நூல் பெயர் : 90’ஸ் கிட்ஸ் (கவிதைகள்)
ஆசிரியர் :
பிரபுசங்கர் க
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
142
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
பொதுவாக
1990களிலோ, புத்தாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்திலோ அதற்கு முன்பகுதியிலோ பிறந்தவர்கள்
‘90ஸ் கிட்ஸ்’ என பரவலாக அழைக்கப்படுகிறார்கள். கம்ப்யூட்டர், கலர் டிவி, மொபைல் ஃபோன்கள்,
உலகளாவிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றை அதன் தொடக்க காலத்திலேயே பார்த்தவர்கள் இவர்கள்.
இந்தத் தலைமுறையினருக்குத் தங்கள் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மயிலிறகை
புத்தகத்திற்குள் வைத்து குட்டி போடும் என காத்திருந்ததும், மர இலையில் பீப்பி செய்து
ஊதியதும், கடிதங்களிலும் வாழ்த்து அட்டைகளிலும் அன்பை பரிமாறிக் கொண்டதும், குடிக்க
கூழும், குளிக்க ஆறும், அடிக்க மாங்காவும், பறிக்க புளியங்காவும், சமைக்க சொப்புச்
சாமான்களும், சுவைக்க கூட்டாஞ்சோறும், நடக்க நுங்கு வண்டியும், பறக்க காத்தாடியும்,
பாய பச்சைக் குதிரையும், பாய்ந்தோட குரங்குப் பெடலும், ரசிக்க தெருக்கூத்தும், ருசிக்க
தெருவில் விற்கும் குச்சி ஐசும், விழுந்தா தாயமும், எழுந்தா பல்லாங்குழியும் என நம்
பாரம்பரியத்தை எல்லாம் பால்யத்திலே பார்த்த கடைசி தலைமுறையும் இவர்கள்தான். ஈமெயில்
முதல் இணையம் வரை பார்த்த முதல் தலைமுறையும் இவர்கள்தான். மேலும் எதிர்பார்ப்புகளுக்கும்
நிஜத்துக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி இருப்பதை உணர்ந்துகொண்டவர்களும் இவர்கள் என்பதால்,
சமீபகாலத்தில் பிறந்தவர்களின் உலகளாவிய பழக்கங்களை ஆராயும் தலைமுறை இயக்கவியல் மையத்தின்
தலைவர்களாக இருப்பதும் இவர்கள்தான். அப்படிப்பட்ட 90களின் காலகட்டத்தை நினைவுகளின்
நிழற்படம் போல கவிதைகளாக்கி இருப்பதே ‘90ஸ் கிட்ஸ்’ நூல்.
வேலூர்
மாவட்டம் தோட்டாளம் கிராமத்தை பிறப்பிடமாகவும், கிருஷ்ணகிரியை வசிப்பிடமாகவும், இயன்முறை
மருத்துவருமான படைப்பாளி “பிரபு சங்கர்.க” அவர்களுக்கு இது ஆறாம் நூல். இதுவரை இவர்
எழுதிய நான்கு நூல்கள் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்டு பலரது கவன ஈர்ப்பையும் பாராட்டுக்களையும்
பெற்றது. தமிழ்நாடு அரசின், தமிழக பாடநூல் கழகத்திற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் மொழிபெயர்ப்பு
திட்டத்தின் கீழ் “இயன்முறை மருத்துவம்” என்னும் பாடநூலின் இரண்டு ஆசிரியர்களில் இவரும்
ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிக்கை மற்றும்
இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும்
மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் தனித்துவமான விருதையும்
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது