காதலென்பது உயிரூட்டப்பட்ட ஒரு பொருள். அதன் மொழியாத வார்த்தைகளையும் பகிராத அன்பையும் ஒளிப்பெயர்த்துக் கொண்டிருக்கும் நான்கு விழிகளின் ஆலாபனையே கவிதைகளாக உருமாற்றம் கொள்ளும். இதில் எந்த இரு விழிகள் வரிகள் வழியே சிறகுகளைத் தருகிறதோ மற்ற இரு விழிகள் அந்த சிறகைப்பற்றியே ஓருயிராக யுகம் தாண்டும். இப்படியாக யுகம் தாண்டும் பொழுதில் நிகழும் உணர்வுக் குவியல்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்பாக வெளிவருவதே இந்த "வெட்கச் சலனம்". எந்த காலகட்டத்திலும் காதல் மொழிகளை ஏற்பதில் இந்த சமூகம் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் எழுத்து வடிவில் எப்போதுமே அதை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஒரு பெண் அதை முன்மொழியும்போது அது இன்னும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்த பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.
படைப்பாளி "அகராதி" அவர்கள் தன் குடுவைக் கண்கள் மூலம் உருகி வழியும் இவ்வுலகைப் பார்க்கிறார். அதிலும் தான் பார்க்கும் அனைத்திலுமே காதல் இருப்பதாக நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும்போது வந்து விழும் வார்த்தைகளை சூடு குறையாமல் சேகரித்து கவிதைகளாய் வார்த்தெடுத்திருக்கிறார். இப்படியாக வார்த்தெடுக்கப்பட்டவைகளை ஒன்றுசேர்த்து வடிவம் கொடுத்து நூலாக செய்திருக்கிறோம். மனதின் உள்ளாழங்களை வெளியில் வெளிப்படையாக இயல்பாக சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். திருச்சியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர்.
நூல் பெயர்
வெட்கச் சலனம்
ஆசிரியர்:
அகராதி
பதிப்பு:
முதற் பதிப்பு 2018
பக்கங்கள் :
96
அட்டைப்படம்:
கமல் காளிதாஸ்
வெளியீடு:
படைப்பு பதிப்பகம்
விலை:
90