனங்களை நோக்கி
என் கட்டை விரலை உயர்த்துகிறேன்
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதென
கண்டுகொள்ளாமல் விரைகின்றனர்
அனைவரும்

***
 வெயில் அண்டவெளியின் ஆக்கசக்தி!  இருந்தாலும் அதன் வெப்பம் அதன் மீதான பகைமையை கூட்டிவிடுகிறது! அதற்கு எதிராக சமர் செய்ய நீச்சல்குளம், இளநீர், குளுமை சாதனங்கள் என பலவற்றோடு, நாம் நட்பு பாராட்டிக்கொள்கிறோம். ஆனாலும் இறுதிவரை வெயில், வெயிலாகவே இருந்து வெற்றிக் கொள்வதாக சொல்லும் இந்தக் கவிதை.. வெயிலுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட நம்பிக்கையூட்டுவதுதான்!

4
வெயிலைப் பற்றிய ஏராளமான புகார்கள்
உங்களிடத்திலும் என்னிடத்திலுமிருக்கின்றன
வெயிலை நாம் எப்போதும் வசவு வார்த்தைகளால்
திட்டிக்கொண்டேயிருக்கிறோம்
மழையை நேசிப்பதைப்போலவோ
நிலவொளியை நேசிப்பதைப்போலவோ
நிழலை நேசிப்பதைப்போலவோ
நாம் வெயிலை ஒருபோதும் நேசிப்பதில்லை
ஒருநாளைக்கு
குறைந்த பட்சம் ஒருமுறையாவது
நாம் வெயிலைச் சபித்துவிடுகிறோம்
அதுவும் கோடையில்
வெயிலின்மீது கணக்கற்ற சாபங்கள் ஏற்றப்படுகின்றன
வெயிலிலிருந்து தப்பிக்க
குடை நிழல் குளிர்பானம் இளநீர்
குளிரூட்டப்பட்ட அறை மின்விசிறி என
ஏராளமான வழிமுறைகளை வைத்திருக்கிறோம்
ஆனாலும் வெயில் நம்மை விடாது பின்தொடரந்து
தீண்டிக்கொண்டேயிருக்கிறது
உலகம் முழுவதும் வெயிலுக்கெதிரான ஆராய்ச்சிகள்
நடந்துகொண்டேயிருக்கின்றன
மேலே வந்தமரும் வெயிலை
ஒரு வெறுப்புணர்ச்சியோடே
சுமந்து கடக்கிறார்கள் எல்லோரும்
வெயிலைத் தோற்கடிக்க
மரங்களோடு மேகங்களோடு நதிகளோடு
குளங்களோடு மழையோடு என
ஏராள ஒப்பந்தங்கள் செய்கிறோம்
ஆனாலும் கடைசியில் வெயிலே ஜெயிக்கிறது
அத்தனை சாபங்களையும் மீறி
அத்தனை கோபங்களையும் மீறி
அத்தனை சதிகளையும் மீறி
அத்தனை வேண்டுதல்களையும் மீறி
அத்தனை எதிர்ப்புகளையும் மீறி
எப்போதும் வெயில் வெயிலாகவே இருக்கிறது
என்பதே வெயிலின் தனிச்சிறப்பு

***

இயற்கையின் நிலையில் மனிதர்கள் ஒன்றி வாழ்வது ஜென் நிலை மட்டுமல்ல, ஜென்ம நிலையும் கூட! ஏனென்றால் இயற்கையின் படைப்புகள் அனைத்துமே இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன.. மனிதன் மட்டுமே விதிவிலக்காக அதனை அழித்து வாழ்கிறான் என்பதை குறியீடாக எடுத்துக் கொண்டு செல்லும் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு! 

5
மலர்களை உதிர்த்துக்கொண்டிருக்கும்
மர நிழலில்
எறும்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன
அதை அப்படியே விட்டுவிடுங்கள்
சிலுசிலுவெனக் காற்றைக் குளிப்பாட்டி
அனுப்பிக்கொண்டிருக்கும்
வேப்ப மரத்து இலைகளுக்குள் மறைந்தபடி
ஒரு குயில் பாடிக்கொண்டிருக்கிறது
அதை சலனப்படுத்தாமல் கடந்து சென்றுவிடுங்கள்
உங்கள் வயக்காட்டு வரப்பு மேடுதான்
வானத்தைத் தொட்டுவிடுவோமென்று
பட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
விடுமுறைச் சிறுவர்கள்
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் வானம் தொடட்டும்
தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து
வெளிச்சத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றன மீன்கள்
நீங்கள் வலைவீசுவதைச்
சற்றே நிறுத்திவையுங்கள்
கருவேல மரத்தில்
கற்றாழைக் குருவிகள் கூடியமர்ந்து
பேசிக்கொண்டும் பாடிக்கொண்டுமிருக்கின்றன
உங்கள் ஒலிபெருக்கிகளைக்
கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்
மேகங்கள் நிரம்பிய இரவு வானத்தில்
நட்சத்திரங்களைப் படைத்து மகிழ்கின்றன
மின்மினிப்பூச்சிகள்
இரவைக் காயப்படுத்தும்
உங்கள் வெளிச்சங்களைக் கொஞ்சம்
கட்டுப்படுத்துங்கள்
இந்த உலகம் உங்களுக்கானது மட்டுமல்ல

***
முரண்களால் சிக்கிக் கொள்கிறது உலகம்! துன்பம் இன்பம் இரண்டுமே இரண்டு பக்கங்களென்றாலும், உதவியென்பது ஒரே பக்கம் கொண்ட வெளிச்சம்தான். இதனை மறந்துவிடுவதால் எழும் துயர்தான் இந்தக் கவிதை! 

