கவிச்சுடர் ப.தனஞ்ஜெயன்
....................................................
நமது படைப்பு குழுமம் மாதந்தோறும் அளித்துவரும் சிறந்த கவிஞர்களுக்கான "கவிச்சுடர்" விருதினை இந்த மாதம் சிறந்த படைப்பாளியும், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது!
கவிஞர் ப.தனஞ்ஜெயன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுவை மாநிலம் ஏம்பலம் எனும் கிராமம். படைப்பு குழுமத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இலக்கியத்தில் தனக்கென்று தனி தடம் பதித்து வருகிறார்.
புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்து, பத்து ஆண்டுகளுக்கு மேல் தனியார் தொழிற்சாலையில் அறிவியல் பிரிவுகளில் பணிசெய்தார்.பிறகு சமூகத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் விவசாயத்தில் தடம் பதித்து வருகிறார்.
கவிஞரின் "அமைதியைத் தேடி","முழு இரவின் கடைசித் துளி "என்கிற கவிதைத் தொகுப்பும் "சிவனான்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது
இதனையடுத்து "நிசப்தம் விழுங்கும் காடுகள், கடவுளின் பிரார்த்தனை மற்றும் கருவறை சுவர்கள்"என்கிற மூன்று கவிதை நூல்கள் வெளி வரவிருக்கின்றன!
படைப்பு கல்வெட்டு,படைப்பு தகவு ,ஆனந்த விகடன்,கணையாழி,பேசும் புதிய சக்தி, காக்கை சிறகினிலே,இந்து காமதேனு, காணிநிலம், நடுகல்,ஆவநாழி,கொலுசு,காற்றுவெளி என பல்வேறு பத்திரிக்கை மற்றும் சிற்றிதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் இடம் பெற்று கவனம் பெற்றுள்ளது.
கவிக்கோ அப்துல் ரகுமான்,பாப்லா நெரூதா,மகாகவி பாரதி மற்றும் மலையாள கவிஞர் சச்சிதானந்தன் ஆகியோரின் எழுத்துக்களே தான் கவிதைகள் எழுதக் காரணம் என்று சொல்லும் கவிஞருக்கு பிடித்த நூல்கள் : .பசி, பாரபாஸ், கோபல்லபுரத்து மக்கள், தண்ணீர், ஆலிலையும் நெற்கதிரும், பால்வீதி கவிதை நூல்.
அவரது கவிதைகள் அனைத்தும்,அதீத கற்பனை, நவீனத்துவச்சூழல், ,காதல், உருவேற்றம், இயல்பு, வாழ்க்கை தினசரி உலகின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும், பால்ய நினைவுகள், முற்போக்கு சிந்தனை, உயிர் நேயம், குறித்த கவிதைகளையும் நிறையவே எழுதி வருகிறார்.
முகநூலில், படைப்பு குழுமத்தை மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் தொடர்ந்து நேசித்து எழுதிவரும் கவிஞர்.இப்போது நமது படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதினையும் பெறுகிறார் என்பதில் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்:கிறது.
இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே!
இனி கவிஞரின் சிலக் கவிதைகளை காண்போம்.....
காலத்தின் சுழற்சியில் தூசிகள் கோள்களாகவும் கோள்கள்: கிரகங்களாகவும் பயணிக்கின்றன... வாழ்க்கையின் சுழற்சியில் பிறப்பும் இறப்பும் நியமிக்கப்பட்ட விதியாக மாறுகிறது. காலத்தின் மீது நாம் பயணிக்கிறோமா? அல்ல்து காலம் நம் மீது பயணிக்கிறதா? கேள்விகளூடே கற்பனைத்தொட்டு நகரும் ஓர் கவிதை!
இருளின் அகாலத்தில்
வெளிச்சத்தின் ரேகைகள்
மிச்சமிருக்கிறது
இருளின் ஊடேயிரங்கும்
விண்மீன் தடயத்தை
விழுங்கி நகர்கிறது இருள்
நிலவு படகு கால நதியில்
திசை மறந்து சூரியனின்
மற்றொரு முகமாய் மலர்கிறது
அணுக்களின் துயிலற்ற பயணத்தில்
ஆழமான மௌனமாய்
நிலவு பூ பூக்கிறது பூமியெங்கும்
நிலவும் சூரியனும் பூத்துக்கொண்டேயிருக்கும்
சூனிய சக்கரத்தில்
பிறந்து பூத்திருக்கிறது
பிறப்பு
இறந்து பூத்திருக்கிறது
இறப்பு
மலர காத்துக்கொண்டேயிருக்கிறது
உயிரெனும் மலர்.
