logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை  மலேசியாவை சேர்ந்த தமிழ் படைப்பாளி .கனகராஜன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு  செய்கிறோம்.  நவீன கவிதைகளின் பால் நாட்டம் கொண்ட கவிஞர்  வட மலேசியாவில் அமைந்துள்ள கடார மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படைப்பாளர் . ஆசிரியராகப் பயிற்சிப்பெற்று, பல தமிழ் தொடக்கப் பள்ளிகளிலும் பின் இடைநிலை பள்ளிகளிலும் ஆசிரியராக பணிபுரிந்து தற்பொழுது  மலேசியக் கல்வி அமைச்சில் பள்ளி ஆய்நராக (school Inspector) பணிப்புரிகிறார்.

80 களின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் இன்றுவரை விரும்பிப் படைப்பது புதுக்கவிதைகள்.

மலேசிய மழைச்சாரல் குழுமம் வெளியிட்ட கவிதைதொகுப்புகளில் இவர் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு அஸ்ட்ரோ எனும் ஒளியொலி நிறுவனம் நடத்திய கண்ணதாசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர், தொடர்ந்து பல இலக்கிய இயக்கங்கள் நடத்திய கவிதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். படைப்புக் குழுமம் ஆண்டு தோறும் நடத்திவரும் கவிக்கே கவிதைப்போட்டியில் 2018 க்கான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று, தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு , படைப்புக்குழும உறவுகளோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

தன் இலக்கியப்பயணத்தில், குறிப்பாக நவீனக்கவிதைகளுக்கான தன் பயணத்தில் ஒரு தெளிவான வழிகாட்டியாக தகவு இதழும், கல்வெட்டு மின்னிதழும் திகழ்வதாகக் கூறுகின்றார்.

இலக்கிய இதழ்களில், குறிப்பாக படைப்பு மின்னிதழிலும், தென்றல் மற்றும் வானம்பாடி வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகளோடு ஆய்வு கட்டுரைகளும் எழுதிவருகிறார். இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:

உளவியலின் சுவாசம் வாழ்வியலின் எச்சங்களாக படிகின்றன. போலியான வாழ்க்கை நிஜத்தை தின்றுவிட  உறவுகளின் வார்த்தைகளும் ஒப்பனை பிம்பங்களாக மாறிவிடுகின்றன.. யாரிடம் போய் பேசுவது ? இயற்கையின் மடியில் சாய்வதை  தவிரஇதோ கவிதை….

 

என் முகத்தின் பாதியை

முகமூடி தின்றுவிட

ஊமையாய் தவிக்கிறது

சுவாசம்

 

அமிலம் ஊற்றி

அழிந்த வேர்களில்

இன்னும்

வந்ததைக் கேட்கவில்லை

சென்றதைச் சொல்லவில்லை

அதற்குள் இரவாகிவிட்டது

 

மண்ணிடம் பேரம்பேசி

வேர்களைக் கொண்டு வந்தேன்

வண்ணமற்ற கடல்

உள்ளே வராமல் வாசலில் நிற்கிறது

 

மேலும் நடக்காமல்

கரையில் சாய்ந்துவிடவா

ஒரு கோழையாய்

 

இருவேறு நிலைப்பாட்டில் வாழ்கிறான் மனிதன். சுயத்துடன் பேசுவது குறைந்து விட்டது. துயரங்களையும் மகிழ்ச்சியையும்  கண்கள் படிமமாக்கிக் கொள்கின்றன. நாவலின்  இறுதிப் பகுதியில் ஒரு மிருகம் சிரிக்கிறதுஇப்போதும் சுயத்துடன் பேசாவிட்டால் எப்படி?... இதோ கவிதை ….

 

எங்களுக்கான

இடைவெளி குறுகிக்

கொண்டே வருகிறது

 

இடையே ஒரு விழி புன்னகைத்து

மறு விழி கலங்கும்

பூக்கள்

கவலையில்லாமல்

அந்த வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன

 

எனக்கு நிகர் அந்த மிருகத்தையும்

அதற்கு நிகர்

என்னையும்

மாறிமாறிப் பரிமாறுகிறது

இதயம்

 

எட்டியெட்டிப் பார்க்கும்

என் மாலை விழிக்குள்

காலையைப்பற்றிய ஏக்கம் இல்லாமலில்லை

 

என் நாவலின் இறுதிப்பகுதி முடிவதற்குள்

உதிர்ந்த விடியலை

மீட்டுணரும் இரகசியத்தைச்

சொல்லிச்செல்லென்றால்

சைகை மொழியில் சிரிக்கிறது அந்த ஓநாய்

 

எங்களுக்கான

இடைவெளி குறுகிக்

கொண்டே வருகிறது

மேலும்

 

ஒரு சிறப்பான கவிதைக்கு படிமங்கள் பால்குடம் எடுக்கும்இதுவும் ஒரு உளவியல் கவிதைதான். காலத்தின் வாலைப் பிடித்து ஓடும் ஒரு மனிதனின் கவிதை.  கனவுகளால் நிரம்பிய வாழ்க்கையை இறுதிச் சுற்றின் மண் குடத்தில் முடித்திருப்பது வியப்பு! பார்வைக்கு கவிதை

 

*நேற்று*

வாலைப் பிடித்துவிட்டேன்

பின்னே ஓடும் காலத்திடம்

என் முகத்தை இழந்துவிட்டேன்

 

*இன்று*

கானகத்தின் பாடலை

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்

 

இலைகளில்

பனித்துளிகளால்

வசந்தத்தை

வரைகிறேன்

 

என் எண்ணிக்கைக்கு அடங்கச்சொல்லி வானில் வானம்பாடிகளுக்குப்

பாடம் நடத்துகிறேன்

 

சஞ்சலத்தோடு

பூந்தோட்டத்தில்

தேன் தேடும் பூச்சிகளுக்கு

சம்பந்தமில்லா

வண்ணமூட்டுகிறேன்

 

குருவிகளின் சிறகுகளோடு

புல் நுனியின்

துளி நெல்லை

மெல்ல  பறிக்கிறேன்

 

வாடிய பூக்களிடையே நிறமற்ற

மீன்களாய் நீந்துகிறேன்

 

*நாளை*

காலையில் வெண்மேகங்கள் கருக்கத்தொடங்கலாம்

பாலை மீண்டும் பன்னீரில் குளிக்கலாம்

என் வற்றிய குளங்கள்

கனவுகளால் நிறையலாம்

 

மறக்காமல்

மண்குடத்தோடு காத்திரு

 

நனைதல் என்பது எத்தனை விதமாகவும் இருக்கலாம்அவசரத்தில் அங்கே ஒதுங்குகிறோம் என்பது  முட்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிட வேண்டிய இடம். உதிர்தலும் துளிர்த்தலும் நிகழ்ந்த நிகழ்வில்  முடியாத கவிதை

 

முதலில் நான்தான் நனைகிறேன்

பின் என்னைச் சுற்றி

முட்செடிகளும் கொஞ்சம்

நனைய

அவசரத்தில் அங்கேதான்

ஒதுங்குகிறேன்

 

வருடிய முட்களின்

நுனிகளில்

குருதியாய் கரைகிறேன்

உன் புன்னகை மின்னலின்

விரல்பிடித்து எழுகிறேன்

 

இரவெல்லாம்

இதயம் நனைத்த

தூறல்களால் ஆடை நெய்து

உன் நினைவுகளைப் போர்த்திவிடுகிறேன்

 

என்னுரசல் பட்டவுடன்

தீ படர்ந்த கோளாய் மருவி

என்னைச் சுடுகிறாய்

கோடைகாலத்து

இரப்பர் இலைகளாய்

சிவந்து உதிர்கிறேன்

மெல்ல மறைகிறேன்

 

இறுதியில் இருவரும் நனைகிறோம்

இப்பிறவி மழையில்

வாழ்க்கையின் படிம சிறகுகளை  வலிய அசைக்காமல்  தானாகவே அசைக்கிறது கவிஞரின் எண்ணற்ற வரிகள். ஆழ்ந்து வாசிக்கிறவன் இவரது கவிதைகளில் தொலைந்து போவது நிச்சயம்.  கவிஞரின் மற்ற மற்றக் கவிதைகளையும் படித்து  பாருங்கள்  உணர்வீர்கள்

 

வண்ணங்களால் நிறைந்த கடலைக் கனவென்று ஏமாந்த

கடற்பறவை நான்

 

நீந்திமகிழும் மீன்களின்

தூதுவர்களாக அலைகள் மட்டும்

என் கால் தொட்டு

கதை சொல்கின்றன

 