6
அத்தனை பால்காரர்களும்
விரையும் அந்தச் சாலையில்தான்
நான்கு நாட்களுக்கு முன்பு
அடிபட்டு இறந்த நாயொன்றின் இரு குட்டிகள்
பாலுக்குக் கத்திக்கொண்டிருக்கின்றன பசியால்
அத்தனை ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்
அமைந்துள்ள சாலையில்தான்
சட்டையில்லாத சிறுவனொருவன்
பிளாஸ்டிக் புட்டிகளைப்
பொறுக்கிச் சேகரித்துக்கொண்டிருக்கிறான்
ஒரு நல்ல சட்டைக்கான கனவுகளோடு
மாநகரத்தின்
அரசுத் தலைமை மருத்துவ வளாகத்தில்
ஒழுகும் குருதியோடும் அடிபட்ட காலோடும்
தாவித் தாவிக் குதித்தபடி
பரிதாபக் கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும் பறவையினை
கண்டுகொள்ளாமல் கடந்து போகிறார்கள்
எல்லோரும்
காப்பாற்றுவார் கடவுளென்று
எல்லோரும் கோயிலுக்குச் செல்ல
கடவுளைக் காப்பாற்ற நின்றுகொண்டிருக்கிறார்
துப்பாக்கி வைத்த கடைநிலைக் காவலரொருவர்
காடுதிருத்தி வியர்வை சிந்தி விளைவித்தவன்
தாங்கமுடியாத கடனால்
தற்கொலை செய்து கொள்ள
வாங்கி விற்ற வியாபாரி
அதை செய்தித்தாளில் படித்தபடி
சொகுசுக் காரில் போய்க்கொண்டிருக்கிறான்
சற்றே சங்கடத்தில் உச்சுக்கொட்டியபடி
உலகம் எல்லோருக்குமானது என்கிறார்கள்
மறுபடி மறுபடி சொல்கிறார்கள்
ஆனால் நம்பத்தான் முடியவில்லை

***
சாதாரண வியாபாரியொருவனின் மன நிலையை படம் பிடிக்கும் காட்சிதான் இந்தக் கவிதை!

7
பத்து வட்டிக்கு
ராயல் பைனான்ஸில் கடன் வாங்கி
பெங்களூர் போய்
ஹோல்சேல் கடையில் துணிகள் வாங்கி
தள்ளுவண்டியில் கடைபோட்டு
இந்த தீபாவளிக்கு நாலு காசு
இலாபம் பார்க்கலாமென
ஆசைப்பட்ட நாச்சிமுத்து
பெய்துகொண்டிருக்கும் மழையிடமிருந்து
அசலைக் காப்பாற்ற
தார்பாய் போட்டு
கடையை மூடிவைத்துவிட்டுப் புறப்படுகிறான்
நாளையாவது
மழை வராமலிருக்க வேண்டுமென
இன்னும் இரண்டு நாட்களுக்கு
கனமழை நீடிக்குமென
தொலைக்காட்சியில் தோன்றி
அறிவித்துக்கொண்டிருக்கிறார்
வானிலை மைய அதிகாரி
பெய்யும் மழையை உற்றுப்பார்க்கிறேன்
அதற்கு கொஞ்சம்கூட ஈரமில்லை

****
கவிஞரின் நயம்மிக்க இன்னமும் சில கவிதைகள்:

8
தீர்ப்பு வரும்முன்னே
வென்று விட்டதாய்க் கூத்தாடுகிறார்கள்
ஒருவர் தவமிருக்கிறார்
ஒருவர் விருந்தளிக்கிறார்
ஒருவர் பழி தீர்க்க வேண்டியவர்களென்று
பலரைப் பட்டியலிடுகிறார்
ஒருவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையெல்லாம்
தைரியமாக எடுத்து
எல்லோரின் பார்வைக்கும் வைக்கிறார்
ஒருவர்
உடனடியாக கைது செய்யப்படவேண்டியவர்களென்று
ஒரு பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்
ஒருவர் மாட்டுக்கறி தின்பவர்களைக்
கணக்கெடுக்க உத்தரவிடுகிறார்
தொழிலிழந்து ஏழையாகிய
குறுந்தொழிலதிபர்கள்
உய்ய வழியில்லையென்று
உத்திரத்தை வெறித்து நோக்குகிறார்கள்
தோற்றுவிடுவோமென்று
நம்பத்தொடங்கியவர்கள் ஒன்றுகூடி
அடுத்த கட்ட ஆலோசனை நடத்துகிறார்கள்
இன்னும் திறக்கப்படாத பெட்டிகளுக்குள்
முடங்கிக்கிடக்கும் வாக்குகள்
தலையில் அடித்துக்கொண்டு
தங்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கின்றன
-சௌவி

9
எந்த இராமனும் வில்லுடைக்கவில்லையென்று
தன் நரைமுடிகளைச் சாயமேற்றி
கருப்பாக்கிக்கொண்டிருக்கிறாள்
திருமண வயது கடந்த பெண்ணொருத்தி
இன்றேனும் கிட்டும் வருமானத்தில்
குடும்பத்தினர் எல்லோரின் பசியையும்
தீர்க்கமுடியுமென்று
பணம் கொழுத்த வீடாகத் தேடுகிறான்
திருடனொருவன்
நாளை காலை பதினோரு மணிக்கு விமானம்
இனி மறுபடி மூன்று வருடங்கள் கழிந்தே வீடு
விசனத்தில் கண்ணீர் கன்னத்தில் வழிய
மகளை அணைத்துக்கொண்டு
தூங்காது படுத்திருக்கிறான்
இளந்தகப்பனொருவன்

இனி கண்விழிக்காதிருந்தால்
எவ்வளவு நிம்மதியாக இருக்குமென
கண்ணீர் வழியும் கண்களை மூடுகிறாள்
மாலையில் புதிதாய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட
மூன்று மகன்களைப் பெற்ற
முதியவளொருத்தி
அடித்த காற்றில் அத்தனை தென்னைமரங்களும் விழுந்துவிட்டன
வாங்கிய கடனோ பூதமென
எழுந்து நின்று மிரட்டுகிறது
விடிந்தால் தவணை கட்டவேண்டிய கடைசிநாள்
உறங்காமல் உத்திரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறார்
கட்டிவிடுவோமென நம்பிக் கடன் வாங்கிய விவசாயி
இரவென்பது
விடியலை நோக்கிச் செல்வதாகவே
எல்லோராலும் சொல்லப்படுகிறது
எல்லோராலும் நம்பப்படுகிறது
எப்போது விடியுமிந்த இரவு?
-சௌவி

10
என் மௌனங்களையெல்லாம்
காலியாகிப்போன ஹார்லிக்ஸ் டப்பாக்களிலும்
மை தீர்ந்த பிரில் இங்க் புட்டிகளிலும்
அடைத்து அலமாரியில்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
ஏன் பேசமாட்டேனென்கிறாய்
ஏன் மௌனமாக இருக்கிறாய்
எனக் கேட்பவருக்கெல்லாம்
அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற
மௌனம் நிரப்பப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டிலை
எடுத்துக் கொடுக்க நினைப்பதுண்டு
மௌனம் உலகின் மிகச்சிறந்த மொழி
என்பதை
சிலர் புரிந்துகொள்வதேயில்லை
மௌனத்தின் மொழிகள்தான்
எத்தனையோ விபரீதங்களைத் தடுக்கின்றன

