logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 321 - 340 of 794

Year
Award
   

மாதாந்திர பரிசு

  • விஜயராணி மீனாக்‌ஷி

0   883   0  
  • January 2022

மாதாந்திர பரிசு

  • நந்தினி மோகனமுருகன்

0   670   0  
  • January 2022

கவிச்சுடர் விருது

  • தி.கலையரசி

0   1431   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • ரிஷி பாரதி

0   694   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • செ.புனிதஜோதி

0   710   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • சேனை தமிழன்

0   988   1  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • ஜோதி சரண்

0   821   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • வீரமணி

0   712   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • பாவலர் சீனி பழனி

0   1063   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • மனோஹரி மதன்

0   641   0  
  • December 2021

மாதாந்திர பரிசு

  • ஹேமலதா

0   669   0  
  • December 2021

கவிச்சுடர் விருது

  • சிந்தா மதார்

0   1422   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • ராஜ் சௌந்தர்

0   1228   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • தஞ்சை திராவிடமணி

0   1387   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • பால்ராஜ் மாரியப்பன்

0   704   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • கவி. கோ. பிரியதர்ஷினி

0   916   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • திவ்யா ஈசன்

0   950   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • தமிழ் தம்பி

0   1226   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • அன்பு அன்பு

0   1147   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

  • இயற்கைக்காதலி ரஞ்சினி

0   800   0  
  • November 2021

மாதாந்திர பரிசு

விஜயராணி மீனாக்‌ஷி

View

மாதாந்திர பரிசு

நந்தினி மோகனமுருகன்

View

கவிச்சுடர் விருது

தி.கலையரசி

இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறார் கவிஞர் தி.கலையரசி அவர்கள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்த கவிஞர்  பல் மருத்துவம் பயின்று சென்னையில் பணி புரிகிறவர்.

அவரது கவி ஆர்வம் பற்றி அவரே சொல்லக் கேட்போம்,  " என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் ஆரோக்கியமான அற்புத போதை. நான் படித்த பள்ளிக்கூட வகுப்புத் தோழர்களுடன்  பகிரி குழுமத்தில் இணைய நேர்ந்தது.அதில் என்னுடன் படித்த கவிஞர்.பிரபு சங்கர் அவர்களின் கவிதைகளை அன்றாடம் படிப்பது என் வழக்கமாக இருந்தது.சிறுவயதில் இருந்தே தமிழ் மீதிருந்த என் வேட்கையில் சில கிறுக்கல்களை எழுதி அவருக்கு அனுப்பி வைப்பேன். நண்பர் பிரபு சங்கர் என்னைத் தொடர்ந்து எழுதப் பழகச் சொல்லி ஊக்கப்படுத்தி ,படைப்பு எனும் இந்த உயரிய இலக்கிய தளத்தை அறிமுகப்படுத்தினார்.என் இலக்கிய அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்ள தக்க மேடையை அமைத்துக் கொடுத்தது படைப்புக் குழுமம். அதுமட்டுமின்றி பல இலக்கிய ஆளுமைகளின் அறிமுகமும் இந்த தளத்தின் மூலம் எனக்கு கிடைத்ததை ஒரு வரமாக நான் நினைக்கிறேன்.
சென்ற வருடம் மாதாந்திர 'சிறந்த படைப்பாளி' என்ற உயரிய அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்டதை பெரும் ஊக்கம் தரும் விஷயமாகக் கருத்தில் கொண்டு தொடர்ந்து எழுதியும் வருகிறேன். என் கவிதைகள் ஆனந்த விகடன், இனிய உதயம், கணையாழி என இன்னும் பல்வேறு பத்திரிகைகளில் வெளி வருவதை மகிழ்வோடு இத்தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் இருமுறை  ' மகிழ்ச்சி எஃப். எம் இல் ' கவிதைகள் சொல்லவா  என்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் என் கவிதைகள் சில இடம் பெற்றன.
சென்ற வருடம் என் முதல் கவிதைத் தொகுப்பான " நான் உன்னுடைய துறவி " என்ற நூலை படைப்பு குழுமம் மிக அருமையான விதத்தில் வெளியீடு செய்து சிறப்பித்தது. தற்போது " கவிச்சுடர் " என்ற சிறந்த விருதையும் படைப்பு குழுமம் அளித்துச் சிறப்பிப்பதை, மென்மேலும் இலக்கியச் சிகரம் தொடுவதற்கு அமைத்துத் தரும் வெற்றிப் படியாக எண்ணுகிறேன்.
என் எழுத்துகளை கவிதைகளாக அங்கீகரித்து விருதளித்து என் இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் படைப்பு குழுமத்தலைவரும் கவிஞருமான திரு.ஜின்னா அஸ்மி அவர்களுக்கும் குழுமத்தாருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இனிய நல் வாழ்த்துகள் கவிச்சுடர் தி.கலையரசி அவர்களே! உங்களின் கவிதைப் பயணம் சிகரம் தொடட்டும்.

இனி கவிஞரின் கவிதைகளைக் காண்போம்:

தீட்டுப் பார்த்தல் என்பது இன்னமும் தொடரும் அழுக்காகவே இருக்கிறது. அதுவும் சாமி சிலையை கழுவிய வேலைக்காரி தாழ்த்தப்பட்டவள்  என்பதால் அதையே தீட்டுக் கழித்து பூசைக்கு வைக்கிறாள் எஜமானி! கடவுள் யாருக்கு பொதுவானவர்? என்ற கேள்வியை விழுங்கி நிற்கிறது இந்தக் கவிதை!

கறுத்துப் போன சாமியின்
பித்தளைச் சிலையை
பூஜைக்காக கை வலிக்க
விளக்கித் தந்துவிட்டுப் போகிறாள்
வீட்டு வேலைக்காரி.
 மீண்டும் ஒருமுறை அதை
நீரில் அலசிவிட்டு தீட்டினைக்
கழிக்கிறாள் எஜமானியம்மாள்.
நகநகவென சிரித்திருந்த
கடவுளின் முகம்
இருண்டுபோயிருக்கிறது
இப்போது.
@@@
 
 மழையில் நனைந்து , சேற்றில் குளித்துவிட்டு வரும் குழந்தைகள் வீட்டையும் அழுக்காக்கினால் நிச்சயம் கோபம்தான் வரும்.. இந்த அன்னையோ அந்தக் குழந்தையின் பாதச்சுவடு அழுக்குகளை வானவில்லாக காண்கிறாள்! இந்த கவிதையும் அதை இரசிக்கிறது?

மழையில்
நனைந்துவிட்டு 
ஈரத்தோடு பதியும்
குழந்தையின்
பாதச்சுவடுகளில்
திட்டு திட்டாய்
வானவில்.
@@@

இந்த கவிதை சற்று வில்லங்கமாகத்தான் யோசிக்கிறது! அதே சமயம் அதில் நியாயம் இல்லாமலில்லை! எங்கள் கிராம குலச்சாமிகள் கூறையில்லாமல், காற்று, மழை, வெயில் இவற்றில் எல்லாம் நனைந்து கொண்டு, வெட்டரிவாள், வேல் கம்பு என்று இவைகளோடு காட்சி அளித்தாலும்.. அவைகளுக்கு வன்முறை தூண்டத் தெரிவதில்லை.. ஆனால் அதே சமயம் உயர்ந்த கோபுரத்திற்குள்.. தங்க ஆபரணங்களோடு, சாந்த புன்னகை வீசும் உயர் குலத்தோரின் தெய்வங்கள் கலவரத்திற்கு அடிகோள்கிறதே ஏன்? சிறந்த கவிதை இதோ

நாக்கை நீட்டி
விழிகள் பிதுங்கி
மீசை முறுக்கி
வீச்சரிவாள் ஏந்தி
கோவிலற்று கூரையற்று
ஊர் எல்லையில் நின்று
வன்முறை நடத்தத் தெரியாத
எங்கள் குலசாமிகளுக்கும்

 தங்கக்கூரை வேய்ந்த
கோபுரக் கோவிலுக்குள்
ஆடை ஆபரணத்தோடு
சாந்தப் புன்னகை தரித்து
கலவரத்திற்கு அடிக்கல் போடும்
உங்கள்
பணக்கார கடவுள்களுக்கும்
உள்ள முரண்களை
என்று உணரப்போகிறீர்கள்
பக்த கோடிகளே.
@@@

பகடியென்பதும் கவிதைகளின் ஓர் அழகியல் மொழி. குண்டும் குழியுமான சாலைகளில், அதுவும் வேலைக்குப் போகும் பெண் படும் துயரங்கள் சொல்லமுடியாதது... இந்த மக்களுக்காக இல்லாத ஜனநாயகத்தை கேள்விக்கேட்கிறது இந்தக் கவிதை... வள்ளுவன் வழியில் இடுக்கன் வருங்கால் நகுக!

 ஒரே ஓர் இரவு சிறுமழைக்குத்
தோன்றிடும்
அந்த
அதிசய சாலை குளங்களைத் தாண்டிட
தூக்கிச் செருகிய சேலையோடு
நீளத்தாண்டுதலையும்
உயரத்தாண்டுதலையும் பயின்று
எளிதாகக் கடந்து விடுகிறேன்
குண்டும் குழியுமாய் இருக்கும்
ஜனநாயகத்தை.
@@@

இதுவும் ஒரு பெண்ணின் இடத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைதான். ஒரு பெண்ணின் விருப்பங்களை இங்கு நிர்ணயிக்கிறவன் ஆணாக மட்டுமே இருக்கிறான். அவள் புரிதல்களைத் தவறாகப் புரிந்து கொண்டு இங்கு வினையாற்றுதல்தான் வழமையாக நடைபெற்று வருகின்றன! இதோ அந்த வலி....

 நான் கருப்பு
பிடிக்குமென்கிறேன்
வெள்ளை பிடிக்காதென
நீங்களே முடிவெடுக்கிறீர்கள்.

 எனக்கு மழையின்மீது
காதல் என்கிறபோது
வெயிலை வெறுப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள்.

 நான் இரைச்சலை தவிர்க்க
கதவடைக்கிறேன்
பறவைகளின் கிறிச்சிடுதலை
ஒதுக்குவதாக கதை காட்டுகிறீர்கள்.

 என் விருப்பினை
வெறுப்பை வைத்து எடை போடுகிறீர்கள்
வெறுப்பினை கவனித்து
விருப்பத்தை யூகிக்கிறீர்கள்.

 கிளைகளை மட்டும் நோட்டமிட்டு
வேர்களின் திசைகளை
தவறாக அனுமானித்து
என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள் ?
@@@

பெண் கவிஞர்கள் என்றால் காதல் மொழிகளுக்குள் மட்டுமே உங்களை நீங்கள் சுருக்கிக் கொள்ளுங்கள் என்பதும் ஒருவித பெண் விடுதலைக்கு எதிரான கட்டமைப்புதான். அதனை உடைக்கிறார் கவிஞர் தி.கலையரசி.  இவரது கவிதைகள் மிகமிக முக்கியமானவைகள் .. மற்ற கவிதைகளையும் வாசித்துப் பாருங்கள்...

என் சிறுவயதில்
நானும் என் அம்மாவும்
பேருந்தில் பயணித்தபோது
அருகே ஓர் ஆண் அமர நேர்ந்தால்
என்னை
நடுவில் அமர வைத்திருந்தாள் அம்மா.

இப்போதெல்லாம்
அப்படியொரு சூழலில் என் மகளை
தள்ளி உட்காரவைத்துவிட்டு
ஆணின் அருகே
நான் அமர்ந்து கொள்கிறேன்.
@@@

 சுத்தமான குடிநீர் பற்றி
படிக்கிறாள் மகள்
ப்ளீச்சிங் கலந்த குழாய் நீரைக்
குடத்தில் பிடிக்கிறாள் அம்மா.

இயற்கை உரத்தின் பயனை
மனனம் செய்கிறாள்
காய்ந்த சருகுகளைக் குப்பையில்
கொட்டச் சொல்கிறார் அப்பா.

நெகிழி பயன்பாட்டை
குறை எனக் கற்கிறாள்
கடைக்குப் போக ப்ளாஸ்டிக்
பையை தருகிறாள் அக்கா.

பூமி வெப்பமயமாதலை
அறிகிறாள்
ஒவ்வொரு அறையிலும்
தனித்தனியாக ஓடுகிறது
ஏ.சி.

ஆரோக்கிய உணவைப் பயில்கிறாள்
ஆன்லைன் மூலம் வீடு
வந்து சேர்கிறது பீட்சா.

 வருடத்தின் முடிவில்
ஏட்டுச் சுரைக்காய் எடைக்குப்
போகிறது
அதில் வந்த சில்லறைகூட
மருந்துக் கடைக்குப் போகிறது.
@@@

மகளின் வேற்றுசாதி காதலனை
விரட்டி விட்டு
சாதி முக்கியமென முழங்கியதும்...

வீட்டு வேலைக்காரியின் கைகள்
அரிசி பருப்பு டப்பாவை 
தொடக்கூடாதென்று
மனைவிக்கு கட்டளையிட்டதும்...

