காலத்தின்
கைகளில் நாம் கதைகளாகவோ கதை மாந்தர்களாகவோ அல்லது கதை சொல்லியாகவோதான் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். வாழ்வின் எல்லா அர்த்தங்களும் அசைவுகளும் சூழ்நிலையை மையமாகக்
கொண்டே இயங்குகிறது. அது கடைசியில் ஒரு கதையாக மாறி நம் கைகளில் தந்து விடுகிறது.
அவ்வாறு தரப்பட்ட கதைகள் நம் வாழ்வின் கதையாக இருக்கலாம் அல்லது வாழ்வியலின்
கதையாக இருக்கலாம். கதை இல்லாமல் வாழ்வு இல்லை எனும் அளவிற்கு நாம் கதையோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாட்டி சொல்லும் கதைகளில் ஆரம்பித்து நாம் தனியாக கதை
எழுதி ஒரு படைப்பாளியாக உருவாகும் வரை எல்லா நிலைகளிலும் கதை நம்மோடு நீக்கமற
நிறைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி
உருவாக்கப்பட்டிருப்பதே, ‘பாதியும் மீதியும்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கதையும் கதாபாத்திரங்களும் வாழ்வையும்
வாழ்வியலையும் நமக்குள் கண்களால் பார்த்தது போல் காட்சிப்படுத்திச் செல்லும்
என்பதே இந்நூலின் பலம்.
நாகை மாவட்டம்
வேதாரணியம் வட்டம் கடிநெல்வயல் என்ற ஊரை பிறப்பிடமாகவும், திருச்சியை வாழ்விடமாகவும், தமிழ்நாடு அரசு சிறைத் துறையில் அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவருமான படைப்பாளி அன்பழகன் ஜி அவர்களுக்கு இது முதல் நூல். இன்றைய இணைய
ஊடங்களில் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். மேலும் கவிதைகளிலும்
சிறுகதைகளிலும் எண்ணற்ற பல பரிசுகளையும், படைப்பு குழுமத்தின்
மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது.