தேவதை என்பது நேசத்தின் ஒற்றை எழுத்து. தேவதை என்பது ஒரு கனவுச் சொல். தேவதை என்பது கற்பனைக்கு எட்டாத காதல் வாக்கியம். தேவதை என்பது கண்களால் மட்டும் பார்த்து ரசிக்க தோன்றாத கவிதை மொழி. தேவதை என்பது பேராசைகளின் ஆதுரத்தில் பொங்கி வழியும் ஓவியம். தேவதை என்பது மனத்தின் ஆழத்தில் யாரும் கடக்க முடியாத தூரத்தை சில கணப் பொழுதுகளில் கடந்து அன்பின் நேர்கோட்டை அசைத்துப் பார்க்கும் அதிசயம். தேவதை என்பது சொல்லத் துடிக்கும் ஆசைகளை தூரிகைகள் கொண்டு எழுதி தீர்க்கும் தனிப்பெரும் சுகம். இப்படிப்பட்ட தேவதைகளின் நேச மூலக்கூறுகளை எல்லாம் கவிதைக்குள் பொருத்தி அதன் அன்பின் அட்டூழியங்களை அடையாளப்படுத்தி இருப்பதே ‘தேவதையின் அட்டூழியங்கள்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும் எல்லோருக்கும் தாம் நேசித்த அனுபவித்த நினைவுகள் போல காட்சிகள் கண்முன் விரிவதே இந்நூலின் பலம்.
வேலூர்
மாவட்டம் தோட்டாளம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கிருஷ்ணகிரியை வசிப்பிடமாகவும்,
இயன்முறை மருத்துவருமான படைப்பாளி ‘பிரபு சங்கர்.க’ அவர்களுக்கு இது மூன்றாம்
தொகுப்பு. இவரது இரு நூல்கள் படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிட்டு பலரது கவன
ஈர்ப்புகளையும் பாராட்டுகளையும் பெற்றது. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை
மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்பு
குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த
படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் தனித்துவமான
விருதையும் பெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கது.