மனிதருக்கு வாழ்வு என்பது
ஒரு பயணம். எழுத்தாளருக்கு வாழ்வு என்பது ஒரு இலக்கியம். இலக்கியத்தை வைத்துத்தான்
தங்களது வாழ்வை தகவமைத்துக் கொள்கிறார்கள் கவிஞர்கள். இதில் தனிச்சிறப்பு என்னவென்றால்
தங்கள் வாழ்வை மட்டுமின்றி எல்லோருடைய வாழ்வையும் அவர்கள் இலக்கியத்திற்குள் கொண்டு
வந்து விடுகிறார்கள். அதிலும் கவிதைக்குள் கொண்டு வருவது என்பது ஆகச் சிறந்த வாழ்வின்
பயணமாகி விடுகிறது. ஒரு எதார்த்தத்தை கவிதையாக்கும் போது ஒரு எதார்த்த வாழ்வையே தம்மால்
வாழ்ந்துவிட முடிகிறது என்று நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட எதார்த்தக் கவிதைகளை
எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'ரயில் கோமாளிகள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும்
வாசிப்பவரின் மனதில் எதார்த்தமாக ஊடுருவும் நினைவலைகளை நிரப்பி விட்டுச் செல்லும் என்பதே
இந்நூலின் பலம்.
திருப்பூர் மாவட்டம்
உடுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ஜே.மஞ்சுளாதேவி அவர்களுக்கு இது பதினாறாவது நூல். கோவைவானம்பாடி இயக்கம்
பற்றி,கவிஞர் சிற்பியின் வழிகாட்டலில்
ஆய்வு செய்து முனைவர் பட்டம். "கவிதையே வழ்வாக" என்ற தலைப்பில் கவிஞர் சிற்பி
பற்றிய இவரின் அண்மை நூல் வாழ்க்கை வரலாற்று நூல்களின் பதிவில் ஒரு புதிய எழுத்துமுறையைக் கொண்டது.இவரது கவிதைகளில்
பொதிந்துள்ள கதை கூறல் இவரது கவிதைகளின் தனித்தன்மையாகத் திகழ்கிறது. அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் மனிதர்களின் ஆவணம் என்று இவரது கவிதைகளைச் சொல்லலாம். சிற்பிக்கும், கோவை ஞானிக்கும் இவர் மாணவி
.திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது," நெருஞ்சி" இலக்கிய விருது
பெற்றுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.