இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் சுரேஷ்பாபு ராசேந்திரன் அவர்களுக்கு
வழங்குவதில் பெருமையடைகிறோம்.
திருவண்ணாமலை மாவட்டம்
கீழ்பென்னாத்தூர் அருகில்
உள்ள கத்தாழம்பட்டு என்ற கிராமத்தை பிறப்பிடமாக
கொண்டவர். இளம் வயதில் தந்தையை இழந்ததால் வசதி வாய்ப்புகள் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பை கடக்கவியலாத கட்டாயம் அமைந்து விட்டதால் பின்னர் சென்னை மற்றும் பெங்களூரில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம்,
ஹிந்தி , ஆங்கிலம் என
ஐந்து மொழிகள் பேச தெரிந்தும், தமிழன் என்றே தன்னை
அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பிய நேசம் கவிதைகளின் பக்கம் அவரை மடை மாற்றியது.
கை கால்கள் முழுவதும் கட்டப்பட்ட
நிலையில் எட்டு மணி நேரம் ஐந்து நிமிடம் தண்ணீரில் மிதந்து கின்னஸ் சாதனை செய்து தன்னை சாதனையாளராகவும் நிலைக்காட்டிய கவிஞர் சென்னை மாரத்தானிலும் பதக்கம் பெற்றவர்.
நிறைய
துரோகங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்கொலை ஒன்றே தீர்வென எண்ணிய கவிஞருக்கு
2018 ம் வருடம்
நண்பர் மதன் மூலமாக படைப்பு குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது…
படைப்பு குழுவின் மாதாந்திர சிறப்பு
கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கவிதைகள் மிகப் பெரிய உத்வேகத்தை தனக்குள் நிகழ்த்தியாகவும், படைப்பின் "படைப்பு சமூகத்தின்
இணைப்பு" என்ற தாரக ஒமந்திரத்திற்கேற்ப நிறைய இலக்கிய பேராளுமைகளுடன்
நெருங்கி பழகும் வாய்பையும் படைப்பு தனக்கு எளிதாக்கி தந்ததாகவும்
கூறுகிறார்.
படைப்பில் வெளிவந்த கவிதைகளை பார்த்து விஜய் சிங் என்பவர் மூலமாக BIKE LOVER என்ற குறும்படத்திற்கும் பாடல் எழுதும்
வாய்ப்பு கிடைத்தது.
தனது முதல் கவிதை
தொகுப்பினையும் விரைவில் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வரும் கவிஞருக்கு
இவ் விருது சேர்வதில் பெருமைக் கொள்கிறோம்.
இனி கவிஞரின் சில கவிதைகளைக்
காண்போம் :
இலக்கண தமிழில் மட்டும்தான்
கவிதைகள் இருக்க வேண்டுமா என்ன? பேச்சு மொழியில் எழுதப்பட்ட
நிறைய கவிதைகள் வாசகன் நெஞ்சை விரைவில் சென்றடைந்திருக்கின்றன. அப்படி பட்ட ஒரு கவிதைதான் இது. ஒரு மலையில் காட்டுத் தீ பற்றிக் கொள்வதால் ஆடு மேய்ச்சலுக்கு விடும் கிழவிக்கு கவலை பிடித்துக்
கொள்கிறது. அவளின் புலம்பலாகவே
இந்தக் கவிதை அமைந்தாலும் அவள் நினைத்தது போல் இது தெய்வக் குற்றமாக இல்லை… மேய்ப்பவன்
சரியாக அணைக்காத பீடியினால்தான் இவ்விளைவு என்று முடிப்பதில் இந்தக் கவிதை பொருளால் சிறக்கிறது… இதோ கவிதை..
அய்யோ..யாத்தே...
மலக்காடு பூராவும் பத்தி எரியுதே..
ஆட்ட மாட்ட மேச்சு
அர வயித்து கஞ்சி குடிக்க
சுத்து பத்து ஊரானுக
இத்த நம்பித்தானே பொழக்கிறானுவ..
மரமட்ட எரிஞ்சிப்போனா
மறுநா மேச்சலுக்கு எங்க போவும்..?
பாதி ராவுலத் தீப்புடிச்சி
பாவிமவ உசுரெல்லாம்
என்ன பாடு படுதுகளோ..
மங்கம்மா சாமியாடி
தெய்வக் குத்தம் ஆச்சின்னு சொல்லி,
நாளு ஒன்னு ஆவுலியே
சொனக் கன்னிமாரு காவு கேக்கெ...
ஆட்டுக்கார சின்னயனோட
ஆராயிக் கெழவி ஒப்பாரி வெக்க
அக்கம் பக்க ஆளுவ எல்லாம்
ஆறுதலா அழுவய தேத்துதுக..
ஆட்ட மேச்சுத் திரும்பயில
மலக்காட்டு பாதெயோரம்
மறுக்கா நல்லா அணைச்சிருக்கலாம்..
சின்னயன் வளிச்சுப்போட்ட
செய்யது பீடியில பொகஞ்ச கங்க.
…..
மகளின் குறும்பு இரசனையின் வெளிப்பாடு. என்னதான் எரிச்சல் ஏற்ப்பட்டாலும்.. மகளை ஜெயிக்கவைப்பதற்காக ஜெர்ரி என்ற எலியிடம் தோற்கும் டாம் என்ற பூனையாக இருந்துவிடுவதிலும் ஒரு மகிழ்ச்சிதான்….
செய்தியில்
மூழ்குகிறேன்..
கார்ட்டூனுக்கு
மாற்றுகிறாள்.
மீண்டும்..
செய்தியில்
மூழ்குகிறேன்..
கார்ட்டூனுக்கு
மாற்றுகிறாள்.
வழக்கம் போல்
ஜெர்ரியிடம்
தோற்றுக் கொண்டே
இருந்தது..
டாம்.
………..
கிளையொன்றிலிருந்து பிடி தளர்ந்த எறும்பொன்று யானை மீது விழுந்து ஆடி அசைந்து அதன்மீது ஒரு ஆங்காரத்துடனோ அல்லது நளினத்தோடுவோ பயணித்தாலும்… யானை அறியாது அதன் சுமையை என்பது ஒரு அடர் படிமத்தின் கூறுகள்.
அடர்வனக் கிளையொன்றில்
பிடித்தளர் எறும்பின்கால்
களிறொன்றின் நடையசையும்
புறமுதுகின் மேல்விழுந்து
குடமமர்ந்தப் பெண்ணவளின்
இடையசையும் மென்நளிவாய்
இருள்சூழ் கொய்யா
இருக்கனி மறையசைவாய்
கோ அவனின் பூப்பல்லக்கின்
மனங்கமழ் தூளியசைவாய்
ஒய்யார பவனிவர
ஒருபோதும் களிறறியா
எறும்பதனின் முழுபாரம்.
………..
கவிதைக்கு தேவை ஒரு கருப் பொருள். கவிஞர் சூதகமாகப் பயன் படுத்திருக்கும் இந்தக் கவிதையின் கருப் பொருள் சற்று வித்தியாசமானது… குழந்தையுடன் உறங்கும் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் கணவனின் திண்டாட்ட மன நிலையை குழந்தையின் யதார்த்தப் பார்வையில் வைத்து புன்னகைக்க வைக்கிறது…
மூனுகண்ணன் கதய கேட்டு
வயிறு முட்டச் சோறுண்டு
அம்மாவ அணச்சிக்கிட்டு
தூங்கிப்போன அந்த ராவோட
பாதி தூக்கத்துல
திடுதிப்புனு சத்தங்கேட்க,
அம்மாவ உசுப்பி விட்டு
"சோத்துப் பானய பூன
உருட்டுதுமா"னு அலற,
உருட்டட்டும் நீ தூங்குனு
மெதுவாக புன்னகைத்து
தூங்கிப்போன
அம்மாவின் விசித்திரமான
நடவடிக்கையை
புரிந்துக்கொள்ள முடியாமல்
விழித்த இரவில்..
அந்த புன்னகைக்கான
அர்த்தம் தன்னை போலவே
ஏமாந்துப்போன அந்த
பூனைக்கானதாய்
இருந்திருக்கலாம்.
……….
நாம் சாதாரணமாக கடந்து போகும் மனிதர்களில் பலூன் விற்கும் மனிதர்களும் கூட அடங்குவார்கள்.. ஒரு குறியீட்டையே சுமக்கும் மனிதர்கள் என்றால் அவர்கள் பலூன் விற்கும் வீதி வியாபாரிகளாகத்தான்
இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வியலை பேசுகிறது இந்த கவிதை…
எத்தனை ஊதியும்
நிறையவே இல்லை..