*******************************
காலத்தோடு பேசுவது கவிஞருக்கு பிடித்திருக்கிறது. காலமும் அவரை விட்டு நகர மறுக்கிறது.. காலமும் ஒரு போதைதானோ!
வாழ்தலே பெரும் போதை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
சில இடங்களுக்குச் செல்கிறோம்
சிலரைச் சந்திக்கிறோம்
சிலவற்றை ரசிக்கிறோம்
சிலவற்றை வெறுக்கிறோம்
மனிதர்களுக்கான
இடைவெளியை
இறுக்கமாக
அணைத்துக்கொள்கிறது
காலம்
காலத்திடம் நம்மால்
எதுவும் பேச முடியவில்லை
மௌனமாக நம்மோடு
பேசுகிறது காலம்
பெருங்கடல்
மண்
பெருமலைகள்
சிறுமலைகள்
குன்று
மரங்கள்
காதலோடு கேட்கிறது
காலத்தின் குரலை
தினந்தோறும்
இரவில் விண்மீன்களை வாசித்து
காலமதுவை ஊற்றுகிறது காலம்
இரவு பகல் என்ற பெரும் மதுவை
மகிழ்வோடு உண்கிறது
அணுக்கள்
அணுக்கள் சிதைந்து
நூற்றாண்டின் குரலைக் கடந்து
குடிக்கிறது காலமதுவை
காலமது வழிகிறது
முழு ரசனையோடு
உயிர்கள் முழுவதும்.
*****************************
நம்பிக்கயற்ற பயணமாய் மாறிப் போகிறது இக் காலத்தின் மீது பயணிப்பது! அதிகாரம் படைத்தவனின் அ\சைவுகள் அதிகாரமற்றவனின் குரலை நெறிக்கிறது. சப்தம் போட்டு கேட்க வேண்டியவை சப்தமில்லாமல் முடங்கிப் போகின்றன! இதோ ஒரு அதிகாரமற்றவனின் குரலாய் இக்கவிதை!
ஆயிரக்கணக்கான இன்றைய மரணங்களின் இசை
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
முகம் தெரியாத
முடிச்சிட்ட கபால குரலின் அதீத வெடிப்பு
நடனமில்லாத பெரும் வாழ்வின்
கால குரல்
அள்ள அள்ளக் குறையாமல்
எரியும் நெருப்பு பேச்சு
ஊடகங்களில் தொலைந்து போய்
கண்சிமிட்டும் தணல் எழுத்து
திசைதோறும் தடுமாறும்
பிண நதி
உறவுகளின் சடங்குகளற்ற
மண்ணின் உபசரிப்பு
தசையும் எலும்பும்
எரிந்தும் அரித்தும்
உணர்வுகளின் மையத்தில்
முடிச்சவிழும் பயணங்கள்
இந்த நூற்றாண்டின் பெரும் சாபம்
எந்த நூற்றாண்டு அரசனின் பாவச்செயல்
கர்மாவாக எரியும் நெருப்பில்
நாற்றிசையில் சருகுகளாய் வீழும் மனிதர்கள்
வேடிக்கை பார்க்கும் கண்களிலும்
நாசியிலும் ஓர் மௌன திரை
ஸ்தம்பித்த ஓட்டத்தில் கேட்காமலேயே நீண்ட ஓய்வு
உயிரோடு இருப்பதை தொட்டுணரும்
நம்பிக்கையற்ற காலக்கெடு.
******************
சிலவற்றை கோடுகளால் வரைந்து குறிப்புகளால் எழுதிவிடலாம்! சிலவற்றை வரையவே முடிவதில்லை! கவிஞரும் ஈரத்தை வரைய சிரமப் படுகிறார்.. இந்த ஈரம் உள்ளத்தில் துளிர்க்கும் அன்பாக இருக்கலாம்!
