நூல் பெயர் : சினிமா உலக சினிமா (கட்டுரைகள்)
ஆசிரியர் : கவிஜி
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
216
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 300
மனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது இலக்கியம்; செயல் வடிவம் கொடுத்தது சினிமா.
ஏடுகளில் மட்டுமே இருந்த திரைமறைவு இலக்கியத்தை எல்லோருக்கும் புரியும் வகையில் திரைமொழி
இலக்கியமாக மாற்றி செய்முறை விளக்கமாக எளிமையாக்கியதே சினிமாதான். பொழுதுபோக்கிற்காக
கண்டுபிடிக்கப்பட்டது சினிமா என தொடக்கத்தில் சொல்லப்பட்டாலும் மக்களின் வாழ்வியலை
திரையில் காட்சிப்படுத்தியதும் அது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறியது. பின்பு கலைகளுடன்
கருத்துக்களைச் சொல்லும் கருவியாகவும், உரிமையை உரக்கச் சொல்லும் கேடயமாகவும் உருமாறியது.
பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில்
உலகின் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குள் அதன் வளர்ச்சி என்பது
உலகம் முழுவதும் ஊடுருவி கலையரங்கத்தையெல்லாம் திரையரங்கமாக்கி தொழில் நுட்பத்தின்
புரட்சிக்கேற்றவாறு பொலிவடைந்து, கற்றலின் கேட்டலே நன்று என்பதன் உச்சம் சினிமாவானது.
அப்படி உலகளவில் கவனம் பெற்ற சினிமாக்களை அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்தி இருப்பதே “சினிமா
உலக சினிமா” நூல்.
வால்பாறையை பிறப்பிடமாகவும் கோவையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி அவர்களுக்கு இது பதினான்காவது நூல். வால்பாறையே
தனக்கு இலக்கியம் வளர முக்கிய காரணம் என சொல்லும் இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல
பத்திரிக்கைகளில் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும், கட்டுரைகளாலும், கவிதைகளாலும்
நன்கு அறியப்பட்டவர். தன் “ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பிற்காகவும்,
“சிவப்பு மஞ்சள் பச்சை” என்ற நாவலுக்காகவும் படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருதை
இருமுறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதும் பெற்றவர்
என்பது குறிப்பிடத்தக்கது.