logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் அகதா செந்தில்குமார்  ஒரு அறிமுகம்
********************************************************************

பெண்ணியம் பாடும் கவிதைகள் தமிழில் கணக்கற்றவை. ஒரு கவிதாயினி படைக்கும் கவிதைகள் பூவின் மணம் பரப்பிக்கொண்டும் கொலுசுச்சத்தம் ஏந்திக் கொண்டும் வாசிப்பவர் மனதில் சிலசமயங்களில் ஊடுருவலாம். ஆனால் புகையும் கரியும் எரிச்சலும் கண்ணீரும் மௌனமும் மனவலிகளையும் வெப்பமும் ஆட்கொள்ளும் பெண்மையை இந்த சமுதாயம் பாதுகாப்பு வேலியென பாவித்து அடைத்து வைத்திருக்கும் சமையலறை ஜன்னலினூடே விரிகின்ற உலக அவலங்களை கவிதைகளாய் ஒரு வளைக்கரம் படைக்கையில் அந்தப் படைப்பு பலசமயங்களில் வாசிப்பவர் மனதில் ஒரு இடிமின்னல் தாக்குதல் போலவும் இறங்கலாம். அந்தவகையில் கவிதாயினி அகதா செந்தில்குமார் நமது படைப்பு குழுமத்தில் படைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் சக படைப்பாளிகளின் மனதிலும் வாசகர்கள் மனதிலும் ஒரு சிறப்பான இடம் பெற்றவை.

அரியலூரைச்சேர்ந்த கவிஞர் அகதா செந்தில்குமார் தற்போது பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். எளிய வரிகளில் படைக்கப்படும் கவிதைகள் இவரது தீர்க்கமான சமூகப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.

இப்போதெல்லாம் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என ஏதேதோ வகைமைகளை கொண்டு பல புது கவிதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை முறையையும் அதை சார்ந்த வாழ்வியல் முறையையும் எழுதும் ஆற்றல் மட்டுமல்லாது அது மக்களால் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய வார்த்தைகளை கொண்டு எழுதிவருவதில் முதன்மையானவராக இருக்கிறார்.

இவரின் கவிதைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்:-

பிறக்குமுன் தாயின் கருப்பையில் பாதுகாப்பாய் இருந்த காலம். பிறந்து வீழ்ந்தபின் சூது கவ்வும் இவ்வுலகில் பெண்மையின் ஏக்கத்தை பிரதிபலிக்க இதைவிட ஒரு அழகான கவிதை கிடைக்குமா ?

//
தட்டான்பூச்சிகளே பழக்கமானதால்
தேள்களை தெரிவுசெய்ய இயலவில்லை
விறகு வேலியே வழக்கமானதால்
சிறகு இருந்தும் பறக்கத்தெரியவில்லை
மீன்களை மட்டுமே சினேகம் கொண்டதால்
பாம்புகளைப் பகுத்தறியத் திராணியில்லை
கல்லூரும் தேரையாக மட்டுமே இருந்ததால்
வல்லூறு இதுவென வகை அறியவில்லை
ஏக்கமாக இருக்கிறதே
கருப்பைப்போல
இன்னோர் இருக்கைக்
கிடைக்காதா?
//

விழாக்காலமும் பெண்மைக்கு வலிமிகு காலம்தான். சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு ஓயாத எந்திரமாய் உழைக்கும் பெண்மையின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு நெத்தியடிக் கவிதை...

//
பண்டிகைத்தேதியிலும்
ஓயா எந்திரங்கள்
திறமை இருந்தும்
கொலுபொம்மைகள்
குடும்ப பூஜையில்
கற்பூர வில்லைகள்
ஆயுதங்கள் எனினும்
சமூகப் பகடைக்காய்கள்
எனினும்
பெண்மை வெல்கவென்று
கூத்திடுவோமடா..
எந்திரபூஜை வாழ்த்துக்கள்
எங்களுக்கும்
//