ஓட்டை விழுந்த பலூனும்
ஊதி விற்கும்
கிழவனின் வயிறும்.
வண்ண வண்ணமாய்
பலூன்கள்..
இருண்டுக் கிடக்கிறது
ஊதி விற்கும்
கிழவனின் வாழ்வு.
அடம்பிடிக்கும் குழந்தைகள்
அரை வயிற்றை
நிரப்பி விடுகிறார்கள்..
மூர்ச்சையாகிக்
கிடக்கிறது...
ஊதிய பலூனுக்குள்
கிழவனின் மூச்சுக்காற்று.
வெடித்துச் சிதறும்
பலூன்களுக்குள்
சிறைபட்டுக் கிடக்கிறது
கிழவனின்
அடுத்த வேளை உணவு.
தோள் சுமக்கும் பலூன்கள்
மிகவும் கனக்கிறது….
ஒன்றுமே விற்காத நாட்களில்!
***************************
நான் என்பது நான் மட்டும் அல்ல நீங்களும்தான் என்பதே இந்த கவிதையின் முக்கிய அங்கம் என்றாலும்… அந்த நான் யார் என்பதும் மிக முக்கியம். நான் என்பவன் நல்லவன் மட்டுமல்ல…. வழி கெட்டவனும்தான்… இதோ கவிதை…
இது எனக்கான உலகம்
இதற்குள் யாரும் நுழைந்து விடாதீர்கள்
நல்லவன் என்ற தேடலில்
நிச்சயம் நான் கிடைக்க மாட்டேன்
நிஜத்தில் நான் பிதற்றுவதை
நிஜமென்று நம்பிவிடாதீர்கள்
பிஞ்சைப் புணர்ந்தவன் பின்புலத்தில்
எனக்கும் ஒரு தொடர்பிருக்கலாம்
நஞ்சை மருந்தென்றவனுடன்
நானுமோர் விலைபேசியிருக்கலாம்
நாட்டை விற்றவனுக்கு எனது வாக்கும்
ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
எனது வாகனத்தின் வேகத்திலும்
ஓசோன் துளைப்பட்டிருக்கலாம்
நான் தூக்கி வீசிய நெகிழிப்பையில்
எனக்கான கடைசித்துளி உயிர் நீர்
தடைப்பட்டு இருக்கலாம்
நான் அமரும் நாற்காலியின் அடியில்
ஒரு மரத்தின் நிழல் மறைந்திருக்கலாம்
உங்கள் கண்களில் கருணையை
சுரக்க வைக்க மட்டுமே எனக்கு அந்த
பசுந்தோல் தேவைப்பட்டிருக்கும்
இதில் நான் என்பது நான் மட்டும் அல்ல
நான் என்பதை நான் என்றே
வாசிக்கும் நீங்களும் தான்.
……………….
இனி கவிஞரின் மற்றும் சில கவிதைகள் காண்போம்:
கணவன் உயிலின்படி
பிள்ளைகளுக்கு
பிரித்துக் கொடுத்தபின்
மனைவிக்கான பாகத்தில் தான்
இருந்தது
அந்த மஞ்சள் காடும்
மல்லிகைத் தோட்டமும்.
………..
நிசப்தங்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சப்தங்கள் எங்களை
பயன்படுத்தி கொள்வதாய்
புலம்பி கொண்டிருந்தது
நிசப்தங்கள்
நீர் குமிழிகள்
உடையும் சப்தம்
அதனுள் இருந்த நிசப்தத்தின்
அழுகுரல் என்றது
பாறைகளில் மோதிச் சென்ற
நதியின் பயணம்
மேலோட்டமாக பார்த்தவர்கள்
கடல் ஆர்பரிப்பதாய்
சொல்லிச் சென்றனர்
ஆழ்கடலினை
அகழாத பார்வைகளில்
நிசப்தங்கள் தென்படுவதில்லை
காற்று இரைவதாய்
எல்லோரும்
சொல்லிக் கொண்டு இருக்கையில்
காற்று இறைகிறது என்று நகைக்கிறான்
பார்வை இழந்தவன்
கல்லறையின்
உள்ளிருக்கும் நிசப்தத்தினை
மனிதர்களால் உணர முடியாததை
போன்றே
இப்பிரபஞ்ச நிசப்தத்தினை
பிணங்களால் உணர முடிவதில்லை.
