நூல் பெயர் : தேநீரைக் கைதொழுதல்
(கவிதைகள்)
ஆசிரியர் : மணி சண்முகம்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 102
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் கவிமணி
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
உலக மனிதர்களின் ஒப்பற்றதும் ஒற்றுமைக்குமானதும் சூடாக இருந்துகொண்டு மனதைக் குளிர்விக்கக் கூடியதுமான ஒரு திரவம் தேநீர். அருந்தும்பொழுது நம்மிடம் தோன்றும் அதன் நிறம், மணம், சுவையை விட அதை உபசரித்தவரிடம் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடுதான் இதன் மகத்துவம். சில நேரங்களில் தேநீர் மட்டும் தேவைப்படுகிறது. அதற்குப் பல காரணங்கள், நட்பு, தனிமை, வெற்றி, தோல்வி, சோகம், மகிழ்ச்சி என்பவை போன்று. பல நேரங்களில் தேநீர் மட்டும் கிடைக்கிறது. அதற்கு ஒரே காரணம்தான்,ஏழ்மை தரும் பசி. இதனையொத்த கவிதைகளைத்தாம், துகள்களாக்கி, சுவைசேர்த்து, காய்ச்சி, வடிகட்டி தேநீர்விருந்தாகப் பரிமாறப் பட்டிருப்பதே "தேநீரைக் கைதொழுதல்" எனும் இத் தொகுப்பு. பொதுவுடைமை பானம் பாடுபொருளாக இருப்பதும் அதைப் புரியும் வகையில் மிக எளிமையாக, எதார்த்தமாகச் சொல்லி இருப்பதும் இந்நூலின் பலம்.
கடலூரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி சண்முகம் அவர்களுக்கு இது பதினொன்றாவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் காவல்துறைப் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.