நெருங்கிய நண்பர்களை
தன் சாதியிலேயே
தேர்ந்தெடுத்துக் கொண்டதுமாய் இருந்த...
தாத்தாவின் சாதி ஊறிய இரத்தம்

முற்றிலுமாய்
சுத்திகரிக்கப் பட்டிருந்தது
யாரென்றே தெரியாத ஒருவரின்
சீறுநீரகத்தைத்
தானமாகப் பெற்றப்பொழுது.
@@@

அடுக்ககத்தின் பூங்காவில்
முரட்டுத்தனமாய்
பந்தெறிந்து விளையாடும்
சிறார்களுக்குப் பயந்து
பால்கனித் தொட்டியில்
நடப்பட்டிருக்கிறது
சின்னஞ்சிறு நந்தியாவட்டை பூச்செடி.

ஒளிக்கற்றைகளை
சன்னல் தாண்டி
எட்டிப் பிடிக்கும் கிளையின் பார்வை
இப்போதெல்லாம்
மைதானத்தில் உருளும்
விளையாட்டுப் பந்தின்மீதே படர்கிறது.

எத்தனை இடர்களையும்
தாக்குப் பிடிக்க வளர்ந்து விட்டிருக்கும்
வேரின் முகப்பாவனையை
எப்போது கவனிக்கப்போகின்றன
இந்த
போன்சாய் குடித்தனங்கள் ?
@@@

 அந்த கோவில் சுவரில்
பரீட்சை எண்ணை எழுதி வைத்தவரை எல்லாம்
சாமி பாஸாக்கி விடுவாரென
ஒரு நம்பிக்கை.

தோல்வியடைந்தவரின் எண்கள்
பிறகு என்னவானது
என்று எனக்கு தெரியாது.

மூலவருக்கு அர்ச்சனையின்போது
கிரீடத்தில் இருந்து விழுந்த பூ
யாரின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தலோ!
தரை விழாத மலர்களைப் பற்றி
எதுவும் கேட்காதீர்கள்.

நோயாளிக்காக வேண்டிய போது
ஓர் அழுகல் தேங்காய் பதறச்செய்தது.
உடைத்த தேங்காயில்
பூவினைப் பார்த்த பரவசம் நிலையானதா?
யார் கண்டார்கள்?

வெளியூர் கிளம்பும் முன்
எதிரே வந்த விதவை அச்சமூட்டுகிறாள்.
ஒரு வேளை
நாமே கூட அவளுக்குத் தீய சகுனமாக
இருக்கலாம்.

 நம் பிரார்த்தனைகளும்
அச்சங்களும்
எதையெதையோ சம்பந்தப்படுத்திக்
கொள்கின்றன.

இப்படியே
அக்கினிப்பரீட்சையை
வைத்துக் கொண்டே போனால்
முடிவில்
நாத்திக மடத்தில் தஞ்சமடைய
வேண்டியதுதான் கடவுள்.
@@@

திருமணச்சீராகப் போட்ட
நகைகளை வைக்க
ப்ரத்யேக வங்கி லாக்கர்

பட்டுப்புடவைகளையும்
கோட் சூட்டுகளையும் பத்திரப்படுத்த
உயர்தர இரும்பு பீரோ

சமையலறை பாத்திரம் முதல்
காலணி வரை
எதை எங்கு  ஒழுங்காக வைக்க வேண்டுமென
கணவன் வீட்டில்
தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது

சொன்னபடியே அனைத்தையும்
திரும்பத் திரும்ப
ஒழுங்கு படுத்தி விட்டு ஓய்ந்து போகிறேன்

நாங்கள் எங்கு போய்த் தொலைய
வேண்டுமென
வெறுப்போடு என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
என் கல்லூரிப்
புத்தகங்களும் படிப்புச் சான்றிதழ்களும்.
@@@

நீங்கள் மருந்தாக இருக்க
விரும்புகிறீர்கள்...
எங்களை நோய்களாக மாற்றிக் கொள்கிறோம்.

நீங்கள் விடையாக வேண்டும்
என்றீர்கள்...
எங்களை விடுகதையாக்கி கொள்கிறோம்.

உங்களை வெளிச்சம் என்று
சொல்லிக்கொள்கிறீர்கள்...
நாங்கள் இருளில் அமர்ந்தபடி காத்திருக்கிறோம்.

புழுக்கத்தை வெறுக்கிறீர்கள்...
எங்கள் வியர்வைகளைச் சிந்தி
குளிர வைக்கிறோம்.

அறுந்த வீணையை வாசிக்கிறீர்கள்...
அபஸ்வரத்தில் அழுத கீதத்தை
ரசிக்கிறோம்.

நீங்கள் எப்போதும் தெளிவாகவே
இருக்கிறீர்கள்...
நாங்கள் தான்
எங்களை குழப்பிக்கொண்டே
இருக்கிறோம்
தெளிய விரும்பாத விசுவாசிகளாய்.
@@@

 நீ காதல் கற்றுக்கொடுக்கிறாய்.
காணிக்கையாக
கவிதைகள் தருகிறேன் நான்.

எனக்கு நாத்திகம் பிடிப்பதில்லை.
நான் காதலை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

உனக்கும் எனக்கும்
எத்தனையோ முரண்கள்.
அனைத்தையும் இணைத்து
கஸல் செய்கிறது காலம்.

வெட்கத்திடம்
காதலை மறைக்கச் சொல்கிறேன்.
ஆனால்
அது காட்டிக் கொடுக்கிறது.

நீ பிரிவினைவாதி.
என்னை என்னிடமிருந்து
பிரித்து விடுகிறாய்.

என் ஓட்டைக்கூரை வழியே
விழும்
வெயில் நிலவு நீ.
உன்னை அள்ளிக் கொள்ள
முடிவதில்லை.

கவிதைகள் எழுதுவதென்பது
உன்னை தரிசிப்பதற்கான
என் புனிதப் பயணம்.

உன் ஞாபகங்களில் நெளியும்
கூட்டுப்புழு நான்.
எப்போது சிறகுகள் தருவாய் எனக்கு ?
@@@

பசும்பாலின்
கருப்பட்டி காபியோடு விடிந்த
காலைப் பொழுதில்
விவாதத்தின் பொருளாக
பறந்து கொண்டிருந்த குருவிகளின் வகைகள்
அன்றைய தலைப்பாகிறது.

வரப்புகள் மீது தட்டுத்தடுமாறி நடந்தவர்கள்
ஆலமர விழுதுகளைப் பிடித்துத் தொங்குவதை
'த்ரில்லிங் மொமண்ட்ஸ்' என ஸ்டேட்டஸ்
வைத்துக் கொள்கிறார்கள்.

பம்பு செட்டில் விழும் சிற்றருவிக்கு
மீன்களைப் போல் துள்ளி
சுயமி எடுத்துக் கொள்கிறார்கள் சிறுவர்கள்.

பாசி படியாத
புதிய கல் மண்டபத்தருகே
சிம்மக்குளத்தில் நீச்சலிடித்தபடி
வாட்டர் கேம்ஸ் விளையாடுகிறார்கள்
தம்பதியர்கள்.

