logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 401 - 420 of 838

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • ரிதம் கருணா

0   856   0  
  • September 2021

மாதாந்திர பரிசு

  • சுதா பழனிசாமி

0   1324   0  
  • September 2021

கவிச்சுடர் விருது

  • ஷெண்பா

0   1662   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • நாடன் சூர்யா

0   1035   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஃபஷ்றி

0   914   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • முத்துக்குமார் சங்கரன்

0   959   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஷீபா ராணி

0   870   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • சுதா

0   908   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • ஆர் ஜவஹர் பிரேம்குமார்

0   1170   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • இளங்கவி நடுநாட்டுத்தமிழன்

0   1079   0  
  • August 2021

மாதாந்திர பரிசு

  • முத்து

0   896   0  
  • August 2021

கவிச்சுடர் விருது

  • பி கே சாமி

1   2578   2  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • சிபானா அஸிம்

0   980   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • கயூரி புவிராசா

0   785   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • சோ. ஸ்ரீதரன்

0   1305   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • தேவி லிங்கம்

0   876   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • சொ. சாந்தி

0   929   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • செல்வ ராஜ்

0   902   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • சந்துரு

0   1060   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

  • அன்பழகன் G

0   912   0  
  • July 2021

மாதாந்திர பரிசு

ரிதம் கருணா

View

மாதாந்திர பரிசு

சுதா பழனிசாமி

View

கவிச்சுடர் விருது

ஷெண்பா

கவிச்சுடர் ஷெண்பா

 நமது படைப்பு குழுமத்தின் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை கவிஞர் ஷெண்பா என்கிற மஞ்சு கண்ணன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கேரளா மாநிலம் கோட்டக்கல்லை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் வசிப்பிடம் :கோவையாகும். படித்தது : Diploma in Textile Processing / MA Public Admin / B.Sc - M.Sc Costume Design & Fashion / ISO 9001 Lead
Auditor course வேலை : (1997 - 2017) 20 வருடங்கள் Textile Quality Testing துறையில் SITRA, Intertek India Pvt Ltd, C&A Sourcing
Intl Ltd நிறுவனங்கள்

கவிதைகளின் மீது அளப்பறிய ஆர்வம் கொண்ட கவிஞர்,
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2017 - முதல் பரிசு (நடுவர் : திரு. கலாப்ரியா)
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2019 - சிறப்பு பரிசு (நடுவர் : திரு. யூமா வாசுகி)
படைப்பு குழுமத்தின் சிறந்த பங்களிப்பாளர் விருது - 2019
ரியாத் தமிழ் சங்கம் - முத்தமிழ் கலைஞர் உலகளாவிய கவிதைப் போட்டி - சிறப்பு பரிசு : (நடுவர் : திரு.
கலாப்ரியா)
படைப்பு குழுமத்தின் பிப்ரவரி 2020 - மாதாந்திர சிறந்த படைப்பாளி
படைப்பு குழுமத்தின் கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி 2020 - சிறப்பு பரிசு (நடுவர் : திரு. யவனிகாஸ்ரீராம்) என பல பரிசுகளை வென்றவர்

கவிஞர் எழுதிய '64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி' (கவிதைத் தொகுப்பு) படைப்பு குழுமத்தின் வெளியீடாக வந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் பல சிறந்த கவிதை தொகுப்புகளை வெளியிட்டு முக்கிய இடத்திற்கு நகர்வார் என்று படைப்பு குழுமம் நம்புகிறது.

இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம் :

பாதங்களால் நிறைந்த வீடு என்ற ஒரு கவிதைப் போதும் கவிஞரின் எழுத்தாளுமைக்கு! அம்மா வீடு துடைக்கும் போதெல்லாம் அவர் துடைத்தெடுக்கும் தண்ணீர் வாளிக்குள் வீட்டில் நிறைந்த பாதங்களெல்லாம் அதில் வந்து விழுந்து விடுகிறதாம்! ஆனாலும் சத்தியாக்காவின் பாதம் மட்டும் கொஞ்ச நாளாக வாளிக்குள் விழாமல் வீடு முழுவதும் நிறைந்திருக்கிறதாம்! காரணம் என்ன?

வாரமிருமுறை வீடு துடைக்கும்போது
அனைவரின் பாதங்களும் வந்து விழுந்திருக்கும்
அம்மாவின் வாளிக்குள்.
வெயிலால் கறுத்த சொரசொரத்த
பாதம் அப்பாவினுடையது..
எப்போதும் ஈரத்தில் நின்று வெடித்த
பாதங்கள் அம்மாவினுடையதே..
ஒருகாலால் நடக்கும் தாத்தாவினுடையதானது
இரண்டாம் பாதமான ஊன்றுகோல்.
நாள்முழுதும் வீடெங்கும் சுற்றித்திரியும்
தம்பியின் பிஞ்சுப்பாதங்களை
கணக்கிலெடுக்கலாகாது.
சகஜமாய் வந்துபோன சரவணின்
பூட்ஸ் அணிந்த பாதங்களுடன்
சத்யாக்காவின் மருதாணிப் பாதங்கள்
படிதாண்டிய நாளிலிருந்து
துடைப்பதற்கு மனமின்றி அவள்
பாதங்களால் நிறைந்திருக்கிறது வீடு.

========
முன்னாள் காதலர்கள் சந்திக்கும் போது நினைவின் அடுக்குகளில் சுழலும் நீரோட்டத்திற்குள் சிலத் தருணங்களும், பரிதவிப்புகளும் வந்து சிக்கிக் கொள்ளும்... ஆண்கள் எளிதில் கடந்துவிடலாம். ஆனால் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கும் போது ... தவிப்பை வார்தைகள் விழுங்குகின்றன!

எதிர்பாரா தருணமொன்றில்
சந்திக்க நேர்கிறதுன்னை..
என்னைக் காண்கையிலெல்லாம்
எப்போதும் மின்னல் தெறிக்கும்
உன் கண்களில் மருளின் இருள்..
கைகளின் நடுக்கத்தை மகளின்
கரங்களை இறுக்கி மறைக்கிறாய்..
எதுவும் சொல்லுமுன் கல்லூரித்
தோழனென அறிமுகம் செய்கிறாய்..
நேரிட்டு முகம் பார்க்கவியலாமல்
பயமும் பதட்டமுமாய் கைப்பையில்
ஏதோ துழவுவதாய் நடிக்கிறாய்..
"மாமாகிட்ட உங்க பேர் சொல்லுங்க"
அவர் சொல்கையில் குட்டி நீயாய்
இருக்கும் பாப்பாவின் பெயர்
நம் மகளுக்காய் யோசித்ததாய்
மட்டும் இருந்துவிடக்கூடாதென்ற
பரிதவிப்பை என்னிடம் கடத்திவிட்டு..