எத்தனையோ சண்டைகளைத் தனிக்கின்றன
மௌனமான இரவைப் பாருங்கள்
அது எவ்வளவு அழகாகவும்
அமைதியாகவுமிருக்கிறது
இரைச்சல்கள் மிகுந்த பகலோடு
ஒப்பிடுகையில்
மௌனமான இரவு ரம்மியமானது
இரவின் மௌனத்தோடு
விடிய விடியப் பேசிக்கொண்டிருக்கலாம்
அது பகலைப்போல அதட்டவோ
அலுத்துக்கொள்ளவோ
காதுகளை மூடிக்கொள்ளவோ செய்யாது
அது கேட்டுக்கொண்டேயிருக்கும்
பேசும் மனசு சாந்தப்படும்வரை
எனக்குள் ஏதேனும் பெருத்த சப்தங்கள்
கேட்கும்போதெல்லாம்
நான் டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கும்
மௌனத்தை எடுத்து
ஆட்டாங்கல்லில் ஆட்டியோ
மிக்ஸியில் போட்டு அரைத்தோ
குடித்துவிடுவேன்
உள்ளுக்குள் கேட்கும் பெருத்த சப்தங்கள்
அரைமணி நேரத்துக்குள்
அப்படியே அடங்கிவிடும்
கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த மாடுகளிடமும்
காடுகளில் சுற்றிப் பறந்து கொண்டிருந்த
வண்ணத்துப்பூச்சிகளிடமும்தான்
நான் நிறைய மௌனங்களையும்
அம்மௌனங்களின் பேரழகையும்
கற்றுக்கொண்டேன்
மரங்களின் மௌனம்
செடிகளின் மௌனம்
சுவர்களின் மௌனம்
என எத்தனை எத்தனையோ
மௌனங்களை ரசித்தாலும்
எனக்குப் பிடித்ததென்னவோ
மலையின் மௌனம்தான்
அவ்வளவு பெரிதாக ஆஜானுபாகுவாக
எவருக்கும் அடங்காத உருவத்திலிருந்தாலும்
மலைதான் எவ்வளவு மௌனமாக
அமர்ந்திருக்கிறது!

-சௌவி

11
மரத்திலிருந்து கீழே விழுந்து
காற்றோடு கைகோர்த்தபடி ஓடும்
இலைக்குக் கிடைத்திருப்பது
சுதந்திரமல்ல
ஓடிய இலையை பக்கத்து நதியில்
தள்ளிவிட்டுவிட்டு
தான் மட்டும் தப்பித்துப்போகும்
காற்று செய்தது
துரோகம் அல்ல
தன்னுள் விழுந்த இலையை
தன்னுடனே இழுத்துச் செல்லும்
நதி செய்வது
உதவி அல்ல
போய்க்கொண்டிருந்த இலையை
தன்னிடமிருந்த செடியொன்றை நீட்டி
கரை தடுப்பது
காப்பாற்ற அல்ல

உதிர்ந்து ஓடிய இலையினைப் பற்றிய
குறிப்புகள்
உதிராத எந்த இலையினிடத்தும் இல்லை
ஏனென்றால்
ஒவ்வொரு இலைக்கும்
வெவ்வேறு குறிப்புக்களால்
எழுதப்படுகிறது வாழ்வு
-சௌவி

12
சந்தடி மிகுந்த கடைத்தெருவில்
எல்லாக் கடைகளின் முன்பும்
கைகூப்பி
கடவுளாக்க முயற்சிக்கிறார்
முதியவர்
யாருக்கும்
கடவுளாக மாறவோ
பக்தனின் கோரிக்கைக்குச்
செவிமடுக்கவோ விருப்பமில்லாத
அத்தெருவில் கோவில்களுமிருக்கின்றன
அக்கோவில்களுக்கு உள்ளேயிருக்கும்
கடவுள்களும் அவ்வாறே
மனிதர்களைப் பார்த்து
கடவுள் இவ்வாறு மாறிப்போனாரா
அல்லது
கடவுளைப் பார்த்து

மனிதர்கள் இவ்வறு மாறிப்போயினரா
அல்லது
கடவுள் என்றாலே இப்படித்தானோ?
இன்னும் எந்த உறக்கமும்
எந்த இரவும்
விடையளிக்கவேயில்லை அம்முதியவருக்கு
கடவுளாக ஆசைப்படாதவர்களை
கடவுளாக மாறச்சொல்லி
கடவுள் இல்லாத ஊரில்
கடவுளைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்
கடவுள்
-சௌவி

13
***நவீன சமையலறை***
எரிவாயுவில் எரியும் அடுப்பிருக்கிறது
எப்படிப்பட்ட நீரையும் சுத்திகரித்துக்
குடிநீராக்கும் உபகரணம் மாட்டப்பட்டுள்ளது
கொதித்தலிலிருந்து வெளியேறும் ஆவியை
உடனடியாக வெளியேற்ற
சுவற்றுக்குள் சுழன்று வெளியேற்றும்
காற்றாடி உள்ளது
எல்லாவற்றையும் சூடாக்கித்தர
உயர்ரக சூடேற்றி உள்ளது
குளிரேற்றி அருந்தவும் தின்னவும்
குளிர்சாதனப்பெட்டி உள்ளது
எல்லா சமையல் பொருட்களையும்
அழகாய் அடுக்கி வைக்க
வெளியே துருத்தாத அலமாரி உள்ளது
பாத்திரங்களை உடனுக்குடன் துலக்கியுலர்த்த

மின்சாரத்தில் இயங்கும் துலக்கியுள்ளது
சமையலறை என்பது
நவீனம் நவீனம் எனச்சேர்க்கப்பட்டு
அத்தனை நவீனமாகிவிட்டது
இத்தனை நவீனத்திற்குப் பிறகும்
எந்த வீட்டிலும் மாறவேயில்லை
அடுப்படியில் பெண்கள் என்ற
ஆதிகாலச் சொற்றொடர்
-சௌவி

14
சிமெண்ட் மூட்டையை
லாரியிலிருந்து தூக்கிச் சுமந்து
குடோனுக்கு அடுக்குபவனின் நாள்
சிமெண்ட் நிறத்திலேயேயிருக்கிறது
வெயிலில்
ஓடும் வாகனப்புகைகளுக்கிடையே
ரோட்டைச் சுத்தப்படுத்தி
தாரூற்றி சாலையைச் செப்பனிடுபவனின் நாள்
கருப்பு நிறத்திலேயேயிருக்கிறது
காலை மூன்று மணிக்கே எழுந்து
ஒவ்வொரு தோட்டமாய்ச் சென்று
பாலைக் கறந்து சேகரித்து
நகரமேகி
வீடுவீடாய்ச் சென்று பாலூற்றுபவனின் நாள்
வெள்ளை நிறத்திலேயேயிருக்கிறது
எப்படி வாழ்வு இப்படியானதோ தெரியாது

நெடுஞ்சாலையில் மரங்களின் மறைவில் நின்று
பேருந்து நிலையங்களில் கடைகளுக்குள்ளான சந்துகளில் நின்று
வாடிக்கையாளர்களைத் தேடுபவர்களின் நாள்
சிவப்பு நிறத்திலேயேயிருக்கிறது
பசியா வறுமையா
எது திருடனாக்கியது எனத்தெரியாது
அடுத்தவர்களின் கண்களை இருட்டாக்கிவிட்டும்
இருள்பொழுதுகளிலும் வாழ்வைத்தேடும்
திருடர்களின் நாள்
இருட்டு நிறத்திலேயேயிருக்கிறது
வண்ணங்களாலானது வாழ்க்கை என்கிறீர்கள்
வண்ணங்களாலானதா வாழ்க்கை?
-சௌவி

15
மாதவிலக்கானால்
உன்னுடன் கோயிலுக்கு வராதே
என்கிறாய்
அலுவலகத்திலிருந்து திரும்ப நேரமாகிவிட்டாலும்
உன் பசியடக்க
என் சமையலுக்காகக் காத்திருக்கிறாய்
இரவுச் சமையலறை வேலைகளை
முடித்துவிட்டு வருவதற்குள்
இவ்வளவு நேரமா என
காமமேறிய கண்களுடன்
சலித்துக்கொள்கிறாய்
உன் தேவை முடிந்ததும்
என் திருப்தி பாராமல்
உறங்கிப்போகிறாய்
நான் எப்போது உறங்கினேனென்பதை
உணர்ந்துகொள்ளாமல்

நீ கண்விழிக்கும் காலையில்
நான் பெட்காஃபி நீட்டவேண்டுமென
எதிர்பார்க்கிறாய்
அலுவலகம் புறப்படும்வரை
செய்தித்தாள்களோடும்
தொலைக்காட்சியோடுமே
பொழுதைக் கழிக்கிறாய்
அலுவலகத்திற்கு தாமதமாகச்
செல்லக்கூடாதென
நீ ஒரு எடுத்துக்காட்டாயிருக்கவேண்டுமென
நீ நினைப்பதுபோலவே
என் அலுவலகத்தை நானும் நினைப்பதை
நினைக்க மறக்கிறாய்
என் சம்பளப்பணத்தின் பிடித்தங்களைக்
கணக்கிடும் நீ
உன் சம்பளப்பணத்தின் உண்மையை
நிர்வாணப்படுத்த மறுக்கிறாய்
என் முகநூலுக்குள் நுழைந்து
என் உரையாடல்களை
ஒரு சந்தேகக்கண்ணோடே
படிக்கிறாய்
உன் எல்லா உரையாடல்களையும்
விகல்பமற்றவை என்றே நம்ப
உத்தரவிடுகிறாய்
என் மார்புகளின் கனபரிமாணத்தை
சரியாகத் தெரிந்துவைத்திருக்குமுனக்கு
என் மனதின் கனபரிமாணம் தெரியவேயில்லை இன்னும்
நீதான் சொல்கிறாய்
மகளிர் தின வாழ்த்துக்களை..!
-சௌவி

 

View

மாதாந்திர பரிசு

நீ சு பெருமாள்

View

மாதாந்திர பரிசு

மு.ச. சதீஷ்குமார்

View

மாதாந்திர பரிசு

வே.மு. ஜெயந்தன்

View

மாதாந்திர பரிசு

கோ. சிவராஜன்

View

மாதாந்திர பரிசு

விஜய் ஆனந்த்

View

கவிச்சுடர் விருது

கவிஞர் ஜே. பிரோஸ்கான்

"வெயில் கவிதையொன்றை எழுதுவதற்கு முன்னர்
ஒரு ஐஸ் குச்சியை
ரசிக்கும் குழந்தையை
நான் அருந்தி முடிக்க வேண்டும்."

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை பெருமையுடன் பெறும் கவிஞர் ஜே. பிரோஸ்கான் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!


படைப்பாளி ஜே.பிரோஸ்கான் இலங்கையில் கிழக்கு மாகாணம் .திருகோணமலை மாவட்டம் .கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு சாதாரண மீன் பிடியாளர். தமது வறுமை நிலையிலும் அவர் தனது பிள்ளையின் திறமைகளை தடுக்காமல் அவர்களது திறமையின் பாதையில் பயணிக்க கைகொடுத்தவர்.

எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் உயர் தரம் வரை கல்வி கற்றவர்.தற்போது கிண்ணியா பொதுநூலகத்தில்  பணியாற்றி வருகின்றார். தனது இலக்கிய பயணத்தை கடந்த 20 வருடங்களாக கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, குறுந் திரைப்படம், இலக்கிய அமைப்பு,செய்திப் பத்திரிகையென பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் "மரண நேரம்" என்ற குறுந் திரைப்படத்தை இந்த ஆண்டு வெளியிடுள்ளார்  குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 நூல்களை வெளியீடு செய்துள்ளார்.பல சர்வதேச தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி பரிசு (2018 ஆம் ஆண்டு), அனைத்துலக கவிதை தினப் போட்டியில் சிறப்பு விருது, கொடகே தேசிய சாகித்திய விருதும் மற்றும் சரத் ஜயக் கொடி தேசிய கவிதைக்கான இரண்டு விருதும் பெற்றுள்ளார்.

அவரது வெளி வந்த பத்து நூல்களும் வெளி வரக் காத்திருக்கின்ற நூல்களும்.

1 இதுவும் பிந்திய இரவின் கனவுதான்
2 தீ குளிக்கும் ஆண் மரம்
3 என் எல்லா நரம்புகளிலும்
4 ஒரு சென்ரீ மீட்டர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம்
5 காக்கைச் சிறகினிலே நந்தலாலா(சிறார் இலக்கியம்,தேசிய நூலாக்கல் திணைக்களத்தினால் பரிசு பெற்று பதிப்பு செய்யப்பட்டவை)
6 ஆண் வேசி
7 மீன்கள் செத்த நதி
8 என் முதுகுப் புறம் ஒரு மரங் கொத்தி
9 நாக்கு
10 ஜே.பிரோஸ்கான் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு (வர இருப்பவை)
இது தவிர
11 மாய இரவும் மந்திரப் புன்னகையும்
12 உன் முத்தத்திற்குப் பட்டப் பெயர் கசையடி
13 மூன்றாம் பரம்பரையின் திமிரு
14 சுடுதல் தீர்ந்து போகாத நெருப்பு(குறுங் நாவல்) போன்றவை நூலாக வர இருக்கிறது குறிப்பிடத் தக்கது.

