நீர்த் திமில்களில் மினுங்கும் வலி
நூல் பெயர் : நீர்த் திமில்களில் மினுங்கும் வலி
(கவிதை )
ஆசிரியர் : யூமா வாசுகி
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 86
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் பி.டி.ரெட்டி, ஓவியர் வன்மி
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
எழுத்தெனும் ஏகாந்தப் பெருவெளியில் மாயையும் ஞானமும் மன்றாடி வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கின்றன. மாயையைக் காரணமாகக் கொண்டேனும் ஞானத்தை நோக்கிச்செல்லும் எழுத்தே அமர இலக்கியமாகிறது. படைப்பு மனநிலையின் பேரொழுக்கில் மாயையும் அதன் மூலமான ஞானமும் சர்ப்பங்களின் ஆவேசக் களிநடனம்போன்று பின்னிப் பிணைந்து ஒன்று கலந்தே புரண்டு போகின்றன. மாயை செரித்து ஞானச் சுடர் ஏற்றுவதே அர்ப்பணிப்பின் முகடு. இவ்வாறான ஒரு வாழ்வுப் பிரவாகத்தில் திரண்டதே, 'நீர்த் திமில்களில் மினுங்கும் வலி' எனும் இந்தக் காதல் கூறும் நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும், வலியுடன் வண்ணங்களைக் குழைத்து தனது ஓவியக்கண்களால் வரைந்து இருப்பதும் அது வாசிப்பவரின் மனத்தில் வசீகரத்தின் நிறங்களை வானவில்லாக்குவதும் இந்நூலின் ஆகப்பெரும் பலம்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், வாழ்விடமாகவும், கொண்ட படைப்பாளி யூமா வாசுகி அவர்களுக்கு இது, பதினைந்தாம் நூல். இவரது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என ஏராளமான படைப்புகள் பல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. தமிழக அரசு விருது ஐந்து, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, எழுத்தாளர் மா.அரங்கநாதன் விருது, தன்னறம் விருது ஆகியவற்றோடு பிற அங்கீகாரங்கள் பெற்றவர். தற்போது 2021க்கான படைப்பு குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் இவரைச் சேர்கிறது.