நூல் பெயர் : ஏற்கனவே & பெருங்கடலின் அரக்கன் (குறுநாவல்கள்)
ஆசிரியர் : எலியாஸ் ஜான்ஜோசப்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
92
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 130
கவிதையின் கற்பனையும், உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும்
என்று உணர்த்தப்பட்ட பிறகு, தமிழ் உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது
நாவல் இலக்கியமே. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும்
ஓர் இலக்கிய வடிவமும் நாவலே. மக்களின் சமூகத்தையும், வாழ்வியலையும் ஒன்றினைத்து நிகழும்
உரையாடல் மொழியை இலக்கியத்தின் வழியே சேமிக்க நாவலே சிறந்த ஊடகம். ஒரு குறிப்பிட்ட
காலச் சூழலில் சமூகத்தில் மக்களுக்குள் உணர்வு அடிப்படையில், வாழ்வு அடிப்படையில் ஏற்படும்
சிக்கல்களை, நாவல்களில் கதை மாந்தர்களாக இருக்கும் பாத்திரங்கள் வாயிலாக பிரதிபலிக்க
முடியும். அவ்வாறு தான் வாழும் சமூகத்தில்
கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளைக் கொண்ட செய்திகளைச் சற்றுக்
கற்பனையைக் கலந்து, மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு இல்லாமல் குறைவான
பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை விடச் சற்றுப் பெரிதாக அமைந்த இரு குறுநாவல்களை இணைத்து
உருவாக்கியிருப்பதே “ஏற்கனவே மற்றும் பெருங்கடலின் அரக்கன்” நூல்.
சென்னையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி எலியாஸ் ஜான்ஜோசப் அவர்களுக்கு இது பதினைந்தாவது நூல். தொழில்துறை நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சமூக
வலைதளங்கள் மற்றும் இன்றைய இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். தமிழ்,
ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும், இந்திய மற்றும் உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய
வெளியில் இயங்குபவர். இவரது “கழுகுகள் உயரும்” என்ற விஞ்ஞான சிறுகதை நூல் பல விருதுகளைப்
பெற்றுள்ளது. சில பத்திரிகைகளுக்கும், நாற்பத்து மூன்று தொகுப்புகளுக்கும் இணை ஆசிரியராகப்
பணியாற்றிய இவர், இலக்கிய உலகிற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு செய்த
பங்களிப்புகள் ஏராளம். மேலும் சில கட்டுரைகள், தொழில்நுட்ப இதழ்கள், வடிவமைப்புகளுக்கென
காப்புரிமை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.