தனது பயணத்தில் இலக்கியம் மட்டுமின்றி தாய் அல்லது தந்தையை இழந்த பள்ளி குழந்தைகளையும் வறுமைக் கோட்டில் வாழும் குழந்தைகளையும் இனம் கண்டு இலவசக் கல்வி கொடுப்பது போன்ற சமூகப்பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றவர். 

கவிஞரின் கவிதைகள் வாழ்வின் கணத்தோடு பயணிக்கக் கூடியவை. சொற்சிலம்பங்கள் காட்சிமைகளின் வடிவாகுவது அழகு! கவிஞரின் சில கவிதைகளை இங்கு கவனிப்போம் வாருங்கள்! 
.
வாழ்வின் படிநிலைகளின் ஓட்டத்தை இங்கு மலைப்பாம்பு ஒன்றும் ஆப்ரிக்க பட்டாம் பூச்சியொன்றும் தன் மீது படிமங்களாகச் சுமந்து கொண்டு இந்த கவிதை வனத்தில் சமரிடுகின்றன! பட்டாம் பூச்சி எழுதி வைத்த அந்தக் குறிப்பு ஒரு மரண வாக்கு மூலமாக இருக்க வாய்ப்பில்லாதற்கு கவிஞரின் மகள் ஓர் அழகிய பட்டாம் பூச்சியை வரைந்து வந்து நிற்கும் இந்தக் கவிதையும் அழகுதான்!


ஆப்ரி்க்க கதைகளில் வாழும் பட்டாம்பூச்சி

ஒரு மலைப் பாம்பின பசியொன்றை
ஒரு ஆப்ரிக்க பட்டாம்பூச்சி
எழுதிச் செல்கிறது.
பாம்பின் தீரா பசிக்கென என்னை
அது காடெங்கிலுமாக
துரத்திய அந்த சம்பவத்தை
எனது கடைசி நிமிடமென
பட்டாம்பூச்சி உயிரின் வலிமை பற்றி
தனது சக பட்டாம்பூச்சிகளுக்கு
எழுதி வைத்த மடலைத் தான்
இப்போது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பட்டாம்பூச்சி இறந்ததாக அது எந்த
இடத்திலும் குறிப்பிடவில்லை
ஆனால் இது எனது இறுதி நிமிடமென
அது சொல்லியதில் இறந்ததாக
சேதி ஆப்ரிக காடுகளில் பரவியது
பட்டாம்பூச்சிகள் இப்போது
ஆப்ரிக காடுளில் வாழ்ந்துவிட
முடியாததை நினைத்து அங்கிருந்து
தமது பூர்வீகத்தை இழந்து
புறப்படுகின்றன
இச் சேதி ஆப்ரிக்க மலைப்புகளுக்கு
வருவதாக மடல்
குருதி படிந்த தொடர் புள்ளியில்
முடிந்திருந்ததை பார்த்த எனக்கு
இதன் முடிவு என்னாவாக இருக்குமென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
மகள் தனது நோட்டுப் புத்தகத்தில்
சில பட்டம்பூச்சிகள் தேனருந்தி
மகிழ்வதாக ஒரு ஓவியத்தை
வரைந்து என் கைகளில் தந்து
சிரிக்கிறாள்.
அவள் சிரிப்பின்  சப்தத்தில்
ஆப்ரிக்க பாம்புகள்
செத்து இருக்குமென கவிதையை
முடித்து வைக்கிறேன்.
..

அங்கேயே இருக்கிறாய்
.....................................
தன்னம்பிக்கை கவிஞனின் மொழி! தடைகளை அவன், தன் எழுத்துகளுக்கு சிறகு கொடுத்து கடந்து விடுவான்! முட்டுக் கட்டை போடுகிறவன் முடங்கிக் கிடக்கும் வெற்ரு கட்டை என்று சொல்லும் இந்தக் கவிதைதான் எத்துணைச் சிறப்பு!

                   
நீ போடுகின்ற
முட்டுக் கட்டைகளையெல்லாம்
அவ்வப்போது
தாண்டி வருகின்ற வேளை
இன்பம் தவிர்த்து
அந்த எல்லையை
நோக்கியே நடக்கிறேன்.
உறுதிமிக்க அந்தப்பயணம்
தோற்பதில் உனக்குயிருக்கும் ஆர்வத்தை
என்னால் தகர்த்து விடுமளவுக்கு
நம்பிக்கை சிறகை விரித்து
நான் பறக்கிறேன்.
நீ
இருந்த இடத்திலேயே
தலை உயர்த்தி
வானைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
...........................

நிசி பிசாசுகளின் சந்தை தினம் ஒரு வித்தியாசமான பாடு பொருள்!
"இரவின் நடு நிசியென்றாலே / பிசாசுகளின் சந்தை தினமென / சின்ன வயசில் / உம்மாச்சியின் கதை சொல்லக் கேட்டிருக்கேன்" என்று சொல்லும் கவிஞர் இரவின் நிசிதான் தவறுகள் கூட்டமிடுமிடம் என்று சூசகமாக சொன்னாலும் அவரின் பொருளில், உம்மாச்சி சொன்ன பிசாசுகள் மனிதனிழைக்கும் தவறுகளாக இருக்கலாம்! 


நிசி பிசாசுகளின் சந்தை தினம்

முற்றிலும் மாறுபட்ட இரவது
சப்தம் அடங்கிய நிசியில்
நிசப்தம்
என் பாதத்தின் சப்தத்தை
அந்த நீீலக் கண்களுடைய நாய்க்கு
பரிசளிக்கிறது.
நேற்று செய்த தவறிலிருந்து
நான் விடுபடுகிறேன்.
இரவு தவறுக்கானது என்பதில்
உடன்பாடிருந்ததில்லை.
திருட்டித்தனமான பயணத்தின்
ஒரு ஆதிக் கதை ஞாபகிக்கிறது
மதிலை தாண்டும் கடுவன் பூனையின்
கத்தலில் மாட்டிக் கொள்கிறது
தவறு.
இரவின் நடு நிசியென்றாலே
பிசாசுகளின் சந்தை தினமென
சின்ன வயசில் உம்மாச்சியின்
கதை சொல்லக் கேட்டிருக்கேன்.
இப்போது தவறு எனது
மாறுபட்ட இரவில் நடந்தேறுவதில்
உங்களுக்கு உடன்பாடிருக்காது என்பதால்
நான் இதனை ஒரு சாத்தானிடம்
கொடுத்து விட்டு படுத்துறங்க போகிறேன்.
முடிந்தால் தவறு செய்வதிலிருந்து
விடுபடுங்கள் என்றுதான் இந்தக்
கவிதையை முடிக்க வேண்டுமென்றில்லை.
...

"நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில் /மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன. என்பதில்தான் ஆண் வர்க்கத்தின் ஒரு மேம்பட்டக் கோடு ஆதியில் துளிர்த்திருந்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் கவிதை... தீர்வுகளை நோக்கி நகர்வது அழகு! 



மூன்றாம் பரம்பரையின் திமிரு

பெரும் இடைவெளியை
நிரப்பிச் செல்கிறது
ஒரு ஆதிக்கால நிகழ்வு.
நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்
மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன.
வாப்பாவின் உம்மாவுக்கு
அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.
தாத்தாவின் கோபம் பற்றித் தான்
வாப்பும்மா நிறைய பேசி இருக்கிறார்
என உம்மா நேற்று சொல்லும் போது
தாத்தாவின் பழைய டயரியை
எடுத்து தூசி தட்டிய போதுதான்
அந்த பரம்பரை இடைவெளியை
என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
தாத்தாவின் கோபத்தில் நியாயம்
மறைதலாகி நிற்கிறது.
வாப்பும்மாவை பேச வைக்க முயற்சித்த
போது தான்
நான் உற்பட வீட்டில்
எல்லோரும் ஆதிக் காலத்துக்குள்
வாழ தூண்டப்பட்டோம்.
பெரியப்பா விட்ட பெரும் மூச்சு
இப்போது தான் அந்த இடைவெளியை
நிரப்பியது சம்மதத்தால்.
இப்போது நாங்கள் தாத்தாவுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது
பின்னோக்கிய கதை.
................

மலரொன்றின் நிர்வாணமென / நீ பதியனிட்டிருக்கும் / வியர்வை உப்பின் ஊழி / வாசனை நிறைந்த  உடலை / அடித்துச் செல்கிறது. காதலின் மொழிதலை சிறு பறவையென சிலிர்க்கும் கவிதை!

ஒரு சிறு பறவையென

நன்பகலின் சிவந்த மெல்லிய
இருள் பரவிய அந்த இடத்தில்
உன் ஒற்றைத் தொடுதல்
பெரும் தீக்காடென அனல் சொரியும்
கண்மூடா இரவொன்றில்
இறுகிய உலோகம் போல
ஒற்றை நரம்பு முறுக்கேறி
பொருத்திராத தாபத்தின் உச்சியில்
நான்.
அன்பில்
விருப்பில்
நேசத்தில்
முகிழ்ந்திருக்கும் போது
நீ மலர்க்காடு.
வெப்பம் பூசி என் உடலை
விடுபடச் செய்கிறாய்.
நகம் கற்றாழை முட்களாய்க் கீற
ரத்தம் ருசிக்கிறாய்.
துருவேறிய ரணம் வலி தராமல்
தாபத்தின் வெப்பத் தகிப்பைமென்று
ஒரு வனத்தின் அடர் பச்சை நிறத்தை
பூசிக் கொள்கிறது.
மலரொன்றின் நிர்வாணமென
நீ பதியனிட்டிருக்கும்
வியர்வை உப்பின் ஊழி
வாசனை நிறைந்த  உடலை
அடித்துச் செல்கிறது.
இப்போது
ஆதித் துளி
பெரும் வனத்தீயின் அனலில்
வெளி வருகிறது
ஒரு சிறு பறவையென.
....................

ஆக மிகச் சிறந்த கவிதையென்று இதனைச் சொல்லலாம்! வெய்யிலின் தாக்கத்தை மரங்கள்தான் போக்க முடியும். இங்கு கவிஞன் மரங்களில்லாத உலகை வரைய முற்பட, மகன் தாகத்தில் தவிக்கக் கூடாதென்று இள நீரோடு வரும் அம்மா,"நீ வரையும் உலகத்தை எந்த வண்ணங்களால் நிறைப்பாய்?" என கேள்விகளை வைக்கிறாள்! மரங்களில்லாமல் வரைந்த மலைகள் இறகுகள் பிடுங்கிய கோழியைப் போல் இருக்கிறதாம்! வியர்க்கத் தொடங்க மரங்களை வரைந்து விட்டு நீரில்லாத உலகத்தை வரைவதாக நீள்கிறது இந்தக் கவிதை! அதிலும் உள்ள இடர்களை வெளிச்சமிடும் இந்தக் கவிதை படைத்தவனின் பெருமையை மறையுககமாக சொல்வதாக எடுத்துக் கொல்ளலாம்! இறைவனின் படைப்பில் குறைகள் கிடையாது... அதனை துண்டிப்பவன் இங்கு மனிதனாகிறான்!

நீரின்றி அமையாது உலகு
.

இந்த கோடை வெயில்
என்னை அதிகம் மரங்களை நேசிக்க
வைத்து விட்டது.
மரங்கள் இல்லாத உலகை
நான் வரைய முனைகிறேன்
தாகம் எடுக்கிறது.
பக்கத்தில் பச்சை இளநீரோடு உம்மா
எனக்கொரு சந்தேகம் என்றார்
ஆ..
இல்லை மரங்கள் இல்லாத உலகத்தை
நீ எந்த நிறம் கொண்டு வரைந்து முடிப்பாய் என்றாா்.
இப்போது வர்ணங்கள் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று.
முதலில் மலைகளை வரைந்து விட்டேன்
அதுவும் மரங்கள் இல்லாமல் சிறகு நீக்கிய கோழியைப் போல
நிர்வானமாக இருந்தது.
அப்போ மரங்களற்ற உலகம் இருக்கவே முடியாது
என்பதை உம்மா சொல்லிய போது
வியர்க்க தொடங்கியது எனக்கு.
அதை கை விட்டு விட்டு
நீரில்லா உலகை வரைய முனைகிறேன்.
முதலில் நிலத்தை வரைகிறேன்
பின்னர் மனிதனையும் அவனுக்கென
மிருகத்தையும் பறவைகளையும்
வரைந்து முடிக்கிறேன்.
இப்போது உலகம்
திறந்த வெளியாய் நீண்டு கிடக்கிறது
நிறங்களற்று.
நான் மனிதனுக்கான நிறத்திலிருந்தும்
பறவை மிருகங்களின் நிறந்திலிருந்தும்
வர்ணங்களை பறித்து
பூமிக்கு நிறமிடுகிறேன்.
இப்போது தாகிக்கிறது எனக்கு.
நீர் பற்றி யோசிக்கிறேன்
தாகத்தோடு நில்லாது மரங்களை
வரைந்து விடுகிறேன்.
மீண்டும் எனக்கு அசூர தாகமெடுக்கிறது
மிருகங்களுக்கும் பறவைகளுக்குமென
வரைந்த உணவை சாப்பிட்டுத் திரும்புகிறேன்
வரைந்த மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக
கருகிக் கொண்டிருந்தது.
என்னால் வெயிலை குடிக்க முடியாது
தாகத்தை அடக்கவும் தெரியவில்லை
மரங்களுக்கென வரைந்த கடலை
அருந்துகிறேன்.
உயிர் பறிபோவதிலிருந்து நான் மீளும் போது
உயிரினங்களுக்கென நதியை வரைய
வேண்டியதாய் இருந்தது.
இப்போது வரைந்த மரங்கள் வனமாய்
வளர்ந்து நிற்கிறது.
வானத்தை மழைக்கென வரைகின்


வானத்தை மழைக்கென வரைகிறேன்.
மனசு இப்போது விடுபடுகிறது.
நான்
நீரின்றி அமையாது உலகு என்பதை
கருவாய்க் கொண்டு என் ஓவியத்தை
நிறைவு செய்கிறேன்.

.........

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:


ஆறாயிரம் தலைமுறை

மது சாரம் வழியும்
ஆதித் தெருவில்
சொற்கள் சில
நிர்வாணப்பட்டு கிடந்தது.
அது
போதையில் மிதந்தும்
இசையில் நனைந்தும்
முறித்துக் கொண்ட தொடர்பின்
எல்லை மிக தூரமாக இருந்தது.
ஒரு பாதுகாவலனின் சொல்
அங்குமிங்குமாக அடி பட்டும்
மிதி பட்டும் சிதறுகிறது.
இப்போது பூமிக்கு கீழுறங்கும்
ஒரு சேதி.
சுவாசத்தைப் போல
ஆதித் தெருவெங்கும் பரவி
கலைக்கப்படும் அந்நிகழ்வு
நதியைப் போல விரிகிறது.
பெரும் சக்தியாகிய சொல்
காப்பாலனிடமிருந்து வந்ததென்பது
பயத்தின் சம்மதமல்ல
நேசிப்பின் உச்சமென
அடையாளம் காண முடிந்த
ஆதிப் பரம்பரையின்
ஆறாயிரம் தலை முறை நான்.
.

ஏழு வானம் தாண்டி கடவுள் இருக்கிறான்

நாள் தோறும் நடமாடி வருகிறான்
மனோ இச்சையின் நீள் கோட்டில்.
எனவே அவனிடம்
மனசுனுள் மோகம் ஒரு மலையென
தகித்து விட்டது.
அமர்ந்த இடத்திலிருந்து தன்னை உயர்ந்தவனாய்
இனம் காட்டி மனோ இச்சையின் கடவுளாகி,
பூமியில் பெருமை கொள்கிறான்.
அதை வெட்டியெடுத்து வீசிட
சைத்தான் ஒரு போதும் அனுமதித்ததில்லை.
தீங்கு பாவ நதியென வடிவு கொண்டு
மனோ இச்சையை கடவுளாக்கி கூடவே,
பறவைகளின் அமானுஷியத்தை வகுத்துக் கொண்டு,
மண்மீதிலான அதிகார ஆசையை
ஒரு பறவையின் சிறகில் பொருத்தி
தயாராகுன்றவன்
ஆகாயத்தையும் வென்று விடலாமென நினைத்து,
மரணம் வேண்டுகிறான்.
ஏழு வானம் தாண்டி கடவுள் இருப்பதை மறந்து.
.


ஆட்டிடையானும் ஓ நாயும்
#

கரடு முரடான பாதை கடந்து
மேய்ச்சல் நிலம் அடைகிறான்
ஆட்டிடையான்.
அங்காங்கே சிறு பச்சைப் புற்கள்
காய்ந்து சருகான பற்றைகளுக்கு நடுவில்
மறைந்து கிடக்கும் புற்களை
ஆசை ஆசையாக மந்தைகள்
தின்று பசி தீர்க்கும்
காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறான்
ஆட்டிடையான்.
காட்டாறு போல வந்த ஓ நாய்
மந்தைகளுக்கு முன் நின்றன
பதறிய ஆட்டிடையானிடம்
தாகமென தனது முகத்தை காட்டிய
ஓ நாய்க்கு
தனக்கென வைத்திருந்த நீரைக்
கொடுக்கிறான்.
தாகம் தீர்ந்ததும் அது
மேய்ச்சல் நிலத்தை விட்டு
சாதூரியமாக நகர்கிறது.
மந்தைகளை  இப்போது அவ்விடத்திலிருந்து
நகர்த்திச் செல்கின்ற ஆட்டிடையானை
வழி மறித்தது பல ஓ நாய்கள்
இப்போது ஆட்டிடையான்
தனது தண்ணீர் பையை
எடுத்து பார்க்கிறான்
தண்ணீர் இல்லை.
ஓ நாய்கள் பாயத்தொடங்கின
மந்தைகள் மீது.
அங்குமிங்கும் ஓடும் மந்தைகளைப்
பார்த்து அங்கேயே நகராது
நின்று கொண்டிருக்கிறான் ஆட்டிடையான்
மனசு மட்டும் மந்தைகளை
தூர கலைத்துக் கொண்டிருந்தது.
..
ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

பருகி முடித்த ஒரு குவளை
பழ ரசத்திலிருந்து
தனியாக பிரித்தறிந்த
புத்தி ததும்பலை
அந்த இரவு வாசித்துக்  கொண்டிருந்தது.
இசையால் நிறைந்த ஒவ்வொரு
ஆதி உம்மத்தும்
தத்தமது சந்தோசங்களை
பகிர்ந்தளித்துக் குதூகலித்து கொள்கிறது.
மது நிரம்பி வழியும்
ஆண் தேவதைகள்
ஆளுக்காள் நடன மாதுக்களை
ரப்பான் இசைப்பது போல்
மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.
ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்
தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென
விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.
அவ் ஊரின் எதிர் வாசிகள்
அவசர அவசரமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஊர் எல்லையில் பதாதைகளை.
இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள் ஜாக்கிரதையென.
மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்
அவ்வூரை நெருங்கியதில்லை.
கறி இறைச்சிகளாக
செல்வதை விடுத்துமென
ஆட்டிடையானொருவனின்
அரேபிய கதையொன்று முடிகிறது.
.
..



மனித மரம்

அவன் வியர்வையால் நிறைந்து
அந்த தெருவோரத்தில் வளர்ந்து
விரிந்து நிற்கும் வாகை மரத்தடியில்
நிழலுக்கென ஒதுங்குகிறான்.
மெது மெதுவாக காற்றை
வீசத் தொடங்கியது மரம்.
உடல் வியர்வையை விட்டு விடுபடுகிறது
களைப்பும் நீங்குகிறது.
மரத்தை பார்த்து நீ எவ்வளவு பெரிய
தர்மத்தை இந்த பூமியிலே நிகழ்த்தி விடுகிறாய்.
மரமே நன்றியென்கிறான்.
மரம் இப்போது இவனைப் பார்த்து
ஒரு கேள்வி கேட்கிறது
மனிதா நீ என் காற்றைக் கொண்டு
திருப்தி பட்டு விட்டாய்
அதனை நான் உணர விரும்புகிறேன்
ஓ அப்படியா அதற்கு நான் என்ன செய்ய
ஒரு நாள் மட்டும் நான் மனிதனாக
வாழ்ந்து விடுகிறேன்
நீ மரமாய் நின்று எனக்கு அந்த காற்றை
தந்து விடு என்கிறது
இருவரும் மாறிக் கொள்கிறார்கள்
மரம் மனிதனாகி கடைத் தெருவுக்கு வருகிறது.
கட்டிடம் நிறைந்த தெரு
மரங்களற்று வெயிலால் வரண்டு கிடக்கிறது
தாகமெடுக்கிறது தண்ணீர் போத்தல் ஐம்பது ரூபா
பசியெடுக்கிறது மதிய உணவு நூறு ரூபா
இப்படியாய் அந்த நாளை கழித்து விட்டு
அந்த மரத்திற்குள் ஒதுங்குகிறது
இப்போது காற்று மெல்ல மெல்ல வீசி
வியர்வையை துடைக்கிறது.
மனசு மனிதனிலிருந்து விடுபட
மரத்திடம் பேசுகிறது.
மரம் என்னால் மீண்டும் மனிதனாக
வாழ்வதற்கு விருப்பமல்லை
என்னை மன்னித்து விடு என்கிறது
மனிதாகிய மரம் இது ஏமாற்று வேளை
இது மனித குணம்
இதனை என்னால் ஏற்க முடியாது என்கிறது
அழுது புலம்பி மரமான மனிதன்
கதறுகிறான்.
மனசு இலகி மனிதனான மரம்
அவனுக்கு சொல்கிறது ஒரு நாள் அல்ல
ஒரு மணி நேரம்கூட நான்
மனிதனாக வாழ முடியாது
மனிதனை இழுத்து பறித்து மீண்டும்
மரமாகிக் கொள்கிறது
மனிதனாய் தூக்கி வீசப்பட்டவன்
ஒரு வனத்தை தேடிப் போகிறான்.
..
..
மழைத் தேநீர்  

இந்த மழையின் குளிரில்
உறையும் உடல்.
ஒரு டன் வெயிலை கேட்கிறது.

பிசிறி பாயும் கூதலை விரட்ட
நீ தேநீரோடு வருகிறாய்.
நான் அருந்துவதற்கு
தயாரில்லையென்ற போது
தனியாக சூட்டை பிரித்து தருகிறாய்
நான் பூசிக் கொள்கிறேன் உடல் முழுதும்.

கூல்  தேநீர் அருந்துவது
உனக்கான விருப்பம் என்கிறேன்
முணு முணுக்கிறாய்
நெருங்குகிறேன் சமிக்ஞையறிந்து.

மழை இப்படியே பெய்யட்டும்
திறந்து விடு ஜன்னலையென்கிறேன்.
சிரிக்கிறாய்
மின்னல் வெட்டி மறைகிறது.

இப்போது காற்று ஜன்னலை அசைக்கிறது
நீ மூடி விட்டு நகர்கிறாய்
இன்னொரு தேநீர் வேண்டுமென்கிறேன்.
..
என்னிலிருந்து நான்

ஒரு காத்திருப்பை
அந்த தனிமை ஏற்க மறுக்கிறது.

ஒரு தவிப்பை
காலம் தின்று நகர்கிறது.

ஒரு கோபம்
ஆதி உறவை துண்டிக்க வைக்கிறது.

இப்போது அந்த காத்திருப்பை
நான் தொடர்வதாய் எண்ணமில்லை.

மனசு தனிமையை ஆராதிக்க
காலத்தை நோக்கி நகர்கிறது.

அந்த இரவின் அமைதி
கோபத்தை விடுவிக்கிறது.

பின்னர்
விடுபட்ட காத்திருப்பை
நான் மீளவென
தனிமை என்னை
பிரதி செய்து விடுகிறது.

நான் காத்திருப்பை தொடர்கிறேன்
என்னிலிருந்து தனிமை
நீங்கி நகர்கிறது.


.. நீ கடந்த இரவு

நீ கடந்த அந்த இரவை தான்
நானும் கடக்க முயற்சிக்கிறேன்
அவ்வளவு சுலோபமாக அதனை
என்னால் செய்திட முடியவில்லை.
அந்த நிலா இரவு
தன்னை ரசிப்பதற்கென ஒரு பகுதியை
எடுத்துக் கொண்டது.
நிசியில் விழித்திருப்பதென்பதும் ஒரு கலைதான்.
தூக்கமே வராத கண்களை
திட்டுவதற்கில்லை.
நீ எப்படி கடந்து போயிருப்பாய்
பலவாறு யோசித்து இரவின்
இன்னொரு பகுதியை கழித்து விட்டேன்.
சோர்ந்து போன உடல் அப்போதும்
உறங்க தயாரில்லை.
இப்போது நட்சத்திரங்களுடன்
உரையாடலை தொடங்குகிறேன்.
மிகவும் சுவாரசியமாக எங்களது
உரையாடல் அமைந்திருந்தது.
மற்றொரு பகுதி நட்சத்திரத்தின் காமெடி
நக்கல் பேச்சோடு கழிந்தது.
இதுவே முதல் தடவையென்பதால்
நட்சத்திரத்தை ரசிக்க தவரவில்லை நான்.
இப்போது இரவிடம் பகல் வருவது பற்றி
கேட்கிறேன்
சேவலின் குரல்
சப்தமாக எனை வந்து சேர்கிறது.
இப்போது தெரிந்து கொண்டேன்
நீ எப்படி அந்த இரவை
கடந்து வந்தாய் என்பதை

View

மாதாந்திர பரிசு

பூங்கோதை கனகராஜ்

View

மாதாந்திர பரிசு

மின்மினி விமலா

View

மாதாந்திர பரிசு

ஜே.கே. பாலாஜி

View

மாதாந்திர பரிசு

ரவி குமாரசாமி

View

மாதாந்திர பரிசு

க. தங்கபாபு

View

Showing 481 - 500 of 761 ( for page 25 )