கவிச்சுடர் தெ.சு.கவுதமன்
...............................
நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அளித்துவரும் சிறந்த கவிஞர்களுக்கான "கவிச்சுடர்" விருதினை இந்த மாதம் சிறந்த படைப்பாளியும், கவிஞருமான தெ.சு.கவுதமன் அவர்களுக்கு அளிப்பதில் பெருமைக் கொள்கிறது!
கவிஞர் தெ.சு.கவுதமன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எனும் ஊரென்றாலும். பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்துவிட்டதால், பத்திரிக்கைகளுக்கு கவிதை, ஜோக்ஸ் எழுதும்போது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பெயருக்குப்பின்னால் வத்திராயிருப்பு என்று பிறந்தகத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டவர். அதுவே பின்னர் இலக்கியத் துறையில் 'வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்' என்று நிரந்தர பெயராகவே ஆகிவிட்டது!
பி.எஸ்சி., கணிதவியல் படிப்பை சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படித்த கவிஞர், கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட தமிழ் மொழியின் ஆர்வத்தால். தமிழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவது மட்டுமில்லாமல், நாடகத்தில் நடிப்பது எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு செயல்பட்டு, கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார்!
பல்கலைக்கழக அளவிலான சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் கவிஞர்,. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி போன்ற பல்வேறு இதழ்களிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள், 500க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள், நகைச்சுவைக் கட்டுரைகள் எனவும் எழுதிக் குவித்துள்ளார்!
தனது எழுத்தார்வத்துக்கு, தனது அப்பா தந்த ஊக்கமே முதற்காரணமாக அமைந்தது எனச் சொல்லும் கவிஞர்
கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன், சென்னை மீது ஏற்பட்ட மோகத்தால் வேலை தேடிச் சென்னைக்கு வந்து, மிகக்குறைந்த வருமானத்தில் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலில் உதவியாளராகச் சேர்ந்து, அதன்பின் சேல்ஸ்மேன், பில் கலெக்சன், வினைல் பிரிண்டிங் கம்ப்யூட்டர் டிசைனர், டிடிபி ஆபரேட்டர், கிராபிக் டிசைனர், 2டி அனிமேட்டர், விஷூவலைசர், ஸ்க்ரிப்ட் ரைட்டர் எனப் பல்வேறு துறைகளில், பொறுப்புக்களிலும் பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் ஆதித்யா தொலைக்காட்சியில் "மாமோய் நீங்க எங்க இருக்கீங்க?" உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் காமெடி ஸ்க்ரிப்ட் ரைட்டராக பணியாற்றியதுடன், திரைத்துறையில், 'கள்ளத்துப்பாக்கி' உள்ளிட்ட சில படங்களில் பாடல்களும்
எழுதியுள்ளார்.
"அங்கூ அங்கூ", "நான் பச்சை விளக்குக்காரி", "பால்ய வீதி", "மெல்லின தேசம்" “ஆச்சி வீட்டுத்தெரு” “ஆன்ட்டெனா பரம்பரை’ ஆகிய 6 தொகுப்புகளை வெளியிட்டுள்ள கவிஞர், தனது கவிதைத்தொகுப்புகளுக்காக கம்பம், பாரதி கலை இலக்கியப்பேரவை சார்பாக இரண்டு முறை முதல் பரிசையும். தேனி, முற்போக்கு கலை இலக்கியப் பன்முக மேடை சார்பாக மூன்று முறை விருதுகளையும், கவிதை உறவு அமைப்பின் விருதையும் பெற்றிருக்கும் கவிஞரின் கவிதைகள், அவர் பயின்ற அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் சிறப்பு!
அவரது கவிதைகள் அனைத்தும், தினசரி உலகின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும், அனைத்திலும் ஏதாவது ஒரு செய்தியைத் தொட்டே நகரும். . நிலா, மழை, வெயில், நிழல் போன்றவை குறித்து நிறைய கவிதைகள் எழுதியுள்ள கவிஞர்... பால்ய நினைவுகள், முற்போக்கு சிந்தனை, உயிர்நேயம், சமூக முன்னேற்றம் குறித்த கவிதைகளையும் நிறையவே எழுதி வருகிறார்.
