நூல் பெயர் : ஹைக்கூ தூண்டிலில் ஜென்
(கட்டுரைகள் )
ஆசிரியர் : கோ.லீலா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 182
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவி பேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ150
ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்ட ஜப்பானிய ஹைக்கூ வகைமை, ஆதி மொழியான தமிழுக்கு வரும்போது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் தனது சிறகுகளை விரிக்கிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடான படிமத்தையும், ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள்’ எனப்படுகின்ற குறியீட்டையும் துளிப்பாவில் உட்புகுத்தியதே தமிழின் பெருமையும், கவிஞர் பிருந்தா சாரதியின் தனித்துவமும். அப்படிப்பட்ட தனித்துவமான துளிப்பாக்களையெல்லாம் ஆய்வு செய்து, ஆன்மத்தளத்திலிருந்து அறிவுத்தளத்திற்கு மாற்றியதே படைப்பாளி லீலாவின் சாதனை. மூன்று மூன்று வரிகளில் ஒளிந்திருக்கும் துளிப்பாக்களின் தூரிகைகளை, முப்பரிமாண ஒளிப்படவியலாய் பிரதிபலிக்கச் செய்து விரிவான தகவல்களுடன் இருபது கட்டுரைகளாக விளக்கப்பட்டிருப்பதே ‘ஹைக்கூ தூண்டிலில் ஜென்’ தொகுப்பு. எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்வகையில் ஹைக்கூ மற்றும் ஜென் பற்றிய தேடலுக்கு வழிகாட்டியாக இருப்பதும், சுமார் ஐம்பது ஜப்பானிய ஹைக்கூக்களை மொழிபெயர்ப்பு செய்து தந்திருப்பதும் இந்நூலின் பலம்.
திருக்குவளையை பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட, அரசு பொதுப்பணித் துறையில் நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் படைப்பாளி கோ.லீலா அவர்களுக்கு இது, இரண்டாவது நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பிரபல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர். படைப்பு பதிப்பகம் வெளியிட்ட இவரது முதல் நூலான ‘மறைநீர்’, எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன் கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இந்நூல், விகடன் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.