நூல் பெயர் : நதியும் கடலும் (நேர்காணல்கள்)
ஆசிரியர் : க.சோ.திருமாவளவன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
276
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 380
பொதுவாக நேர்காணல் என்பது ஒருவர் கேள்விகளைக் கேட்க, மற்றவர் அந்தக் கேள்விகளுக்கு
பதிலளிக்கும் இருவழி உரையாடலாக இருக்கும் மேலும் அது இரகசியத்தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
ஆனால் பொதுவாழ்வில் போற்றப்படும் மனிதர்களின் நேர்காணல்களோ அல்லது இலக்கியத்தில் போற்றப்படும்
படைப்பாளர்களின் நேர்காணல்களோ மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும். காரணம்
அது பொதுமக்கள் அல்லது வாசகர்களின் பார்வைக்குள் நுழைந்து வருங்கால சந்ததியினருக்கு
எடுத்துக்காட்டாக மாறும் வாழ்வியல் பாடமாகி விடுகிறது. இலக்கிய படைப்பாளிகள் பங்கேற்பாளர்களாக
இருக்கும் இப்படிப்பட்ட நேர்காணல்கள் வெறும் கேள்வி - பதில் வகைமைக்குள் மட்டும் அடங்குவதில்லை
மாறாக அது படைப்பாளர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் அவர்களது படைப்புகளின் பயணம்
குறித்தும் ஆவணப்படுத்தப்படுகிறது. அவ்வாறு படைப்பாளி வீரசோழன் க.சோ.திருமாவளவன் அவர்கள் படைப்பு தகவு
மின்னிதழுக்காக எடுத்த நேர்காணல்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே “நதியும்
கடலும்” நூல்.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட
படைப்பாளி வீரசோழன் க.சோ.திருமாவளவன் அவர்களுக்கு
இது நான்காம் நூல். இவரது முதல் நூல் படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பலரது
கவனம் பெற்றது. இவர் இன்றைய இலக்கிய உலகிலும் பத்திரிக்கை மற்றும் இதழ்களிலும் தன்
படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மொரிஷியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் வையாபுரி
பரமசிவம் அவரிடமிருந்து தனது கவிதைக்காக முதல் பரிசு பெற்றுள்ளார். படைப்புக் குழுமத்தின்
‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற அங்கீகாரத்தை கவிதைக்காகவும் கட்டுரைக்காகவும் இருமுறை
பெற்றவர் மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.