அம்மாவின் அடுக்களைப் பல்லி
நூல் பெயர் : அம்மாவின் அடுக்களைப் பல்லி
(கவிதை )
ஆசிரியர் : சத்யா மருதாணி
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 106
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
இருண்மைக்குள் ஒளிப்பூக்கும் அதிசயம் அம்மாவின் அடுப்படியில்தான் நிகழும். அன்பின் அனல் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கும் இடமும் அதுவே. எதிலும் காரத்தை ஏற்றியதே இல்லை பதார்த்தத்திலும் எதார்த்தத்திலும். எல்லோருக்கும் எதிரே இருப்பதுபோல தெரிந்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது அம்மாவின் முந்தானைக்குள் குழந்தைகள் ஒளிந்து கொள்வதை. சமைப்பதில் இருக்கும் அலுப்புகளை எல்லாம் பரிமாறும் வேளையில் பட்டாம்பூச்சியாக்கி விடுவாள் அம்மா. அவள், கடைசியாகத் தூங்கும் நிலா, முதலில் எழும் சூரியன். அப்படிப்பட்ட எதார்த்த வாழ்வின் பாதித்த தருணங்களின் காட்சிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஞாபகங்களின் நீட்சிகளாக உருமாற்றி உருவாக்கப்பட்டிருப்பதே 'அம்மாவின் அடுக்களைப் பல்லி' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வகையில் வாசிப்பவர் எல்லோருக்கும் தங்கள் வாழ்வில் கடந்து சென்ற நிகழ்வாக இருப்பது போல ஒரு பிரம்மையை ஏற்படுத்தி விட்டுப் போவதே இத்தொகுப்பின் பலம்.
சத்யமங்கலம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், கோயம்புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி 'சத்யா மருதாணி' அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இன்றை இணைய ஊடங்களில் தனது இலக்கியம் மற்றும் சமூக பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கும் வளரும் படைப்பாளருக்கான தஞ்சை பிரகாஷ் நினைவு விருதையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது