நூல் பெயர் : மனமெனும் மாயம் (கட்டுரைகள்)
ஆசிரியர் :
ச.உமா கண்ணன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
166
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 230
வாழ்வின் அர்த்தத்திற்கான தேடலை உள்ளடக்கியதும், மனமென்னும் மாயவெளியில் வாழ்வையும்
வழிமுறைகளையும் சுய-பிரதிபலிப்பு செய்து பார்ப்பதும், ஆய்வு செய்யப்படாத அகவாழ்க்கையை உள்வாங்கி ஆய்வு செய்யப்படும் புறவாழ்வைப்
புறந்தள்ளி வைப்பதும், அறிவியலையும் நினைவுக்
கலையையும் ஒன்றிணைப்பதும், உயிரினங்களின் எல்லையற்ற,
இறுதி ஆதாரமான, பெயரற்ற, உருவமற்ற மற்றும் பண்புக்கூறுகள் இல்லாதவற்றின் மீது நம் கவனத்தை
செலுத்துகிற ஒன்றே ஆன்மிகம். இந்த ஆன்மீக அணுகுமுறை மூலம் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும்
பண்பாடுகளைக் கொண்டவர்களையும் அன்பு கொண்டு ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைக்க முடியும் என்பதே
அதன் ஆகப்பெரும் பலம். அந்த பலமே மனித ஒருமைப்பாட்டைக் கொண்டுவருவதற்கான மிக சக்திவாய்ந்த
கருவி எனலாம். உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் அமைதி உள்ளிருந்து வருகிறது என
ஆன்மீகம் நமக்குக் கற்பித்ததை அறியாத தருணத்தில், நாம் நிறைவான வாழ்வைப் பெற்று இருப்பதாக நினைத்தாலும்,
வெறுமையின் உணர்வை, ஏதோ ஒரு வரையறுக்க முடியாத பற்றாக்குறையை வெற்றிடமாக நமக்குள் துளிர்ப்பதை
தடுக்க இலயலாது. ஆன்மிகம் உள்நிலை மாற்றத்தின் மூலம் நம் வாழ்வில் நீடித்த மற்றும்
அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருகிறது. நாம் மாறும்போது, நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சமும்
மாறுகிறது. இந்த மாற்றத்தின் மூலம், இதயத்தின் உள்ளார்ந்த குணங்களான தைரியம், நம்பிக்கை,
ஆச்சரியம், இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பு போன்றவை
வளர்கின்றன. இப்படிபட்ட ஆன்மீகக் கருத்துக்களை ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
‘மனமெனும் மாயம்’ கட்டுரை நூல்.
நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ச. உமா கண்ணன்
அவர்களுக்கு இது மூன்றாவது நூல். இவர் நாகர்கோவில்
புனித சிலுவைக் கல்லூரியில் விலங்கியல் படிப்பு மற்றும் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப்
பட்டமும் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்
போது நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாகச்
செயலாற்றிய இவரைக் கௌரவிக்கும் விதமாக
1990 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்கியது. 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு
அரசு நாட்டு நலப்பணித் திட்டத்துக்கான விருது வழங்கியது. அதன்பின்னர் தென்மேற்கு ஆசிய
நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் ஜப்பானில் நடைபெற்ற இளைஞர் கூடுகையில் கலந்து கொண்டுள்ளார்.
2018ல் தினமணியின் ‘பெண் சாதனையாளர்’ விருதும் பெற்றுள்ளார். அட்டைப் பெட்டித் தொழிற்சாலை ஒன்றை நிர்வகித்து
வரும் இவர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட பாலமந்திர் காமராஜ் ட்ரஸ்ட் குழந்தைகள் காப்பகத்தின் நாகர்கோவில் கிளையின் நிர்வாகக் குழு
உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார் . இலக்கியத்தில்
ஈடுபாடு கொண்ட இவர், ஏற்கனவே ‘மொழி மறந்த மௌனங்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பையும், அறுவடை
என்கிற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.