பெண்மையை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என கவியின் வரிகளை மேடையில் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமுதாயச் சீர்கேடுகளை கவிஞரின் ஒரு சிறுகவிதை நார்நாராய் கிழிக்கிறது. பெண்மையின் தீராத வலியைச் சொல்லும் இக்கவிதையை பாருங்கள் :-

//
போட்டிக்கென
காளிவேஷம் போடுகையில்
அடிவயிற்று வலிகளை
யாரிடமும் சொல்லாமல்
அப்படியே மேடை ஏறியாச்சு
கோப்பையும்
வெற்றியோடு வாங்கியாச்சு
வாங்கி வந்த கோப்பையை
சாமி படத்தின் முன்பு வைக்க
மூன்று நாள் ஆகட்டுமென
அம்மா சொல்லியாச்சு
இன்னும் ஜெயிக்கவே
இல்லைன்னு
இப்போதான் புரிஞ்சுபோச்சு
//

சில கவிதைகளில் ஒரு சிறுதுளிக்கதைகள் போல கதாபாத்திரங்கள் நடமாடி உள்ளத்தைக் கவர்கின்றன. இவரது கவிதைகளில் வரும் சரவணா அண்ணனும் செல்வி அக்காவும் மிசஸ் குமாரும் நம் நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் நடமாடுகின்றனர். இன்னும் தலைவிரித்தாடும் சாதிக்கொடுமைகள் மற்றும் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டும் காணும் ஆண்சார்பு சமூகத்தின் அவலங்களையும் சொல்லும் ஒரு தனிப் பாணிக் கவிதைகள் படைப்பதில் வல்லவர் படைப்பாளி அகதா அவர்கள்...

//
இருவரின் கைகளும்
வெட்டுப்பட்ட நிலையிலும்
சரவணா அண்ணா கையில்
செல்விஎன்றும்
செல்வி அக்காவின்
கையில் சரவணன்
என்று பச்சைக்குத்தியிருந்தது கண்டு
ஊரே உச்சுக்கொட்டி
கௌரவக் கொலை
என்றார்கள்
அவர்கள் காதல்
மேலும் கௌரவப்பட்டிருந்தது
//

இந்த வகை தொடர் கவிதைகள் ஒரு மிக பெரிய சமூக மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது அவர் எழுத்தே உலக அரங்கில் ஒலிக்க செய்யும் காலம் வெகு விரைவில்...

//
கூட்டுக்குடும்பத்தில்
தோசை ஊத்தி
சமையலறைக்கும்
ஹாலுக்கும்
ரன்னெடுத்த மிஸஸ் குமார்
வீட்டாரிடம் கேட்காத கேள்வி
ஒன்று உள்ளது
சமையல்காரி தேவை என்பதற்காக
ஊர்கூடி வாழ்த்த
தாலிகட்டும் கோலாகலத் திருமணம் எதற்கு?
//

தமிழ் மொழியின் இலக்கணத்தை காதல் இலக்கணத்தொடு கற்பிக்கும் ஒரு இளம் காதலர் உரையாடல் ஒரு அழகான கவிதையாய் தருகிறார்:-

//
நம் காதல் வினைத்தொகையே
முக்காலமும் பொருந்தும் என்றாய்
உம்மைத்தொகை விளக்கம் கேட்டால்
இராப்பகல் முத்தம் என்றாய்
அன்மொழித்தொகை
எதுவென்று கேட்டால்
அயல்வீட்டுக் கனிமொழியைப்
பொற்றொடி வந்தாள் என்று
புன்னகை பூக்கிறாய்
உவமைத்தொகை
எதுவென்றால்
நீயே சொல்
உன் பவளவாயால்
என்கிறாய்
பண்புத்தொகையையாவது
பண்பாக உரையென்றால்
போடி கருங்குதிரைஎன்று
பொய்கோபம் கொண்டாய்
//

சம்பிரதாயங்களும் சடங்குகளும் மனிதத்தை வளர்க்கவில்லை எனில் அவைகள் பொய்த்துவிடும் என்னும் நிதர்சனத்தை ஒரு குடும்பத் தலைவியின் எளிய வரிகளில் படைக்கப் பட்டிருக்கும் இந்த கவிதை எவ்வளவு பெரிய வினாவை நம்முள் எழுப்ப வல்ல ஒரு கனமான படைப்பு என்பதை கவனியுங்கள் :-

