பூக்கள் மொழியிலோ, கவிதை மொழியிலோ புறத்தைப் பற்றிப் பேசினாலும் அது அகத்தை ஊடுருவித்தான்
செல்லும். அகத்தை ஊடுருவும் சக்தி எதார்த்தத்திற்கு மட்டுமே உண்டு. எதார்த்தவாதம்
என்பது ஒரு படைப்பின் பொதுப்பெயரே தவிர ஒரு படைப்பாளியின் குணத்தைத்
தீர்மானிக்ககூடியது அல்ல. ஊடுருவல் தான் முக்கியம். எதார்த்தம் சார்ந்த ஊடுருவல்
இலக்கியத்தின் பொக்கிஷம். எதார்த்தத்
தளத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்ற
எல்லா எழுத்துக்களும் ஒன்றாகி நம்மை ஒரு எதார்த்தக் கவிதையை எழுத வைத்து விடும்
என்பதே எதார்த்தத்தின் உச்சம். அது படைப்பாளியின் அனுபவம் சார்ந்த பார்வையை
வலிமையாக்கி விடும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் அடங்கிவிடும்.
அப்படிப்பட்ட எதார்த்தக் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'பொந்திடை
மலர்ந்த பூக்கள்'
நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனதில்
எதார்த்தமாக ஊடுருவும் நினைவலைகளை நிரப்பி விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின்
பலம்.
கடப்பாக்கத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை அண்ணாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட, அரசு அலுவலரான படைப்பாளி “லக்ஷ்மி” அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பும் படைப்பு பதிப்பகம்
வழியாகவே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது. இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைத்தளத்திலும்,
பிரபல பத்திரிகை மற்றும் வார இதழ்களிலும் தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர்.
மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப்
பெற்றவர் மற்றும் படைப்பு பரிசுப்போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்வு
செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.