==========
பிள்ளைப் பேறுக்கு ஏங்கும் ஒரு பெண்ணின் மன உளைச்சல்தான் இந்தக் கவிதை!  ஒவ்வொரு விடாயின் போதும் ஏங்கும் மனத்தின் அலைச்சல்! ஒவ்வொரு மாதமும் வேண்டுதலில் தெய்வங்களின் கருணைச் சேகரிப்பு! இவையெல்லாம் விடிவுக்கு வருகிறது... முதுமையின் உதிரப் போக்கு முற்றிலுமாய் நிற்றலால்! வலி மிகுந்த வரிகள்...


கடைசிக்கோடு
ஒருசொட்டுச் சிறுநீர் விட்டு
இருகோடுகள் தெளியக் காத்து
ஒரு கோட்டை வெறித்துப்பார்த்து
விட்டெறியத் தேவையில்லையினி..

இரண்டு, பன்னிரெண்டென நாள்
கணக்குகள் எண்ணி மருத்துவர்
தேடவும் மருந்துகள் உண்ணவும்கூட
அவசியம் இருக்காதுதான்..

இந்த மாசமும் ஒண்ணுமில்லையா
துர்வாசகங்கள் கேட்காமல் தூர்வாரி
செவிப்பறையை ஆணி அறைந்து
சாத்திவிடலாம் நிரந்தரமாய்..

பத்தியமிருந்து உண்ணவும் உடல்
வலி பொருட்படுத்தாது உழைக்கவும்
கனவு கலைக்கவும் வேண்டியிருக்காது
உறைந்துவிட்ட உதிரப்போக்கால்..

மாதத்தில் பாதிநாட்கள் விரதமிருந்தும்
வேண்டுதலை நிராகரித்த கடவுளரை
வேண்டுதலை நிராகரிப்பது இம்முறை
சந்தேகமில்லாமல் அவளுடையதாகிறது.

=============
குழந்தைகளின் மழலை மொழியின் பேரன்பில் திளைக்கிறது இக்குறுங்கவிதை!

நீங்க எவ்ளோ நீளம்??
எனக்கேட்டு கைகளால்
முழம் வைத்து என்னை
அளக்கிறாள் குட்டிம்மா..
பூவாகிறேன் நான்..

=========

64 கட்டங்களில் தனித்திருக்கும் ராணி என்ற கவிதையில் குடும்பம் என்ற கட்டத்தில் நகர்ந்தாடும் ராணியின் பலங்களையும் பலகீனத்தையும் பேசுகிறது கவிதை! அவள் தன் பங்கை சிறப்பாக செய்தாலும் ராஜாவின் கடுஞ்சொல்லால் தன்னை விழுங்க பரமபதம் போல் ஒரு பாம்பு இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தவிப்பது கவிதையின் சிறப்பு!

எப்போதும் போருக்குப் போகுமுன்
நேற்று நீருற்றிய கவிதைகளில்
பூத்த பூக்களைத் தொடுத்து
தலை நிறைய சூடிக்கொள்கிறாள்..

தானாக உருமாற எதிரியின்
எல்லைவரை பயமின்றி செல்ல
வேண்டுமென்பதை சிப்பாய்க்கும்
கற்றுக் கொடுத்திருக்கிறாள்..

அவள் அருகாமையில் வந்து
செல்கையிலெல்லாம் மூச்சடைக்கிறது
இரு ராஜாக்களுக்கும் ஒருவனுக்கு
பயத்திலும் மற்றவனுக்கு பதட்டத்திலும்..

காப்பதே அவளென்பது அறியாமல்
ஓரடியே நகரும் அதிகாரமுள்ள ராஜா
இயலாமையில் எறிகிறான் வாளொத்த
சொற்களை இவள் ஊர்சுற்றி என..

பரமபத கட்டங்கள் போல்
சதுரங்கத்தில் ஏன் பாம்புகளே
இல்லையென்ற ராணியின் கேள்விக்கு
யாரிடமும் பதிலே இல்லை..

==============
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில் திளைத்திருக்கும் அந்தவீடு ஒன்றுக்கு மட்டும் தயக்கத்துடனே காத்திருக்கிறது... நீங்களே வாசித்துப் பாருங்கள்:

அவனுக்குப் மிகப் பிடித்த அவல்,
வெல்லம், அச்சுமுறுக்கோடு சீடை,
வெண்ணை, பாயசம், பாசத்தோடு
சமைத்த பாரம்பரிய இனிப்புகள்,
பார்த்துப் பார்த்துச் செய்த ஒப்பனை,
வீடெங்கிலும் வண்ணக் கோலம்,
விதவிதமாய் மணக்கும் பூக்கள்,
சின்னச்சின்ன பச்சரிசிப் பாதங்கள்,
வழக்கப்படி எல்லாம் தயார்தான்..
எங்கள் வீட்டில் கண்ணனாக உலாவர
அடுத்த வீட்டு ஹர்ஷித்தை கொஞ்சநேரம்
இரவல் கேட்பது மட்டும்தான் பாக்கி

======.

பாசத்தின் வெளிப்பாடு என்பது தியாகத்தையும் உள்ளடக்கியதுதான் இல்லையா! இங்கு கவிஞர் தன் அம்மாயின் பாசத்தை ஆட்டுக் கறி குழம்பால் எழுதியிருப்பது காரமா? சுவையா!

அரைக்கிலோ ஆட்டுக்கறிய தேங்கா
செலவு அரைச்சு வெச்சு தண்ணிக் கொழம்பாக்கி ஆவிபறக்க அவிச்ச இட்டிலியோட ஆளுக்கு ரெண்டு
துண்டு அள்ளிப்போட்டு வளர்ற
புள்ள நல்லாச்சாப்பிடுன்னு ஊட்டாத கொறையா சாப்பிடச் சொல்ற
அம்மாயிய நீ சாப்பிடலயான்னா
போடி பொசகெட்டவளே ஞாயித்துக்
கெழம நா விரதம்லன்னு சிரிப்பா..
ஒருகாலத்தில அந்த அரைக்கிலோ கறியையும் அசராம சாப்பிட்ட
அம்மாயி எங்களுக்காகத்தான்
சைவமாச்சுன்னு ஒருநா பெரியய்யன்
சொல்லித் தெரிஞ்சதுக்கப்புறமா
ஆட்டுக்கறி ஏனோ ருசிக்கிறதேயில்லை..

