நூல் பெயர் : தனிமை நாட்கள்
(கவிதை)
ஆசிரியர் : பிரபு சங்கர்.க
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 114
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஆரூர் த.இலக்கியன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 80
எல்லாம் தனிமையிலிருந்தே தொடங்கியது, எல்லாம் தனிமையிலேயே முடிகிறது. இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர்கூட தனிமையில்தானே தொடங்கியிருக்கும். உலகம் முடிவுறும்போதும் கடைசி உயிர் தனிமையில் இருந்துதானே முடியக்கூடும். அதன் சாட்சியாகவே, கருவறையில் தனிமையாகத் தோன்றும் உயிர், கல்லறைக்குத் தனிமையில் சென்று முடிகிறது. ஒவ்வொருமுறையும் இயற்கை, தன்னை மறுசுழற்சி செய்துகொள்ள தனிமையைத்தான் தேர்வு செய்கிறது. மனிதன் இயற்கையை தனிமைப்படுத்த முயற்சிக்கிறான். இயற்கை மனிதனை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. கடைசியில், இயற்கையே வெற்றிபெறுகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிடமுடியாத சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய இயலாமல் நாம் இருப்பதே இயற்கையின் நியதி. அப்படிப்பட்ட இயற்கையின் சீற்றமான “கொரோனா” நோய் பரவலும், அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள், சமூக இடைவெளி, துயரம், பிரிவு, இழந்த நிம்மதி என அனைத்தினாலும் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் தொகுப்பே ‘தனிமை நாட்கள்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும் எல்லோருக்கும் சொந்த அனுபவம்போல காட்சிகள் கண்முன் விரிவதே இந்நூலின் பலம்
வேலூர் மாவட்டம், தோட்டாளம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கிருஷ்ணகிரியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இயன்முறை மருத்துவரான படைப்பாளி பிரபு சங்கர்.க அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது ‘தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம்’ என்ற நூல், படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிட்டு பலரது கவன ஈர்ப்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிக்கை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் தனித்துவமான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.