பத்திரிக்கைத்துறை மீதுள்ள ஆர்வத்தால் இத்துறைக்குள்ளும் நுழைந்து, ஆனந்த விகடன் இதழில் நிருபராகவும் பணியாற்றிய கவிஞர். மேலும், குமுதம் சினேகிதி, கல்கி, புதிய தலைமுறை, பாவையர் மலர் போன்ற பல்வேறு இதழ்களில் ஃப்ரீலான்சராக பயணித்து கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார். தற்போது நக்கீரன் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.
முகநூலில், படைப்பு குழுமத்தை மிகவும் ஆர்வத்தோடு தொடர்ந்து நேசித்து எழுதிவரும் கவிஞர்,. இப்போது நமது படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார்...
இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே!
கவிஞரின் படைப்புகளுக்குள் நுழைவோம் வாருங்கள்:
------------------------------
வீடு என்பது ஒவ்வொருவரின் உணர்வுகள் சம்பந்தமானது! தனது கனவில் வந்த கூரை வீட்டின் அழகியலை அங்கு உடன் வசித்த கோழிகளுடன் பரிமாறிக் கொள்ளும் கவிஞர் அங்கு ஒரு பெரு மழையின் போது அவர்களை பக்குவமாக வெளியேற்றிவிட்டு வீடு இடிந்து விழுந்ததை நன்றியுடன் குறிப்பிடும் அதே வேளை , இப்போது கான்கீரிட் வீட்டில் இருந்தாலும் அடிக்கடி பெரும் வெள்ளம் வரும் போதெல்லாம் இதே கருணையை அதனிடம் எதிர் பார்ப்பதாக நெகிழ்கிறார்! இதோ அந்தக் கவிதை....
நேற்றென் கனவில்
நெடுநாட்களுக்குப்பின் வந்தது
எங்கள் பழைய கூரை வீடு...
வீடு முழுக்க
ஒருநாள் முன்பாக முட்டையுடைத்த
கோழிக்கோழிகள்
எண்ணிப்பார்த்ததில்
இருபதுக்கு மேலிருக்கும்...
மூன்று தாய்க்கோழிகள்
அனைத்தையும் புகைப்படமெடுத்தபின்
கொஞ்சம் இரையள்ளி வீசிவிட்டு
அங்கிருந்து வெளியேறுகிறேன்
அதேச்கனவில்
அந்த பெருமழை நாள் வந்தது
வீட்டை வெள்ளமும் சூழ்கிறது
தண்ணீரில் தத்தளிக்கும் குஞ்சுகளை
ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கிறேன்
கோழிகளையும் தூக்கிக்கொண்டு
பத்திரமாய் வெளியேறியபின்
வீடு இடிந்து வீழ்கிறது...
முன்னொரு நாள் நள்ளிரவில்
வெள்ளம் வந்ததென
அடித்தெழுப்பிய அப்பாவுக்கும்
இதே குறைந்தபட்ச
கருணையைத்தான் காட்டியது...
கான்க்ரீட்டுக்கு மாறிவிட்ட
இப்போதும்கூட
வெள்ள அறிவிப்பு வரும்போதெல்லாம்
அதே கருணையை வேண்டுகிறேன்
இன்னும் வாழும் குடிசைகளுக்காக...
------------------------
பெயர் என்பது ஒரு அடையாளத்தின் குறி என்றாலும், சில குறிப்பிட்ட சமூகத்தினரை சில குறிப்பிட்ட சமூகத்தினர் தாழ்வுப் படுத்தி அழைக்கவே பயன் பட்டது என்பதுதான் நிதர்சன உண்மை! ' பெயர் என்பது பெயர் மட்டுமல்ல, வளைந்து வளைந்து கூனலான பரம்பரை அடிமைத்தனத்தின் அடையாளம்' என்று குறிப்பிடும் கவிஞர் இப்போது அந்த நிலையை மாற்ற என்ன பாடுபட வேண்டி இருந்தது என்பதை இந்தக் கவிதையில் நுட்பமாக பேசியுள்ளார்!
"ஏ கரும்பா"
”இங்க வாடா கரும்பா”
வயதில் குறைந்த சின்ன முதலாளிகளும்
முதலாளி முடுக்கோடு அழைக்கையில்
பணிவோடு சேவகம் செய்தது
எங்கப்பனோட பெயர்...
