நூல் பெயர் : கார்முகி
(கவிதைகள்)
ஆசிரியர் : கோபி சேகுவேரா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 127
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : சந்தோஷ் நாராயணன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
புரட்சி என்பது வெறும் சொல் மட்டுமே. அதை உணர்ச்சிமிக்க உரைகளின் வழியாகவோ அல்லது எழுச்சிமிக்க எழுத்துகளின் வரியாகவோ வெளிவரும்போதுதான் அது செயல் வடிவம் பெறும். ஒரு சொல் செயலாக மாறவில்லையெனில், கனிகளை வழங்கினாலும் கழிவுகளாகத்தான் தேங்கிக் கிடக்கும். அதே சொல் செயலாக மாறினால், விதைகளை விழுங்கினாலும் விருட்சமாக வெளியேவரும் ஆற்றல் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆற்றல்மிக்க சொற்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’கார்முகி’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதை. அதில் சாதி மறுப்பு, சமூகம், கடவுள், பகுத்தறிவு, காதல், காமமென எல்லாமே கலந்திருக்கும். வாசிப்பவர்களின் தேர்வுக்கேற்ப வேர்விடத் தொடங்கும் வல்லமையே இந்நூலின் ஆகப்பெரும் பலம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புனல்வாசல் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கோவையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி, கோபி சேகுவேரா அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. வாசிப்பை தன்வசப்படுத்தி அதன்மூலம் எழுதத் தொடங்கி, பொதுப்புத்தியின் மனசாட்சியை நொறுக்கவேண்டும் என்ற நோக்கில், தனக்கான தனித்துவமான பாதையை அமைத்துக் கொண்டவர். இவரது பல கவிதைகள் பலரின் பாராட்டுதலோடு, இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைதளங்களிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.