===========
கவிஞரின் மற்ற கவிதைகளையும் காண்போம்::


"அம்மு இது தப்பா எழுதியிருக்க"
"ஓ அப்படியா டீச்சர்" எனக் கேட்டவளை
மடியில் அமர்த்தி எச்சில் தொட்டழித்து
சிலேட்டில் திருத்திச் சொல்லிக் கொடுத்த
ஒன்றாம் வகுப்பு எலக்ட்ரா சிஸ்டர்,

வெள்ளிக்கிழமை மாலை கடைசித்
தமிழ் வகுப்பு கவிதைக்கானதெனச்
சொல்லி "நிலா நீ வானம் நான்" எனும்
உளறல்களுக்கும் கைதட்டி கைநிறைய
மிட்டாய் வழங்கி ஊக்குவித்த தமிழய்யா,

கட்டுரையோ பேச்சோ ஓவியமோபோட்டி
எங்கு நடந்தாலும் கேட்காமலே பேரெழுதி
சொந்த செலவில் பத்திரமாய்க் கூட்டிப் போய்
திரும்ப வீடுவரை கொண்டு வந்துவிட்ட சபாபதி மாஸ்டர்,

ஜாதிமல்லி, மஞ்சளின் வாசனையோடு
சிரித்த முகமாய் தொழில்நுட்ப வரைபடம்
வரையக் கற்றுத்தந்த பிரேமா மிஸ், மாணவிகளையும்
மரியாதையாய் வாங்க போங்கவென அழைத்த கலைமணி சார்,

ஆசிரியர் தினத்தில் நன்றியோடிவர்களை
நினைவுகூர்கையில் வந்து தொலைகிறது
செய்யாத தவறுக்காய் குட்டைப்பாவாடையை
மேலேற்றி நறுக்கென தொடை கிள்ளிய
சொட்டை நாகராஜன் சார் ஞாபகமும்..
========

பரம்பரை வீட்டை விற்கச்
சம்மதிக்காததால் கடைசிவரை
பேசாமலிருந்த மாமாவிற்கும்,
திருமணத்தன்று இனி என்
மொகத்துலயே முழிக்காதேயென
முகம்திருப்பிய தாத்தாவிற்கும்,
உள்ளூரத் தவித்தாலும் வீராப்பாய்
தன்னைத் தவிர்த்த பாட்டிக்கும்,
நல்லாவே இருக்கமாட்ட என்று
மண்வாரித் தூற்றி சாகும்வரை
சாபமிட்ட சித்திக்கும் சேர்த்தேதான்
சோறு வைக்கிறாள் அம்மா..
அமாவாசையன்று

===========

அந்தக் கிறிஸ்துமஸ் முன்னிரவில்
சிவப்பும் வெள்ளையுமான நீண்ட அங்கியுள்
நுழைந்து குஞ்சம் தொங்கும் தொப்பியும்
வெண்பஞ்சு தாடியும் தரித்து சாக்குப்பை வழிந்து நிறைய
அவர்கள் வலிந்து திணித்து அனுப்பிய
மிட்டாய்ப் பரிசுகள் சுமக்க முடியாமல் சுமந்து
பிள்ளைகளுடன் ஜிங்கிள் பெல்ஸ் பாடி
வீடு வீடாக மெர்ரிகிறிஸ்மஸ் முழங்கி பரிசளித்து
பசியில் நடுங்கும் கால்களோடு பாதிநகரம்
சுற்றிக் களைத்து சுயமிக் கொண்டாட்டம்
ப்ரார்த்தனை முடித்து அனைவரும் அவரவர் வீடு
சென்றபின் வியர்த்து விறுவிறுத்து வீதியில்
வேஷம் கலைக்கும்வேளையில் தன்னைப் போலவே
தனித்து விடப்பட்ட ஏசுவைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கிறான்
முருகதாஸ் என்னும் சாண்டா க்ளாஸ்.

============

சிந்தாம சாப்பிடு
குட்டிம்மா என்கிறேன்
கண்டிப்பாய்..
அப்புறம் எறும்பெல்லாம்
எப்படிம்மா சாப்பிடும்
என்கிறாள்
அன்பைச் சிந்தி..

=========

கூண்டுக்கிளி.

கூண்டுக்குள்ளிருந்து
சோதிடனைப் பார்த்து
அவன்
சிறையிலிருப்பதாய்
நினைத்துச் சிரித்தது
கிளி.

தினமும் சீட்டுக்கட்டை
கலைத்துப் போட்டும் ரம்மி
விளையாடத் தெரியாதாம்
கிளிக்கு.

உங்க முகராசிக்கு
ஶ்ரீராமரே வந்திருக்கார்
எனும்போது
கீகீ என்றது கிளி
பொய் பொய்
என்றதன் பொருள்.

ஆடி போய் ஆவணி
வந்தா டாப்பா வருவீங்க..
ஆவணியிலும்
நெல்மணி தவிர
வேறேதுவும் வராதென
தெரியாதா கிளிக்கு?


சிவன், முருகன்,
பார்வதியெனச்
சீட்டெடுத்தாலும்
பூனையிடமிருந்து
காப்பாற்றுவதென்னவோ
கூண்டுதான்.

பறக்கத் தெரியும்தான்
எனினும் அவன் பட்டினி
காணச் சகியாமல்
வளர்ந்த சிறகையும்
சுருக்கிக்கொண்டது
கிளி.

===========

அல்லாடத் துவங்குகிறது மனம்,
துக்கத்தால் மூழ்குவதற்கும்
பாடலால் பறப்பதற்குமிடையில்.
இழவு வீட்டில் இளையராஜாவின்
பாடலொன்று எதிர்பாராமல்
காதில் விழுந்த கணத்தில்

============

பூசைகளற்ற பொழுதில்

அப்பாவீட்டு யாகத்துக்கே பேசாம
போயிருக்கலாம் பொழுதே போகாமல்
கொட்டாவி விடுகிறாள் பார்வதி..