ஒரு குயவனிடம்
மண்குவளை செய்யக் கற்கிறார்கள்
கண்டாங்கிச் சேலையில் இருந்த
நவயுக யுவதிகள்.

இரவில்
கயிற்றுக்கட்டில் மீதமர்ந்து
நிலாச்சோற்றை ருசித்தபோது
எல்லா நட்சத்திரங்களுக்கும்
சிறகு முளைத்திருந்தன.

மறுநாளில்
ஆயிரங்கள் கொடுத்து
செக் அவுட் செய்யும்
முந்தைய நிலக்கிழாரின் வாரிசுகளை
சிரித்துக்கொண்டே
வழியனுப்பி வைக்கிறது
ஒரு மருத நிலத்து  ஹாலிடே ரிசார்ட்.
@@@

எனக்குத் தெரிந்த
ஒரு பெண்ணைப் பற்றி
நீண்ட நாட்கள் கழித்து
சுற்றத்தாரிடம் சொல்லிப்
பெருமை பட்டுக்கொள்கிறேன்.

அவளின் அடையாளங்களாக
பெயரைச் சொல்கிறேன்
பிறந்த இடத்தைக் கூறுகிறேன்
தம்மைச் சந்தித்த பழைய
நினைவுகளை ஞாபகப்படுத்துகிறேன்

படிப்பிலும் தொழிலிலும்
சாதித்த வரலாற்றை நினைவூட்டுகிறேன்

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு
முடிவாக
' அந்த விவாகரத்தான  பெண்ணா? '
என்ற கேள்வியில்
அவளின் அடையாளத்தை
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறார்கள்
எம் மக்கள்.

View

மாதாந்திர பரிசு

செ.புனிதஜோதி

View

மாதாந்திர பரிசு

சேனை தமிழன்

View

மாதாந்திர பரிசு

பாவலர் சீனி பழனி

View

மாதாந்திர பரிசு

மனோஹரி மதன்

View

கவிச்சுடர் விருது

சிந்தா மதார்

============இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை திருநெல்வேலி, ஏர்வாடி என்ற ஊரைச் சேர்ந்த கவிஞர் சிந்தா மதார் அவர்கள் பெறுகிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.

நல்லத் தமிழாசிரியரை வரமாக பெற்றதால் எழுதும் ஆற்றல் தனக்குள் உதித்ததாக சொல்லும் கவிஞர் தில்லியில் 23 வருடங்களாக பணியாற்றிவருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் அவர்கள், நமது படைப்பிலும் தொடர்ந்து பலகவிதைகள் எழுதியுள்ளார்.

பாதங்களால் நிறையும் வீடு கவிதைப் போட்டியில் பரிசுக்கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளில் கவிஞரின் கவிதையும் ஒன்று.

காதல் கவிதைகளில் துவங்கிய இவரது எழுத்துப்பயணம் மெய்யியல் பற்றிய படைப்புகளையும் நோக்கி நகர்ந்து வருகிறது. இயல்பு நிலை நோக்கி பயணப்படும் இவரது கவிதைகள், இன்றைய சூழல் மாற்றங்களையும் சுமந்தே பயணப்படுவதும் மிகச் சிறப்பு!

இனி கவிஞரின் ஆன்மவரிகளில் நுழைந்து கருத்தியலை சுவாசிப்போம்..
@@@
நிலையாமையைப் பற்றி கவிஞர் அழகான எடுத்துக்காட்டுகளை நம்மிடம் அடுக்கி வைக்கிறார். இரவு துயிலும் போதே அந்த நாளின் தேதி கிழிகிறது,  பூக்கள் உதிர்ந்தவுடன் காம்புக்கா அவை சொந்தம்? அதன் நிறம் வாசம் இவையெல்லாம் எங்கே போயின? ஒவ்வொன்றும் அதன் இறுதி நாளை எழுதிக் கொண்டல்லவா இருக்கின்றன... இதோ கவிஞரின் ஆழமான வரிகள்!....

தினத்தின் மேல்
இருள் ஆடை..
போர்த்திக் கிடத்தும் பொழுதோடு
கிழித்தெறியப் படுகிறது
தேதித்தாளொன்று..

காற்றில் பறந்து,
கசங்கி  மட்கும்  தாளின்.
செய்தியே..
மரணத்தின் செய்திதானே?
.....

எந்தப் பூக்களும்..
காம்புகளில்
நிரந்தரமாய்
இடம் பெறுவதில்லை.
எங்கே செல்கின்றன
அதன் வண்ணங்களும்
வாசங்களும்?
.....
எந்தக் காற்றினால்
சுடர் விட்டடெரிந்ததோ..
அதே காற்றில்தான்..
சட்டென துடித்து
அணைந்து விடுகிறது தீபம்.

நீளும் புகையோடு தன்
இறுதித்தேடலை
நிறுத்திக்கொண்டது
சேர்ந்தே கருகிய திரி.

துளி சுடரின்  மரணத்தில்
கறுத்து மறைகிறது
வெளிச்சம்.
பார்வை ஒன்றிற்குள்
பத்திரமாக பதுங்குகின்றன
காட்சிகள்..

....
இருட்டில்
தீபம் எழுதிச் சென்ற
கவிதையை
வாசிக்க கற்றுத்தருகிறது
எதிர்ப்பட்ட மரணமொன்று.
......
ஆம்..!
கட்டவிழ்ந்து விழுகின்றது
யாக்கை.
.....
மட்கி, உரமாகி
விதையொன்றின் உணவாகி
செடியாகி நிற்கின்றது
தானென்று
சொல்லித்திரிந்த
இக்கொழுஞ்சதை.
.......

இன்னும் எனக்குள்
எழுகின்றன
என்னைப்பற்றிய
கேள்விகள்.
எங்கே சென்றிருப்பேன்
நான்…?
@@@

தொழுகை என்பது வெறும் இறைவனை மட்டும் வணங்கி , சொர்கத்தைப் பகரமாக கேட்பது மட்டும்தானா? இல்லை என்கிறார் கவிஞர்! தொழும் போது இடறும் நினைவுச் சீண்டல்களையும் விரட்டியடிக்கும் மனயுக்தி! கர்வத்தை விரிப்பில் வைத்து தாழ்ந்து வணங்கும் உயர்ச்சி!  பாவத்தை விரட்டும் ஆயுதம்! இதோ கவிஞரின் அற்புத வரிகள் தொழுகைக்கு மண்டியிடுகின்றன....

