நினைவிலிருந்து எரியும் மெழுகு
கவிதை செய்வதென்பது ஒரு முப்பட்டகத்தில் நிறப்பிரிகையைத் தருவிப்பதைப் போல. எவ்வாறு ஒரு நிறமற்ற ஒளி நிறங்களோடு பிரதிபலிக்கிறதோ அவ்வாறு ஒரு கவிதையானது வாசிப்பவரின் உள்ளில் பலவித உணர்வுகளை எழுப்பும்போது அக்கவிதை கொண்டாடப்படுகிறது. இத்தகைய கவிதைகளை பெண்கள் எழுதும்போது இயல்பாகவே நளினமும் அழகும் சேர்ந்து மேலும் மெருகேற்றி விடுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எழுதுவதென்பது மிகக் குறைவு. சில தடைகளையும் மீறி ஒரு பெண் எழுதவரும்பொழுது அவர் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தினரால் வீட்டுக்கு அடங்காதவளாகவும் எதிர்த்துப் பேசுபவளாகவும் சித்தரிக்கப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் இந்நவநாகரீக உலகம் பெண்களை இன்னும் பூட்டியே வைத்திருக்கிறதா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இத்தகைய நிலைப்பாட்டை உடைக்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையோடு வெளியிடும் " நினைவிலிருந்து எரியும் மெழுகு" கவிதைத் தொகுப்பு.
படைப்பாளி ஆனந்தி ராமகிருஷ்ணன் சூடுகுடித்து உருகி வழியும் மெழுகைப் போலவே தன் கவிதைகளை வார்த்தெடுத்திருக்கிறார். உருகும் மெழுகானது இயல்பாகத் தன் வடிவங்களைச் செய்யும் என்பதைப் போலத்தான் இவரது கவிதைகள். ஒரு நுண்ணிய உணர்வு இவரது கவிதைகளெங்கும் இழையோடிக் கொண்டே வருகிறது. சிதம்பரத்தை வசிப்பிடமாகக் கொண்டு கணினித்துறையில் பணிபுரியும் இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். எதிர்கால கவிதை உலகில் இவருக்கான ஒரு சிவப்புக் கம்பளம் காத்திருப்பது திண்ணம்.
பொதுவாகவே ஊர்ப்புறங்களில் ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணிற்குத்தான் தெரியுமென்றுச் சொல்வார்கள். அவ்வாக்கைத் தன் அழகான அணிந்துரையால் பொய்ப்பித்திருக்கிறார் இயக்குனர் பிருந்தா சாரதி. அவருக்குப் படைப்புக்குழுமம் தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது
எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி ஆனந்தி ராமக்கிருஷ்னன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.