அம்மா வீட்டிற்குப் போன வள்ளியும்
தெய்வானையும் வரும் நாளிற்கு
ஆவலாய் காத்திருக்கிறான் முருகன்..

யாரும் வராததை உறுதிப்படுத்தி
அரைமுட்டியை நீட்டி நிமிர்த்தி
ஆசுவாசமாக அமர்கிறான் ஐயப்பன்..

ஊர் சுற்றவில்லை எனினும்
எச்சரிக்கையாக குளிக்கக் கிளம்பிய
விநாயகனுக்கு எட்டவில்லை முதுகு..

குதிரையை அவிழ்த்து விட்டு
கள்ளிறக்கும் தோப்புக்கு காலாற
நடந்து போகிறான் ஐயனார்..

வெறித்த விழியும் துருத்திய
நாக்கும் வலிக்கிறதென கண்ணும்
வாயும் மூடுகிறாள் பத்ரகாளி..

கூழ் குடித்து சலித்துவிட்டதென
சூடானஇட்லி காரச்சட்னி தேடித்
தனியே கிளம்புகிறாள் மகமாயி..

அரிசியே இல்லாத வீடுகளில்
வெண்ணை எப்படித் திருடுவதென
ராதையைக் கேட்கிறான் கண்ணன்..

எரித்த சாம்பலிலும் கொரோனா
இருக்குமோ என்ற பயத்தோடே
சுடுகாட்டில் ஆடுகிறான் சிவன்..

=========

செல்லக்குட்டி புஜ்ஜூக்குட்டி
எனக் கொஞ்சி குழைவான
பருப்புசாதம் ஊட்டி எச்சில்
வழிந்த உடைமாற்றி வாசம்
நுகர்ந்து கன்னக் குழியில்
முத்தமிட்டு தூளியில் இட்டுத்
தாலாட்டி தூங்கும் அழகை
கண்ணார ரசிக்கும் வேளை,
மெதுவாகக் கதவு தட்டி, சாரி
கொஞ்சம் லேட்டாயிருச்சுக்கா..
அம்மு ரொம்ப படுத்திட்டாளா?
எனக்கேட்டவளிடம் உஷ்ஷ் என
தூங்குவதாய் சைகை காட்ட,
நன்றிச் சிரிப்பொன்றுதிர்த்து
மார்போடுதழுவி அவள் அள்ளிச்
சென்றபின் அவ்வளவு எளிதில்
தூக்கம் வருவதில்லை எனக்கு..

=============

நீ முதன்முதலில் பரிசளித்த 
டெடிபியர் அம்முவின் வருகைக்குப்பின் 
கண்ணிழந்து கையிழந்து முடமாகிப்
போனது..

நூற்றுக்கணக்கில் பத்திரப் படுத்தியிருந்த
மினுமினுத்த டெய்ரிமில்க் தாள்கள்
வீடு ஒழிக்கையில் 
குப்பைக்குப்போயிற்று..

காதலைக்கொட்டி கவிதை எழுதியிருந்த
க்ரீட்டிங் கார்டுகள் 
மையழிந்து மையலும் அழிந்து ப
ரணின் ஏதோவொருமூலையில்..

நீ எனக்காகப் பதியன் போட்ட சிவப்பு
ரோஜாத் தொட்டிகளில் ரோஜாக்களுக்குப்
பதிலாக கொத்தமல்லி பூத்திருக்கிறது..

பிறந்தநாட்களில் மணிக்கொருமுறை
நீட்டி திக்குமுக்காட வைத்த குட்டிக்குட்டிப்
பரிசுகள் உடைந்தும் ஒட்டடை அடைந்தும்..

அலுவலகம் செல்லுமுன் இதழ் முத்தமும்
இழுத்தணைத்தலும் கார் சாவி எங்கடி
சனியனேவில் கரைந்து காலமாயிற்று..
அழுக்குநைட்டியுடன் அடுக்களையில் நானும்
கையில் காபியும் செய்தித்தாளுமாய் நீயும்..
மௌனமாய் கடக்கிறது தினங்கள்..
இருப்பினும் எவரேனும் நீங்க லவ் மேரேஜா
எனக்கேட்கையில் விரிந்த புன்னகையுடன்
ஆமாமென்பது காதலில்லாமல் வேறென்ன?

=========

தேவதையல்ல நான்,
ஓர் சூனியக்காரிதான்..
அதிராமல் அன்பு காட்டவும்
உதிராமல் உள்ளம் நீட்டவும்
தெரிந்ததில்லையெனக்கு..
ஒருநாள் நீயறியாமலேயே
உன்னையென் கோட்டைக்கு
மாயக் கம்பளத்திலேற்றி
கடத்திச் செல்வேன்..
தப்பிக்க இயலாதவாறு வசியம்
செய்து வசப்படுத்துவேன்..
கூரிய பார்வையில் அனைத்தும்
பகிர்ந்தென் சூரியனாக்குவேன்..
ரசனைமிகு ரசவாதத்தால்
ரகசியமாய்க் கொல்வேன்..
முற்றும் மறக்கவைத்து
முத்தமிட்டே முக்தி தருவேன்..
அதற்கென்ன..நான் அப்படித்தான்..
ஆமாம்..நான் சூனியக்காரிதான்..
என்னைத் தெ(ரி)ளிந்து கொள்..
இனியும் பிடித்திருந்தால் சொல்.

===========

தொடாதே
என்றவனின்
தீட்டையும்
வெளுத்தான்
வெள்ளாவியில்

==========

மெத்தென்று ஊத்தப்பமாக
மேலே வெங்காயம் பொடி
தூவி நன்கு வெந்திருக்க
வேண்டும் அப்பாவுக்கு..
அதிக கனமில்லாமல் இருபுறமும்
திருப்பி நல்லெண்ணை ஊற்றி
சிவந்து பதமாக இருக்க
வேண்டும் அப்பத்தாவிற்கு..
மணக்க மணக்க தாராளமாய்
நெய் விட்டு அகலமாய் மெலிதாய்
முறுகலாய் தந்தால் அடித்து
நொறுக்குவான் அண்ணன்..
சின்னதாய் எண்ணை இல்லாமல்
மூடிவைத்து ஒருபுறம் இட்லியாவதும்
மறுபுறம் தோசையாவதும்
எனக்கு மிகவும் விருப்பமானது..
அனைவருக்கும் அவரவர்க்குப்
பிடித்த விதமாய் ருசியறிந்து
தோசை சுட்டுத்தரும் அம்மாவிற்கு
பிடித்தது எந்தவிதமென்று
தெரியுமோ என்னவோ கடவுளுக்காவது?