//
அமாவாசைக்கும்
ஆயுத பூஜைக்கும்
பேசாத சாமிப்படங்களூடு இருக்கும்
அப்பெரியவர் படத்திற்கும்
தவறாமல் படைக்கப்பட்டது
பொறி,சுண்டல்,பலகாரங்கள்
அம்மா தாயே என்று
வீட்டு வாசலில் இரந்து நின்ற
பெரியவருக்கு
சாமி கும்பிட்டதும் வா
என்ற பதிலும் பகிரப்பட்டது
படத்திலிருக்கும் பெரியவரும்
பலகாரங்கள் சாப்பிடவில்லை
சென்ற பெரியவரும் வரவில்லை
வெறிச்சோடியிருக்கிறது மனங்களும்
படைத்த பலகாரங்களைப் போலவே
//

பெரும் மேடையிட்டு மணிக்கணக்கில் பேசப் படும் பெண்மையின் வேதனைகளை கவிதாயினி அகதாவின் அடுக்களையிலே என்கிற இரு கவிதைகள் சவுக்கடிபோல் சமுதாயத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது:-

அடுக்களையிலே
------------------------------
வெங்காயத்தை உரிக்கும்போது
துச்சாதனனிடம்
நான் சூட்சுமம்
கேட்டுக்கொள்வேன்
பாவம் வெங்காயத்தைக்
காப்பாற்றத்தான்
எந்த கண்ணனும் இல்லை

எல்லா வேலைகளையும் முடித்து அப்பாடா! என்று அமர்கையில்
எனக்காக மூன்றுமுறை பெருமூச்சு விட்டது குக்கர்
*தசாவதானிகளுக்கு
சவால் விடுகிறேன்
உங்களால் ஒரே நேரத்தில்
பத்து வேலைகளை மட்டுமே இயலும்
எங்களால் நூறு வேலைகள் இயலும்
அகராதிகளே
இன்றிலிருந்துபெண்கள்
என்னும் சொல்லை
சதாவதானிகள்என்க

*அடியே! என்ற சொல்லிற்கு
அப்படியே விட்டுவிட்டு ஓடினால்
வாளி இங்கு நிற்பதில்லை
தோசையல்லவா கருகிவிடும்

அடுக்களையிலே 2
--------------------------------
*சொத்தைப் பிஞ்சு
கத்தரிக்காய்கள்
டாஸ்மாக் வாசலில்
மாணவர் முகங்கள்

*முட்டைக்கோஸை தோலுரிக்கையில்
நாத்தி மற்றவரிடம் தோலுரித்தாள்
அண்ணிக்கு காய் நறுக்கத் தெரியல
*எண்ணெய் தெறித்த
கைவடுக்கள்
வலி தெரியாமல் வளர்த்த
பிறந்த வீட்டை
நினைவுபடுத்த தவறவில்லை

*கைகள் சுட்டு
ஆத்தி ஆத்தி
ஊதி ஊதி
அவசரமாய் கைகளில்
தந்த தேநீரை
வேண்டாம் என்பதும்
ஓங்கி கன்னத்தில்
அறைவதும்
ஒன்றுதான்
//

இல்லற வாழ்வில் தலைவி என்கிற பெயரிட்டு ஏட்டுமொழிகள் மொழியினும் வீட்டுக்குள் பெண்மையின் போராட்டத்துக்கு விடிவுகாலம் வந்துள்ளதா ?
இந்தக்கால ராமன்களும் கோவலன்களும் சிந்தித்திட ஒரு அருமையான கவிதை :-

