பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை
நூல் பெயர் : பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை
(கவிதைகள் )
ஆசிரியர் : வீரசோழன் க.சோ.திருமாவளவன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 110
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஹாசிப்கான்
உள் ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
மௌனமாக இருப்பவர்களை ‘பொம்மை’ என்பர். எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் அதே பொம்மைகளிடம்தான் குழந்தைகள் அவ்வளவு பேசுகின்றன காரணம் குழந்தைகளுக்குத் தெரியும் பேசும் பாஷையை விட மௌனத்தின் மொழி சிறந்ததென! நேராக நிற்கும் மனிதர்கள் தள்ளாடிக் கொண்டே இருப்பதும், தள்ளாடிக் கொண்டே இருக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் கடைசியில் நேராகவே நிற்பதும்தான் பொம்மைகளின் தனித்துவம். அதிலும் அறிவிலும் அறிவியலிலும் சிறந்த பொம்மைகள் இவை. அதனால்தான் புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வல்லமையைப் பெற்றிருக்கின்றன. காட்சிக்கலையாகும் பொம்மலாட்ட பொம்மைகளும் காவல் சிலையாகும் சோளக்காட்டுப் பொம்மைகளும், பேசி சாதிப்பதை விட பேசாமல் சாதிக்க முடியும் என சவால் விடும் பொம்மைகள். இப்படிப்பட்ட மௌனமாக இருக்கும் சொற்களை மாயம் செய்யும் எழுத்துகளாக மாற்றி இருப்பதே ‘பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை’ எனும் நூல். இதில் ஒவ்வொரு கவிதையும் எளிய நடையில் இருப்பதும் அது வாசிப்பவர்களின் மனதில் மௌனமாய் நுழைந்து மயக்கிச் செல்லும் என்பதும் இந்நூலின் மிகப்பெரும் பலம்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி வீரசோழன் க.சோ.திருமாவளவன் அவர்களுக்கு இது முதல் நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மொரீசியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வையாபுரி பரமசிவம் பிள்ளை அவரிடமிருந்து தனது கவிதைக்காக முதல் பரிசு பெற்றுள்ளார். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் ‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற அங்கீகாரத்தை கவிதைக்காகவும் கட்டுரைக்காகவும் இருமுறை பெற்றுள்ளார்.