நூல் பெயர் : அவன் எப்போது தாத்தாவானான் (கவிதைகள்)
ஆசிரியர் : விக்ரமாதித்யன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் : 134
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 180
ஒவ்வொருவரும்
தனது அக, புற உலகுகளை மொழியின் மேற்பார்வையிலேயே ஊடுருவ இயலும். மொழியின் இயல்பிலிருந்து
மாறாமல் அதே நேரத்தில் தன்னியல்பாகவும் தரிசிக்க இயலும் என்றால் அது இலக்கியத்தால்தான்
முடியும். மொழிக்குள் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கத் திளைக்க, கவிஞன் சொற்கள் எனும் சாளரங்களின்
வழியே கவிதையை நிகழ்த்திக் கொண்டே செல்கிறான். மொழி அவனை இழுத்துக்கொண்டே செல்கிறது.
இலக்கியம் அவனை அரவணைத்துக்கொண்டே நிற்கிறது. கலையும் இலக்கியமும் சுதந்திரமானது; கட்டுகளற்றது.
தனது கற்பனை வீச்சுக்கு ஏற்றவாறு மொழியை இலக்கியகர்த்தா பயன்படுத்திக் கொள்கிறானோ அதே
போல இலக்கியமும் அவனை பயன்படுத்திக்கொண்டு அவன் மூலமாகவே படைப்புகளைப் பிரசவித்து விடும்.
அப்படி பிரசவிக்கப்பட்ட கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “அவன்
எப்போது தாத்தாவானான்” நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.