…………
வாயாடி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எங்க வூட்டுக்கு
எதித்தாப்பலதேன்
சின்னாயி கெழவி வூடு
சின்னாயின்னு கேட்டா
திருத்திருன்னு முழிப்பாங்க
வாயாடி வூட்டுக்கு
வழி ஏதுன்னு கேட்டா
வாண்டுவ கூட்டிப்போவும்
ஊரே ஒறங்கிப்போன
ஒம்பது மணி ராவுலக்கூட
கட்டுன புருசன
வசவித்தான் ஒறங்க வெப்பா
வெள்ளன நாலு மணிக்கே
வசவுத் தொடங்கிப்பூடும்
வாயாடிக்கு புருசனா
வாக்கப்பட்டு வந்தவனுக்கு
கெழவன் காடு சேர்ந்து
வருசம் நாலு ஆனபொறவும்
வாயாடிக் கெழவி ஊட்டு
வசப்பாட்டு அடங்கவில்ல
என்ன பாவஞ் செஞ்சானோ
எலவெடுத்த கெழவி இவ
செத்தும் வசவுறாளே
சீருகெட்ட சிறுக்கி மவனு
கண்டமேனிக்கு பேசுறவங்க
அறிஞ்சிருக்க மாட்டாங்க
கெழவியோட வசவுலத்தான்
கெழவன் இன்னும் வாழுறான்னு.
……….
அகதியாய்
இடம்பெயரும் அந்த
சிறு பறவையின்
பிடித் தவறி உடைந்த
முட்டையின் அருகில்
வட்டமிட்டு வட்டமிட்டு பறக்கும்
அந்த தாய்ப் பறவையின்
க்கிரீச்சிடலில்
ஒரு பெண்ணின்
கருகலைந்த கதறல் சத்தம்.
…………
இன்ன சாதிக்காரனுக்கும்
இன்ன சாதிக்காரனுக்கும் சண்டை
இரு சாதிக்காரனும்
இறந்துவிட்டனர்
இன்னமும் இறக்கவில்லை
இரு சாதியும் பெயருக்கு பின்னால்.
………..
காற்றில்லாத போதுதான்
எல்லோரும் தூற்றுகிறார்கள்
மின்சார வாரியத்தை.
…………….
புத்தனின் மௌனம்
சலசலக்கிறது
போதிமரச் சருகுகள்.
……………..
வாசித்தப் புத்தகம்
மிகவும் கனக்கிறது
எழுத்தின் தாக்கம்.
…..
............
இப்போதெல்லாம்
ஆற்றைக் கடக்க
நீச்சல் தெரிந்திருக்க
தேவையில்லை..
செருப்புகளே
போதுமானதாய்
இருக்கிறது.
…………
உணர்வின்_தொலைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமக்கான ஊடலில் இஃது
சற்றே பெரும் இடைவெளி
பீப்பாய்களில் நுரைத்திருக்கும்
திரட்சை ரசத்தின்
சுவையையும் போதையையும்
ஆண்டுகளே தீர்மானிக்கிறது
வெறுமை படர்த்திய
கன்னத்தின் ரேகைகளில்
வழிந்துருளும் கண்ணீருடன்
பார்வையை திசைமாற்றி,
நாம் காதலித்த கணங்களில்
போதையேற்றிய வார்த்தைகளின்
ஊறலில் இன்னும்
எறும்புகளாய் விழுந்தூறி
தத்தளிக்கிறோம்
அறைக்குள் அழுது கிடந்த
நம் கண்களுக்கு அழகாய்
அரிதாரமிட்டு
பொய்யாய் புன்னகைக்க
பழகுவதென்பது
நடித்தலினும் கடினம் தானே.!
தொட இயலாத தூரங்களை
நெருக்கமாக்கி கொண்டு
தொட்டுவிடும் இடைவெளியை
எங்கே எப்படி தொலைத்தோம்?
………….
