விழியிலிருந்து விலகும் நீருக்கு ’கண்ணீர்’ என்று பெயர். வாக்கியத்திலிருந்து விலகும் வார்த்தைகளுக்கு ‘கவிதை’ என்று பெயர். மாயத் தோற்றத்தின் மௌனத்திலிருந்து கசியும் சொற்களில் கவிதையின் ஊற்றே பிரவாகமாக மாறும். அது நாம் என்ற தோற்றப் பிழையைத் தோற்றுவிக்கும் ஆற்றலை எழுத்துகளுக்குத் தந்து விடும். உணர்வுகளின் தோற்றப் பிழை கவிதையில் வரும்போது அது உயிர்களின் ஆத்மாவையே அசைத்துப் பார்க்கும். அப்படிப்பட்ட உணர்வுகளின் ஊர்வலத்தையெல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'நான் என்பதும் தோற்றப் பிழை' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் படிப்பவரின் மனதைப் பிரதிபலிக்கும் பிம்பமாக இருக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
சேலத்தைப் பிறப்பிடமாகவும், பெங்களூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மதுசூதன் அவர்களுக்கு இது மூன்றாம் தொகுப்பு.
இவரது முதல் மற்றும் இரண்டாம் கவிதைத் தொகுப்புகள் கடந்தாண்டுகளில் படைப்பு பதிப்பகம்
மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றன. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவர்
கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கின்றன. படைப்பு குழுமத்தால் வழங்கப்படும்
மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான
அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர். மேலும் படைப்பு பரிசுப்போட்டிகளில்
கவிஞர்கள் வண்ணதாசன் மற்றும் யவனிகா ஸ்ரீராம் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.