எனக்கு வைத்த காத்தமுத்துவும்
"ஏலே காத்தமுத்து"
"ஏப்பா காத்தமுத்து"
இப்படித்தான் ஆகிப்போனது...
வெறும் பெயர் தானே என்கிறீர்கள்
இல்லையில்லை
வளைந்து வளைந்தே கூனலான
பரம்பரை அடிமைத்தனத்தின்
அடையாளம் அது
மச்சம்போல் ஒட்டிக்கொண்டதை
பிய்த்தெறிவதற்கு
தொலைதூர ஊருக்கு ஓடினேன்
பஞ்சாலை, பனியன் பேக்டரியென
ஏதேதோ வேலையில் சேர்ந்து
அங்கேயே ஒருத்தியை கட்டிக்கொண்டு
செட்டிலாகி பல காலம் கழித்தே
எட்டிப்பார்த்தேன் பிறந்த ஊரை...
"ஏலே காத்தமுத்து ஆளே மாறிட்ட"
"ஒம்பையனா இது?"
"என்னலே பேரு?"
"என்னது பிடல் செகுவேராவா?"
"வாய்க்குள்ளயே நுழையமாட்டிங்குதுலே"
மனதுக்குள் மகிழ்வோடு
"வர்றேன் மொதலாளி"
விடைபெற்றேன் நிறைவோடு
ஆம், பெயரென்பது வெறும் பெயரல்ல...
-------------------------------
ஒரு கதையாடலை ஒரு கவிதையில் சொல்வதென்பது சாதாரண விடயமில்லை! ஊரில் குழிப் பணியாரம் விற்கும் பாட்டியை நினைவுக் கூறும் கவிஞர், இப்போது நாகரீகம் என்றப் பெயரில் கூரைகள் கட்டிடடங்களாக மாறிவிட்டப் பிறகு விடியல் கூட மறந்து போன சோகத்தை பதிவு செய்கிறார்... இதனிடையே அழகான ஒரு காதலும் ஒளிந்திருக்கிறது பணியாரப் பாட்டியிடம்!
புகையும் விறகடுப்பை விசிறிவிட்டு
இரும்புச்சட்டியில் ஆப்ப மாவூற்றி
அத்தனை லாகவமாய் சுழற்றி
வட்டம் விரிவு செய்யும் பாட்டியை
ஆச்சர்யத்தோடு பார்த்த விடியல்...
பணியாரச்சட்டியின் குழிகளுக்குள்
மாவூற்றி நிரப்பி
பதமாய் சிணுக்கரியால் புரட்டி
கொடுத்த எட்டணாவுக்கு
கை நிறைய அள்ளித்தந்த பாட்டி
வாழ்ந்த வீட்டை இடித்துக்கட்டியாச்சு
இப்போதெல்லாம்
நாலணா, எட்டணா தொலைஞ்சுபோச்சு
விறகடுப்பு குறைஞ்சுபோச்சு
இரவு நெடுநேரம் விழித்தலால்
விடிகாலை முழிப்பதே மறந்துபோச்சு
எப்பவாவது வீட்டில் செய்யும்
பணியாரத்தைக் காணும்போதெல்லாம்
அந்த பாட்டி நினைவில் வந்து செல்வார்
"ஒங்க தாத்தாவுக்கு எப்படியிருக்கு?" என
அவள் தெனமும் விசாரிப்பதன் பின்னால்
ஏதேனும் கதையிருக்கலாமென்று
இப்போதுதான் யோசிக்கத்தோணுது...
-----------------------------
எந்த வித வசதியையும் அனுபவிக்காத ஒருவரின் இறுதியாத்திரையை தாமதம் செய்ய சொல்கிறார் கவிஞர்! காரணம் கேட்டால், ' வியர்க்க வியர்க்க உழைத்தவர் எரிக்கப் படும் முன்பாவது கொஞ்ச நேரம் அந்தக் குளிர்ப் பதன சவப் பெட்டியில் ஓய்வெடுக்கட்டும்! ' என்கிறார்!
இன்னும் சற்று நேரம் அழுங்கள்...
முடிந்தவரை
அவரின் இறுதியாத்திரையை
தாமதப்படுத்துங்கள்
காலம் முழுவதும்
வியர்த்துக்கொட்டியே வாழ்ந்தவர்
எரிக்கப்படும் முன்னராவது
ஓய்வெடுத்துச் செல்லட்டும்
குளிர் சாதன வாடகை வீட்டினுள்...
----------------------------
அம்மாவின் மரணத்தை பலரும் பலவிதங்களில் எழுதியிருந்தாலும், கவிஞரின் இந்த சொல்லாடல் கவிதைக்குப் புதிது! இங்கு கவிதை அம்மாவுடன் வாழ்கிறது!
விடியுமுன் விழித்தெழுந்து
வாசல் பெருக்கித் தெளித்து
கோலமிட்டு முடித்து
பால் வாங்கி வர
பாலைக் காய்ச்சி வைக்க
குடி தண்ணீர் பிடிக்க
கோவிலுக்குச் செல்ல என
அடுத்தடுத்த வேலைகளை
உருவாக்கியபடியேயிருப்பார் அம்மா...
வெயில் சிந்தி வலம் வருவதைத்தவிர
வேறெந்த வேலையுமில்லா
சோம்பல் சூரியன்
ஒருநாளும்
அம்மாவுக்கு முன் விழித்ததில்லை...
இப்போது
ஒரு போட்டியாளர் குறைந்தது
தெரிந்திருக்குமாவெனத் தெரியவில்லை...
---------------------------
நகர வாசிகளுக்கு, கிராமத்து ஆட்களின் நகர மிரட்சிகளைக் கண்டால் நக்கலும் நையாண்டித்தனமும் கொப்பளிப்பதைக் கண்கூடாகாவே காணலாம்! அப்படிப்பட்டவர்களுக்கு சாட்டையைச் சொடுக்கி அடிக்கும் கவிதைதான் இந்த கவிதை!
பெருவணிக வளாகத்தின் எஸ்கலேட்டரில்
யாரோவொரு கிராமத்துப்பெண்மணி
கால் வைக்கத் தயங்குவதை
நித்தமும் கவனிக்கலாம்...
சும்மாட்டில் பெரும்பாரம் ஏற்றி
தெருத்தெருவாக
விற்றுத் திரிபவர்தான்
கருக்கரிவாளோடு
சரசரவெனக்
கீரையறுக்கத் தெரிந்தவர் தான்
சேற்றுக்குள் தடுமாறாமல்
குனிந்து நிமிர்ந்து
நாற்று நடத் தெரிந்தவர்தான்
ஆம்
எஸ்கலேட்டர் எகத்தாளம் கண்டு
குறைத்து எடைபோட்டிட வேண்டாம்...
-----------------------------
மெல்லப் போ என்றோ
வேகமாகப் போ என்றோ
ஒரு நாளும் சொன்னதில்லை
எனக்கொரு கரம் கொடுத்து
உடன் நடக்க
ஒருபோதும்
சாக்குபோக்குச் சொன்னதில்லை...
சுடுவெயிலில் சென்றாலும்
குடை வேண்டியதில்லை
காலணி தேடியதில்லை
புழுதியில் அலைந்தாலும்
புலம்பியதில்லை ஒருநாளும்...
உடன் இன்னொரு நிழலை
அழைத்துச் சென்றாலும்
அணைத்துச் சென்றாலும்
மறுப்பேதுமின்றி
பொறாமைகொள்ளாது
புரிதலோடு அதனோடும் சினேகமாகும்...
தனிமை என்பதே வந்ததில்லை
முதுமையைக் காட்டியதில்லை
பல காலமாய்
படுத்தபடுக்கையானாலும்கூட
சாம்பலாகும்வரை
எனை விட்டு விலகுவதாயில்லை...
---------------------------
சட்டெனப் பால்யத்துக்குச்சென்று
நினைவுகளில் விடுபட்டுப்போன
மகிழ்ச்சியான கணங்களை
சேகரிக்கத் தூண்டுது மனது...
சரிசெய்யப்படாமல் போன
சரிசெய்திருக்கக்கூடிய
பிழைகளைக் களையத்தூண்டுது...