===========

பால்யத்தின் வண்ணங்கள்.

பள்ளிச்சீருடையின் நீலம்,
சிலேட்டுகளின் சாம்பல்,
புத்தக அட்டைகளின் பழுப்பு,
சுதந்திரதி்ன மிட்டாயின் ஆரஞ்சு,
பூவரசம் பீப்பீகளின் பச்சை,
தித்திக்கும் மிட்டாயின் ரோஸ்,
தின்பண்டக் குடலின் மஞ்சள்,
வாலாட்டும் நாய்க்குட்டியின் கருப்பு,
துவர்க்கும் நாவலின் கருநீலம்,
உள்ளங்கைகளின் மருதாணிச் சிவப்பு,
சடை பின்னிச் சூடும் கனகாம்பரம்,
டிசம்பர்ப் பூக்களின் ஊதா,
மற்றும், மனதின்
பால்வெள்ளை நிறத்துடனும்
இருந்தது நம் பால்யம்.

==========

அரளிச் செடிகளின் நிழலில்
இளைப்பாற இயலாமல்
ஒற்றைக் காலில் தவமிருக்கிறார்
நெடுஞ்சாலை அய்யனார்..
விரையும் வாகனங்களை வெறித்தபடி

========

View

மாதாந்திர பரிசு

நாடன் சூர்யா

View

மாதாந்திர பரிசு

முத்துக்குமார் சங்கரன்

View

மாதாந்திர பரிசு

ஆர் ஜவஹர் பிரேம்குமார்

View

மாதாந்திர பரிசு

இளங்கவி நடுநாட்டுத்தமிழன்

View

கவிச்சுடர் விருது

பி கே சாமி



இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின்  சிறந்த படைப்பாளிக்கு வழங்கப்படும்  கவிச்சுடர் விருதினை கவிஞர் பி.கே.சாமி அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் அறிவிப்பு செய்கிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் கவிஞர் பி கே சாமி அவர்கள் கல்லூரியில்  இளம் கணிதம் படித்தவர். பாண்டிச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தற்போது பணிசெய்து வருகிறார்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர்களில் தனது கவிதையை அச்சில் பார்த்த ஞாபகம் இன்னமும் அழியாமல் இருப்பதாக சொல்லும் கவிஞர் இளம் வயதிலிருந்தே கவிதைகளின் மீதான காதலால், கவிஞர்களையும் கவிதை நூல்களையும்  தேடி படிக்கும் ஆர்வம் கொண்டவராக அலைந்ததை பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார். கவிஞரின் தீராத வாசிப்பு அனுபவம்தான் இவரது கவிதைகளை மேலும் ஒரு சிறந்தவிடத்தில் வசிக்க செய்துள்ளது என்பதும் உண்மை.

நமது படைப்பு குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு, கல்வெட்டு மின்னிதழ்களிலும் பாக்யா, ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்து இவரை சிறப்பித்திருக்கின்றன!

நமது படைப்பு குழுமத்தில் இவர் பெற்ற அங்கிகாரங்கள்:
------------------------------
அக்டோபர் 2017ல்
படைப்பு குழுமத்தில் மாதந்திர சிறந்த படைப்பு
தேர்வு.

நவம்பர் 2017ல்
கவிக்கோ பிறந்தநாள் கவிதை போட்டி "பாதங்களால் நிறையும் வீடு" இரண்டாம் இடம்
தேர்வு கலாப்ரியா அவர்கள்.

மார்ச்சு2018 அம்மையார்
ஹைநூன்பீவி நினைவு பரிசுப் போட்டி "உயிர் திசை" மூன்றாமிடம் தேர்வு பழனிபாரதி அவர்கள்.

நவம்பர் 2020 கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் பரிசு போட்டி "கை கழுவிய காலம்" சிறப்பு பரிசு தேர்வு யவனிகா ஸ்ரீராம் அவர்கள்.

ஜனவரி 2020 தமிழக காவல்துறையும் படைப்பு குழுமமும் இணைந்து நடத்திய மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியில் "விஷம் நுரைக்கும் கோப்பைகள்" சிறப்பு பரிசு தேர்வு மு.மேத்தா

கவிஞரின் படைப்புகளே கவிஞருக்கான கவிச்சுடர் விருதினையும் அளித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைந்து கவிஞரை வாழ்த்துகிறது நமது படைப்பு குழுமம்.

இனி கவிஞரின் சில படைப்புகளைக் காண்போம்..

அகமும் புறமும் வெவ்வேறு படி  நிலைகள். அகம் புத்தனைப் போல் மென்று விழுங்கும் துயரத்தை புறம் நடிப்பால் தன்னை மெருகேற்றிக் கொள்ளும்... இரண்டுக்கும் இடைபட்டு தவிக்கும் கவிஞனின் குரலில் வெளிவரும் சில உண்மைகள்... கவிதையாக...
.
அகமும் புறமும்
----------------------

அடர்ந்த இருளை காய்ச்சி வடித்த
பசித்த ஏக்கமாக ஒலிக்கிறது
என் குரல்.

ஊழ்துடுப்பாய்  உள்நுழைந்து
சூழ்ச்சிசுழல் வாய்க்க துழாவுகிறது
வெப்பமிகுந்த பொய்.

வரிசையாக அடுக்கப்பட்ட நினைவுகளை 
ஒரே ஒரு அசைவு 
சாய்த்துக்கொண்டு போகிறது
இயல் எண்களால் ஆன இருப்பை

மறுபடி மறுபடியும் 
தூறிக்கொண்டே இருக்கும் தோல்விகளில் 
நனைந்து விடாமல் தப்பிக்க
கண்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

கொஞ்சம் மௌனத்தை 
இரும்புக் கம்பிகளாக நீட்டி என்னைக் 
கைதியாக வடித்திருக்கிறாய் துருபிடிக்க.

என் எதிரிக்கான அத்தனை வாசனையும்
உன் வார்த்தைகள் பூசியிருக்கிறது.

நிராயுதபாணியாக
நிற்பதை தவிர
வேறுவழியில்லை உண்மைக்கு.

---------------------------------------
மாடு சிறு நீர் கழிப்பதும் சாணிப் போடுவதும் சாதாரண ஒன்றுதான்! ஆனால் அது கவிஞரின் பார்வையில் ஒரு படிமமாக தெரிகிறது! இதுதான் அந்தக் கவிதை....

துயரத்தின் குறியீடு
-------------------------

மனிதர்களால்
அறியப்படாத மொழிகளில்
ஆற்று மணல் ஏற்றிய
வண்டி மாடுகள்
குறிவழியாக
சாலையில் வரைந்துப் போகும்
சிறுநீர்ச் சித்திரங்கள்
அழுதபடிச் சொல்லும்
ஆறு தன் வரலாறு.

---------------------------
 விற்பனை பொருட்கள் சிலவற்றுக்கு சிலர் விலங்குகளின் பெயர்களும், சிலர் பறவைகளின் பெயர்களையும் வைப்பதுண்டு. அதைப் பட்டியலிடும் கவிஞர் முடித்திருக்கும் விதம் சிந்தனைக்குரியது!

மாற்றம்
----------

மான் குடையானது
புலி சிகைக்காய்தூள் ஆனது
சிங்கம் பேரிட்சைப் பழமானது
பொன்வண்டு சோப்பானது
அணில் சேமியா ஆனது
கிளி தீப்பெட்டி ஆனது
சிட்டுக்குருவி லேகியமானது
புழு கூட புடவையானது
........
........
........
மனிதன் மட்டுமே
மிருகமாகிப் போனான்.
....
முரண் என்பதும் பிரியாத ஒன்றுதான்... புத்தன் சிலையை அதிக விலைக்கு விற்பவன் எப்படி ஆசையைத் துறந்தவன் ஆவான்? அழகுணர்ச்சிக்காக வாங்குவன் எப்படி புத்த பித்தன் ஆவான்? கவிஞர் காட்டும் வகைமை நியதியாகிப் போகிறது!

முரண்
---------
விலை அதிகம்
ஆசை துற
அழகான புத்தர் சிலை.
போதிமரத்தின்
கிளையில் செய்யலாம்
துப்பாக்கி கட்டை.
கூட்டில் குஞ்சுகள்
பசியில் ஏறும் பாம்பு
பாவம் போதிமரம்.
தியானத்தில் புத்தன்
திருடப்பட்டது ஞானம்
இந்து மதம்.
போதி மரத்தடியில்
சித்தார்த்தனை
கொன்றான் புத்தன்.
போதிமரத்தில் பழுத்த
ஒரே கனி
சாக்கிய முனி.
----------------------------
மழை மேகத்தை கறுத்த ராட்ஷச பறவை என்று புணையும் கவிஞர் ஒரு போர் வீரர்கள் போன்று இறங்குவதான கற்பனை அபர்மிதமானது! அவர்கள் துவம்சம் செய்வது எங்கு என்றால் ஒழுகும் வீடுகளையும் , ஏழைகளின் வசிப்பிடங்களையும்தான் என்று நகர்ந்து செல்லும் கவிதை ஒரு கசப்பான உண்மையும் கூட... 

.
மழைக்கு ஒதுங்கிய வானம்
------------------------------------

ஆலங்கட்டி முட்டைகளை இட்டு வீசுகின்றன
கறுத்த ராட்ஷச பறவைகள்.

ஊசி ஊசியாய் இறங்கி
ஒன்று கூடுகிறார்கள்
ஊர் நடுவே.

நகரும் பாதையில்
கூடாரங்கள் இட்டு உடைக்கிறார்கள்.

கலவரம் அப்பி
கவலை வழிய வரும்
அப்பா சொன்ன கதையில்
மலைப்பாம்பாக ஓடியது மழை.

வீட்டுப்பாடம் எழுதவில்லையென்று
தலையில் கொட்டும்
உத்திரத்தில் உள்ள ஓட்டை.

அலுமினிய தட்டில்
அரசாங்கத்தின் மழைநீர் சேமிப்பு திட்டம்
அம்மாவுடையது.

மழையைப்போல நானும்
வெளியேற்றப்படுவேன்
வகுப்பறை விட்டு
மாஸ்டர் கைடு எங்கப்பா?

கால்களைக் கட்டிக்கொண்ட
என் கேள்விக்கு
குடையென சுருங்குகிறது
அப்பா முகம்.

எனக்கு
சொல்லவேண்டிய சமாதான சொற்கள்
சொத சொதவென வழியெங்கும்.

எவ்வளவு திட்டியும்
சேற்றில் விளையாடுகிறோம்
நானும் மழையும்....

நாளை என்பது
சொரிய சொரிய
சேற்றுப் புண்ணாக ஊறுகிறது உள்ளே.

விடுமுறை விடுவார்களா?

-------------------------------
உயிர்த்திசை என்றக் கவிதையில் உயிர்த்தசையான அம்மாவை உயிர்த்தெழ வைக்கிறார் கவிஞர். அவள் மீன் தலையையும் முள்ளையும் மட்டுமே ருசி என்று சாப்பிடுவதும் கூட பிள்ளைகள் சதைப் பற்றை சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்! அவள் மௌனங்கள் அறையப்பட்ட சிலுவைக் கணக்குகள் என்பதை அவளின் அத்திமச் சடங்கில் கொள்ளி வைத்து புலம்பும் கவிதை உருக்கம்!
.
உயிர்த்திசை
----------------

இருள் மொழுகிய
சமையல் அறையில்
ஏவாளின் குறியீடுகளாக
எழுதப்பட்டிருக்கும்
அம்மாவின் காலக் கணக்குகள்.

பசியால் அறையப்பட்ட
பாவ உடம்புக்கு
மூன்று நாள் வரை
காத்திருக்க மாட்டாது
எந்த நேரத்திலும்
உயிர்த்தெழுவாள் உணவிட...

கவலை மீனோ காணாங்கத்தையோ
தலையும் முள்ளையும் மட்டுமே  தின்பாள்
தனி ருசி என்ற தகவலோடு.

அப்பா ஊன் பசியின்
காரம் குறைந்த ஒர் இரவில்
சாராய நெடி நகக் கீறல்களை
எரவானக் கழி
ஏற்றுக்கொள்ளும் பழியை.

உணர்வுகளை உள்ளடக்கிய
நத்தையின் கூட்டை ஒத்த
வீட்டில்
அவள் வாசத்தோடு
கண்ணீர் வழித் தடங்கள்.

