பச்சையம் என்பது பச்சை ரத்தம்
நூல் பெயர் : பச்சையம் என்பது பச்சை ரத்தம்
(ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் : பிருந்தா சாரதி
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 112
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவி பேலட்
வெளியீட்டகம் : இலக்கியப் படைப்புக் குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
விதையிலிருந்து தொடங்கி இலையாகி, கிளையாகி, பூவாகி, காயாகி, கனியாகிக் கடைசியில் வீணாகிப் போனாலும் விறகாகி நிற்கும் விருட்சமே இயற்கை. செயற்கை ஒருபோதும் இயற்கையாகிவிட முடியாது. புதைத்தால் பிணமாவது செயற்கை; வனமாவது இயற்கை. அப்படிப்பட்ட இயற்கையின் அடிப்படைகளைக் கொண்ட சூழலியலை எல்லாம் குறும்பாக்களில் கொண்டுவந்திருப்பதே ’பச்சையம் என்பது பச்சை ரத்தம்’ நூல்.
சூழலியல் என்பது இயற்கையைப் பற்றியது. ஹைக்கூ என்பது இயற்கையைப் பாடுவது. இயற்கையையும் சூழலியலையும் எல்லா இலக்கிய வகைமைகளிலும் எழுத முடிந்தாலும் அதை ஹைக்கூ வடிவத்தில் கொண்டு வர வேண்டும் என்ற படைப்பாளரின் சிந்தனை இன்றைய சூழலில், சூழலியலின் படைப்புகளில் பச்சை ரத்தம் பாய்ச்சுகிறது. மரமென நிற்பவர்கள் ஒருபோதும் வழிகாட்டி ஆவதில்லை. மாறாக, மரமாக நிற்பவர்களே வழிகாட்டி ஆகிறார்கள். அப்படி, ஹைக்கூ மரமாக நின்று வருங்காலத்தில் சூழலியல் தேடலுக்கு வழிகாட்டி நிற்கும் சிறப்பே இந்நூலின் பலம்.
கும்பகோணத்தைப் பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரைப்பட இயக்குனரான படைப்பாளி பிருந்தாசாரதி அவர்களுக்கு இது ஏழாவது தொகுப்பு. இவர், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். ஹைக்கூ வகைமையில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். 2019இல், படைப்பு பதிப்பகம் மூலம் வெளியான இவரது ‘இருளும் ஒளியும்’ என்ற ஆழ்மனத் தேடல் நூல், இலக்கிய உலகில் கவன ஈர்ப்பு பெற்றுவருகிறது. மேலும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும் தனது ‘எண்ணும் எழுத்தும்’ நூலுக்குப் படைப்புக் குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் இலக்கிய விருதை, 2018-இல் சிறந்த கவிதை நூலுக்காகப் பெற்றவர்.