செங்கல் சதுரங்களின்மேல்
கொட்டிய சுடுநெற்குவியலில்
கால்களைப் புதைத்தபடி
பணியாரத்தை ஆறவைத்து
ஆற அமரச்சுவைத்த நொடிகளை
நீட்டித்திருக்க நினைக்குது...
இன்னமும்கூட
ஓடிப்பிடித்து விளையாடிய
கால்களும் கரங்களும்
இங்கேதான் இருக்கின்றன
களங்கள்தான் மாறிவிட்டன...
வில்லு வண்டித் தடங்களும்
மாட்டுச்சாண வாசமும்
கோலிக்குண்டு விளையாடிய
புழுதிக்குள் அந்த குழிகளும்
மண்மூடிப்போனாலும்
மக்குவதில்லை நினைவுகள்...
மக்காத குப்பைகள்
பூமிக்கு பாரம்
பாரமான மனதுக்கோ ஆறுதலாய்
மக்காத நினைவுகள்...
---------------------------
சில ஆண்டுகளுக்குமுன்போடப்பட்ட
வீட்டு மனை லே-அவுட்டில்
பலரும் குடியேறிவிட்டார்கள்
கோவில், சர்ச், மசூதியோடு
கடைகளும் பெருகிவிட்டன
பேருந்துகளும் நின்று செல்கின்றன
சாலையோரத்தில் நட்ட மரக்கன்றுகள்
குறுமரமாகிப் பூக்கத் தொடங்கிவிட்டன
இதோ இப்போது
தூக்கிட்டுத் தற்கொலையான ஒருவரின்
இறுதி ஊர்வலம்
இச்சாலைவழியே செல்கிறது
வெகுவிரைவில்
ஏதோவொரு மரத்தில் கண்டதாக
பேய்க்கதையொன்றும் உலவக்கூடும்...
---------------------------
கொரானாவோடு மெல்ல பழகக் கற்றுக் கொண்டோம்! வாழ மட்டுமல்ல சாகவும்தான் என்பதை மெல்லிய வருத்தத்துடன் பதிவு செய்கிறது இந்த கவிதை! சமரசம் உலாவுமிடத்தில் பேதமின்றி போய் கொண்டிருக்கும் வலியைப் பற்றிய கவிதை!
நிறைந்து திணறிக்கொண்டிருக்கும்
இந்திய மருத்துவமனைகளென
ஆழ்ந்த இரங்கல்களால்
நித்தம் பிதுங்கியபடி முகநூல்...
ஜெய்ஸ்ரீராமென்று சண்டையிட்டவர்
இலக்கியவாதிகளை
உரித்துத் தொங்கப்போட்டவர்
அரசின் அநியாயத்தை
ஆதாரங்களோடு அலசியவர்
நாள் தவறாமல்
காலை வணக்கமிட்டவரென
வித்தியாசமில்லாமல்
அடைக்கலமாகிறார்கள்
ஆழ்ந்த இரங்கல் பட்டியலில்...
நண்பர்களும்
நண்பர்களின் நண்பர்களும்
ஏதோவொரு
இரங்கல்செய்தியைப் பகிர்ந்தபடி
அவ்வப்போது பிரபலங்களும்
எப்போதாவது
நண்பர்களே அச்செய்தியாக...
ஒரு வாரம்
ஒருவரைக் காணவில்லையென்றால்
தனித்திருக்கக்கூடுமென்று
தீர்மானத்துக்கு வரும் மனது
அடுத்த வாரமும் தொடர்ந்தால் மட்டும்
தேடத் தொடங்கும்
சற்றே தவிப்புடன்...
இப்போதெல்லாம்
பிரேக்கிங் நியூசுக்குப் பழகிப்போன
தொலைக்காட்சி நேயரைப்போல்
மனம் பழகிப்போனது
இரங்கல் செய்திகளுக்கு...
ஆம்
கொரோனாவுடன்
வாழப் பழகுவதென்பது
வாழ மட்டுமே பழகுவதல்ல...
-----------------------------
வாழ்வியல்களோடும் சமூகத்தோடும் உறவாடும் கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:
ஒரு ஊர்ல
ஒரு ராஜா இருந்தாராம்ம்ம்ம்...
ராஜான்னா?
ரொம்ப வசதியானவர்...
நாட்டுக்கே ராஜா...
அவரிடம்
தனி விமானம் இருக்குமா?
அதில்லை
ஆனால் குதிரை வண்டி உண்டு...
கோட்டு சூட்டெல்லாம் உண்டா?
அதெல்லாமில்லை
ஆனால் பெரிய மாளிகையுண்டு
அங்க ஏ.சி., ஸ்மார்ட் டி.வி. உண்டா?
அதெல்லாமில்லை
ஆனால் அரசவை உண்டு
கன்னிகள் நடனமும் நடப்பதுண்டு...
அரசவையில் கணினிகள் உண்டா?
அதில்லை... ஆனா...
இனி இப்படிச் சொல்லுங்கள்
ஒரு ஊர்ல ஒரு சாதாரண ராஜா...
இனி எப்படித் தொடர்வார்
பேரனிடம் இக்கதையை...
---------------------
நமக்குள் இந்த இடைவெளி
தேவையானதாயிருக்கிறது
இந்த வலி
புரிதலோடிருக்கிறது
அசை போட
போதுமானதாயிருக்கிறது
இப்போதுதான்
பக்கம் வரத் தூண்டுகிறது...
---------------------------
சிற்றிதழ் தந்தாய் நீ
இன்னமும்
வாசித்து முடியவில்லை...
---------------------------
யாரோ நம்மை
கவனிக்கிறார்களென்பது
பின்தொடர்கிறார்களென்பது
எவ்வளவு இதம் தெரியுமா?
யாருமற்ற எனக்கென இருக்கும்
ஒற்றை நிலவை
எனக்குப் பிடித்துப்போக
வேறு காரணமும் தேவையோ?
---------------------------
பிறப்பையும், மரணித்தலையும்
நமக்குப் பழக்குவதற்காகவே
தினமும் வந்துசெல்லும் நிலா...
---------------------------
கனவுக்கன்னியை
அழைத்துச்செல்வதில்லை
விடிகாலை நடைப்பயிற்சிக்கு...
---------------------------
எந்த மழைத்துளியிலும்
உபயம் எழுதியதில்லை
மேகங்கள்...
---------------------------
அட்சயபாத்திரமென்பது வேறொன்றுமில்லை
எத்தனைமுறை திருடினாலும்
சில்லறைகளோடு தொங்கவிடப்படும்
அப்பாவின் சட்டைப்பை...
---------------------------
வேறெந்த பணியும் அறிந்ததில்லை
வயல்வெளியைக் காவல்காத்த
சோளக்காட்டுப் பொம்மைகள்
ஊருக்குள் வந்தாலும்
புதுக்கட்டுமானத்தில்
காவலுக்குத் தொங்கியபடி...
---------------------------
திருமண வீட்டில்
முப்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி
வேலையில்லாத்திண்டாட்டத்தில்
முப்பத்திமுக்கோடி தேவர்கள்...
---------------------------
சிறு புன்னகையை மட்டுமே
கை மாற்ற முடிகிறது
மாதக்கடைசியில் ஏந்தும் கரத்தில்...
---------------------------
நல்லவேளை நிலா வந்தது
முன் தயாரிப்பில்லா சந்திப்பில்
நம்மைத் தவிர
வேறொன்றை பேசிக்கொள்ள...
முன்பெல்லாம்
இதே நிலவை
நாம் கண்டுகொண்டதில்லை
என்பதையும் சொல்லியாக வேண்டும்...
---------------------------
வான் மேகங்களை வாரியெடுத்து
வண்ணங்கள் பூசி
பாலிதீனில் அடைத்து
சரங்கோர்த்து
பஞ்சு மிட்டாயெனக்கூவி
விற்றபடி வலம் வருகிறார்
மழலையர் மனங்கவர்வதால்
பிஞ்சு மிட்டாயெனவும் கூவலாம்...
---------------------------
தந்தை மரணித்தது புரியாமல்
துக்க வீட்டில்
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தையைப்போல
மலர்ந்த முகத்தோடு
இறுதி ஊர்வலப் பாதை நெடுக
உதிர்த்துவிட்ட மலர்கள்...
---------------------------
விலையேற ஏற
சமூக இடைவெளியை அதிகரிக்கும்
சரத்திலுள்ள மலர்கள்...
-------------------------