நூல் :
ஆண்டாள் சடையில் முளைக்கும் தானியம்
நூல் வகைமை : சிறுகதைகள்
ஆசிரியர் : தொகுப்பு ஆசிரியர் பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 88
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 140
ஆண்டாள் சடையில் முளைக்கும் தானியம் என்ற இந்த தொகுப்பில் கைலாஷ் சிவன், ஷங்கர ராமசுப்பிரமணியன், முத்து மகரந்தன் - குமணன் ஆனார், கமலம், அசோக், பைசல் பொன் இளவேனில், பாட்டக்குளம் துர்க்கையாண்டி, திசேரா ஆகியோரின் பத்து புனை கதைகள் இடம்பெறுகிறது. உள்ளடக்கத்திலும் பேசு பொருளிலும் நவீன அறத்தின் அடி ஆழத்திற்கு சென்று வாழ்வின் மீதான அடிப்படை உரையாடலை பம்மாத்துகளேதுமின்றி நிகழ்த்தியுள்ள இக்கதைகள் நீட்சி இதழில் வெளிவந்து தனிக் கவனம் பெற்றது.
பூரண எளிமையில் சம்பூர்ணமடைந்த கதைகளென்று இக்கதைகளை வகைப்படுத்த இயலும் என்று நினைக்கிறேன். பௌதீக இருப்புடனான கேள்விகளே பிரதானமாக இக்கதைகளில் பேசுபொருள். யானை மலை கதை இதில் வேறுபட்டு அசேதன் பேரிருப்பின் கதையாகவும் வெளிப்பட்டுள்ளது. இத்தொகையில் எழுப்பப்படும் உடலும் மனமும் பற்றிய கேள்விகள் சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்குமானது. பொதுவில் எழுதாத எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் எழுதி எழுப்பியுள்ள வாழ்க்கையும் புனைவும் ஒன்று சேரும் ஒரு புள்ளியில் இத்தொகுப்பு பன்னெடுங்காலம் பட்டை தீட்டப்பட்ட வைரத்திற்கு ஒப்பாக மிளிர்கிறது.