எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு
எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு
நடன. சந்திரமோகன்
இலக்கியங்கள் எவ்வகையானாலும், அதை சுருங்கச் சொல்வதிலேயே
அதன் உன்னதம் உணரப்படுகிறது. அந்த உணர்தலின் வெளிப்பாடே அதை
உயர்த்தவும் செய்கிறது. அப்படி உயர்வான இலக்கியங்கள் செய்வதில்
தமிழே முதன்மையான மொழியாகவும் மூத்த மொழியாகவும் இருக்கிறது.
அதில் ஈரடியில் சொன்ன வள்ளுவரும், ஓரடியில் சொன்ன ஔவையாரும்
முன்னோடிகள். அதன் நீட்சியாக ஹைக்கூ, சென்ரியூ, துளிப்பா, குறும்பா
என இன்று உலகில் பல வகைமைகள் வலம் வருகின்றன. அப்படிப்பட்ட,
சுருங்கச்சொல்லி பெரிய பொருள் தரும் குறும்பாக்களால் சமூகம்,
வாழ்வியல், அழகியல் என எல்லா உணர்வுகளையும் ஒன்றுதிரட்டி
தொகுக்கப்பட்டிருப்பதே ‘எரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு’ தொகுப்பு.
சாமான்யர்களுக்கும் புரியும்வகையில் மிக எளிமையாக, எதார்த்தமாகச்
சொல்லியிருப்பது இந்நூலின் பலம்.
தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவரான படைப்பாளி
நடன. சந்திரமோகன் அவர்களுக்கு இது நான்காவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும்
பேரிதழ்களிலும் மருத்துவப் பணியோடு இன்றும் எழுதிவருகிறார். தன்
கல்லூரிக் காலத்தில், நாடகத்தை அரங்கேற்றி முதல்பரிசு பெற்றவர். மேலும்
'80களில் தஞ்சையில், கவிநிலா எனும் திங்களிதழை கவிதைக்காக மட்டுமே
வெளியிட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.