கொள்ளிச் சட்டியில்
கொண்டு போகிறேன்
அவள் அடுப்பில் இட்ட அனலை
நாங்கள் உண்ட மீதியை
தீயின் நாக்குக்கு
தின்னக் கொடுக்க.

நாளை பால்ஊற்றுவேன்
பால் ஊட்டியவளுக்கு....

------------------------------
.இருவேறு நண்பர்கள் ... பால்யத்தின் சுவை கிராமப் பக்கங்களில் நிறைய, ஒருவன் நகரத்தின் வாசனையோடு திரும்பியப் பின் நட்பும் புளித்துப் போகிறது.. இதோ கவிதை!

பழம் புளி
-------------
.
பல்லாங்குழியில் 
பாண்டி வேண்டி
ஒவ்வொரு முறையும்
புளியங் கொட்டையோடு
போட்டுக்கொண்டே வருவான்
ஒருக் கண்ணை என் மீதும்
ஒருக் கண்ணைக் குழி மீதும்....

ஒத்தையா? ரெட்டையா? பிடிக்க
கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில்
ஒரு புளியங்கொட்டையை
ஒளித்து வைத்து
என்னை ஏமாற்றுவான்.

முந்திரிப் பருப்போ
பிஸ்தாப் பருப்போ காணாத கிராமத்தில்
வறுத்து ஊரவைத்த
புளியம் பருப்பை பிடி அள்ளி
யாருக்கும் தெரியாமல்
எடுத்துவந்து தருவேன்...

அடிவயிறு தெரிய
எக்கி எக்கி பறித்த அழகை
ரசித்தபடி புளியங் காயை
உப்பு மிளகாய் வைத்து சுவைப்பான்.

புளியம் மரத்தைச் சுற்றி
ஓடிபிடித்து விளையாடும்
போதெல்லாம் அகப்பட மாட்டான்.
நான் வேர் தடுக்கி விழ சிரிப்பான்.

ஒரு காலத்தில்
பூ விடும் போது போனவன்
வேறு காலத்தில்
சொக்கட்டான் பழமான போது வந்தான்.

பட்டணம் போய் படித்துவிட்டு வந்து
பட்டிக்காடான  என் நேசத்தை
சுவைத்து விட்டு
புளிப்பதாக சொல்லி துப்பிவிட்டு போனான்.

அதே புளிப்பு மீது
ஆசை அதிகம் ஆனதால்
ஊர் தின்னும் முன்பாக....

அதே மரத்தில்
தூக்கிட்டுக் கொண்டு பேயாகிப் போனேன் நான்.

--------------------------------
பிஞ்சுப் பாதங்களால் நிறையும் வீடு அழகானது! தன் மகளின் முன் தோற்பதும் சாவதும் கூட தகப்பனின் ஆசையாகிறது! நிறையும் கவிதை சற்றை துயரும் கூடி! 


பாதங்களால் நிறையும் வீடு
""""""""""""""""""""""""""""""
திருடனாக ஒளிந்து கொண்ட என் பால்யத்தை
போலீசாக கண்டுபிடித்து சுட
கைதியாக சாவேன் துடிதுடித்து.

ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பாலை
பி ஃபார் பந்து என சொல்லி
பிரம்பு நீட்டி அவள் அடிக்கும் அழகை காண யாசகனாய் கை நீட்டுவேன்.
கண்டது கையளவு
காணாதது உலகளவு.

பூனையாக மெல்ல மெல்ல வந்து
கவிதை தேடும் கண்களை மூடுவாள்
பூனைக் கண்மூடினால் என் பூலோகமே இருண்டுதான் விடுகிறது.

தாகமே இல்லாத போதும்
தண்ணீர் கேட்பேன் நதியிடம்
ஓடிப்போய் கொலுசின் ஒலி சிந்த கொண்டுவந்தால்
புரையேற குடிப்பேன் தலை தட்டி நெஞ்சு தடவுவாள்.

ஒவ்வொரு நாளும் கோகுலாஷ்டமி தான்
அழகு சொட்ட சொட்ட அவள் குளித்து வரும் கால் தடங்கள்
ஞாபகத்தில் நீர் வைக்கும்.

வீடெல்லாம் படிந்துகிடக்கும்
பிஞ்சு பாதசுவடுகளில்
படுத்துகிடக்கிறது என் பாசம்
காய்ச்சல் என மருத்துவமனை சேர்த்த மகளுக்காக...
--------------------------------
வாழ்வியலோடும் வளமான கற்பனைகளோடும் வலம் வரும் கவிதைகள் என்றும் பழுதாவதில்லை... இன்னமும் சில கவிதைகள் கவிஞரின் எழுத்துகளாக!
.
வேர்த்திரள்
""""""""""""""""""""
நகரும் இரவின்
வலசைக் குறுக்கீடுகளாய்
நட்சத்திர விடுதிகள்.

களிற்றின் காலில் இடறும்
லட்சுமண ரோடுகளில்
கார்பன் மோனாக்ஸைடின் கவிச்சை அடிக்கிறது.

சாம்பல் பூத்த நெருப்பு கூட்டத்திடமிருந்து
கும்கி மனிதர்களால்
வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது
அதன் வனம்.

மலைக் காட்டை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள்
தேநீர் கோப்பைகளில் கண்ணீர் குடித்தக்கதை
பறவைகளின் பாடல்களில் பிசுபிசுக்கிறது.

ஒரு மரத்தை சாய்த்து
ஒரு மழையை சாகடித்த பாவிகள்
கனி ருசியில்.

அன்றொரு நாளில் நிழல் விரித்து
மரத்தின் மடிசாய்ந்து
ஆக்சிஜன் அருந்தியவர்களை
ஓசோன் ஓட்டைகள்வழிப் பார்க்கிறது வானம்.

சூரியன் நுழையத் தயங்கும் காடுகளில்
மனிதக் காலடிச்சுவடுகளில்
குருதிவாடை.

உயிர் வனத்தின்
குறுக்கு வெட்டு தோற்றம்
படம் வரைந்து நம் பாலித்தீன் பாவங்களைக் குறிக்கிறது.

மண்ணை இறுக்கப்பற்றி
மனிதம் வளர்த்த வேர்த்திரள்கள்
கஷாயத்திற்கும் கருமுடிக்கும்
காய்ச்சப்படுகிறது.