மொய்க்கும் நினைவுகளை
துரத்தியபடியே
தலைக்கும் தரைக்குமிடையில்
இடருற்று நிற்கின்றன
தொழுகைகள்.
......
தொழுகைக்காக
தூய்மையுற்றக் கரங்களின் கறைகளை
கழுவுகின்றன
தொழுகைகள்.
...
தொழுகையில் தான் வெற்றி.
தோற்று உதிரும் இச்சையுடன் தலை சாயும்
நெற்றி.
தொழுகையே
வெற்றி..
....
அத்தனையும்..
கட்டிக் கொண்டிருக்கிறேன்
எந்தக் கனி கொண்டு
ஏமாற்றுவாய் சாத்தானே?
...
உதறி மடிக்கும்
தொழுகை விரிப்புகளில் இருந்து
உருண்டோடுகின்றன
பாவத்தின் விம்மல்கள்..
..
அத்தனை பாவங்களையும்
உதறிவிட்டு செல்கிறேன்..
அள்ளிக் கொள்ளவாவது
ஆலயம் வா சாத்தானே..
...

சுமந்து வந்ததை
விட்டுச் செல்கிறேன்
சுமக்கப்பட்டுப் பின்
விட்டுச் செல்லும்முன்
@@@
ஆறுகள்தான் நாகரீகத்தின் கதையை எழுதின. அதன் கரைகளின் இடைவெளியை மனித நாகரீகம் எழுதித் தீர்த்தபின், கரைகளின் இடைவெளி உடைந்து... காரைகளின் கதைகளை எழுதத் தொடங்கிவிட்டன. ஆற்றின் நீர் புனிதமாகிறது, அதே நீர் குடி நீராகவும் இருக்கிறது, அந்த ஓடு நீரில்தான் கால் நடைகள் குளிக்கின்றன, ஏன் கால் கழுவவும் தேறுகிறது... இதனை எதில் ஒதுக்க முடியும்..கவிஞரின் சிந்தனை கடலில் கலக்கிறது....

ஆறு

இருகரைகளின்
இடைவெளியை
அதிகப்படுத்துகிறது
அடித்தோடும் ஆற்று வெள்ளம்..
....
வறண்டக் கோடைகளில்தான்
கரைகள் இணையும் போலும்.
...
கரைகளை ஒட்டிய
கதைகளின் கறைகளை..
கழுவிய ஆறொன்று
கடலில் தலைமுழுகிக் கொள்கிறது.
....

கரைகளுக்கும் சாதியுண்டு.

ஓருகரையில் ஸ்நானமெனில்
மறுகரையில் ..
எருமைகளுடனே ஒரு கூட்டுக்குளியல்..
...
இடுகாடு மயானம்
சுடுகாடு சமாதி என..
கரைகளும் காத்துக்கொள்கின்றன
சாதிய அடையாளங்களை.
...
குடமுழுக்கு நீருக்காய்..
குடங்கள் மூழ்குகையில்..
சிதைமூட்டிய விறகொன்று
மறுகரையில்
நனைகின்றது..
...
நீர்த்தொலைத்த கரைகள்
மிகவும் நெருங்கிவிடுகின்றன.
ஈரம் இல்லாத
ஆற்றின் வழித்தடத்தில்..
வெட்டிக்கிடத்தப்படும்..
சடலங்களின் ரத்தத்துளிகள்
துளி ஆறென்றே
ஓடி உலர்கின்றது.

இப்போதெல்லாம்.
ஆறுகளுக்கும் சாதி இருக்கின்றன.
@@@
யாசிப்பு என்பது பிச்சை எடுத்தல் என்று இழிவான சொல்லாடல் அல்ல!  தன்னைத் தாழ்த்தி உயர்த்திக் கொள்ளும் மாண்பு! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நாய்க்கு தண்ணீர் வைத்த தாசியும் சுவர்கம் செல்வாள்' என்று சொன்ன வாக்கியத்தையும், 'தாயின் காலடியில்தான் சுவர்கம் இருக்கிறது' என்று சொன்ன நன்மொழியையும் அழகாக இணைத்து இந்த யாசிப்பில் வார்த்தைகளை வளமாக்கிவிடுகிறார்...
யாசிப்புகள்

வேசியின்
முந்தானைகளிலும்..
சுவனத்தின் திறவுகோல்கள்
முடிந்துதான் உள்ளன.

தாகத்தில் தவிக்கும்
நாயொன்றினால் தான்
அவிழ்க்கப் படுகின்றன
அம்முடிச்சுகள்
.......
தண்டனைகளில்..
சிதறும் ரத்தத்துளிகள்
வைரங்களாக மின்னக்கூடும்
என்னை தண்டித்துவிடு..!

குற்ற உணர்வில்..
வழிந்தோடும் கண்ணீர்த்  துளிகள்
வற்றிப் போவதற்குள்.
.....
நாளும் சாத்தானுக்கு
கல்லெறிந்து விடுகிறேன்
இன்று பிறந்த
பாலகனே  நான்.

மூப்புற்ற தாயொருத்தியின்
தனித்த வீட்டில்..
மூத்திரக்காடாகிக் கிடக்கும்
முற்றத்தில்..
கேட்பாரற்று..கிடக்கிறது
சுவர்க்கத்தின்
'கவுசர்'த் தடாகங்கள்..

உணவுப் பொட்டலத்தை
பிரித்து..
நேசத்துடன் நோக்குகிறாள்
யாசிக்கும் சிறுமி..
மன்னு ஸல்வா.

இரண்டு சலாம்களுக்கு
பதில் பெறாது
தொழுதுவிட்டு
பள்ளிவாசலைக்
கடக்கையில்,
ஏளனமாய் சிரிக்கிறது.
பதிலளிக்காது
விட்டு வந்த
பக்கிரின்  சலாமொன்று.
@@@
ஈர நாட்கள் என்பது நினைவு அடுக்குகளில் கலையாதக் கோலங்கள்! வதை என்று உணராமல் தட்டான் வாலில் நூல் கட்டி அதை சிதைத்த நாட்கள் வலியென்றாலும், தவறை உணரும் போது ஆதுவும் ஈர நாள்தான். தொட்டி மீன் இறந்த போது பதைத்த அந்த பிஞ்சு உள்ளம் இன்னமும் மரிக்காமல்... கடல் ஒதுங்கும் அகதிகளின் சடலங்களைக் காணும் போதும் பதறுகிறது! வவுனியாக் காட்டில் செத்துகிடக்கும் ஒரு தாயிடம் பாலுக்காக முலைத் தேடும் குழந்தையைக் காணும் பதைப்பான ஈரம்... கவிஞரின் மனம் வலிகளின் ஈரத்தில் மூழ்குகிறது...
ஈர நாட்கள்

மழைத்துளியின் எடையில்
தலை சாய்த்து
கிளை உலுக்கி
இலைகளுக்கு தலைத்துவட்டி
நனைந்த நாட்கள்.
….
நூல் கட்டிய பொழுதுகளில்
வாலறுந்து பறந்த
தட்டான்களின்
வலிகளில்
வழிந்த விழிகளின்
அந்திப் பொழுதுகள்.
….
தொட்டிக்குள் புலம்பெயர்ந்த
ஆற்றுமீன்கள்
மரித்து மிதக்கையில்
மனம் பதைக்கும்
பிஞ்சு மழலை ,     
அகதிச் சடலமென
கரை ஒதுங்கிய
அக்காலைப் பொழுது..
..
கொத்துக் கொத்தாய்
வவுனியக் காடுகளில்              
விதையாகிக் கிடந்த
உடல்களுக்கிடையில்
தாயொருத்தியின்
மார்பில் பால்தேடும்
சிசுவின் கன்னங்களில்
பிசுபிசுத்த குருதியினால்
உறக்கத்தை தின்றொழித்த
உலரா இரவுகள்.

@@@
கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

பாதங்களால் நிறையும் வீடு

கூட்டாஞ்சோற்றுப் பருக்கைகளுக்காய்
வந்தலையும் சிட்டுக்குருவிகளின்
பாதங்களால் நிறையும்
பள்ளிப் பருவத்தில்
ஒடைமரத்து மூடொன்றில்
எழுப்பிய முதல்வீடு..
…….
மூப்புற்ற காலமொன்றில்
தனித்து விடப்பட்டிருந்த
சுருக்கங்களின் புன்னகையாய்
பள்ளி விடுமுறையில்
வந்திறங்கும் மழலைகளின்
பாதங்களால் நிறையும் வீடு

கம்பிவேலிகளுக்கிடையில்
விண்மீன்களுக்கு வாசல் வைத்த
கூரையிடையே
அகதி என்ற சொல்லை மட்டும்
சுமந்து நிற்கும் உயிர்களின்
விழித் துடைக்க
தாய்மண்ணை சுமந்துவரும்
நினைவுகளின் பாதங்களால்
நிறையும் ஒரு வீடு.
……
அத்தனைப் போராட்டமும்
அலைகழிப்பில் முடிந்தபின்னே
ஒற்றைக் கயிற்றுக்குள்
உடல் தொங்கிய அன்றுதான்
பாதங்களால் நிறைந்தது
பார்வைக்கு வராத உழவனின் வீடொன்று.
@@@
உயிர்த்திசை

உயிர்த்திசை நெடுகிலும்..
ஒப்பாரி ஓசை..

ஏவுகணைத் தாக்குதலில்..
பார்வை இழந்த மகன்.

தடவித் தடவி தாய்க்கரம்
பற்றுகிறான்.

வழக்கத்திலும்
குளிர்ந்திருக்கும் அம்மெய்த்தீண்டலில்
வண்ணங்குழைத்து
அவள் விரல்பிடித்து வரைந்த
ஓவியங்கள்
நினைவில் வந்தன.

குளியலறையில் அடம்பிடிக்கையில்
கரம்பற்றி குளிப்பாட்டி
ஜைத்தூண் வாசங்களுடன்
அணைத்து வந்தவள்தான்..

தேன்தடவிய ரொட்டிகளை
தேடித்தேடி ஊட்டிய விரல்களின்
குளிர்ச்சியை  தீண்டுகிறான்.

நேற்றைய இரவில்..
முடியாமல் நின்ற அல்லாவுதீன்
கதைகள் அப்படியே நின்றுவிட்டன

அம்மாவின் மவுனத்தை
போர்விமான இரைச்சல்கள்
கலைக்கவே முடியவில்லை.

அம்மாவின் ஆடைகளில்
பிசுபிசுத்துக் கொண்டிருந்ததை
உதிரம் என்று
உணரத்துவங்கினான்.

அம்மாவும்
அல்லாஹ்வை போலவே
இருந்தும் இல்லாதிருந்தாள்.

இப்போதுள்ள கவலை
அவளுக்கான
இறுதித் தொழுகைக்கு
எத்திசையில் நிற்பதென்று
உயிர்த்திசை
நோக்கி நின்றான்.

அன்பும் நேசமும்.
புதைக்கப்படாமல்.
அவனைப் பார்த்த விழிகளும்
மூடப்படாமல்
அப்படியே கிடந்தது.
சிரியாவின் வீதிகளில்..
@@@
மீன்

உலர்ந்த ஆற்றின்
வெம்மைகளிலிருந்து
மீன்தொட்டிகளில்
புலம்பெயர்ந்த
கூழாங்கற்கள்
வரம் பெற்றவைகள்

தங்க மீன்களின்
முத்தத்தில்
நனையும் கூழாங்கற்கள்
மீன்முட்டைகளின்
கனவுகளை
கரைத்துக் கொண்டிருந்தன.

சிறு மீன்தொட்டிக்குள்
அழிந்துப் போன
ஆற்றின் நினைவுகளை
சுமக்க பழகி இருந்தது
வீடு.
…..
கண்ணாடித் தொட்டிக்குள்
இருந்து
கல்லெறிகின்றன மீன்கள்.
நொறுங்கி விழுகின்றன
மணல்வீடுகளை பற்றிய
நினைவுகள்.

மீன்பிடித்தாடிய
அப்பத்தாவின் முந்தானை வண்ணத்தை
எந்த மீனின் தோலில்
தேடிக்காண்பது ?

@@@
துறவு

இறகுகளுடன் சேர்த்தே
பறக்கும் ஆசைகளையும்
உதிர்த்து விடுகிறது
ஈசல்.
…..
வேர்களின்
வியர்வைக் கதைகளை
தளிர்களிடம் கிசுகிசுத்து
மறைகிறது
ஒற்றைப் பனித்துளி.
..
காற்றின் காலடிச்சுவடுகளை
பற்றிப் பிடித்து
கரையேறுகிறது
அலை
..
புனித தலமொன்றில்
தலைமுழுகியப் பின்னும்
வழிந்து கொண்டேதான்
இருக்கின்றன
பாவத்துளிகள்.
..
சத்தமிட தவளைகள் இல்லை
பாம்புகளுக்கு
கால் முளைத்து விட்டன.
….
அத்தனை கனவுகளின் வண்ணங்களை
அழித்துத் துடைக்கிறது
வெண்ணிற துணியொன்று.
..
விட்டுவிட மனதின்றி
ஈசலின் இறகுகளை
சுமந்துக் கொண்டலைகின்றது
காற்று.
@@@
மீள்ப் பிறப்பு

அருளெனும் தொப்புள் கொடி
அண்டத்தில்
நீந்துகின்ற குழந்தை.
..
இருள் என்று
கலையும் மென்று
விழிமூடும் நாளுக்காய்
பெருந்தவம்.
..
மண்ணறைக்குள்
புகும் நாளை
பேறுநாள் என்றே 
கூறிக்கொள்ளலாம்.
..
மண்ணறைத் தொட்டிலில்
மறுமைக் கனவுகளுடன்..
நித்திரைகள்.
தாலாட்டும் குரல்
கலிமா தையிபா.
..
அத்தாடகத்து பாலருந்தி
களைப்பகன்று..
மடிதேடி தவழ்கின்றது குழந்தை.

மடிநோக்கும் மழலையை
அந்நெருப்பு
என்ன செய்துவிடும்..?

கலிமா விரல் பிடித்து
மெல்ல நடைபயிலுகின்றன
பிஞ்சுப் பாதங்கள்
பேரொளி நோக்கி.

அண்டம் எனும் கருவறைக்குள்தான்
எத்தனைக் கனவுகள்.?

சுமப்பவளை காண்கின்ற
இன்பக் கனவுகளுடனேயே
நீந்துகின்றன
அத்தனை சிசுக்களும்.
@@@
தன்னை அறிந்த மரம்.

தன்னை அறிந்த மரம்
நோவாவின் படகானது.

தன்னை அறிந்த மரம்
நதியை பிளந்தது

நம்ரூத் எழுப்பிய நெருப்பில்
விறகான மரம் கூட
உன்னை அறிந்திருந்தது.

சிலுவையாகிய மரமொன்று
பாவமன்னிப்பு தேடியது.

இன்னும் சில மரங்கள்
ராதைகளுக்காய்
புல்லாங்குழலாகின.

வளைந்து வில்லாகி
லங்காவில் அம்பெய்தின.

புத்தனுக்கு போதியாகி
அன்பெய்தின

இன்னும் சில மரங்கள்
அகிம்சையாய் ஊன்றின

கல்லறைத்
தோட்டமொன்றில்
ஏதுமறியாமலேயே
பல மரங்கள்…
அடுக்கப்பட்டு கிடக்கின்றன.

இழிவடைந்த
மரங்கள் சில
பெருங்கலவரமொன்றில்..
உருட்டுக் கட்டைகளாக
உதிரம் புசிக்கின்றன

பாவம் அம்மரங்கள்
மரங்களாகவே இருந்திருக்கலாம்.
@@@
நான்

நான் என்ற ஒருமைக்குள்
பன்மையாகவே நான்.
என்னுள் அணிவகுக்கும்
என்னை
ஒருமையில் வைப்பதா?
பன்மையில் வைப்பதா?
பருவங்களின் கற்றைகளை
பற்றிப் பவனிவரும்
எத்தனையோ "நான்"களில்
எந்த "நானை"
எனதாக கொள்வது?

உயிர் ஒன்று அதனால் நீ ஒன்று
என்று எனை தேற்றி
எழுகையில்..
கோடிக்கணக்கான செல்களின்
கூட்டுக் கலவை நீ என
கூறிச் சிரிக்கிறது அறிவியல்.

ஒவ்வொரு செல்லிற்கும் உயிருண்டு
என்றால்..
கோடி உயிர்களின் கூட்டுத்தொகுப்பன்றோ நான்.

ஒற்றை செல்லுக்குள் தனித்தனியாய்
இயங்கும் நியுக்லசும் மைட்ரோக் கான்டிரியாவும் நானோ?
அதில்
மரபுகளை சுமந்து வரும் நியுக்லஸ் நானா?
தனக்கென்று மரபெழுதும்
மைட்டோக் கான்ரியா நானா?
இரண்டும் சேர்ந்தே கூட்டுக் கலவை நானா?

நான் என்ற ஒருமைக்குள்
புதைந்திருக்கும்
பன்மைகள்.
பற்பல பன்மைகளுடன்.
ஒருமையாகி ஒற்றையாகி
உடைந்து விழுவதுதான்
வாழ்க்கை என்பதோ.?

ஒருமைக்குள் உள்ளடங்கும்
பன்மை நானெனில்
பன்மைக்குள் அடங்கி நிற்கும்
ஒருமைதான்
பரம்பொருளோ..?

புழுக்கள் உண்ண
புலம் பெயரும் பன்மைகள்
மீண்டும் ஒரு ஒருமைக்கனவில்
வெந்துத் தனிந்திடுமோ?

தெளிக்கப் பட்டிருக்கும்
அத்தனை வினாக்களின்
ஒற்றை விடைதானோ
பன்மைக்குள் ஒருமையாகிய
பரம்பொருள் என்பது.
@@@
பெருங்கடல்
....................

எந்த நதி என்று
யாருக்கும் தெரியாமல்
வந்து விழுந்தது மழைத்துளி
….
தரையில் மோதி தன்
நீண்ட பயணத்தை முடித்துக்கொண்ட
பெருங்கடல்
மீண்டும் ஆறாக முயல்கிறது.
பிறவிப் பெருங்கடல்..

சுமை இறக்கிய
மேகங்களை
மேய்த்துக் கொண்டிருக்கிறது
காற்று.
..
மீண்டு வருவோமென்றே
விடைபெற்ற மழைத்துளிகளின்
விலாசம் தேடுகிறது
வானம்.
..
கருவறைக்குள் நுழையும்
சிறு துளியொன்றில்
ஏதோ ஒரு வானத்தின்
எதிர்பார்ப்பும் சேர்ந்தே
பயணிக்கின்றது
..

கடைசி மண்துகளால்
முகடாக்கப்பட்டு
தெளிக்கப்பட்ட
கண்ணீர்துளிகளின்
ஈரம் காயுகையில்
மீண்டும் வானம் பார்த்து
நிற்கும்..
புதைக்கப்பட்ட
அதே நீர்த்துளி.
@@@
இரவுமழை

விழித்தவருக்கு  மட்டுமே தெரியும்
இரவுமழை எத்தனை அழகென்று.
…...
காற்றுத் தீண்டிட
சாளரங்கள் இல்லாதிருந்தால்
இரவுமழை
எனக்கானதாகி இருக்காது..
…..
அலைநடுவில் தத்தளிக்கும்
சிறுபடகை போல்
மேகங்களுக்கிடையில்
அரைநிலவு.


மின்னல்களுக்கிடையில்
மேகம் வரைகின்ற
ஓவியங்கள்.
….
தெருவாசல் சோடியம் விளக்கில்
பொன்னென பூமியில் சிதறும்
சிறு சிறு துளிகளை நசுக்க

பாதங்களும் இல்லை.
பார்வைகளும் இல்லை.
****
மழையெனும் நூலில்
தைக்கப்படுகின்றது
பிரபஞ்சம்
****
இரவின் தூக்கத்தை
கலைக்கும்
துளிகளின் இசைகள்..
..
கூரைகளில் துளிகளின்
முத்தச்சத்தத்தில்
நாணித் தலைசாய்க்கும்
மழைக்கொதுங்கிய
சிறுபறவை..
..
நடைபாதையில் உறங்கிய
யாசகன் ஒருவனுக்கு
எப்படி இருக்கும் இப்பெருமழை?
,,,
ஒதுங்க அழைக்கும்
ஒருத்தி
ஒதுங்க இடம் தேடுகிறாள்
இரக்கமற்ற மழைக்கும்
அவள் முந்தானை
தெரிந்திருக்கிறது போலும்.
,,,

செம்புலம் பெயர்ந்தும்
சாம்பல்  நீறென சாறென
ஓடும் மழைநீர்.
.
மேலும் மழையை
அழகாக்கி கொண்டிருந்தது
சட்டென நிகழ்ந்த
மின்வெட்டு.
இப்போது மின்னல் வெட்டியது.
இன்னும் அழகானது
அவசியமுமானது.

சாலையோரத்தில்
ஒதுங்கி நின்றபடி
வீடுபேறுக்காக
காத்திருந்த பொழுதுகளும்
தவத்தில் சேருமா என்ன?

இரவு மழை வினாக்களோடு
இதயத்திலும் தூறலிட துவங்கியது
உன்னினைவுகளும்
இந்நேரந்தான்
வழிந்தோட வேண்டுமா?
..
உள்ளும் வெளியும்
மழையென்றானப்பின்
தொப்பலாக நனைந்தே விடுகிறேன்
விழியால் ஒருபுறம்
மழைத்துளியால் மறுபுறம்..
@@@
காத்திருப்புகள்

தவமிருக்கின்றன
வெற்றிக்கோடுகள்
தனைத் தாண்டும்
வீரனுக்காக

மடுவில் சுரந்த
தேன்துளி
உலர்வதற்கு முன்
வந்தடையுமா
வண்ணத்துப் பூச்சி?…
..
எழுத்துக்குள்
வந்தமராக் கவிதைகளை
பற்றித்தான்
எண்ணிக் கொண்டிருக்கின்றன
காகிதங்கள்.
..
இந்த மழையிலும்
உயிர்க்க வில்லை
ஈசல்,
தேம்பிக் கொண்டிருக்கிறது
மழை

ஒரு நாளுக்கான
பல்லாண்டு காத்திருப்புகள்
அந்த
"ஒற்றை நாளுக்கானது"
மட்டுமல்ல.


முகரப்படாது
புறக்கணிக்கப்பட்ட
மழைக்கு முன்னான
மண்வாசம்
இப்போது..
எட்டிப் பார்ப்பது கூட
இல்லை..
@@@
மனம்

மனதின் மீது
கல்லெறிகிறது
மவுனம்.
சலனத்தோடு
அலைஅலையாய்
பரவும் நினைவுகள்
தன் இருப்பை
உணர்ந்து உயிர்க்கின்றது
மனம்.

மீண்டும்..
உயிர்ப்பை உறுதி செய்ய
கல்லெறிகிறது
மவுனம்.
..

எறியப்பட்ட கல்லொன்றில்
கலைகிறது மரம்

சிதறுகின்றன தேனீக்கள்.
மறுபுறம்
சிறகடிக்கின்றன பறவைகள்.
காயம்பட்ட தேனடைகளில்
இருந்து
ஒழுகும் துளிகளை
எண்ணுவதா?

உடைபட்ட கூட்டி ன்
முட்டை ஓடுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
துளிகளை எண்ணுவதா.?

அமைதி இழந்த
ஒற்றை மரத்தில் தான்
எத்தனை குமுறல்கள்..

ஓரத்தில் விழுந்து
வேடிக்கைப் பார்த்தது
வீசப்பட்ட
அச்சிறுகல்..
மீண்டும் ஒரு விரலுக்காய்
தவமிருக்க துவங்கியது.

வானில் பறக்கும்
ஏக்கம் அதற்கு.
...

இத்தனைக்கும் இடையில்
மரத்தின் அடியில்
சிலையாகிக் கொண்டிருந்தது
இன்னொரு கல்..
ஆசை துறந்த அக்கல்…
@@@
நீர்வழிப்படூஉம்

ஆற்றின்
அலைகளின் சிறுசிறு
வளைவுகளில்
துள்ளிக் குதித்து நீந்தும்
பூக்களின் மீது
பயணித்துக் கொண்டிருக்கும்
எழுத்துக்களை
கவிதை என்று
கரைத்து விடுவதில்லை நான்.

நீந்திக் கொண்டிருக்கும்
பூக்களின் மீது..
காத்துக் கொண்டிருந்த
பாறையின் சிறு கல்லொன்று
தெறித்து விட்ட திவலையை
பத்திரமாக ஏந்திக் கொண்டேதான்
நீந்துகின்றன பூக்கள்..

ஒட்டிக் கொண்டிருந்த
திவலைகள்
உடைந்துவிடக் கூடாதென்ற
அக்கறையோடு
அணைத்துக் கொள்கின்றன
எழுத்துக்கள்.
கவிதை என்று ஒரு ஏட்டுக்குள்
கட்டப்படக்கூடாதென்றே
கடல் நோக்கி பயணிக்கின்றன
எழுத்துக்கள்.

ஏதோ ஒரு மலைமுகட்டில்
வெளிச்சத்திற்கு வெட்கியோ
முகிலென்றின் வருடலில்
மெய்ச்சிலிர்த்தோ
உதிர்ந்து விழுந்த
மலர் தான் அதுவென்று
உறுதியாக ஒப்புவிக்கின்றன
எழுத்துக்கள்.

ஆற்றோரங்களில்
நீ வரும்போதெல்லாம்
அந்த எழுத்துக்களின்
பெருமூச்சை
அது
உச்சரிக்கும் கொண்டே இருக்கும்
மலர்களின்  கதைகளை
கட்டாயம்..நீ
செவிமடுப்பாய் என்றே..
கவிதையாகி விடாமல்
பாதுகாத்து
அனுப்பி வைக்கிறேன்..
கட்டாயம் ஒரு முறை
செவிமடுத்து விடு
அந்த காதல் கதையை.

@@@


View

மாதாந்திர பரிசு

ராஜ் சௌந்தர்

View

மாதாந்திர பரிசு

தஞ்சை திராவிடமணி

View

மாதாந்திர பரிசு

பால்ராஜ் மாரியப்பன்

View

மாதாந்திர பரிசு

கவி. கோ. பிரியதர்ஷினி

View

மாதாந்திர பரிசு

திவ்யா ஈசன்

View

மாதாந்திர பரிசு

தமிழ் தம்பி

View

மாதாந்திர பரிசு

அன்பு அன்பு

View

மாதாந்திர பரிசு

இயற்கைக்காதலி ரஞ்சினி

View

Showing 321 - 340 of 794 ( for page 17 )