நூல் பெயர் : ஹலிமா (நாவல்)
ஆசிரியர் :
ஜபினத்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
118
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 160
ஒன்பதாம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கியப்
படைப்பான ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் முன்னோடியென கருதப்படுகின்ற குறும் புதினம் அல்லது
குறுநாவல் என்பது தமிழில் ஒருவகை உரைநடை இலக்கியமாக அறியப்படுகிறது. பக்க அளவு வறையறை
ஏதுமின்றி, சிறுகதையை விடக் கொஞ்சம் பெரியதாகவும், நாவலை விடச் சிறியதாகவும் இருக்கும்
இக்குறுநாவல்கள். இடைக்காலத்தில் இருந்தே ஐரோப்பிய மொழிகளில் குறுநாவல் வரவு தொடங்கியது.
பதினான்காம் நூற்றாண்டில் பொகாசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நூலில் இருக்கும் ஒவ்வொரு
கதையும் ஒரு குறுநாவல் தான். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு
ஜெர்மன், பிரஞ்சு இலக்கியத்தில் குறுநாவலுக்குத் தனியானதோர் இடம் கிடைத்து, இருபதாம்
நூற்றாண்டு, ஆங்கில இலக்கியத்தில் குறுநாவல் செழித்து, இன்று தமிழில் தனக்கென தனியிடம்
பிடித்து வளர்ந்து இருக்கிறது. அதிலும் பெண்ணியம் சார்ந்த தமிழ் குறுநாவல்கள் இலக்கிய
உலகையே தன்பக்கம் திருப்பியது. பெண்ணியம் என்பது ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும், போராட்டக்
கருவியாகவும், ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை
பெறுகிறாள் என்பதையும் முன்வைக்கப்படுவது. அப்படிபட்ட சமூகப் பின்னணியை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்கப்பட்டதே ‘ஹலிமா’ எனும் இந்நூல்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தைப்
பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ஜபினத் அவர்களுக்கு இது எட்டாவது நூல். இஸ்லாமியப்
பெண்ணான இவர் சாரா என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இலக்கிய
உலகில் கவனம் பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு
கலை இலக்கிய மேடை வழங்கிய மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது, சௌமா
இலக்கிய விருது உட்பட பல விருதுகளுடன் படைப்பு இலக்கிய விருது இருமுறை பெற்று இருக்கிறார்.
கடந்த ஏழு தொகுப்புகளிலும் புனைப்பெயரான சாரா என்ற பெயரில் அறியப்பட்ட இவர் இனி தன்
இயற்பெயரான ஜபினத் என்ற பெயரிலேயே எழுத முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.