//
நஞ்சு தீர்ந்ததா
அந்த நாக்கில்
கொத்தித் தீர்த்து
குதறிய பின்பு
சொல்லின் ரணம்
ஆறிடுமோ?
கல்லில் பதித்தது
கரைந்திடுமோ?
மென்மையின் கதவம்
நாப்பிழம்பால் எரிந்தது
கண்மைகள் கதறிய பின்பு
பெண்மைக்கு என்ன வேலை
கண்ணகிபோல் எரிக்கவா முடியும்
சீதைபோல் குளிக்கவா முடியும்
கண்ணீரில் குளித்தது போதும்
இனியாவது
தீப்பிழம்பாய் நடந்திடடி
//

மணமானபின் காதல் எங்கு பறந்து சென்று விடுகிறது ? வீட்டுக்கு வீடு புலம்பும் பெண்மை :-

//
அடுப்படி வந்து
இடுப்பு கிள்ளினாய்
வேலைக்கு இடையில்
அலைபேசியில்
ஐ லவ் யூ சொன்னாய்
வீடு திரும்பும் முன்னே
சமைத்தும் வைத்தாய்
கடைகளுக்கு அழைத்துச்சென்று
புடவைகள் பரிசளித்தாய்
நான் கேட்டு அடம்பிடித்த
அந்தக் கரடிபொம்மையைக்
கடைக்காரனிடம் விலைபேசியபோது
...
...
...
காலிங்பெல் சத்தம்கேட்டு
கதவு திறந்தேன்
கதவைக்கூடத் திறக்காமல்
அப்படி என்ன
அந்த திரைப்படப் பாடலில்
உள்ளதென்றாய்?
வழக்கம்போலவே
வாயைத் திறக்காமல்
தோசை வார்க்க
அடுப்படி சென்றுவிட்டேன்
//

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசமும் நேசமும் எத்தனை காலமாகினும் வற்றாத நீரொழுக்காய் மனதில் மறையாத மாயம்தனை
பேச்சுத் தமிழிலேயே ஒரு ஒவியமாக்குகிறது இந்த கவிதை :-

//
ஊசிவந்து குத்தையிலே
அலறிநானும் கத்தையிலே
உன் தோள்பட்ட ஆதரவ
எந்த வார்த்தையில நான் எழுத
மாதாந்திர வலிக்கு
கொக்கிப்புழுவா நான் துடிக்க
அறிவியல் கத சொல்லி
தலகோதி தெம்பு சொல்வ
தீட்டுன்னு யார் சொன்னாலும்
திட்டு திட்டுன்னு திட்டிடுவ
பிரசவ வேதனையில் நான் கதற
தனியாத்தான் நீ அழுத
எனக்கு மட்டும் கையழுத்தி
தெளிவு சொன்ன
இத்தன வருசம் கழிச்சு
காய்ச்சலுக்கு ஊசிபோட
தனியாத்தான் போயிருந்தேன்
தைரியத்த நீ கொடுத்த
புருசன்தான் வரட்டுமே
புள்ளதான் வரட்டுமே
ஊசி குத்தும்போது கத்தையிலே
உன்பேர சொல்லி
யப்பான்னுதான் கத்தினேன்
----------------------------------------------

வளைத்தொடித்த வரிகளில்லை ; அகராதி தேட வைக்கும் சொற்களில்லை: ஆனால் படைப்பாளி அகதா அவர்களின் ஒவ்வொரு கவிதையும் பெண்மையின் மென்மையான எளிய சொற்கள் ஏந்திவரும் கனமான படைப்புக்கள். தனக்கென ஒரு தனிப் பாணி வகுத்துக் கொண்டும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த அற்புதமான படைப்பாளிக்கு கவிச்சுடர் விருதளித்து பெருமை கொள்கிறது படைப்பு குழுமம்.

இந்த கம்பீரமான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் அகதா அவர்கள் வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !!

வாழ்த்துக்கள் கவிச்சுடர் அகதா செந்தில்குமார்

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

மு. சுகுமாரன்


0   1511   0  
August 2019

கோவை புதியவன்


0   1738   1  
April 2020

திப்பு


0   721   0  
November 2022

சூர்யநிலா


0   844   0  
January 2021

ஜேபி நீக்கிழார்


0   526   0  
August 2023