logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியை சேர்ந்த கவிஞர் மு.முபாரக் அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப் படுகிறோம்..

முது நிலை தமிழ்+ கூட்டுறவு பட்டயப் படிப்பு படித்த கவிஞர் தற்போது கூட்டுறவு வங்கி செயலாளராக திருச்சி மாவட்டத்தில் பணி புரிகிறார்.

இவரது கவிதைகள் படைப்பின் தகவு கல்வெட்டு இதழ்கள் உள்பட பல்வேறு இலக்கிய சிற்றிதழ்களிலும், ஜனரஞ்சக இதழ்களிலும் வெளி வந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு குங்குமம் இதழ் நடத்திய போட்டியில் வெற்றிபெற்று கவிஞர் வைரமுத்துவிடம் அவர்களிடம்  பரிசும், 2020 ஆம் ஆண்டு படைப்பு குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுடன் விருதும் பெற்றுள்ளார்.

நமது  படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருது, 2022ஆம் ஆண்டு இயக்குனர் திரு லிங்குசாமி அவர்கள் நடத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ  போட்டியில் சிறப்பு பரிசு2016 ஆம் ஆண்டு  திரு.அப்துல் கலாம் நினைவு பரிசு என பல விருதுகளும் பெற்றுள்ளார்.

கவிஞரின் முதல் கவிதை நூலானா காட்டு நமது படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளிவந்து பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம் :

 

...

 

 

 

 

அவசர அவசரமாய்

சிலுவை பற்றிய கவிதையொன்றை

கேட்கிறாய்,

கொஞ்ச நேரம் காத்திரு...

நேசித்தவர்களால்

என் கைகளில் அறையப்பட்ட

ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!

 

***

 

காசில்லாத போது கேட்கப்படுகிறது

கொடுத்த கடன்,

பசியில்லாத போது தரப்படுகிறது உணவு,

சோர்ந்து போன நேரங்களில்

திணிக்கப்படுகிறது,

கடினமான வேலை,

அவநம்பிக்கையில் வாழும்

போது நிகழ்கிறது துரோகம்,

நம்மை நமக்கே பிடிக்காத

போது

செலுத்தப்படுகிறது புது புது

குற்றம்,

கையில் குடையில்லாத போது

ஓயாமல் பெய்கிறது மழை,

ஆறுதல் தேடி அலைகின்ற போது,

அழுகின்றது பச்சிளம் குழந்தை,

கையிருப்பு குறைவாகயிருக்கும் போது அதிகரித்திருக்கிறது விலைவாசி,

இன்றோ நாளையோயென உயிருக்கு

போராடிக்கொண்டிருக்கும் போது நிகழ்கிறது...இயற்கைச் சிற்றம்,

எப்படி இக்கவிதையை முடிப்பதென திணறிக்கொண்டிருக்கும் போது தொடர்கிறது ...

பேனாவின் மௌனம்!

 

***

 

நீண்டதூரம் நடக்கக்கூடாது

வெயிலில் அலையக்கூடாது

என்ற மருத்துவரின்

அறிவுரைகளை காற்றில்

பறக்கவிட்டு விட்டு

ஆட்டோக்காரன் கேட்ட தொகை

அதிகமென வெயிலில்

நடந்து வரும் அப்பாவின்

கைகளில்

பிள்ளைகளுக்கான தின்பண்டம்!

 

***

 

காலொடிந்த

பறவையொன்றை

வீட்டுக்கு அழைத்து வந்தேன்

அழகாகயில்லையென்கிறாள்

மனைவி,

அருவருப்பாயிருக்கிறதென்கிறான் மூத்தமகன்,

ஓடி ஒளிந்து கொள்கிறான்

இளையமகன்

வாங்கிய இடத்திலே  கொடுத்திடுங்களென்கிறாள்

மகள்,

சார் உங்களுக்கு இது எதுக்கும் பயன்படாதென்கிறாள் வேலைக்காரி,

தேவையில்லாத வேலை உனக்கெதுக்கென்கிறார் அப்பா,

அவசர அவசரமாய்

என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு

காயத்திற்கு மருந்தை தேடிக்கொண்டிருக்கிறாள்...அம்மா!

 

 

***

 

இது தான்

நான் குடிப்பது கடைசி

என அப்பா சொன்ன

எண்ணிக்கை நூறை

தாண்டியிருந்தது...

