மனத்தால் பார்ப்பதும் மனத்திற்குள் படிப்பதும் எப்படி என்ற மகத்துவம் தெரிந்து விட்டால் கண்கள் என்பது ஒருவருக்கு புறக் காட்சிகளைக் காணும் கருவி அவ்வளவே. கனவுகளின் வழியே காட்சியைப் பார்ப்பதற்கும் கண்களின் வழியே காட்சியைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எந்த ஒரு மாயத்தோற்றம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கும்போதும் உங்கள் மனத்திரையில் ஒளிர்கிறதோ, அதுவே நீங்கள் சிந்தனைத் திறன் பெற்றவர் என்பதன் சாட்சியாகும். அகத்தின் வழியே காட்சிகளைக் காண கொஞ்சம் ஞானம் தேவைப்படும். அத்தகைய ஞானம் நாம் சிந்திப்பதிலிருந்தும், நாம் எழுதும் எழுத்திலிருந்தும் முதிர்ச்சி பெறும். அப்படிப்பட்ட முதிர்ச்சியடைந்த எழுத்துக்களை எல்லாம் கவிதைகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’இது கண்களின் பார்வையல்ல’ எனும் இந்த நூல். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அக விழுமியங்களை ஆராதிப்பதுபோல் அமைந்திருப்பதே இந்நூலின் பலம்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைப் பிறப்பிடமாகவும், டெல்லியை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சிந்தா அவர்களுக்கு இது, முதல் நூல். இவரின் கவிதைகள் பிரபலபமான பல பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பிரசுரமாகி வரவெற்பு பெற்றுள்ளன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், படைப்புக் குழுமத்தின் உயரிய விருதான ’கவிச்சுடர்’ விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது