ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள்
நூல் பெயர் : ஊதா நிறக் கொண்டைஊசி கதைகள்
(சிறுகதைகள் )
ஆசிரியர் : கவிஜி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு - 2021
பக்கங்கள் : 238
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 200
கதை கேட்டு வளராத குழந்தைகளே இல்லை. அதனாலேயே எந்த வயதில் கதை கேட்டாலும் அல்லது படித்தாலும் குழந்தை மனம் வந்துவிடுகிறது நமக்கு. பால்ய வயதுகளில் நாம் கேட்ட சில சிறந்த கதைகளே பின்னாளில் அறிவாகவும் ஆற்றலாகவும் மாறுகின்றன. சிலநேரங்களில் பக்குவப்படவும் வைக்கின்றன. கதைகளில் மட்டும்தான் உடனுக்குடன் வரிகள் காட்சிகளாக விரியத் தொடங்கும். கதைகளில் வரும் காட்சி விவரிப்புகளும் கூட நாம் காணும் காட்சிகளில் ஒன்றிணைவதே அதன் தனித்துவம். இந்தத் தனித்துவம் மற்ற இலக்கிய வகைமைகளைக் காட்டிலும் கதை இலக்கிய வகைமையில் சற்று தூக்கலாகவே இருக்கும். இதன் காரணமாகவே ஆதிக் காலந்தொட்டு இக்காலம் வரை கதை அல்லது சிறுகதை இலக்கியத்திற்கு என்று ஒரு வாசகர் அல்லது ரசிகர் பட்டாளமே பின்தொடர்ந்து வருகிறது. அப்படியான தனித்துவமான சிறுகதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வாசிப்பவரை ஒரு மாய உலகத்திற்குக் கடத்திச் சென்று மையல் கொள்ள வைக்கும். இதன் நவீனத்துவமே இத்தொகுப்பின் பலம்.
வால்பாறையைப் பிறப்பிடமாகவும் கோவையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. வால்பாறையே தனக்கு இலக்கியம் வளர முக்கியக் காரணம் எனச் சொல்லும் இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும், கட்டுரைகளாலும், கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். இதன் முதல் பதிப்பு வந்தபோது சிறுகதை பிரிவிலும், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற நாவலுக்காகவும் படைப்பு குழுமத்தின் இலக்கிய விருதை இருமுறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.