நூல் பெயர் : சிவப்பு நிறத்தில் ஒரு வானம் (கவிதைகள்)
ஆசிரியர் : லக்ஷ்மி
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
145
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
வாழ்வென்பது ஒரு பொய்; அதுவும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின்
தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். ஆனால் இந்த வாழ்வு என்ற நடைமுறைப் பொய்தான்
சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்திருக்கிறது. உண்மையில்
சூரியனை விட நட்சத்திரங்கள் பெரியது என்கிறது விஞ்ஞானம். இங்கே கண்களால் காண்பது பொய்.
கவிதையில் நிலவு போல கன்னம் என்கிறான் காதலன். உண்மையில் கன்னத்தைப்போல அவ்வளவு சிறியது
அல்ல நிலவு என்கிறது மெய்ஞானம், இங்கே காதுகளால் கேட்பதும் பொய். ஆனால் இந்த கவிதை
என்ற நடைமுறைப் பொய்தான் இலக்கியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட பொய்யில் மெய்யும், மெய்யில் பொய்யும் இழையோடும் வாழ்வியலின் எதார்த்தக் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
‘சிவப்பு நிறத்தில் ஒரு வானம்‘ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனதில்
எதார்த்தமாக ஊடுருவும் மெய்நிலைகளை நிரப்பி விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
கடப்பாக்கத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை அண்ணாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட,
அரசு அலுவலரான படைப்பாளி “லக்ஷ்மி” அவர்களுக்கு இது மூன்றாவது தொகுப்பு. இவரது முதல்
இரண்டு தொகுப்புகளும் படைப்பு பதிப்பகம் வழியாகவே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது.
இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைத்தளத்திலும், பிரபல பத்திரிகை மற்றும் வார இதழ்களிலும் தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். மேலும்
படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் மற்றும்
படைப்புக் குழுமத்தின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர். மேலும் படைப்பு
பரிசுப்போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.