கருமேகங்களைக் காட்டி
மழையை வரைந்துவிட்டேன்
சூரியனைக் காட்டி
வெப்பத்தை
வரைய முடியவில்லை
என்னால்
பறவையைக் காட்டி
இறகினை வரைந்துவிட்டேன்
இறகினை காட்டி
பறத்தலையும் வரைந்துவிட்டேன்
காற்றை வரைய முடியவில்லை
என்னால்
கடலைக்காட்டி
நீரை வரைந்துவிட்டேன்
கடலின் சுவையை
வரையமுடியவில்லை
என்னால்
ஈரத்தை வரைய
நம்மால் முடியும்
என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
******************
கவிஞரின் இன்னமும் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு:
சேரன் தெரு
சோழன் தெரு
பாண்டியன் தெரு
எனப்பெயரிட்ட தெருக்களில்
பிச்சைகேட்ட பிச்சைக்காரன் ஒருவனுக்கு
சல்லிக்காசு கூடத்தேறவில்லை
பொருத்து கொண்டே
நான்காவது தெருவினுள் நுழைந்தவனுக்கு
கொஞ்சம் கூட
சாப்பிட உணவும் கிடைக்கவில்லை
அந்த நான்காவது தெருவின் பெயர்
வள்ளலார் தெரு
சிரித்துக்கொண்டே பெயரற்ற தெருக்களில் நடந்தான் அவன்.
**************************
மண்வாசனை
−−−−−−−−−−−−−
அழகான பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு ஊரின் பெயரிலும்
ஒரு வரலாறு இருப்பதை
தாத்தா சொல்வார்
ஒவ்வொரு ஊரின் பெயரும்
அப்படியேதான் இருக்கிறது
கங்கை கொண்ட சோழபுரம்
மணல் மேடு என்று
வளங்களைத்தான் காணோம்
துயரமான
பேருந்து பயணத்தில்
நெஞ்சத்தோடு
காற்று கிழித்து
நீர் வழிந்தது தாத்தாவின்
கண்களில்
சில ஊர்களுக்குப்பிறகு
அவர் நிறுத்தம் வந்தது
நெடுவாசல் நெடுவாசல்
எனக் குரல்கள் கேட்டது
அடைக்கப்பட்ட இதய வாசலோடு
வானத்தைப்பார்த்தவாறே
இறங்கினார் தாத்தா
தாத்தாவின் சொந்த ஊரின் மண்வாசனையை
எடுத்துச்சொல்ல வானம்
மட்டுமே இருந்தது
வழித்துணையாய்!
*******************
கல்லறை வாசம்
−−−−−−−−−−−−−−−
மனதில் சொட்டும் வார்த்தைகளுக்கு முன்
மண்டியிட்டுக் கிடக்கும்
நிமிட தூரங்களின்
சுனை வீழ்ச்சியாய் நகர்ந்து
ரத்த முடிச்சுகளின் வழியாய்
நிமிர்ந்து பாயும் கால முட்களே
காலத்திலிருந்து பிரிந்து
அவிழ்ந்த சுவடுகளின்
ரகசியத்தில் ஊறும்
பெருங்கிணறாய் உடல்
திணறி எழும் வார்த்தைகளும்
நிலவின் முத்தங்களில்
எரிந்து வழியும் சமவெளியில்
ஒரு ரத்த மௌனம்
கால முட்களில் சவாரி செய்து
மரண ஊற்றில் நனைந்தெழும்
ஆழமான தீராத சுடராய் உயிர்
எரிந்து அடங்கும் எரிகல்லின்
துயரத்தில் புத்துயிர் பெறும்
பிரபஞ்ச கணத்தில்
நடுங்கி அணைந்து செரிக்கும்
ஊற்றுகளின் குரல்.
********************
இந்த சாலை எங்குச் சென்று முடியும்
என்று கேட்டான் ஒருவன்
கூட்டத்தின் அருகிலிருந்த
பைத்தியக்காரன் சொன்னான்
கல்லறையில் முடியுமென்று.
*******************************
காதல் செய்
கவிதை எழுது
நீண்ட தூரம் நடந்து செல்
வெப்பத்தை உணர்
நெற்றிப்பொட்டில்
முத்தமிடு
மழையில் நனை
மண் வாசம் கற்றுக்கொள்
பொக்கை கிழவியுடன்
கூடிப்பேசு
நரை மேகத்தின்
உருவங்களை ரசி
திண்ணையில் அமர்
குழந்தையின்
பார்வையில் விழு
நெருக்கடி காலங்களில்
மனிதர்களை சந்தி
நலம் விசாரி
அன்பு கொள்
தேடித்தேடி நேசம் வளர்.
*********************
பிரபஞ்சத்தின் கணங்கள்
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பூமி சதைகளில் ஒரு மௌன அதிர்வு
சுழலும் அச்சில்
ஒரு ஆழமான புன்னகை
அதிசயமான உடல் இசை
தட்டாய் சுழல்கிறது
நீர் தெறிக்கும் இசை மோதி மடிகிறது உடலெங்கும்
பூமித்தாயை பிளக்கும்
விதைகளில் இருக்கிறது
பச்சை சதையுதடு
பூமி இருள் குடித்து
பகல் அருந்தி வழிகிறது
மணித்துளிகள்
சாயை கோடுகளில் புறப்பட்டு
நடந்து செல்கிறது பூமி
துணைக்கு சில கோள்களின்
ரீங்காரம்
கோள்களைப் பெற்றெடுத்த
கருவறையா பிரபஞ்சம்
மனித மனதில் எரிகிறது
பிரபஞ்ச விளக்கு
மாயை எண்ணெய்யானது
சாயை திரியானது
இரண்டும் கலந்து மனித உயிரானது
கடந்து செல்ல முனையும்
கோள்களை
கட்டிவைத்துள்ளான் மனிதன்
மனக் கயிற்றைக் கழட்டி எரிந்தால்
ஒளியின் தூரத்தில் தெரிகிறது
முத்திரை
மனித மூச்சில் வழிகிறது
அணுதானியம்
அணுக்களைக் குடித்து மகிழ்கிறது
வெகுதூரத்தில் கருந்துளை.
***********************
அழகான இரவிற்கு
அற்புதமான இசையைத்
தவளைகள் பாடிற்று
க்ராக் க்ராக் இசை
மேற்கத்திய இசையை விட
லயமானது இரவு
சூனியமான நிலவொளியில்
நேற்று பெய்த ஓயாத மழையின்
சிலிர்ப்புகள்
மின்மினிகளின் ரீங்காரத்தில்
இன்னும் அழகு கூடியது மழை இரவு
சட்டென்று
தலை தூக்கிய பாம்பிற்கு
குழப்பம்
எந்த தவளை கத்துகிறது
எதைப்பிடிப்பது எனத் தள்ளாடியது
தனித்து தவளை வரும் வரை
காத்திருந்தது
மீண்டும் இரவு மழை
மழைக்காலம் முடியும் வரை
தவளை தனித்திருக்கவில்லை
தூரல் இடைவெளியில்
தார்ச் சாலையில் தனித்துச் சிக்கியதவளையைக்
கவ்விக்கொண்டு
இரை விழுங்குகிறது
பாம்புகள்
தன் கூட்டத்திலிருந்த தவளை
ஒவ்வொன்றாக
வேட்டையாடப்பட்டது தெரியாமல்
மீண்டும் இசைக்கிறது
மீண்டும் பாடுகிறது
தவளைக்கூட்டங்கள்.
********************
கடற்கரைக்குச் சென்றேன்
அமைதியாக இல்லை கடல்
பேசிக்கொண்டேயிருக்கிறது
அலை
மணல் துகளில் காலத்தை மீட்டுக்கொண்டு
நரைக்காமல் இசைக்கிறது அலை
ராட்சஸ அலை ஒன்று
மிரட்டிப்போகிறது அவ்வப்பொழுது
எத்தனையோ மனிதர்கள்
வந்தார்கள் போனார்கள்
அனைவரிடமும் பேசிக்கொண்டேயிருந்தது அலை
சற்று யோசித்துவிட்டு
என் அமைதியைக் கடலிடம் கொடுத்துவிட்டு
கடலின் ஓயாத அலையை
நான் எடுத்துக்கொண்டேன்
அலையொன்றை துரத்துகிறது
மனது.
*************************
நம்பிக்கையோடு நாட்கள்
சென்றுகொண்டிருக்கிறது
பெறுதலுக்காக
காத்திருக்கிறார்கள்
சில நேரம் பசியற்று
பெரும்பாலும் பசியோடும்
காத்திருக்கிறது கண்கள்
திசை திருப்பும்
பேச்சுகளை மறந்து
தின செய்திகளையும்
ஆதார் அட்டையும்
திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்று
இருக்கைகளின்
நிதானமான பொய்களை
அறியாமலும்
கறை படிந்த சொற்களை
நம்பி
இன்னும் காத்திருக்கும்
அப்பாவி மக்களை
கடந்து செல்கிறது
இந்த ஐந்தாண்டு.
***************************
இருளில் தத்தளித்து
ஒளியில் நனைந்து
மலர்கிறது கண்கள்.
************************
விஷம் எனத்தெரிந்தும் தேனீயைத்
தேன் சுரந்து மலர்ந்து
அழகுடன் அனுமதிக்கிறது மலர்.
*******************
தன் முழு முகத்தைப்
பார்த்துவிட
ஒரு கடலைத்தேடுகிறது வானம்.
***************************
எளிதில் கடத்தி விடுகிறது
இயல்பாய் ரகசியங்களை இயற்கை
பிற உயிர்களனைத்தும் நிஜத்தின் இருப்பில்
நிகழ்த்துகிறது இன்றைய பொழுதுகளை
முதல் தோட்டமான
ஆதாம் ஏவாளின் தோட்டத்தில்
இன்னும் தேடுகிறார்கள் முதல் முத்தங்களை
மனிதர்கள்
பிற உயிர்களுக்கான முதல் தோட்டத்திற்கு
வழி சொல்ல அழைத்தது பறவைகள்
பறவைகளின் முதல் தோட்டத்தில்
கேட்கிறது நிரம்பி வழியும் உணர்வுகளின் சிறகுகள்
அதற்கான பெயரைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அது சுதந்திரமாகப் பறந்து கொண்டேயிருக்கிறது
முதல் கருவறை மகத்தானது
இங்கு முடிவில்லாத கருவறையில்
முடிந்து போகுகிறது நம் வாழ்வு
காட்சிகளாக இடம் பெயர்ந்து
ரேகைகளில் பதிந்து மனிதர்களைப்
படித்துவிட்டு தவிக்கிறது
மொழியின் சுவடுகள்.
*******************************
இன்னுமோர் சுதந்திரத்திற்கு
ஒரு கவிதை படலாமா என்றேன்
தலை தொங்கி நூல் நூற்றது
காந்தியின் கைகள்
இடுப்பில் துப்பாக்கி ஏந்தியிருந்த காந்தியைக்கண்டு
புன்னகைத்தேன்
கவிதையை பாடு என்றது அவரது குரல்.
பசிக்கிடந்து, அடிவாங்கி
போராடி பெற்றதந்த அன்னையின்
கற்பத்தை நள்ளிரவு சுதந்திரம்
சிதைக்கிறது
மதம்தாண்டி சகோதர உணர்வுகளை
வளர்க்க வேண்டிய
புது விதைகள் வேண்டும் என்றால்
சமஸ்கிருதம் தடுக்கிறது என்றேன்
உடனே காந்தி
நான் இட்ட விதைகளெல்லாம் அழிகிறது
இதை உழவனிடம் சேர்த்துவிடு
என்று துப்பாக்கியை தந்தார் காந்தி
நானும் உழவன்தான்
முதலில் கோட்சேக்களை கொன்று உரமாக்குகிறேன் என்றேன்
புன்முறுவலோடு சம்மத்தித்தார் காந்தி
இனி சப்தங்களும் சண்டைகளும்
நம் கையில் தான்
புதுச்செடியொன்று முளைத்துவிட
நீர் கொஞ்சம் ஊற்றிவிடு என்கிறது
காந்தியின் கனவு நிலம்.
********************************
தினம்
−−−−−−
இதுவே கடைசி
எனக் காத்திருக்கும்
நேரத்தில்
மீண்டும் நிலவின்
வெளிச்சம் நழுவி
காயத்தைத் தள்ளுகிறது
எலும்பு நழுவி
நீந்துகிறது
உதிர்ந்த இலையைப்போல
இந்த கரை இத்தனை
வேதனையைச் சுமக்கிறது.
*********************
ஒவ்வொரு உயிருக்கும்
தனித்தனி மதுவை
தந்திருக்கிறது காலப்பூ.
***********************
இனிய வாழ்த்துகள் கவிச்சுடரே.