 

மகனுக்கு பள்ளிக்கு கட்ட

வேண்டிய நூற்றி ஐம்பது

ருபாய் கட்டணத்தை

செலுத்துவதற்காக சொன்ன

தவணை நூற்றி ஐம்பதை

தாண்டியிருந்தது...

 

பெரியமனுஷி ஆகிவிட்ட

மகளுக்கு

தாவணி வாங்கி தருவதென்பது

கானலாகவே மாறியிருந்தது...

 

வயதான அம்மாவின்

மருத்துவ செலவு செய்ய

முடியாமல்

இன்னும் இருக்கும் ஆயுளை

முன் கூட்டியே குடித்திருந்தது...

 

வீட்டிற்கு சீதனமாய் வந்த

மனைவியின்

பொருட்கள் எல்லாம்

கடன் வாங்கியவர்களிடம் அடைக்கலமாயிருந்தது...

 

அதிகமான போதையில்

நான்கு சக்கர வாகனத்தில்

மோதி கொண்டதில்

இரண்டாக

இருந்த கால்களின் எண்ணிக்கை

ஒன்றாகியிருந்தது....

 

பள்ளிகட்டணம் செலுத்த

முடியாததால் பள்ளிக்கு

முன்பு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த மகனும்,

துணிக்கடை ஒன்றில்

தாவணி விற்றுக் கொண்டிருக்கும் மகளும்

மதுக்கடையைக் கடக்கும் போது

செத்து செத்து பிழைக்கிறார்கள்...

அப்பாவைப் போலவே!

 

**

 

என் மீதான கோபத்தில்

கையில் கிடைத்த

பொருட்களை எல்லாம் வீசிக்கொண்டிருக்கிறாய்...

வீசிய

பொருட்களையெல்லாம்,

உன் அருகிலேயே

மீண்டும் மீண்டும் எடுத்து

வைத்துக்கொண்டிருக்கிறது...

என் காதல்!

 

***

 

மழையில் நனைவது

பிடிக்கும்

வானவில்லை பிடிக்கும்

சுற்றி வரும்

வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்,

அதிகாலையில் புல்லின் மீது

அமர்ந்திருக்கும்

பனித்துளியைப் பிடிக்குமென,

எழுதிய கவிதையை

கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்...

கணவனுக்கு பிடிக்காதென!

 

**

 

மரணத்தை விட

கொடுமையானது

வேறொன்றுமில்லையென்கிறாய்,

நேசிப்பவர்களின்

மௌனம் இருக்கிறதென்கிறேன்,

மௌனமாக

கடந்துபோகிறாய்!

 

**

 

அப்பாவின் அவசர வேலை

தடைபட்டிருந்தது,

அம்மாவின் வீட்டு வேலைகள்

தேடலாகியிருந்தது,

தாத்தாவின் கையிலிருந்த

நாளிதழ் நான்காகியிருந்தது,

பாட்டியின் பக்தி

திசைமாறிக்கொண்டிருந்தது,

யாராவது குழந்தையின்

தொலைந்து போன டெடிபியரை

கண்டுபிடித்து கொடுங்களேன்!

 

**

 

காணாமல் போன கடிகாரத்தை

தேடிக்கொண்டிருந்தேன்

கிடைத்ததும்,

காணாமல் போன நிமிடங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்!

 

**

 

திரையில்

கொலைகளை சாதாரணமாய் செய்பவன்

ஒரு எறும்பை தெரியாமல்

மிதித்ததற்கு

வருந்திக்கொண்டிருக்கிறான்...

திரையில் மக்களுக்கு

கோடி கோடியாய்

அள்ளிக் கொடுத்தவன் பசிக்குதென கையேந்திய சிறுமியை

கண்டும் காணாமல் கடக்கிறான்,

ஒவ்வொரு மேடைகளிலும்

கடவுளில்லையென பேசிக்கொண்டேயிருப்பவன்

தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நாளில் காக்கச் சொல்லி கடவுளிடம்,

மனமுருகி

பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறான்,

நேர்மை நேர்மையென பேசிக்கொண்டிருந்தவன்

இலஞ்சப் பணத்தை கையில் கொடுக்காமல் கூகுள் பே' யில்

அனுப்பி வைக்குமாறு சைகை செய்கிறான்,

நிமிடத்திற்கு நிமிடம்

நிறமாற்றிக் கொள்ளும் உலகத்தில்

பல ஆண்டுகளாய்

யாரோ ஒருவருக்கு கொடுத்த

வாக்குறுதிக்காய் இன்னும்

ஒரு ரூபாய்க்கு

இட்லி விற்றுக்கொண்டிருக்கிறாள் பாட்டியொருத்தி!

 

***

 

என்னைக் காயப்படுத்துவதற்கு

கல்லொன்றை

எடுத்திருந்தான் ஒருவன்,

கடுஞ்சொல்லொன்றை

எடுத்திருந்தான் ஒருவன்,

துரோகமொன்றை எடுத்திருந்தான்

ஒருவன்,

வஞ்சமொன்றை எடுத்திருந்தான் இன்னொருவன்,

எல்லாவற்றிலும் தப்பித்த நான்,

பொய்யான அன்பொன்றில்

விழுந்து என்னை நானே

காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன்!

 

**

 

எதுவுமே

தெரியாமலிருந்த

என்னை

கவிஞனாக்கிவிட்டு,

எல்லாம் தெரிந்த நீ

கவிதையாகி விட்டாய்!

 

**

 

அப்பாவை

புதைத்துவிட்டு

வீட்டை நோக்கி பயணிக்கையில்

எதிரே வருகிறான்...

தன் தந்தையின்

தோளில்

அமர்ந்த படி,

என் வயதுடைய ஒருவன்!

 

**

 

சலசலத்து ஓடும் நதியில்

மௌனமாய்

நீர் அருந்திவிட்டு

கடந்து போக எத்தனிக்கும்

பறவைக்கான கவிதையொன்றில்

மீன்கள் வருகின்றன

உதிர்ந்த பூக்கள் வருகின்றன

வேண்டாமென தூக்கியெறிந்த உடைகள் வருகின்றன...

இறுதியாய் வேடன் வரும் போது கவிதையை தூக்கியெறிந்து விட்டேன்...நான்!

 

***

 

ஏதேதோ செய்கிறது...

மரம் வெட்டுபவனை

குயில்பாட்டு!

 

***

 

 

இன்றே வாழ்வின்

இறுதி நாளென அறிந்தால்

கோவிலுக்கு செல்கிறார்கள்,

பிடித்த மழையில் நனைகிறார்கள்,

திரைப்படத்திற்கு  செல்கிறார்கள்,

பூங்காக்களுக்கு

செல்கிறார்கள்,

தான தர்மங்கள் செய்கிறார்கள்,

விலகியிருப்பவர்களிடம்

நட்பாய்

சேர்ந்து நடக்கிறார்கள்,

அக்கம் பக்கத்தினரிடம்

அன்பை பொழிகிறார்கள்,

பிடித்த

பயணம் செய்கிறார்கள்,

நேசித்தவர்களை பார்க்கச்செல்கிறார்கள்,

தாம் செய்த தவறுகளுக்காய்

வருந்துகிறார்கள்,

இறுதி நாளென்பது ஆரம்பித்து வைக்கிறது..வாழ்வை!

 

 

***

 

என் மீது

கோபமாகயிருக்கும்

போதெல்லாம்

ஒரு அச்சமுமில்லை...

அன்போடு இருக்கிறாய்

ஆயிரம் ஆயிரம் அச்சங்கள்!

 

 

**

 

அவசர அவசரமாய்

மேய்ந்து கொண்டிருக்கிறது ...

மரணத்தை,

சற்று நேரத்தில்

பலி கொடுக்கப்படவிருக்கும் ஆடு!

 

**

 

சிறு எறும்பின் மீது கூட

அன்பு காட்ட வேண்டுமென்ற

காட்சியை படமாக்குவதற்குள்

பல எறும்புகளை கொன்றிருந்தார்...

புத்தன் வேடமிட்ட நடிகர்!

 

 

**

 

உன் கவிதையில் வந்த

தேவதையும்

என் கதையில் வந்த தேவதையும்

ஒரு நாள்

சந்தித்துக்கொண்டார்கள்...

என்ன பேசிக்கொண்டார்களென அறிய

ஒரு கவிதையோ கதையோ

இப்போது

எழுத வேண்டியதாகயிருக்கிறது!

 

**

 

என்னிடம்

காகிதமில்லாத போது

பெரும் மழை!

 

**

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.