காட்டுத்தீ என்பது
வனத்தின்--
ஜத்ரு யாகமாக இருக்கலாம்.

------------------------------------

பிரிவுமானவள்
-------------------

உன்மீதான என்பிரியங்களுக்கு பிரிவு ஒன்றும் புதிதில்லை.
கண்ணீரை ஆவியாக்கும் ஜன்னலுடன்
புழுதிப் பறக்கப் போகும் பேருந்துகளில் சுழல்கிறது
கறுத்த கால உருளைகள்.
இருவேறு புள்ளிகளிலிருந்து இழுத்து விடுகிறது
கயிறும் மிட்டாயும்.
இறுதியாக இருக்கும்
கனவின் மிச்சங்களை
நம் தோளில் சுமக்கலாம் என்ற
வார்த்தைகளுக்கு
நிறைய சுருக்கமும்
சில பற்களும் இல்லை தானே.
-------------------------------------

மழையின் மறுபக்கம்
---------------------------

வெட்வெளியில் மழை
பெய்து கொண்டிருந்தது.

யாருமற்ற அதன்
கூக்குரலாக ஒலிக்கிறது
சோ.... என்ற ஓசை.

துளியின் அதிர்வில் பறக்கும்   மண்ணின் வாசம் கிளைகளைத் தேடுகிறது அமர.

தவளைகளுக்கு தகவல் போகாததால்
கவலைகள் குழப்பி
கத்திக் கொண்டிருக்கிறது தனிமை.

அழையாத வீட்டிற்கு
நுழைந்த விருந்தாளிபோல
நிர்கதியாக
நின்று பெய்கிறது நினைவுகள்.

ஈரம் தைத்த ஆடையோடு இறுக்கி அணைத்த குளிரோடு
பார்க்க பரிதாபமாக
சேறு குழப்பி விளையாடும்
குழந்தை மனசை
வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகமுடியாது.

துவைத்த துணியை காயவைத்திருக்கிறாள் மனைவி...
சின்ன வெங்காயம் விலைக்குறைவாக
கிடைத்தென வடகம் காயும்
அக்கா வீடு....
ஆர்கானிக் எண்ணை வித்து
காயும் சித்தியும் சீந்த மாட்டாள்...
கல் சூலை வியாபாரம் செய்யும்
நண்பனும் விரும்பவில்லை.

மழைக்கு கூட ஒதுங்கியதில்லை என்று
என்னை யாரும் சொல்ல முடியாது.

கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறேன் எனது குறையை...

-----------------------------
.
ஈரமற்ற இரவுகள்
----------------------

உறக்கத்தை இமைகளுக்கு கீழேகொட்டி கவிழ்த்து வைத்துவிட்டு
மரத்துப்போன மனக்கதவை சாத்தியபடி வெளியே வந்தேன்.

நீர்மமாக சொட்டிக்கொண்டிருக்கும்
இரவு
வாசல் படிவழியாக
வழிந்தோடுகிறது.

தூரத்து தவளைகளின்
ஒலிப்பின்னலில்
துணைகளின் தொலைந்த முகவரித் தேடல்.

எங்கிருந்தோ ஓடிவந்து உள் நுழைந்த நாயொன்று
உடல் சிலுப்பி உதிர்க்கிறது ஒட்டிய மழை தூசியை.

செவ்வாய் தோஷத்தில்
நமுத்துப்போன கனவுகளில் பூஞ்சை வாசம்.

பாசரச துளிகளாய்
கனக்கிறது கைஏந்திய மழை.

வெளிச்சம் பூசி விடிந்த பகல்வெளியில்
சிறு சிறு குட்டைகளாக
தேங்கிக்கிடக்கிறது
வடிந்து போன உணர்வுகளின்
மிச்சம்.

------------------------------------
மக(ள்)மாயி
----------------------------
அம்மு குட்டி அள்ளித் தின்ற
பால்சோற்று பருக்கைகள்
இறைந்து கிடக்கின்றன
எனது பகல்களாக...

சுடுநீரில் எனை கொதிக்க விட்டு
நீராட்டி தூக்கிவந்து
பவுடர் அடித்து
திருஷ்டிக்கு வைக்கும் பொட்டளவே இருக்கும் எனது இரவு.

வாயில் வைத்த எச்சில் கை எடுத்து
வீசும் போது ஈரமாகிவிடுகிறது
மழைக்காக மலையேறி
குளிர வேண்டிய காற்று.

என் எதிர்கால கனவு
கண்ணுறங்கும் பொழுது
நரி மிரட்டினாலும்
இதழ்களில் பூப்பது
புத்தனின் புன்னகை.

ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டு
நம்மை நகராதபடி செய்துவிடுகிற அந்த நதியிடம்
நடுவில் பாறையாக நின்றாலும் பரவாயில்லை.

அணைத்துக் கொண்டு
கொஞ்சும் போது
மீசை குத்தி
ஆவென கத்தவிட்டதற்கு ஆண்மகனாய் பிறந்ததற்கு வெட்கப்பட நேர்கிறது.

------------------------------
.
காதல் கருவிகள்
----------------------

ஆயுதம் என்பது
உலோகமாகத்தான்
இருக்கவேண்டும் என்ற உத்தரவாதம் இல்லை
உன் உதடுகளாகவும் இருக்கலாம்.

வெட்டுவது
கத்தியாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை
உன் கண்களாகவும் இருக்கலாம்.

இரும்பு கம்பியில் செய்ததுதான்
சிறையாக இருக்கவேண்டும் என்ற சட்டமில்லை
உன் இதயமாகவும் இருக்கலாம்.

அணுவைப் பிளக்கும்
கதிர்வீச்சு
ஹைட்ரஜன் குண்டாகத்தான்
இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை
உன் அமைதியாகவும் இருக்கலாம்.

கனிம ஆயுதங்களாய் கொல்லும்
உன் அழகுக்கும் கொண்டாடலாம்
ஆயுத பூஜை!
-----------------------------------------------

View

மாதாந்திர பரிசு

சிபானா அஸிம்

View

மாதாந்திர பரிசு

கயூரி புவிராசா

View

மாதாந்திர பரிசு

சோ. ஸ்ரீதரன்

View

மாதாந்திர பரிசு

தேவி லிங்கம்

View

Showing 401 - 420 of 838 ( for page 21 )