பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்
நூல் பெயர் : பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்
(ஹைக்கூ)
ஆசிரியர் : பிருந்தா சாரதி
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 188
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
வெளியீட்டகம் : இலக்கியப் படைப்புக் குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ150
“எழுதும்போது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது… உள்மனதோடு நேரடியாகப் பேசு - எண்ணங்களைக் கலைந்து போக விடாதே - நேரடியாகச்சொல்” என்கிறார் பாஷோ. பயணங்களே அவரது கவிதைகளுக்கான முக்கிய அகத்தூண்டுதலாக இருந்துள்ளன. பாஷோவின் பயணங்களுக்கான காரணம் இயற்கையை நாடும் பாடலுக்காகவும், ஆன்மீகத் தேடலுக்காகவும்தான். செயற்கையில் கிடைக்கும் மாயையைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் ஞானத்தைத் தேடி பயணித்திருக்கக்கூடும். இல்லையெனில் ஞான ஊற்றெடுக்கும் ஜென் தத்துவத்தை ஹைக்கூவில் கொண்டு வந்திருக்க முடியாது. மனதளவில் உதிக்கும் எழுத்து மாயை; மூளையில் உதிக்கும் எழுத்து அறிவு; ஆன்மாவில் உதிக்கும் எழுத்தே ஞானம். மாயை என்பது மயக்கம். அறிவு என்பது உருவாக்கம். ஞானம் என்பது படைப்பாக்கம். இலக்கியத்தில் ஞானம் என்பது இல்லையென்றால் எழுத்து முழுவதும் மாயைதான். புறவாழ்வு எனும் மாய வெளிச்சத்தைக் கடந்து அகவாழ்வு எனும் ஞான ஒளியைத் தீபமாக வரிகளில் ஏற்றுதல் என்பதே ஓர் அர்ப்பணிப்பின் உச்சம். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பின் அசல் எழுத்துகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே படைப்பாளி பிருந்தா சாரதியின் 'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்' நூல். குருவாக ஒருவரை மனதளவில் ஏற்றுக்கொண்டால் தானாகவே அந்தக் குருவுக்கு நாம் மானசீக சீடராகி விடுவோம். பின்பு வழிகாட்டியாகி விடுவார் அவர், நாம் அவ்வழியில் செல்லத் தொடங்குவோம் அது பக்கத்து நாட்டிலிருந்தாலும் பக்கத்து வீட்டிலிருந்தாலும். பக்கத்திலேயே பாஷோ இருப்பதாக எண்ணி அவர் வழியில் ஹைக்கூவை இயற்கையின் ஞானத் தடத்தில் பயணிக்க வைத்திருப்பதே இந்நூலின் ஆகப்பெரும் பலம்.
சென்னையை வசிப்பிடமாகவும் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரைப்பட இயக்குனரான படைப்பாளி பிருந்தாசாரதி அவர்களுக்கு இது எட்டாவது நூல். இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். ஹைக்கூ வகைமையில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். 2019இல் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியான இவரது ‘இருளும் ஒளியும்’ என்ற ஆழ்மனத் தேடல் நூல் இலக்கிய உலகில் இன்றுவரை கவன ஈர்ப்பும் விருதும் பெற்று வருகிறது. மேலும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும் தனது ‘எண்ணும் எழுத்தும்’ நூலுக்குப் படைப்பு குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதை 2018இல் சிறந்த கவிதை நூலுக்காகப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.