ஒரு பாதி முகமூடிக்குள்

ஒளிந்துகொண்ட

என் மறுபாதி மனித முகத்தைக்கொண்டு

என்னை மனிதன் என்றே

அனுதானிக்கலாம்

 

அதிகாலையை மென்று

மாலையைச் சிறகாக்கி

இரவுக் கனாவில்

திணிக்கப்பட்ட விதைகளில்

பூக்கக் காத்திருக்கிறது

என் சிறகுகளின்

சரித்திரம்

 

வானத்தின் வரைபடத்தில்

என் பெயர் பறவையென்றே

இருக்கிறது

 

வா உதிரலாம்

உதிர்வதே இறை நிலை

மண்ணில் உதிர்ந்து

வேர்வழியே

கிளைக்கு மீண்டு

பூவாகக் காத்திருக்கிறேன் பார்

உனக்குப் பிடித்த வாசனையில்

உன் இதய வண்ண மல்லிகையாய்

கொஞ்சம் விழியொத்த செம்பருத்தியாய்

நீ

தள்ளி அமர்வதுபோல்

கொஞ்சம் முள்ளோடு ரோஜாவாய்

 

மீண்டும் உதிர்வது

சுகமானதுதான்

தாயைக் காக்க சேயும்

சேயைக்காக்க தாயும்

குடும்பம் காக்க தந்தையும்

நாட்டைக்காக்கும் வீரனைப்போல்

உதிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்

 

நீயோ அல்லது நானோ உதிர்வதற்குத்

தயக்கமொன்றுமில்லை

 

தலைப்பிலா

தவத்தில் பூத்தவர்களாகவே

இருக்கிறார்கள்

தலைப்பிடப்பட்ட வரலாற்றில்

நம்மைப்போல் உதிர்ந்தவர்கள்

 

கடற்கரையின்

கல்லிடுக்குகளில் எதையோ

தேடுகின்ற மாடப்புறாக்கள்

என்னைப்போலவே

 

கரையில் ஒதுங்கியிருக்கிறது

மோதிரம் இழந்த நீலச்சிமிழ்

கண்களுக்குப் படாமல்

 

கரைகளின் சாபமாய்

மூச்சுற்று விழும் வண்ண மீன் களைப் பற்றி கவலையற்று விளையாடிக்கொண்டிருக்கின்றன அலைகள்

 

கதிர்கள்

என்னைச் சேராமல்

மறைக்கின்றன

அரச மரக்கிளைகள்

 

ஒரு துளி இதயத்தை

மென்றபடி

உன் விரல்களில்

அந்த மோதிரம்

 

வானவில்லால் தன்னை

அலங்கரித்துக் கொண்ட கிளிஞ்சல்களாய்

எப்போதாவது நிறங்காட்டும்

உதட்டோரத் தனிமைப் புன்னகை...

 

பல மொழிகளோடு

கரையைத் தழுவிச்செல்லும்

கடலலையைப் போன்றதுதான்

அப்பாவின் அந்த மௌனம்

 

இன்று

சித்தனாய் பித்தனாய்

முகங்காட்டும் பிம்பத்தில்

நானாகத்தெரிகின்ற அப்பாவின் முகத்தோடு

பேசுகிறேன்...

வேறு வழியின்றி

 

இன்றும்

எட்டியெட்டிப் பார்க்கிறேன்

 

மொழியிழந்த

இரவெல்லாம்

வறட்டிருமல் சத்தமின்றி

வறண்டு போயிருக்கிறது

அப்பாவின் அறைச்சுவர்

 

மழையின் துளியோடும்

மாலைக் காற்றோடும்

குறியீட்டு மொழியோடுதான்

பேசிக்கொண்டிருந்தார்

அப்பா

அந்த இறுதி நாளில்

 

இம்முறை,

தழும்புகள் நிறைந்த

அப்பாவின் கைப்பிடித்து

செம்மண்ணில் நடை பழக

சாலையைப் பார்த்தபடி

காத்திருக்கிறது

என்னோடு

தூசு படிந்த அப்பாவின் மிதிவண்டி

 

வாசலில்

பாதி கடித்த அரத்திப்பழத்தோடு

காத்திருக்கிறாள் ஏவாள்

 

உள்ளே

செல்லமான அணைப்பும்

இறுதி முத்தங்களும்

வேர்விடத்தொடங்கியிருந்தன

 

பாசமாக வாலாட்டிச்

சுற்றிச் சுற்றி வந்தன

நேசம் நிறைந்த அவன்

சொற்கள்

 

விழிகளுக்கு பதில்

கடல் பூத்த முகத்தோடு

ஏறிட்டுப் பார்க்கிறாள்

 

குடில் முழுவதும்

வெவ்வேறு கோணத்தில் இருவரும் நாட்டியமாடிக்கொண்டிருக்கின்றனர்

 

காட்டுப் பறவைகள்

அன்றைய பயணத்தை

கூட்டுச் சுவர்களில்

பதிந்துகொண்டிருக்க...

