கவிச்சுடர் ஸ்டெல்லா தமிழரசி ர ஒரு அறிமுகம்
***************************************************
//
இதோ பசிக்கிறது.
ஒர் கவிதையை தின்றுக்
கொண்டிருக்கிறேன்.
//
படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி எழுதிய ஒரு கவிதையை மேலே வாசித்தீர்கள். கவிதைகளை தின்றுக் கொண்டிருக்கும் அளவிற்கு கவிதை சுவைப்பவர். மகாகவி பாரதி பிறந்த மாதமான டிசம்பரில் ஒரு கவிதாயினிக்கு கவிச்சுடர் விருது அளிக்கப் படுவதில் படைப்பு குழுமம் மிகுந்த பெருமை கொள்கிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் சிந்தனை கொண்ட படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்கள்
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். வடசென்னையில் வசிப்பவர். ஒரு காலத்தில் கவிதை என்றாலே காதல் கவிதைதான் என்று காதல் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது திருமணமும் காதல் திருமணம்தான்.
கவிக்கோவின் “அவளுக்கு நிலா” என்ற புத்தகத்தை விரும்பி வாசித்தவர் பின்பு அதன் ஈடுபாட்டில் தனது மகளுக்கு நிலா என பெயரிட்டு மகிழ்ந்தவர். கவிதைமேல் எவ்வளவு தாகம் கொண்டுள்ளார் என்பது இந்த ஒரு சம்பவமே சாட்சி. முக நூலில் அவர் பலவருடங்களாக கவிதை எழுதி வருகிறார். அத்துடன் பல வார/மாத இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் இவரது கவிதையை எப்போதுமே காணலாம்.
இவரது கவிதை பயணம் 6ஆவது படிக்கும் போது தீக்குச்சி என்னும் ஒரு காதல் சார்ந்த சமூக கவிதையின் தொடக்கத்தில் பிறந்தது. பள்ளியின் ஆங்கில ஆசிரியர்தான் ஸ்டெல்லா தமிழரசிக்கு கவிதை எழுத அதிகம் சொல்லி கொடுத்தவர்.
இவருக்கு முதல் கைத்தட்டலும், முதல் பாராட்டும் கவிதையின் இடம் தான் தொடங்கியது. அப்போது அவருக்கு ஒரு பென்சில் பரிசளிக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது. அதனால்தான் என்னவோ இப்பொது வரை படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி பென்சிலை மிக அதிகமாக காதலிப்பவராம்.வட சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
முக நூலிலும் நமது படைப்புக் குழுமத்திலும் எழுதிவரும் இவரது வாழ்வியல்/சமூகம்/ காதல் கவிதைகளுக்கு மிக பெரிய வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
பள்ளிப் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் நிறைய கவிதைகள் எழுதி வந்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்...
நம் நாட்டைக்காக்கும் போர்வீரனுக்கு எவ்வளவு மரியாதையும் அன்பையும் செலுத்த வேண்டுமோ அவ்வளவு அன்பையும் நேசிப்பையும் நம் வீட்டைக்காக்கும் ஒரு கூர்க்காவுக்கும் கொடுக்கும் ஒரு வாழ்வியல் நிறைந்த சமூக கவிதையை இங்கே கீழே காண்போம்..
//
சலாம்
----------
எனதுவீட்டை நன்கு அடையாளம் அறிந்த
பெயர்தெரியாத கூர்க்காவின்
மாத சந்திப்பு இது...
பொன்முறுவலோடு
எனது வீட்டின் கதவை தட்டும்
அவர் கைகளுக்கு என்னால்
மாதம் பத்து ரூபாய் மட்டுமே
தர முடிகிறது..
நள்ளிரவு நேரத்தில்
கூர்க்காவின் தடி என் வீட்டு கதவை
இரண்டு முறைதட்டுவதோ
அல்லது அவரின் விசில்
சத்தம் என் வீட்டு தெருவைகடக்கும் போது
சற்று வேகமாகவோ கேட்டதேயில்லை...
அவரின் வருகையை
இதுவரை உணர முடியாத எனக்கு
அவருக்கு முன் வந்து போன
குடுகுடுப்பைகாரனின் சத்தம்
அச்சுறுதலின் தூக்கத்தை வரவழைத்துவிடும்
இரவில் வந்தாரா
வரவில்லையாயென்ற கேள்விக்குறி
அவரின் ஒற்றை புன்னகையில்
சிதைத்துவிடவே செய்கிறது...
இதுவரை எதுவுமே
பேசாத அவரின் வார்த்தைகள் தவிர
எல்லாமே பேசி நலம் விசாரிக்கும்
மௌனம் அவ்வளவு அழகு...
அவரின் மாதந்திர சந்திப்பு
என்பது செடியில் பூத்த
புதுரோஜாவை பார்ப்பதுப்போன்ற
அலாதியின்பம்...
பத்து ரூபாயோடு
எனக்கு சலாம் வைக்கும் கைகளுக்கு
எந்த கபட தன்மையையும்
உணந்ததேயில்லை நான்
மீண்டும்
அவரைகான அடுத்த மாதம்
ஏதோ ஒரு நாளில்
கையில் பத்துரூபாய் நோட்டை
சுமந்தவளாய்
நின்று கொண்டிருக்க வேண்டும்
எனக்கான சலாம் அவரிடமிருந்து
பெருவதற்கு..
//
இயற்கையை அழிக்கும் மனித பிம்பத்தை தேடி திரியும் ஒரு சமூக அவலத்தை/கொடூரத்தை குழந்தை மன வாயிலாக சொல்லி இருக்கும் நேர்த்தி மிகவும் தேர்ந்த ஒரு கவிஞரின் பார்வையை பதிவு செய்யும் வித்தையை இப்படைப்பில் காணலாம்.
//
அந்த
யாரும் மற்ற
நதிக்கரையில்
சின்ன சின்ன
நண்டுகள்,
சுருண்டு படுத்துகிடக்கும்
நத்தைகள்...
புதைமணல்
பொக்கிஷமாய்
வண்ண கூழாங்கல்
துணைக்கு கொஞ்சம்
சங்கு...
இரு இதழ்
மடித்தது போல
அந்த சோழிகள்...
வலதுபுற
தென்னை.
சிலு சிலு
காற்று...
துவைத்த ஆடை
ஈரம் உலர
கொடிமரத் தொங்கல்
வெகு தூரத்தில்
நீயும் நானும்
தோள் சாய்ந்தது
போல உள்ள
அந்த புகைபடத்தை
பார்த்து கேட்க ஆரம்பித்துவிடுவான்...
மகன்-
அம்மா, இதற்கு
பெயர்தான் ஆற்றங்கரையா,??
அவனுக்கு எப்படி
புரியவைக்க
மணல் கொள்ளை
கொண்ட அந்த
பாதள பள்ளம் தான்
அந்த ஆற்றங்கரையென்று...
//
தனக்குள் பேசும் ஒரு யுக்தி கவிஞர்களுக்கு உரிய பாணி அதிலும் தத்துவார்த்தம் மிகுந்தும் அதில் பொருள் பொதிந்து சொல்வது கவிதையில் தனி மரபாக போற்றப்பட்டு இன்றளவும் இருக்கிறது அப்படிப்பட்ட பாணியில் இரு அதியற்புத கவிதையை பார்க்கலாம்.
//
இந்த சுவர் தடுப்புச்சுவரல்ல
எனக்கான
உலகத்தின்
மதில் சுவர்
நான்
எங்கு சென்றாலும்
இச்சுவரை சுமந்து
செல்ல முற்படுகிறேன்
இச்சுவரை நான்காய்
பிரித்து அவசர
கூடாரமிட்டு அதின்
நுழைவுவாயிலில்
பைத்தியங்கள் ஜாக்கிரதையென
ஒர் அறிமுக பலகையை
விளம்பரம் செய்கிறேன்...
என்னைப்பார்ந்து
பயந்து ஒடிய
அத்தனை அறிவாளிகளுமே
எதிர்கால பைத்தியங்கள்தான்
ஏனேனில் நானும் ஒருகாலத்தில்
அறிவாளி பட்டம்பெற்ற
நபரின் கடைசி மனிதன்
என்னை இப்போது
ஆராய்ச்சி செய்து
எப்படி பைத்தியமானாயென
கட்டுரை எழுதும்
வருங்கால எழுத்தாளனின்
பேனா முனையில்
கேள்விக்குறியாய் அமர்ந்திருக்கிறேன்...
வினாவ தொடங்கின
அவனுக்கு பதிலளிக்க
விருப்பமில்லையெனினும்
அவன் வைத்திருந்த
பேனாவிற்கு பதிலளிக்க
எனக்கு பேராசை
அப்பேனாவை வாங்கி
எழுத முற்பட்ட போது
அந்த எழுத்தாளர் பயந்து
சற்று பின்நோக்கி
ஒருசாக்பிஸ் துண்டை
எனதறையில்
தூக்கிப் போட்டார்...
அந்த சாக்பிஸ் துண்டை
கையில் எடுத்து
என் சுதந்திர எல்லைக்கோடான
மதில் சுவரில் கிறுக்கி வைத்தேன்
எவராலும்
புரிந்துக் கொள்ள இயலா
கவிதையை
ஒருவேளை
அதை மொழிப்பெயர்ப்பு
செய்ய எந்த எழுத்தாளர்
முன்வருகிறாறோ
அவரும் என்னைப்போலவே
ஓர் சுவரை சுமந்து நிற்பார்
அதன் நுழைவுவாயிலில்
கட்டாயம்
பைத்தியங்கள் ஜாக்கிரதை யென
விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்...
//
//
இப்பொழுது நீங்கள்
என் பூத உடலைப்பார்த்து
எனக்காக அழுவதைப்போல்
அழுதவள்தான் நான் கூட
முன்பொரு காலத்தில்!
நேற்றுவரை என் முதுகுக்கு பின்னால்
கூர் கத்தியில் கிழித்து கொண்டிருந்த பேரன்பு
பூங்கொத்தோடு முதல் ஆளாய்
முதல் வரிசையில்
என் முன்னாங்கால் இடது பக்கத்தில்
தலை கவிழ்ந்து அழுது கொண்டிருக்கிறது
இனி யார் முதுகில்
குத்தப்போகிறோமென்று...
நீ இறந்ததும் இறந்துவிடுவேன்
என்று சத்தியம் உரைத்த நண்பன்
பாண்டியன் கடையில் இறால் பிரியாணி
ஆர்டர் செய்து கொண்டிருக்கிறான்
எனக்கான Rip களை பார்த்து
அவசர அவசரமாய் ஒடி வரும்
உண்மை காதலனுக்காக தான்
என் மெட்டி விரல் காத்து கொண்டிருந்தது
என் பேரன்பு கணத்தை
கனமாக பேச தொடங்கும் போது
யாருக்கும் தெரியாமல்
ஒருரோஜா மாலையோடு
அவன் கண்ணீர் கசியும் ஒற்றைதுளியில்
நான் புனிதமாவேன்...
இப்போது என்னை தூக்குங்கள்
நான் ஈகோ அற்று
மிக லேசாக படுத்திருக்கிறேன்!
//
அழகியலை அதன் அழகு மாறாமல் சொல்லும் லாவகம் இக்கவிதையின் வாயிலாக காற்றில் வாசம் வீசி செல்லும் ஒரு குளிர் தென்றல் போல சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறார்...
//
அடிக்கடி
கனவில் பாதி தூரம் பயணிப்பதாய்ச் சொல்லும்
வண்ணத்துப்பூச்சிக்கு
ஓர் இறகில்லை...
ஒற்றை இறக்கையோடு
மற்றொன்றை
சரிவர தேட முடியவில்லையென்ற குற்றச்சாட்டு
கடிதம்மூலம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது கனவில்...
இறக்கையை தேடி அலையும்
வண்ணத்துப்பூச்சியின் காவலாளிப் போலவே திரிகிறேன்...
மகளின் நோட்டு புத்தகத்தில்
மறைந்து வைத்து
"சாமி எப்படியாச்சுஇதை காசாக்கிடுனு
வானத்தைப் பார்த்து வேண்டி நிற்கும்"
அவளை
எதுவும்கேட்காமல்
திறந்து பார்த்தேன்
ஒற்றைசிறகு எப்படியோ காசாக மாறுமென்ற
நம்பிக்கை தெரிந்தது...
இறக்கையைதிருடி
வண்ணத்துப்பூச்சிக்கும்
மகளின் நம்பிக்கைக்கு நூறுரூபாயும்
கொடுத்தும்
பறக்கவிட்டேன்
இரவுகளின் கனவுபொழுதை
//
பெண்ணியத்தையும் அதன் வலிமிகுந்த வாழ்வியலையும் வெளியே சொல்லமுடியாத சில சூழல்களையும் இவ்வளவு எளிமையாக வலிமையாக சொல்ல முடியும் என்று நிரூபிக்கும் ஒரு கவிதை இது...
//
திடீரென எனதுபறவை
வயதிற்கு வந்துவிட்டது
தண்ணீர் ஊற்ற எந்த பறவையை
அத்தை பறவையாய் அழைக்கலாமென்று
சிந்தனை செய்கிறேன்
சிட்டுக்குருவி...
சிறிய பறவை
தேவையில்லையென்று மனம் சொல்கிறது
புறா
அழகு ஆபாத்தானது வேண்டாமென்கிறது
கிளி,அல்லது மயில்
அவர்களை அழைக்க தகுதியற்றவர்களாகிறேன்
கழுகு அல்லது பருந்து
அய்யையோ வேண்டவே வேண்டாம்
பார்வையில் கொத்தி திண்ணும் வகையை சார்ந்தவைகள் அவை
இப்போது என்ன செய்வதென்ற
கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான்
வயதிற்கு வந்ததை மறைத்துவிடுவோம்
உதிரக்கசிவு இறக்கையில் படாமல் பார்த்துக்
கொள்ளட்டும் செல்லப் பறவை
//
படைப்பாளியின் சில கவிமழை துளிகளை உங்கள் பார்வையில் நனைய விடுகிறோம்...
//
வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?
//
//
என்னை பு(ர)சித்துக்கொள்
அதுவே உனக்கு நான் வழங்கும் பாவமன்னிப்புதான்.
//
//
அலைகளின் பெருத்த சத்தம் நான்
மொழிபெயர்ப்பு செய்ய முடியாத
வானிலை எச்சரிக்கை நீ!
//
//
இலையுதிர்கால மரங்களைப்போல
ஆடை உதிர்ப்போம் வா
காதல் துளிர்க்கட்டும்
பட்டாம்பூச்சி கனத்துகிடக்கிறது.!
//
//
ஒரே பறவையின்
இறக்கைகள் நாம்
நீ வலதாகவும்
நான் இடதாகவும்
பறக்கிறோம்
//
//
மூங்கிலாய்
அசைகிறேன் நான்!
புல்லாங்குழலாய்
வாசிக்கிறாய் நீ!
//
//
எந்த இசைக்கருவியின்
நரம்பு நீ?
மீட்டவே தெரியவில்லை எனக்கு..?
//
//
மெழுவர்த்தியின் சாயலை போர்த்திக்கொள்கிறேன்
இப்போது
உனக்காக உருகவா?
இல்லை எனக்காக எரியவா?
//
இவரது பல படைப்புகளை சாதாரணமாக கடந்து விட முடியாது எளிமையாக இருந்தாலும் அதற்குள் பல பரிமாணங்களை உள்ளடக்கி எழுதுவதில் மிகவும் கைதேர்ந்தவர். இப்படிப்பட்ட பலகவிதைகள் இருப்பினும் எல்லாவற்றையும் இங்கே எடுத்து எழுத்தமுடியாத காரணத்தால் இன்னும் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறோம்...
ஒர் கனவை
சாதாரணமாக கடந்து விடமுடியாது
--------------------------------------------------------
மார்கழி குளிர்போர்த்திய சாலையில்
வெறுமனே படுத்திருக்கும் யாரோ ஒருவரின் குளிருக்கு தார்பாய் கிடைத்தது போல
அத்தனை கதகதப்பு அக்கனவுக்கு
கோடை வெயிலில்
மயங்கி கிடக்கும் யாரோ ஒருவரின்
தொண்டைக்கு பன்னீர் சோடா இறங்குவது போன்று அத்தனை சுகம் அக் கனவுக்கு
நீண்ட நாள் ஆறா காயத்தில்
விரல் தொடமல் மயிற்பீலீயில்
மருந்திடும் சுகம் அக் கனவுக்கு
பள்ளி முடிந்ததும் ஒடி வந்து
தாயை தழுவும் குழந்தையின் சுகம் அக் கனவுக்கு
ஓர் மதியத்தின் நடுவெய்யிலில்
என் பின்னே நன்றியோடு ஓடிவரும்
குட்டி நாயின்
நுனி நாக்கு எச்சிலில்
நனைந்த சுகம் அக் கனவுக்கு
மிகக்கடுமையாக
பேசிக்கொணடிருக்கும் வேளையில்
முந்தானை இழுத்து சிரிக்கும்
குழந்தையின் முகசுகம் அக்கனவுக்கு
யாருமே இல்லாத பெருந்துயரில்
தோள்சாய்ந்து அழ கிடைத்த நட்பின் சுகம்
அக்கனவுக்கு
அம்மாவின் விரல்
கேசம் கோதும் சுகம்
அப்பாவின் ஆசை குட்டின் சுகம்....
அக் கனவு...
அக் கனவு...
அக் கனவு...
கடைசியாய்...,
வாழ்வை மிக நிம்மதியாய் வாழ்ந்து முடித்த
ஒற்றை நிமிடத்தின்
"ம்"சுகத்தின் பேரன்பு அக்கனவு.
அதனால்தான் சொல்கிறேன்
ஒரு கனவை கடப்பது அவ்வளவு எளிதல்ல.
//
~~~~~~~~~~~~~~~~~~~~~~
படைப்பாளி ஸ்டெல்லா தமிழரசி அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.