பார்க்கும் காட்சி மனத்தைப் பாதித்தாலோ அல்லது
மனதுக்குள் பதிந்தாலோ அது ஹைக்கூ பூவாக மலரும். ஹைக்கூ கவிதைகள் ஒரு பொருளைப் பற்றியதாக
இருக்கும் அல்லது ஓர் உணர்வின் பிரதிபலிப்பாக இருக்கும். சொல்ல வரும் கருத்து இயற்கை சார்ந்தோ, எளிமையாகப் புரியும் படியோ, எதார்த்தமான எழுத்து வடிவமாகவோ இருக்குமானால்
அது ஹைக்கூவாக இருக்கும். சுருங்கச் சொல்லி நிறைய தருவதில் ஹைக்கூ என்ற வகைமை இன்றைய
எழுத்தாளர் சமூகத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது சாமானிய மக்களுக்கும்
எளிதாகப் புரிந்துகொள்ள முடிவதால் வாசகர் மத்தியிலும் வெற்றிபெற்று விடுகிறது. அப்படிப்பட்ட
குறுங்கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’விதைக்குள் இருக்கிறது
காடு’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு குறுங்கவிதையும்
வாசிப்பவரின் உணர்வுக்குள் ஊடுருவி மனத்தில்
நினைவலைகளைப்போல நீந்திச்செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு நத்தம் ஊரைப் பிறப்பிடமாகவும்
வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி தஞ்சை விஜய் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவருடைய
முதல் தொகுப்பு நம் படைப்பு பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது. இவர் நடிகர் சூர்யாவின் ’அகரம் அறக்கட்டளை’ மூலம்
உதவி பெற்று தனது கல்லூரிப் படிப்பை முடித்தவர். இவரது படிப்புக்காகவும் படைப்புகளுக்காகவும்
பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதில் சாதனை மாணவர் 2021 விருதும், மகாத்மா காந்தி நினைவு விருதும் மற்றும் ’சங்கரன்
கோவிலில் நதிகள் அறக்கட்டளை’ சார்பில் ’கலைச் சிற்பி – 2020’ விருதும் பெற்றவர்
என்பது குறிப்பிடத்தக்கது