நவீனங்கள்
மல்டிஃபிளக்ஸ்
திரையரங்கில்
தனி இருக்கைகளில்
அமர்ந்திருக்கிறோம்
நொடிக்கு நொடி
காட்சிகள் மாறும்
அந்த மென்னிருட்டில்
உன் முக அழகை
ரசித்துக்கொண்டே
உன் ஐவிரல்களை
கவ்விக்கொள்கிறது
என் ஐவிரல்கள்
பீட்சாவின் துண்டுகளென
பிரித்தெடுக்க முயலும்
உன் விரல்களினூடே
ஒட்டிக்கொள்கிறது
காதலின் ச்சீஸ் இழைகள்
மெல்ல என் தோள் சாயும்
உன் சுவாசங்களில்
இடைவேளை காத்திருப்பில்
இருக்கைக்கே வந்து சேர்ந்த
நாட்சோஸின் நறுமணம்
மினி பாப்கார்ன்
காகிதக் குவளையின்
கடைசி கைத்துழாவல்களில்
பொரிந்தும் பொரியாத
சோளமணிகளை
பொரித்துக்கொண்டிருந்தது
உன் விரல்களின் மென்சூடு
திரைப்படம் நன்றாக
இருந்ததென
நீ மெய்சிலிர்க்க
என் கண்களைப் பார்த்து
சொன்ன தருணத்தில்
மிக அழகாய் முடிந்திருந்தது
நான் எழுதிக்கொண்டிருந்த
கவிதை.!
………….
பரண்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரண் என்பது
தரைக்கும் கூரைக்கும்
இடைப்பட்ட பழையதின்
தளமென நீங்கள்
கடந்துப் போய்விடுவீர்கள்
அதில் சுருட்டி வைக்கப்பட்ட
கழுத் தைத்த பாயில்
கிழவனின் பாரம் சுமந்த
கிழவியின் வெட்கங்கள்
சிதறிக் கிடக்கலாம்
துருப்பிடித்த
அமுல் டப்பாவின்
சில்லரை சப்தங்கள்
இன்னும் முடக்கப்படாத
அம்மாவின் வங்கி கணக்கை
உயிர்ப்பிக்கலாம்
அதன் மீது
கசக்கி எறியப்பட்டு
கரிபடிந்த காகிதத்தில்
பிழைகள் திருத்தப்படாத
முதல் காதலின்
பிதற்றல்கள் இன்னும்
மிச்சமிருக்கலாம்
சொந்தங்கள் படைசூழ
எங்கள் கனவுகளை
அந்தரத்தில் ஆடவிட்டு
சுகமாகத் துயிலச்செய்த
தூளியின் சாயலும்
ஒட்டியிருக்கலாம்
எங்கள் வாழ்வியலை
வார்த்தைகளில்
விவரிப்பதற்குள்
பரண் என்பது
தரைக்கும் கூரைக்கும்
இடைப்பட்ட பழையதின்
தளமென நீங்கள்
கடந்துப் போய்விடுவீர்கள்.
…………….
கொடிது
நீ நின்று ரசித்து
கண்கள் விரிய வியந்துச் செல்லும்
அந்த புத்தரின் சிலைமீது
பாசிகள் மண்டிக்கிடக்கின்றன..
அவர் கிடத்தப்பட்ட
பெயரறியா மரம்கூட
ஞானம் பெற்றுவிட்டதாக
பேசிக்கொள்கிறார்கள்..
எப்படியும் உன் காதலை
என்னிடம் சொல்லிவிடுவாயென
என் மனக்கண்ணிலேயே
பிரயத்தனப்பட்டு
பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
உன் மௌனப் புன்னகைக்கு
மொழியுரு கொடுத்து
தோற்றுக்கொண்டிருக்கிறேன்..
வழக்கம் போலவே
நீ ஏதும் மொழியாத
மறு சந்திப்பொன்றில்
புத்தனை தொட்டெழுப்பி
மௌனம் கலைத்து,
ரௌத்திரம் பழக்கிவிடு..
ரௌத்திரம் கொள்ளுதலொன்றும்
அத்தனை கொடியது அல்ல,
மௌனம் சுமப்பதைக் காட்டிலும்.
……………
கரைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உன்னைப்பற்றிய
நினைவுகள் எப்பொழுதும்
அதீத மண்வாசம் கலந்த ஒரு
சிறு தூறலுடன் தொடங்கி
சாலையோர தோட்டத்து
சாமந்தி வாசம் நுகரச் செய்து
நனைந்த பறவையின் கூட்டில்
சிறகுகளை உலர்த்தி
சில்லிட்டு நனைந்த கைகளை
தேநீர் குவளையில் கதகதத்து
இடி இடித்து, மின்னல் வெட்டி
அடை மழையென வலுத்து
குடையை இழுத்துச் செல்லும்
சாரல் காற்றுடன் சேர்ந்து
பூந்தென்றலாய் மாறி என்னை
உறங்க செய்துவிடுவதெல்லாம்
மீண்டும் ஒரு சிறு தூறலின்
தொடக்கத்திற்காக.!
………..
தொடர்வண்டி
**************************
பரபரப்புகளையும்
தன்னுடனே
சுமந்தேறிய
தலைகளோடு,
அறிமுகமான
மொழிகள்
ஒன்றுக்கொன்று
பேசிக்கொள்கிறது.
அன்னியப்பட்ட
மொழிகள்
புன்னகையுடன்
அமைதி காக்கிறது.
இடம் பிடிக்க போடப்பட்ட
கைக்குட்டைகள்
எல்லைகளை
தீர்மானித்துக்கொள்ள,
பல்லவியை மட்டுமே
பாடி பாடித் தேயும்
தேநீர் விற்பவரின்
கட்டைக்குரலோடு,
பார்வையற்றவர்
விற்கும் பேனாக்கள்
தலைவிதியை
மாற்றி எழுதுகிறது.
காதல் இணையின்
முதல் பிரிவில்
கையசைப்புகள் கரையும்
காட்சிப்பிழையோடு,
முன்பதிவு அல்லாத
பொதுப்பெட்டியில்
கழிக்க முடியாத
கூட்ட நெரிசலில்
சிறிதும் சிரமபடாமல்
சுகமாய் பயணிக்கிறது,
மொழிகளுக்கு
அப்பாற்பட்ட
வசவுகள் மட்டும்.
……………
நனைதல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காய்ந்த சுள்ளியின்
முள்முனைக் கூரில்
கோர்த்த மழைத்துளி
மண் தொட எத்தனிப்பதை
ஒத்திருந்தது...
ஒரு பெருமழை பொழிதலில்
சலசலத்தோய்ந்த
பின்னிரவொன்றில்
முத்தமிடுதலில் மூழ்கிய
உன் உதடுகளின்
மோன வார்த்தைகளை
சிறைபிடிக்க முயலுமென்
மயிர் பரந்த மார்பின்
மையத்தின் மீதுருள
காத்திருக்கும்
உன் நாசிமுனை வியர்வையது.
……….
புதிர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஊருக்கு
ஒதுக்காப்பல தான்
ஒன்னாயி தாசி வூடு
அப்பனும் ஆத்தாளும்
ஒத்த பாடையில
ஒத்துமையா காடு சேர
அனாதயா நின்னவளுக்கு
ஆதரவா தாசி பட்டம்
வானம்பாத்த பூமியில
தப்புச் செடியா ஒத்த புள்ள
"ரமேசு பய என்னைய
தாசி மொவன்னு
சொல்லுதாம்மா"னு
கண்ணெல்லாம் கலங்கி நிக்கு
கூட படிக்கிறவங்க எல்லாம்
அண்ணந் தம்பியாட்டும்
அழாதடா கண்ணுனு
மெல்லத் தட்டி தூங்க வெச்சா
கருக்க சாமத்துல
கதவு தட்டும் சத்தங் கேட்டு
மெல்ல தொறந்து பாக்க
மண்ணெண்ண திரி வெளக்கு
மங்குன வெளிச்சத்துல
பல்ல இளிச்சிக்கிட்டு
முக்காட்ட வெலக்கி நிக்கான்
ரமேசோட அப்பன் ரங்கராசு..
ஆம்பள தாசிக்கு ஏதும்
அகராதியில பேருண்டா.?
…………..
இலக்கணப்
பிழையெனவே
இருந்துவிட்டு போகட்டும்
நான் என்ற ஒருமைக்குள்
நீயும் இருப்பது.!
………
மெல்லினம் ஆடிக்களைத்து
உறங்கபோகும்
சிறுவயது நாட்களில்
நெற்றியினை வருடி
விரலிடுக்குகளில் தலைக்கோதி
மார்பின் மையத்தில்
பெண்டுலத்தின் இசைக்கொப்பாய்
தட்டி தட்டி உறங்கச் செய்யும்
அப்பாவின்
ஏர் பிடித்து காய்த்துபோன கைகள்
இரண்டும்
மயிலிறகென மாறியிருக்கும்.
……..