நூல் பெயர் :
நீர்ப்பரணி (நாவல்)
ஆசிரியர் :
எம்.எம்.தீன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
320
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 300
ஒரு ஊர் என்பது அங்கு வாழும் மக்களின் அடையாளம் மட்டுமல்ல, அது
ஏராளமான சுகங்களையும் துக்கங்களையும் வரலாறுகளையும் வாழ்வியலையும் தன்னுள் அடைகாத்து
வைத்திருக்கும் ஒரு கூடு. பிற உயிர்களுக்குப் பிறந்த மண் என்பது பெயரளவுதான். மனிதனுக்குப்
பிறந்த மண் என்பது ஆயுள் ரேகையின்ஆரம்பப் புள்ளி. எந்தத் தலைமுறையும் பிறந்த மண்ணின்
வரலாறு தெரியாமல் பிறப்பெடுப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றைத்தான் பெற்றெடுத்திருக்கிறது
இப்புதினம். நதிக்கரை ஊர்களில் இருந்து நாகரிகம் தோன்றியதாக வரலாறு உண்டு. ஆனால் அதே
நதிக்கரையில் மூன்று ஊர்கள் அழிந்து மூன்று ஊர்கள் தோன்றிய முதல் வரலாறு, திருநெல்வேலி
தாமிரபரணி நதிக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் தாமிரபரணி நதியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் மூன்று புதிய ஊர்களை உருவாக்கித் தந்தனர்
அன்றைய ஆங்கிலேயர்கள். அவர்களின் பெயர் தாங்கியே இன்றும் அந்த ஊர்கள் கேம்பலாபாத்,
பேட்மாநகரம், பர்கிட் மாநகரம் பர்கிட் மாநகரம் என அழைக்கப்படுகின்றன. அக்காலங்ளில்
ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் புதிதாகத் தோன்றிய
மூன்று ஊர்களில் ஒன்றான கேம்பலாபாத் பற்றியுமான வரலாறுகளை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
‘நீர்ப்பரணி' நூல். இதில் உள்ள கதையும் காட்சியமைப்புகளும் வாசிப்பவரின் மனதுக்குள்
ஊடுருவி, மறைந்துபோன வாழ்வின் வரலாற்றைப் புரிய வைக்கும், கொஞ்சம் உருக வைக்கும், நிறைய
உறைய வைக்கும்.
திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்ட எழுத்தாளர் எம். எம். தீன் அவர்களுக்கு இது ஒன்பதாவது நூல். முதுகலை ஆங்கில இலக்கியமும், சட்டமும் பயின்ற இவர், திருநெல்வேலி நீதிமன்றங்களில் 32 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “எம் ஜி ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்பதாகும். “அவளின் தீண்டல்” மற்றும் “தன்னூத்து ராசா” மற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும். “மாறவர்மன் குலசேகர பாண்டியன்” என்னும் வரலாற்று நூலும் எழுதியுள்ளார். அவரது முதல் நாவல் “யாசகம்”. அதன் பிறகு "சந்தனத்தம்மை”, “கல்லறை” போன்ற நாவல்கள் எழுதியுள்ளார். கலை இலக்கியப் பெருமன்ற விருது, சௌமா இலக்கிய விருது, எஸ் ஏ ஆர் விருது, ஜீரோ டிகிரி விருது மற்றும்கவிக்கோ விருது உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். மேலும் படைப்பு இலக்கிய விருதினை இருமுறை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.