அம்மாவின் அன்பு
என்பது ஆதுர மொழியின் அரவணைப்பு போன்றது. காலத்தால் அளக்க முடியாததை,
தன் கண்களால் அளந்து விடும் கருவி
அம்மா. அவளுக்கென ஒரு தனி உலகம் இருக்கும். அது, தான் பெற்ற குழந்தையின் உலகம். யாரும் செல்ல முடியாத
தனிமையின் பரவசத்தை, யாரும்
சொல்ல முடியாத மொழியின் ரகசியத்தை அவள் தன் குழந்தைக்கு முத்தமாக மொழிபெயர்த்து
வைத்திருப்பாள். எழுத்தின் முத்தம் கவிதை. கவிதையின் முத்தம் அம்மா. இதுபோன்ற
பரவசம் மிக்க கவிதைகளையும், வாழ்வையும்
வாழ்வியல் சார்ந்த கவிதைகளையும் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே "அம்மாவின்
முத்தமொன்று பாக்கி இருக்கிறது" நூல். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும்
நவீனமாகவும் அதே நேரத்தில்
எல்லோரும் எளிமையாகப்
புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருப்பதே இந்நூலின் பலம்.
கள்ளக்குறிச்சி
மாவட்டம், தண்டலை
எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சரண்யா
சத்தியநாராயணன் அவர்களின் முதல் நூல் இது. இவரின் கவிதைகள் பிரபலமான பல
பத்திரிகைகள், இதழ்களில்
பிரசுரமாகி பரவலான கவனிப்பு பெற்றிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும்,
படைப்புக் குழுமத்தின் உயரிய
விருதான ’கவிச்சுடர்’
விருதையும் இவர் பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.