 

நதி வழியே வனத்திற்குள்

நுழைந்த ஆதாம்

இன்னும் திரும்பவில்லை

 

பனியின் சாரல்

நனைந்த சுகத்தில் பாதச் சுவடுகள்

இடராமல் நடக்கின்ற என் விழிகளின்

ஓரத்தில் பட்டாம் பூச்சிகள்

 

வண்ணந்திருடிய கள்வனாய்

பூக்களிடையே ஓடி ஒளிகின்ற

வண்டுகளின் வேடத்தில் நான்

எப்போதும்போல்

தேவதையின் சாயலில் நீ

 

மகரந்த ஊர்வலத்தில்

பூக்களிடையே

ஆடிப்பாடி

உன்னைத் தொடரும்

அவசரத்தில்

சேர்த்து வைத்த தேன்

துளிகளாய் சிந்த

ஒவ்வொரு துளியிலும்

ஒவ்வொரு சொர்க்கமாய் பூக்கிறது

 

அதன் இரம்மிய போதையில்

தயங்கித் தயங்கி

1330 -வது குறளைக்

கனவின் காதருகில்

கிசுகிசுக்கிறேன்

உள்ளே கேட்கிறதா உனக்கு

 

ஒரு சுடர் இளகி

பருந்தாய் மாறிய

திமிரில்

அங்குமிங்குமாய் காற்றைக் கீறி

விளையாடிக்கொண்டிருக்கிறது

 

மறு சுடர் இளகி

காக்கையாய் மருவி

கரையோர மரங்களில்

எச்சங்களால் ஓவியங்களை

வரைகின்றது

 

மீதச் சுடரெல்லாம்

தேன் சிட்டுகளாய்

பூக்களை சீண்டிக்கொண்டிருக்கின்றன

 

விளம்பர இடைவெளியாய்

கார்மேகங்களுக்குள்

மீந்த மின்னலை ஊற்றிவிட்டுப்போகின்றன

பூநாரைகள்

 

மற்ற பறவைகளுக்கு

சிறுவர்களின்

சிறைகள் திறக்கும் வரை

காத்திருக்கவும்

 

ஓருயிரிலிருந்து ஒவ்வோர் உயிராய் விழுங்கத்தொடங்கி்ன ஆறறிவு நுண்கிருமிகள்

 

இருந்தும் அதன் (அ)சிங்கப்பசி அடங்குவதாய் இல்லை

                

எல்லா கொலையையும் நியாயப்படுத்த       

அருவுருவ

இறை சாசனம் எழுதிக்கொண்டன

அவை

 

இதுதான்...

இப்படித்தான் என்று ஒருபுறமும்....

எதுவும்

எப்படியும் என்று முகக்கவரியின்

மறுபுறமும்

முடிவற்ற

விவாதத்தைப் புன் சிரிப்போடு

வேடிக்கைப் பார்க்கின்றன

அவை

 

தலையும் வாலுமாய் துடிக்கத்தொடங்கிய

நம்பிக்கையில்

அமிலந்தெளித்து

விளையாடுகிறது காலம்

 

கொஞ்சந் துணிச்சலோடு

குழந்தைகளின் பாதங்கள்

வாசல்வரை வரும்போது மின்மினியாய்

சுவாசத்தைக் கிள்ளுவது

கோறனி நச்சிலின்

மனசாட்சியா அதன் அடியாட்களா?

 

பெருந்தீயோடு   பருந்தொன்று  பால்வீதிக்   கிளையொன்றில்  வந்தமர்ந்து.... குளிரத்தொடங்கிய  பொழுதில் அதன் இரைப்பையின் விதைகளெல்லாம் கண் விழித்துச்  சோம்பல் முறித்தன...  

