நூல் பெயர் : அம்பேத்கரும் சூழலியலும் (கட்டுரைகள்)
ஆசிரியர் : கோ.லீலா
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
126
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 180
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வளிமண்டலத்திற்கும் கடல் தளத்திற்கும் இடையில்
வாழ்கின்றன. ஒளி, காற்று, நீர் மற்றும் மண் உள்ளிட்ட உயிரினங்களைச் சுற்றி இருக்கும்
சூழலே சுற்றுச்சூழல் எனப்படும். ஒவ்வொரு உயிரினமும் இங்கு உயிர் வாழ வேண்டுமெனில் அது
ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அமைப்பில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இந்த தொடர்பென்பது உயிரினங்களிலிருந்து உயிரினங்களுக்கு
வேறுபட்டிருந்தாலும், உயிரினங்களின் இடையிலான இந்த உறவு, வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு
மிகவும் முக்கியமானது. அனைத்து உயிரினங்களுக்கும்
பொதுவான இயற்கை வளங்களை மனிதர்கள், சாதி, மதம், இனம், நிறம், பொருளாதாரம், ஆகிய
அடுக்குமுறையின் ஏற்றதாழ்வு அடிப்படையில் இன்னொரு மனிதனுக்கு கிடைப்பதை தடைசெய்யும்போது
ஏற்படுகின்ற சமூக சீர்குலைவுகள், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையேயான தொடர்பு,
மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு, கானுயிர்களுக்கும் இயற்கைக்குமான
தொடர்பு என, ஏதோ ஒரு வகையில் இச்சூழலியலின் சங்கிலித்தொடர் துண்டிக்கப்படும்போது இயற்கையால்
நாம் தண்டிக்கப்படுகிறோம்.
அது புவி வெப்பமடைதல் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதில் தொடங்கி சுனாமி, சூறாவளி,
புயல், வெள்ளம், மழை, மண்சரிவு என எதிர்மறை இயற்கை நிகழ்வுகளில் வந்து முடியும். சுற்றுச்சூழலுக்கு
தீங்கு விளைவிக்காத வகையில் சூழலியலை அனைவருக்கும் பொதுவாக வைக்க சட்டங்கள் கொண்டு
மீட்டெடுத்த இயற்கை ஆர்வலர் அம்பேத்கரையும், மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்காத வகையில்
வாழ்வியலை முன்னெடுத்த சமூக ஆர்வலர் அம்பேத்கரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து
உருவாக்கி இருப்பதே ‘அம்பேத்கரும் சூழலியலும்‘ நூல்.
திருக்குவளையை பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும்
கொண்ட, தமிழ்நாடு அரசு நீர்வளத் துறையில்,
உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் படைப்பாளி கோ.லீலா அவர்களுக்கு இது, பத்தாவது நூல்.
இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பிரபல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.
மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான
அங்கீகாரத்தையும், படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதையும் பெற்றவர்.