உறக்கத்தில் நடக்கும் என்றாலும் கனவுகள் உயிர்ப்பாக வைத்திருக்கும் நம்மை. கனவுகள் காட்சியாக இருக்குமே தவிர, ஒருபோதும் சாட்சியாக இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். கனவு கண்டவர்கள், கனவு என்பது ஒரு மாயை தானே அதனால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்பார்கள்? ஆனால், உண்மையான ஒரு கனவு ஒருவரை வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்திற்குக்கூட அழைத்துச் செல்லும். கவிதை என்பதும் ஒரு கனவுதான். கவிதை எழுதுவது என்பதும் ஒரு கனவே. ஆனால், அந்தக் கவிதைக்குள் வாழ்வியலை வரிகளாகச் சொல்லும்பொழுது அது நினைவுகளாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட வாழ்வியல் சமூக காரணிகளை எல்லாம் உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'கனவுகள் விற்பவன்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில், தான் கண்ட கனவே நிஜமாக மாறி எழுத்து வடிவில் இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் எனும் ஊரை பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி தங்கராஜ் பழநி அவர்களுக்கு இது மூன்றாம் நூல். இவருடைய படைப்புகள் பலவும் பிரபல பத்திரிகைகளில்
பிரசுரமாகியிருக்கின்றன. தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும்
இவர்,
இளம் வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஈடுபாடு உடையவர். தனது பள்ளி,
கல்லூரி நாட்களில் பல்வேறு கவிதை போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்று
இருக்கிறார். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் ’’மாதாந்திர சிறந்த படைப்பாளி’
என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.