 

                                                              இறை கொடுத்த  முகமூடியணிந்து... ஆளுக்கோர் உயிராய் தடம்  பதிக்கத்தொடங்கிய  அந்த வினாடியில்தான் 'நான்' எனும் வன்மம் இதயத்துடிப்பில் கலந்திருக்கவேண்டும்;  மனிதமெனும் நுண்கிருமியால் அப்போதே பீடிக்கப்பட்டிருக்க வேண்டும் 

இந்த பூ + கோளம்.

 

ஆப்பிளைக் கடித்து

முதலில் நீ வெட்கப்படு

 

வெட்கத்தில் சிவந்த

காற்றில் நான் ஏக்கமாய்ப் படர்கிறேன்

 

படர்ந்த கன்னத்தின்

மாக்கோலத்துப் புள்ளிகள் போலவே

அண்டத்துள்  கோள்களை வீசி

விளையாடும் சிறுவனாகி

மகிழ்கிறேன்

 

முன்னம்

நான் காயாய் தெரிந்த

பிம்பத்தில்

உன்  தனிமையை 

சலவை செய்துகொள்கிறாய்... மீண்டும் கனியாகிறாய்

 

கனியுண்டுக் களிக்கும்

அணில்களின் மென்மையான

உரோமங்களை வருடி

வண்ணமூட்டும் இளம்பச்சைத் தளிர்கள் போலவே

மயக்கும் உன்

விழிகளின் ஓரத்தில்

ஊஞ்சலாடும் ஏக்கம்

எனது போலவே

உனதும்

 

தயங்காமல்

இதய வடிவில்

ஆப்பிளைக் கடித்து

இருவரும் வெட்கப் படலாம்

 

என் கனவில் வந்து வந்து

போகும் என் கிராமம்

மாதிரியே

அவைக்கனவிலும் வந்திருக்கவேண்டும் அடர்ந்த காடுகள்

 

தனிமையில் அழுகின்றன

கிளிகளும்

காட்டுப் பூனைகளும் இன்னும் பலவும்

 

ஒரு மழலையின் கடிதத்தை

மௌனமாய் வாசிக்கத் தொடங்கியது

விதைக்குள் நுழைந்த

மழைத் துளி

 

ஒளியில் நனைந்துப் பின்

இருளுக்குள் நழுவிய

காகிதப் பெட்டி

நான்

 

அதே அவசரத்தில்

மெய்யைச் சுற்றிலும்

அமிலத்தை அருந்திய

போதையில்

தள்ளாடுகிறது

என்னுயிர்

 

அழாதே

கொஞ்சம் பொறு

 

அசுர வேகத்தில்

வீசும் புயலில்

என் சுவாசத்தை

செதுக்கிச் செல்கிறேன்

உன் சுவாசத்தின்

முகவரியாக

 

இறுதி ஒப்பாரியல்ல

இது

இன்னொரு பாவத்திற்கான

நாடோடிப் பயணமும்

அதற்கும் சற்று முன்

அந்திமத்தில்

அமர்ந்தபடி அழுவதும்

எனக்குச் சுகமே

 

இனி

வழியில் சந்திக்கப் போகின்ற

விழியிழந்த தேவதைகளிடம்

என்னைச் சொல்லாதே

 

குருதியில் நனைந்த

முட்களிலும்

என் மௌனத்தின் இரணத்திலும்

உன் பெயரும் இருக்கிறது

 

மாய மானைத்

துரத்தும் சுவாசம்...

 

கடல் சேர்வதற்குள்

கலைந்துபோன

நதியாய்

இன்றும் நாளையும்

 

வளர்வதற்கும் வளப்பதற்கும்

துளிர்விட்ட

இமழலைகளை

கொல்லைபுறத்து

கொள்ளையனிடம்

விற்றுவிட்ட

மர்ம மிருகங்கள்

...நாம்

 

பூக்களால் மறைக்கப்பட்ட

ஆயுதக்கிடங்கு

நம் மனம்...

கடவுளுக்குத் தெரியப்போவதில்லை

 

பிறக்கும்போதே

விலங்கோடு பிறந்த

உயிர்களை

இன்றுவரை

காக்க முயன்று

காணாமற் போன

இதயம்...

உனக்குமெனக்கும்

 

புரிய வாய்ப்பில்லை...

 

இந்த நரகத்தைச்

சொல்வதற்கான

சொற்களோடு வரவில்லை...

நாம்...

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.