நூல் பெயர் : செம்மண்
(குறுநாவல் )
ஆசிரியர் : சிபி சரவணன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 86
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : சிவ பாரதி
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
தரையில் கிடப்பது என சாதாரணமாக எண்ணாமல் தாங்கிக்கொண்டிருப்பது என உயர்வாக எண்ண வைப்பது மண். மறுசுழற்சி முறையின் மகத்துவமே மண் தான். மண் மீது நாமிருக்கிறோமா, நம் மீது மண் இருக்கிறதா என்பதை வைத்து, நாம் உயிரோடு இருக்கிறோமா, இல்லையா என்பதை உறுதி செய்வதே மண் தான்! பார்க்க எளிமையாகத் தெரிந்தாலும் நீர், காற்று, நுண்ணுயிரிகள் மற்றும் தாதுக்கள் ஆகிய நான்கு முக்கியக் கூறுகளின் ஒரு சிக்கலான கலவை மண். இப்படிப்பட்ட எளிமையும் சிக்கலும் நிறைந்த வாழ்வியலை மையமாக வைத்தும் மண் சார்ந்த மனிதர்களையே கதை மாந்தர்களாக வைத்தும் உருவாக்கப்பட்டதே ‘செம்மண்’ என்ற குறுநாவல். இதில் உள்ள ஒவ்வொரு காட்சியமைப்புப் பத்தியும் கிராமத்தையும் நிலம் சார்ந்த மொழியையும், மண் சார்ந்த மனிதர்களையும் அவர்களது வட்டார வழக்குச் சொல்லாடல்களையும் வாசிப்பவர் மனதில் புதிதாக ஏதோ ஒன்றை விதைத்து விட்டுப் போகும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
கம்பம் பள்ளதாக்கு,தேனியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவரும், ஊடகத்துறையில் பணியாற்றுபவருமான படைப்பாளி சிபி சரவணன் அவர்களுக்கு இது முதல் நூல். இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர்.பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீதும் கலை மீதும் மற்றும் சமூகம் மீதும் கொண்ட பற்றின் காரணமாகவே ஊடகத்துறையில் பணியாற்றுகிறார் அத்துடன் இலக்கியத்தையும் ஏந்திக்கொண்டு உடன் வளர்த்து வருகிறார்.