நூல் பெயர் : நட்ட கல்லும் பேசுமோ
(புனைவுக் கதைகள்)
ஆசிரியர் : பிரேம பிரபா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 107
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 80
தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று பகர்வதில் முக்கியப் பங்காற்றும் நடுகல் என்பது வெறும் கல் அல்ல. அது பண்பாட்டின் வெளிப்பாடு, நம்பிக்கை, நன்றி பாராட்டல், வெகுமதி என்று நீண்டுகொண்டே போகும் அதன் வரையறை. ‘வீரன்கல்’, ’வீரக்கல்’, ’நடுகல்’ மற்றும் ‘நினைவுத்தூண்’ என்றும் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண் பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகிறவகையிலும், அவனது தியாகத்தை மதிக்கிறவகையிலும் கல் ஒன்றை நட்டு, அதைத் துதிப்பது தமிழரின் மரபாக இருந்துள்ளதை செவ்வியல் இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில், வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோதான் அவற்றை அனுமானிக்க முடிந்திருக்கிறது. நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதைக் காணமுடிகிறது. இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துகளையும் ஆராய்கிறபோது ஆகோள் புரிந்தோ, (ஆநிரை கவரவோ, மீட்கவோ) கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, பலியாகவோ, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. அப்படியான சரித்திர காட்சிகளையெல்லாம் புனைவுக் கதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’நட்ட கல்லும் பேசுமோ’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கதையும், வாசிப்பவரை வரலாற்றின் பக்கம் அசைபோட வைப்பதே இத்தொகுப்பின் பலம்.
சென்னையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி பிரேம பிரபா அவர்களுக்கு இது, ஏழாவது நூல். இவர், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் புதுமையும், புதிரும் நிறைந்த தன் கதைகளாலும், கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். தன் படைப்புகளுக்காக, படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருதை இருமுறை பெற்றவர். கவிமாமணி, கவிச்சிகரம் போன்ற எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர். மேலும் படைப்பின், மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.