நிசப்தங்களின் நாட்குறிப்பு
தமிழ்ச்சமூகமானது தன் ஆதிக்காலம் தொட்டே வாழ்வியல் நெறிகளை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.எந்த ஒரு விடயத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல சுருங்கச் சொல்லினும் அதனுள் மலையளவு அர்த்தத்தைப் பொதிந்து வைத்திருப்பார்கள் நம் முன்னோர்கள். அதன் தொடர்ச்சியாகவே ஜப்பானிய ஹைக்கூ, அரேபியக் கஸல் வகைமைகள் வாசகர்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இருப்பினும் தன் ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக படைப்புக்குழுமம் குறும்பாக்களை வெளிக்கொணர்வதிலும் தன்முனைப்போடு இயங்கி வருகிறது.
அதன் உந்துதலே இந் “ நிசப்தங்களின் நாட்குறிப்பு” தொகுப்பு. தமிழகத்தின் தென்பகுதியில் இயல்பாகவே அழகியலும் அனுபவங்களும் இறைந்து கிடக்கும். அவர்களின் வாழ்வியல் குறிப்புகளைத் தன் குறும்பாக்களால் சிலாகிக்க வைத்திருக்கிறார் படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன். சங்கரன்கோவிலை வாழ்விடமாகக் கொண்ட இவர் மின்சார வாரியத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார். தனது மண் வளத்தை, உறவுகளின் வலிமையை, அன்பின் ஆழத்தை குறு விதைகளாகத் தூவிவைத்திருக்கிறார். அவைகள் வாசிப்பவரினுள் விருட்சங்களாய் விரியும்.
ஒரு கண்ணாடிப் பேழையை வைர ஊசி கொண்டு வடிப்பதைப் போல இக் குறும்பாத்தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் திரு.மு.முருகேஷ் அவர்களுக்கு படைப்புக்குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.
எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதைத் தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.குமரேசன் கிருஷ்ணன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.